பருத்திவீரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சிவகுமாரின் மகன் கார்த்திக்கு சினிமா உலகில் அநேக வாய்ப்புகள். செல்வராகவனோ ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தை ஜென்மம் ஜென்மமாக எடுத்துக் கொண்டிருக்க, லிங்குசாமி ‘பையா’ திரைப்படத்தைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டார். செல்வராகவனின் படத்திற்கு முன்பே இது வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அனைத்துப் பாடல்களையும் நா.முத்துகுமார் எழுதியிருக்கிறார். ’ஆனந்தம்’ என்ற குடும்பப் படத்துடன் தன் சினிமா வாழ்க்கையைத் துவங்கிய லிங்குசாமி, தொடர்ந்து நிறைய அதிரடி ஆக்ஷன் படங்களை எடுத்துவிட்டார். மனிதர் மீண்டும் பழைய பாணிக்குத் திரும்புவது போலத் தெரியவில்லை. தமிழ் சினிமாவில் இனிமேல் அடிதடி படங்கள் எடுக்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால்தான் உண்டு. சரி சரி, புலம்புவதை நிறுத்திவிட்டு பாடல்களைப் பார்ப்போம்!
துளித் துளி மழையாய்
மென்மையான பீட்ஸ், கிடாரிங் என்று அழகாய் ஆரம்பித்தே நம்மை ஈர்த்து விடுகிறது இப்பாடல். இன்பம் சேர்ப்பதற்கு ஹரிசரணின் குரலும் உதவுகிறது. உற்றுக் கவனித்தால், ஆங்காங்கு தன்வி ஷாவின் ஹம்மிங்கும் கேட்கிறது. சரணத்திற்கு முன் வரும் வயலின் – கிடாரின் சங்கமம் இனிக்கின்றது. பாடலின் பீட்ஸை கம்ப்யூட்டரில் ப்ரொக்ராம் செய்துவிட்டு, பாடல் முழுவதும் ஓடட்டும் என்று விட்டுவிட்டார் யுவன்! எதைப் பற்றிய பாடல் இது? வேறென்ன, காதல்தான்! காதலில் தவிக்கும் இளைஞன் சந்தோஷத்தில் பாடும் பாடலே – இதைப் போல் கிட்டத்தட்ட ஓராயிரம் பாடல்களாவது கேட்டிருப்போமா? ஆயிரத்தில் ஒன்றாகாவிட்டாலும், இவ்விசைத்தட்டைப் பொறுத்தவரை தேறிவிடுகின்றது.
பூங்காற்றே பூங்காற்றே
வாத்தியங்களின் ஆதிக்கத்தில் ‘ராக்’ வகையறாவில் ஒரு அக்மார்க் யுவன் ஷங்கர் ராஜா பாடல். இதுவும் காதலியின் வருகையில் பாடும் பாடல்தான். பென்னி தயாள் பாடியிருக்கும் இப்பாடலிலும் ப்ரொக்ராம் செய்துவிட்ட பீட்ஸ்தான்! ட்யூனையும் எங்கேயோ கேட்டது போலவே இருக்கின்றது. இசையமைப்பாளர் ஒன்றும் பெரிதாக சிரமப்படவில்லை போலும்! அவ்வப்பொழுது காதில் விழும் வயலினும் கிடாருமே நம்மை பாடலை முழுதாய்க் கேட்க வைக்கின்றன. கடைசியில் வரும் எலெக்ட்ரிக் கிடார் "இதோ, பாடல் முடிந்துவிட்டது" என்று சொல்வது போலவே இருக்கின்றது!
அடடா மழை
ராஹுல் நம்பியாரின் ’தன்னானே’வுடன் கிராமிய பாணியில் ஆரம்பிக்கின்றது "அடடா மழை". கிடாரை கிராமிய வாத்தியங்களுடன் அழகாய்ச் சேர்த்திருக்கின்றார் யுவன். தந்தையின் திறமை எங்கு போகும்! கடைசியில் நான்கு வரிகளை மட்டும் சைந்தவி பாடுகின்றார். மீண்டும் மீண்டும் சொல்வதற்கு கொஞ்சம் யோசித்தாலும், இப்பாடலிலும் அதே ப்ரொக்ராம் பீட்ஸ்தான். இருந்தும், முன்பு கேட்ட பாடலைவிட இது நன்றாகவே இருக்கிறது. பாடலின் முடிவில் எலெக்ட்ரிக் கிடாரும், புல்லாங்குழலும் அழகாய்ப் பொருந்தியிருக்கின்றன. இப்பாடல் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் (புன்னகை மன்னன் முதல் காட்சி) படமாக்கப் பட்டுள்ளதாம். அதனை எத்தனை அழகாகக் காட்டியுள்ளார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
சுத்துதே சுத்துதே பூமி
ஒரு சில வருடங்களுக்கு முன், பாடகர் கார்த்திக் மட்டுமே அநேக சினிமா பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். அந்த நிலை மாறி, இப்பொழுது ஒரு படத்திற்கு ஒரு பாடல் என்று வந்துவிட்டது. மனிதரின் குரலும் நன்றாக மெருகேறிவிட்டது. சுனிதா சாரதியின் ஹம்மிங்கில் பாடல் ஆரம்பித்தாலும், அதன் பிறகு கார்த்திக், பாடல் முழுவதும் தன் கொடியை நட்டுவிடுகின்றார் – கனகச்சிதமாகப் பாடியிருக்கின்றார். இதுவும் காதலில் தவிக்கும் இளைஞன் ஒருவன் பாடுவது போலவே அமைந்திருக்கிறது. பாடலைக் கேட்கும்பொழுதே, கண்களை மூடிக்கொண்டு, மெய் மறந்து ரசிக்க முடிகிறது. ஆனால், மனதில் எத்தனை நாட்களுக்கு நிற்கும் என்பது கேள்விக்குறிதான்!
என் காதல் சொல்ல
யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பாடுவதில் ஏன் இத்தனை ஆசை! இளையராஜாவுக்கு எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அந்த ஆசை வந்தாலும், அவர் மகனுக்கு சீக்கிரத்திலேயே வந்துவிட்டது. உச்சரிப்பு சரியில்லாமல், ஆங்காங்கே சுருதி சேராமல் பாடுகின்றார். குரல் சரியில்லாததாலோ என்னவோ, அவர் பாடும் பாடலுக்கு இசையை மட்டும் அற்புதமாக அமைத்துவிடுகின்றார். அதிகம் பீட்ஸ் இல்லாமல், நிறைய மெலடி சேர்த்து சரிக்கட்டுகிறார். இருந்தும் "கன்னும்" "கல்லத்தனமும்" நம் காதுகளை விட்டுத் தப்பவில்லை. முதல் பாடல் போல, தன்விஷாவை இப்பாடலிலும் ஹம்மிங் செய்வதற்காக மட்டும் உபயோகப்படுத்தியிருக்கின்றார். யுவன் ரசிகர்களுக்கு இப்பாடல் பிடிக்கும். வேறெவரேனும் பாடியிருந்தால், எல்லோருக்கும் பிடித்திருக்குமோ என்னவோ!!
ஐந்து பாடல்களிலும் காதல். லிங்குசாமி ஒரு வேளை ஒரு முழு நீள ரொமாண்டிக் மூவி எடுத்திருக்கின்றாரா! ரன் திரைப்படத்தின் மூலம் மாதவனை சாக்லேட் பாயிலிருந்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றினார். இப்பொழுது தன் அடுத்த காதல் படத்துடன் வருகின்றார் போலும். இதில் ஆக்ஷன் கலக்கிறாரா இல்லையா என்று பொறுத்திருந்தால்தான் தெரியும். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஆஹா-ஓஹோ என்று இல்லாவிட்டாலும், அனைவரும் கேட்கும்படி அமைந்துவிட்டது. ஆனால், மனிதர் இன்னும் கொஞ்சம் புதிய முயற்சிகளை எடுத்தால், பாடல்கள் அனைவரும் மெச்சும்படி அமையும்.
“
Vinnai thandi varuvaya padap padalkal patriya vimarsanam nandraha irunthathu. athe pola paiya vimarsanamum nandraha irunthathu. aanal enakku ondru mattum vizhankavillai. paiya padap padalkal miha nandra amainthullathu. athai neengal sumar endru eluthi ulleerhal. rahman world famous enpathatkaka neengal appadi vimarsanm seithu irukkureerhala? Yuvanin isai ippothu meruheri varuhirathu.