"உங்கள் வயது என்ன?" என்றார், அந்த அதிகாரி.
ராம்சிங் தாதா அவரை நிமிர்ந்து பார்த்தான். உச்சி வெயிலில் அவருடைய வெள்ளைச் சராயும் சட்டையும் கண்ணைக் கூசின. அவன் பேசாமல் தலையைக் குனிந்து கையிலிருந்து ராணி பொம்மையின் பாவாடைக் கொசுவத்தை நீவி விட்டான்.
இப்போது அவர்களைச் சுற்றியிருந்த கும்பலில் ஒரு இளைஞன் ராம்சிங்தாதாவுக்கு காது கேட்கவில்லையோ என்கிற அனுமானத்துடன், "தாதா, உங்களுக்கு வயது என்ன ஆகுதுன்னு கேட்கிறாங்க!" என்றான்.
"புரியுது புரியுது" என்றான் ராம்சிங் சுவாரஸ்யமில்லாமல். “யாருக்குத் தெரியும் வயசு?”
சுமாரா எத்தனை இருக்கும் சொல்லு’ என்றது வெள்ளைச்சராய்.
‘ஐம்பத்திருக்கும்.’ அவனுடைய முகத்தில் மேலும் கீழுமாக ஓடிய கோடுகளை யோசனையுடன் பார்த்தபடி "ஐம்பது தானா?" என்றார் அதிகாரி.
"சரி அறுபது" என்றான் அவன் சமாதானமாக.
அதிகாரியுடன் கூட நின்றிருந்தவர்கள் சிரித்தார்கள்.
அவனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.
"நான் படிப்பெழுத்தறிவில்லாதவன் சாப், வயசப் பத்தி எனக்கென்ன தெரியும்?"
"சரி போகட்டும், இதுயார், உன் மனைவியா?"
"ஆமாம் சாப்."
தலையைப் போர்த்தியிருந்த தலைப்பில் மீராவுடைய முகம் முக்கால் பாகம் பதுங்கியிருந்தது.
"இதைத் தவிர ஏதாவது தொழில் செய்கிறாயா?"
"இல்லை சாப். இதைத் தவிர ஒரு தொழிலும் தெரியாது."
"குடும்பத் தொழிலா இது?"
அவன் ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான்.
"முப்பாட்டான் காலத்திலேந்து இதுதான்."
"ராஜ சமஸ்தானத்தில் இருந்தவர் இவருடைய முப்பட்டான்" என்றான் ஒருத்தன் யாரும் கேட்காமலே. அந்தப் பெருயெல்லாம் எதுக்கு இப்ப என்று நினைத்தபடி அவன் அருகிலிருந்த தகரப் பெட்டியில் பொம்மைகளை அடுக்க ஆரம்பித்தான்.
"உன் வீடு எங்கே?"
"அதோ அதுதான்" என்று சில இளைஞர்கள் அவனுடைய குடிசையை உற்சாகமாகக் காண்பித்தார்கள்.
அதிகாரிகள் தங்களுக்குள் ஏதோ புரியாத பாஷையில் பேசிக் கொண்டார்கள். குறிப்பெடுத்துக் கொண்டார்கள். ஜீப்பில் ஏறிக் கொண்டு கிளம்பிப் போனார்கள்.
"யார் இவர்கள்?" என்றாள் மீரா.
"யாருக்குத் தெரியும்?" என்றான் அவன் பெட்டியை மூடியபடி.
இந்த பொம்மைகளுடன் அவனுடைய வாழ்வு எத்தனை ஐக்கியமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவளுடையதும் ஐக்கியம். அவன் இருந்த அடுத்த கிராமம் அவளுடையது. அங்கு ஏதோ திருவிழா என்று அவன் தன் பொம்மலாட்டத்தை அரங்கேற்றச் சென்றிருந்தான். அப்பா இறந்த புதுசு. அதனால் எப்பவுமே கூடவே வந்து டோலக் தட்டிப்பாடும் அம்மா அவனுடன் இல்லை. அவனே பாட்டும் பாடி, அரங்கை அமைத்து, திரையை விலக்கி, பொம்மைகளை ஆட்டுவித்து, சூத்ரதாரிபாய், ராமனாய், சீதையாய், ராவணாய் குரலை மாற்றி மாற்றிப் பேசும், பாடும் விந்தையைக் கூட்டத்துக்கு முன் வரிசையில் வாயைப் பிளந்து கண்ணை விரித்துப் பார்த்த பெண்ணை முதல்நாளே அவன் கவனித்து விட்டான்.
வெளுப்பாக புறாப்போல, சின்ன உருவமாய் இருந்தாள். அவனது பாட்டையும் ஆட்டத்தையும் மெய்மறந்து அவள் ரசித்தது அவனுக்குப் பெருமிதமாக இருந்தது. அவள் மேல் காதல் சுரந்தது. அடுத்த பத்தே நாட்களில் இருவருக்கும் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து இன்றுவரை மீரா அவனுடைய ரசிகை, தோழி. ‘கேளுங்கள் கேளுங்கள் ராம கதை’ என்று அவன் ஆரம்பித்தால், டோலக்கை ஒரு தட்டு தட்டி. ‘கேளுங்கள் கேளுங்கள் சீதா பிராட்டியின் சோகக் கதை’ என்று தொடர்வாள்.
இந்த அவளது ரசனைதான் அவளைத் தாங்குகிறது என்று அவன் நினைத்துக் கொண்டான். இல்லாவிட்டாள் எந்தப் பெண் இந்த தரித்திரத்தில் சிரித்துக் கொண்டு முணு முணுக்காமல் இருப்பாள்? இந்தத் தெருக்கோடியில் அஹமத் பாய் இருக்கிறான். அபாரமாக கஜல் பாடுவான். அவனுடைய அதிர்ஷ்டம் அவன் மனைவி கூட அவன் பாட்டைக் கேட்க அமருவதில்லை.
இன்று காலை எழுந்திருக்கும் போது இன்றைக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு எங்கே போவது என்று அலுப்பாக இருந்தது.
"இன்னிக்கு வெளியிலே போகணும் போல இல்லே மீரா" என்றான்.
"நம்ம தெருவிலேயே போடலாம்" என்றாள் அவள் சாதாரணமாக.
அவன் சிரித்துக் கொண்டே எழுந்தான். பொம்மைகளைப் பெட்டியில் வைக்க அவளுக்கு மனசாகாது.
காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு அவர்கள் கிளம்பினார்கள். தெரு முனையை அடையும் போது, மறுபடி அந்த ஜீப் வந்து நின்றது. வெள்ளைச் சராய்கள் இறங்கின. அவன் கலவரத்துடன் நின்றான்.
"ராம்சிங்! உன்னைத் தேடிக்கிட்டு தான் வந்திருக்கோம்" என்றார் அன்று வந்த ஆபீஸர்.
அவன் கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தான்.
அவனைப் பார்த்து அவர் அகலமாகப் புன்னகைத்தார்.
"உன்னைப் பெரிய அதிர்ஷ்டம் தேடி வருது ராம்சிங்! உன் ஆட்டத்தைப் பார்த்து எங்க அதிகாரி சொக்கிப் போயிட்டார். உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பப் போறோம்."
ராம்சிங் திருதிருவென்று விழித்தான்.
"அங்கே பெரிய மேளா நடக்கிறது. நிறைய கலைஞர்களை அனுப்பறோம். நீயும் உன் மனைவியும் போகப் போறீங்க."
அவன் இன்னும் விழித்தான். வெளிநாட்டுக்குப் போய் என்ன செய்வது என்று புரியவில்லை. தெரு முழுவதும் கூடிவிட்டது. வாயைப் பிளந்து கொண்டு நின்றது.
அவனையும் மீராவையும் ஏற்றிக் கொண்டு அவர்கள் எங்கோ சென்றார்கள். மீராவின் சேலையிலும் தன்னுடைய குர்த்தாவிலும் இருந்த பொத்தல்களை நினைத்து அவனுக்கு சங்கடமாயிருந்தது. ஒரு மைதானம் போல் இருந்த ஒரு இடத்துக்குச் சென்றார்கள். அவனைப் போல நிறைய ஜனங்கள் சங்கடப்பட்டுக் கொண்டு அங்கு இருந்தார்கள். ஒரு குரங்காட்டியும் உட்கார்ந்திருந்தான் தன் குரங்குடன்.
ஒரு அதிகாரியோ மந்திரியோ சுற்றிச் சுற்றி வந்து கைகூப்பினார். "நீங்கள் கலைஞர்கள், இந்த நாட்டுப் பொக்கிஷங்கள்" என்றார்.
“இந்த நாட்டுக் கலைப் பொக்கிஷங்களான உங்களை வெளிநாட்டில் நடக்கும் இந்திய விழாவுக்கு அனுப்பப் போகிறோம்.
விமானத்தில் செல்வீர்கள். அங்கு உங்களுக்குத் தங்க வசதி செய்வோம். வெளிநாட்டவருக்கு உங்கள் வித்தைகளைக் காண்பித்து நமது நாட்டின் பெருமையை ஸ்தாபிப்பீர்கள்."
"இவர் பேசறது உனக்குப் புரியுதா?" என்றாள் மீரா மெல்ல.
அவன் உதட்டைப் பிதுக்கினான். அன்று மாலை வரை எல்லாரும் வெய்யிலில் உட்கார வேண்டியிருந்தது. யார் யாரோ என்னன்னவோ கேள்விகள் கேட்டார்கள். எழுதிக் கொண்டார்கள். இடையில் எல்லாருக்கும் சோமாசாவும் தேநீரும் வழங்கப்பட்டது. குரங்குக்கும் உட்பட.
"இன்னும் பதினைந்து நாட்களில் கிளம்ப வேண்டும். தயாராக இருங்கள்" என்றார் அதிகாரி.
அவன் தயக்கத்துடன் ஒரு அதிகாரியிடம் சென்றான்.
"எங்களை விட்டுருங்க சாப்" என்றான். "நாங்க போக முடியாது."
"ஏன்?" என்றார் அவர் விறைப்பாக. "வெளிநாட்டுக்குப் போகக் கசக்குதா? ஒரு டிக்கெட் இருபதினாயிரம் ரூபாய் தெரியுமா? உங்களுக்கு எவ்வளவு பெரிய கௌரவம் அளிக்குது அரசு…!"
"அது சரி சாப்-எங்களுக்கு சௌர்கயப் படாது…"
"ஏன் என்ன விஷயம்?"
"பொத்தலில்லாம ஒரு உடுப்புக் கூட இல்லே சாப். புதுசு வாங்கப் பணமில்லே."
ஒரு விநாடி அவனை உற்றுப் பார்த்து அவர் சிரித்தார்.
"நல்ல பித்துக்குளி நீ. இத்தனைப் பெரிய அதிர்ஷ்ட்த்தை வேண்டாம்பாங்களா? போ, கடன் வாங்கி இரண்டு உடுப்பைத் தெச்சுக்க. வெளி நாட்டிலே கிடைக்கிற சம்பாத்தியத்திலே நீ திரும்பி வந்து ஒரு வீட்டையே வாங்கலாம்!"
இருட்டிய பிறகுதான் வீடு வந்து சேர முடிந்தது.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
(வாஸந்தி சிறுகதைகள் தொகுப்பில் இருந்து)