அன்னையர் தினம், மகளிர் தினம், அறிவியல் தினம் என சகலவற்றிற்கும் தினம் வைத்துக் கொண்டாடும் நாம் , ‘உலக இன்ப தினம்’ என்று ஒரு தினத்தை ஏன் கொண்டாடுவதில்லை? ஏனெனில், ஒருநாள் கொண்டாட்டத்துடன் நின்று விடாமல், வாழ்நாள் முழுவதும் இன்பமயமாக இருக்க நினைப்பது மனித இயல்பு அல்லவா?
தனிமனித மகிழ்ச்சியினைப் பொறுத்தே, உலகின் இன்பம் அமைகின்றது. ஒவ்வொரு தனிமனிதனும் சில உத்திகளைப் பின்பற்றினாலே போதும். உலகம் இன்பமயமாகி விடும்.
முதலாவதாக, நாம் ஒவ்வொருவரும் நல்லவர்களைத் தேடும் முயற்சிகளைக் குறைத்துக்கொண்டு, நல்லவர்களாக இருக்கப் பிரயத்தனப்பட வேண்டும். நல்லவர்களைத் தேடும் முயற்சியில் மட்டுமே நாம் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால், ‘டாக்டர் அப்துல் கலாம்’ அவர்களோடு நாம் முன்மாதிரிகளின் பட்டியலை நிறுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே,
"உனக்குப் பிறர் செய்யக்கூடாது என்று நினைப்பதை
நீயும் அவர்களுக்கு செய்யாதே!"
– என்பதை உணர்ந்து, முன்மாதிரிகளைத் தேடாமல், நாமே முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும்.
குடிநீர் கூட ஒரே இடத்தில் தேங்கிக் கிடந்தால் குடிப்பதற்குப் பயனற்று நாற்றம் எடுக்கிறது. அப்படி இருக்க ஆறறிவு படைத்த மனிதன் தோல்வியால் துவண்டு கிடந்தால் சமூகம் என்னவாகும்? வீழ்ச்சியும் எழுச்சியும் மனித வாழ்வில் சாதாரண நிகழ்வுகள்.
எனவே,
"வீழ்வதில் வெட்கமில்லை
வீழ்ந்தே கிடப்பதில்தான் வெட்கம்"
– என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
பொங்கும் இன்பம்
எங்கும் தங்கட்டும்!