முன்னொரு காலத்தில் மாடசாமி, பெரியசாமி என்று இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். மாடசாமி இளையவன், ஏழை; பெரியவன் பெரியசாமி பணக்காரன்.
பெரியசாமி தன் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுடனும் மற்ற உறவினர்களுடனும் பாசமாக நடந்து கொண்டான். ஆனால் தன் உடன்பிறந்த சகோதரனிடம் அவனை யாரென்றே தெரியாதவன் போல் பாராமுகமாய் இருந்து வந்தான். இது மாடசாமிக்குப் பெரிய வருத்தத்தை அளித்தது. எங்கே மாடசாமி தன்னிடம் அடிக்கடி உதவி கேட்க வந்துவிடுவானோ என்று பயந்து பெரியசாமி அவனைக் கண்டு கொள்ளாமலேயே இருந்தான். ஆனால் இதுவரை மாடசாமி பெரியசாமியிடம் சென்று பெரியதாக எந்த உதவியும் கேட்டவனும் இல்லை.
அந்த வருடம் மழை பொய்த்தது. விளைச்சல் இல்லை. மாடசாமியும் வறுமையால் துன்புற்றான். ஊரில் மழை வேண்டித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தனர்.
"வீட்டில் ஒன்றும் இல்லாமல் எப்படிச் சாமிக்குப் படைப்பது? அதனால் உங்கள் சகோதரனிடம் சென்று கொஞ்சம் இறைச்சி கேட்டு வாருங்கள். நேற்று உங்கள் சகோதரன் திருவிழாவுக்காக ஆடு அடித்ததை நான் பார்த்தேன்" என்றாள் மாடசாமியின் மனைவி.
விருப்பம் இல்லாவிட்டாலும் மனைவிக்காகத் தன் சகோதரனிடம் கேட்கச் சென்றான் மாடசாமி. இல்லையென்றால் அதற்காகப் பெரியதாகச் சண்டை போட்டு அவள் ரகளை செய்வாள் என்ற பயம்.
பெரியசாமியிடம், "அண்ணா! திருவிழாவில் சாமிக்குப் படைப்பதற்குக் கொஞ்சம் இறைச்சி கொடுத்தால் நன்றாக இருக்கும். வேறு ஒன்றும் இல்லாததால் உன்னிடம் கேட்க வந்திருக்கிறேன். இந்த ஊரில் உன்னை விட்டால் கடன் கொடுப்பார் யாருமில்லை" என்று வருத்தத்துடன் கூறினான்.
அதைக் கேட்டதும் பெரியசாமி கடுகடுத்த முகத்துடன் ஆட்டுக்கால் ஒன்றைத் தூக்கி எரிச்சலுடன் மாடசாமியின் கையில் திணித்து விட்டு, "இதோடு இந்தப் பக்கம் வராதே! இன்னும் வேண்டுமானால் காட்டுப்பக்கம் சென்று கறுப்புசாமியிடம் கேள்!" என்று கூறினான்.
மாடசாமியும் அதுதான் நல்லது என்று காட்டை நோக்கிச் சென்றான்.
காட்டில் சில விறகுவெட்டிகளைச் சந்தித்தான். அவர்களிடம், "காட்டுத்தேவன் கறுப்புசாமியின் குடிசை எங்கேயிருக்கிறது?" என்று கேட்டான்.
அவர்கள் "இந்தப் பாதையை விட்டு விலகாமல் நேரே போனால் கறுப்புசாமி குடிசை வந்து விடும்" என்று கூறினர். மேலும் அவர்கள், "நாங்கள் சொல்வதைக் கேள்! ஆட்டுக் காலுக்காகக் கறுப்புசாமி உனக்கு வெள்ளி தந்தால் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! பொன் தந்தாலும் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! அவனுடைய இயந்திரக் கல்லை கேட்டு வாங்கிக் கொள்! வேறு ஏதும் தேவையில்லை என்று சொல்லிவிடு்" என்றனர். அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு மாடசாமி தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
நெடுந்தூரம் நடந்து சென்றவுடன் இறுதியில் ஒரு குடிசையை வந்தடைந்தான். குடிசையினுள் காட்டுத் தேவன் கறுப்புசாமி அமர்ந்திருக்கக் கண்டான்.
கறுப்புசாமி அவனைப் பார்த்ததும், "என்னைப் பார்ப்பவர்கள் எனக்குப் பல சன்மானங்களை அளிப்பதாக வாக்களிக்கிறார்களே தவிர, எதுவும் கொண்டு வருபவரைக் காண்பது வர வர அரிதாக இருக்கிறது. நீயாவது எனக்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறாயா?” என்று கேட்டான்.
"ஆட்டுக்கால் கொண்டு வந்திருக்கிறேன்" என்று மாடசாமி பணிவுடன் பதிலளித்தான்.
கறுப்புசாமி அதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்து, "ம்! சீக்கிரம் கொண்டு வந்ததை எனக்குக் கொடு! இறைச்சி சாப்பிட்டு எவ்வளவு நாளாகிறது!" என்றான். ஆவலுடன் ஆட்டுக்காலை வாங்கிச் சாப்பிட்டான்.
பிறகு மாடசாமியைப் பார்த்து, "இதற்குப் பதில் உனக்கு நான் ஏதாவது அளிக்க விரும்புகிறேன். இந்த இரண்டு பிடி வெள்ளியை வாங்கிக் கொள்" என்றான்.
மாடசாமி "எனக்கு வெள்ளி வேண்டாம்" என்று கூறினான்.
சரியென்று கறுப்புசாமியும், இரண்டு கை நிறையப் பொன்னை அள்ளி மாடசாமியிடம் பெற்றுக் கொள்ளும்படி கூறினான்.
"எனக்குப் பொன்னும் வேண்டாம்" என்று மாடசாமி கூறிவிட்டான்.
கறுப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. "பிறகு என்னதான் வேண்டும் உனக்கு?" என்று மாடசாமியிடம் கேட்டான்.
"உன்னுடைய எந்திரக்கல்தான் வேண்டும்" என்றான் மாடசாமி.
அதைக் கேட்டதும் கறுப்புசாமி, "அதை மட்டும் கேட்காதே! வேறு எதைக் கேட்டாலும் தருகிறேன்" என்றான். ஆனால், வேறு எதற்கும் மாடசாமி சம்மதிக்கவில்லை. எந்திரக்கல்தான் வேண்டுமென்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"சரி, ஆட்டுக்காலைச் சாப்பிட்டு விட்டேன். அதனால் நீ கேட்பதைத் தருவதையன்றி இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை" என்று கூறிய கறுப்புசாமி, "என்னுடைய எந்திரக்கல்லை எடுத்துக் கொள். ஆனால், இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று தெரியுமா?" என்று கேட்டான்.
மாடசாமி, "எனக்குத் தெரியாதே! நீதான் சொல்லித் தர வேண்டும்" என்றான்.
"சரி. இது சாதாரண எந்திரக் கல் அல்ல! நீ கேட்டதை எல்லாம் இது உனக்குத் தரும். நீ அதனிடம் ‘என் எந்திரக் கல்லே! அரை நீ்’என்று சொல். உடனே உனக்கு வேண்டியதைத் தரும். அதை நிறுத்த விரும்பும்போது ‘அரைத்தது போதும். நிறுத்து!’ என்று சொன்னால் உடனே நின்று விடும். சரி போய் வா! சந்தோஷமாக இரு!" என்று வாழ்த்தி விடை கொடுத்தான் கறுப்புசாமி.
மாடசாமியும் அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான். நெடுநேரம் காட்டில் நடந்தான். இருட்டாகி விட்டது. மழை வேறு கொட்டத் தொடஙகியது. காற்று வேறு பலமாக வீசத் தொடங்கியது. மரங்களின் மீது முட்டியும் மோதியும், ஒரு வழியாக வீடு வந்து சேர்வதற்குள் பொழுது விடிந்து விட்டது.
அவனைப் பார்த்ததும் அவன் மனைவி, "நேற்று பகலில் வீட்டை விட்டு வெளியே சென்ற நீங்கள் இன்று வருகிறீர்களே! உங்களுக்கு ஏதோ ஆகிவிட்டது என்றல்லவா கலங்கிப் போய்விட்டேன் நான்" என்றாள்.
அதற்கு மாடசாமி, "காட்டுத் தேவன் கறுப்புசாமி குடிசைக்குப் போயிருந்தேன். எனக்குத் தேவன் என்ன தந்திருக்கிறான் பார்!" என்று சொல்லியவாறே எந்திரக் கல்லை எடுத்து அவள் முன் வைத்தான்.
பிறகு, எந்திரக்கல்லைப் பார்த்து, "என் எந்திரக்கல்லே! அரை நீ! நாங்கள் விழா கொண்டாடத் தேவையான உணவுப் பண்டங்களைத் தா!" என்றான்.
உடனே எந்திரக்கல் தானாகவே சுழல ஆரம்பித்தது. அரிசியும், தானியங்களும், சர்க்கரையும், இறைச்சியும், மீனும், உணவு செய்யத் தேவையான அத்தனையும் அதிலிருந்து வரிசையாக வெளியே வந்து விழத் தொடங்கின. மாடசாமியின் மனைவியும் அவற்றைக் கோணிப் பைகளிலும், பாத்திரங்களிலும் நிரப்பிக் கொண்டாள். பிறகு, மாடசாமி எந்திரக் கல்லைத் தன் விரலால் தட்டி, "அரைத்தது போதும் நிறுத்து!" என்றான். உடனே எந்திரக்கல் சுழல்வதை நிறுத்திக் கொண்டு விட்டது.
மாடசாமியும். அவன் குடும்பத்தினரும் மிகவும் சந்தோஷமாக, கிராமத்தில் உள்ள மற்ற எல்லோரையும் விடச் சிறப்பாய் விழா கொண்டாடினர். மாடசாமியின் வாழ்க்கை வளமடையத் தொடங்கியது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் துணிகளும், காலணிகளும், எல்லாப் பொருட்களும் குறைவின்றிக் கிடைத்தன.
ஒருநாள் மாடசாமி தனது பசுக்களுக்குத் தரமான பருத்திக் கொட்டை வேண்டும் என்று எந்திரக்கல்லை அரைக்கச் சொன்னான். அவ்வாறே எந்திரக்கல் வேண்டிய மட்டும் பருத்திக் கொட்டையையும், பிண்ணாக்கையும், புல்லையும் தந்தது. அதை அவனுடைய பசுக்கள் தின்று கொண்டு இருந்தன. அந்த நேரத்தில் பெரியசாமி தனது வேலைக்காரனிடம் பசுக்களை ஏரிக்கு ஓட்டிச் சென்று, புல் மேய விட்டு நீர் காட்டும்படிச் சொன்னான்.
பெரியசாமியின் வேலைக்காரன் மாடசாமியின் வீட்டின் வழியாகப் பசுக்களை ஓட்டிச் சென்றான். பெரியசாமியின் பசுக்கள், மாடசாமியுடைய பசுக்கள் இருக்கும் இடத்திற்கு அருகே வந்ததும், அவையும் மாடசாமியின் பசுக்களோடு சேர்ந்து பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு ஆகியவற்றை உண்ணத் தொடங்கின.
இதைப் பார்த்த பெரியசாமி தன் வேலைக்காரனைப் பார்த்து, "ஏய்! நம்முடைய பசுக்களை அங்கிருந்து ஓட்டிச் செல். அவை குப்பை கூளங்களையெல்லாம் சாப்பிடுகின்றன பார்" என்று கத்தினான்.
அதற்கு வேலைக்காரன், "இல்லை எஜமானே! அவை தரமான பருத்திக் கொட்டையும், பிண்ணாக்கும்தான்" என்று பதிலளித்தான். அதைக் கேட்டு வியப்புற்ற பெரியசாமி அதன் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினான்.
‘மாடசாமி எப்படிப் பணக்காரன் ஆனான்? இந்த அதிசயம் எப்படி நடைபெற்றது? இதை நான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று எண்ணியவாறு மாடசாமியின் வீட்டை நோக்கி நடந்தான்.
பெரியசாமியைப் பார்த்த மாடசாமிக்குச் சகோதரன் தன் வீட்டுக்கு வந்தது சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் அளித்தது.
"வா அண்ணா!" என்று அன்புடன் வரவேற்றான்.
பெரியசாமி வீட்டைச் சுற்றிப் பார்த்தவாறு, "மாடசாமி! நீ எப்படித் திடீரென்று பணக்காரன் ஆனாய்? நல்ல பொருட்கள் எல்லாம் நிறைய வைத்திருக்கிறாயே! இவை எங்கிருந்து கிடைத்தன உனக்கு?" என்று கேட்டான்.
மாடசாமி எதையும் மறைக்கவில்லை. காட்டுத் தேவன் கறுப்புசாமி செய்த உதவியைக் கூறினான்.
"எந்திரக் கல்லா! அது எப்படி இவற்றையெல்லாம் தருகிறது என்று எனக்குக் காட்டுவாயா?" என்று ஆவலுடன் பெரியசாமி கேட்டான்.
"ஓ அதற்கென்ன!" என்றவாறு மாடசாமி விதவிதமான திண்பண்டங்களைத் தருமாறு எந்திரக் கல்லுக்கு உத்தரவிட்டான். உடனே எந்திரக் கல் சுழல ஆரம்பித்தது. விதவிதமான இனிப்பு வகைகளையும், மீன், இறைச்சி உணவுகளையும் பொழிய ஆரம்பித்தது. அதைக் கண்ட பெரியசாமிக்கு ஆச்சரியத்தில் விழிகள் இரண்டும் வெளியே துருத்திக் கொண்டு வந்து விட்டன.
உடனே அவன் மாடசாமியிடம், "இந்த எந்திரக்கல்லை எனக்கு விற்றுவிடேன்" என்று கெஞ்சினான். முடியாது என்று மாடசாமி மறுத்தான். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகப் பெரியசாமி கூறினான். ஆனாலும் மாடசாமி ஒப்புக் கொள்ளவில்லை. எவ்வளவு வேண்டினாலும் இவனிடமிருந்து எந்திரக் கல்லை வாங்க முடியாது என்று புரிந்து கொண்ட பெரியசாமி உடனே, "ஏய் மாடசாமி! உன்னைப் போல நன்றி கெட்டவன் யாராவது உண்டா? நான்தானே உனக்கு ஆட்டுக்காலைத் தந்தேன். அதனால்தானே உனக்கு இந்த எந்திரக்கல் கிடைத்தது. நீ என்னடாவென்றால் எனக்குத் தரமாட்டேன் என்கிறாய். சரி, உனக்கு விற்க விருப்பமில்லை என்றால் சிறிது காலத்திற்கு இதை எனக்கு இரவலாவது தரக்கூடாதா?" என்று கேட்டான். மாடசாமியும் சிறிது நேரம் யோசித்து விட்டு அதற்கு உடன்பட்டான்.
பெரியசாமி ஆனந்தத்துடன் எந்திரக்கல்லை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். எந்திரக்கல்லைச் சுழலாமல் நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே சென்றான்.
அது கோடைகாலம். மக்கள் ஊறுகாய், வற்றல், மீன், காய்கறிகள் ஆகியவற்றை உப்பிலிட்டுப் பக்குவம் செய்யும் காலம். அதனால் மீன் நிறையப் பிடித்து வரப்போகிறேன் என்று ஓடத்தில் ஏறிக் கடலுக்குள் சென்றான் பெரியசாமி. குடிப்பதற்குச் சிறிது கூழும் கொண்டு சென்றான். கடலினுள் நெடுந்தொலைவு சென்ற பின் தாகமாக இருந்ததால் கூழ் எடுத்துக் குடிக்கத் தொடங்கினான். ஆனால், அதில் அவன் மனைவி உப்பு போட மறந்து விட்டிருந்தாள்.
உடனே, கூடவே எடுத்துச் சென்ற எந்திரக் கல்லை எடுத்து வெளியில் வைத்து, "என் எந்திரக் கல்லே! அரை நீ! எனக்கு உப்பு வேண்டும்" என்றான். எந்திரக் கல் சுழலத் தொடங்கிற்று. சுத்தமான வெண்ணிற உப்பை அது பொழிந்தது.
அதைப் பார்த்ததும், பெரியசாமிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. தான் பிடித்த மீன்களையும் உப்பு போட்டுப் பக்குவப்படுத்தி விற்கலாம். உப்பையே நேரடியாக விற்றாலும் இன்னும் நிறையப் பணம் கிடைக்குமே என்று நினைத்தபோதே அவனுக்குப் பெருமகிழ்ச்சி உண்டாகியது. அவன் லாபத்தைக் கணக்கிட்டவாறே உட்கார்ந்திருக்க, ஓடம் உப்பால் நிறைய ஆரம்பித்தது. ஆனால் அதைக் கவனிக்காமல் பெரியசாமி பேராசைக் கனவில் மிதந்தவாறே, "என் எந்திரக் கல்லே! அரை நீ! நிற்காமல் அரை நீ!" என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.
உப்பு நிறையக் குவிந்து எடை அதிகமாகி ஓடம் மேலும் நீருக்குள் அமிழ்ந்து சென்றது. ஆனால், பெரியசாமி பித்துப் பிடித்தவன் போல மீண்டும் மீண்டும் "என் எந்திரக் கல்லே! அரை நீ" என்றே சொல்லிக் கொண்டிருந்தான். ஓடம் மூழ்கத் தொடங்கியதும்தான் நிலைமையின் விபரீதம் அவனுக்கு உறைத்தது.
"எந்திரக் கல்லே அரைப்பதை நிறுத்து" என்று கத்தினான். ஆனால், எந்திரக்கல் நிற்காமல் அரைத்துக் கொண்டே இருந்தது. பெரியசாமி அதைத் தூக்கிக் கடலுக்குள் போடலாமென்று முயன்று பார்த்தான். ஆனால், அதன் மேல் உப்பானது குவியலாக இருந்ததால் அவனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.
"யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்!" என்று பயத்தால் கூக்குரலிட்டான். ஆனால், நடுக்கடலில் அவனைக் காப்பாற்றவோ, அவனுக்கு உதவவோ யாருமே இல்லை. ஓடம் நீருக்குள் மூழ்கிப் பெரியசாமியையும் தன்னுடன் ஆழ்கடலினுள் இழுத்துச் சென்றது.
எந்திரக் கல் இன்னமும் விடாமல் அரைத்துக் கொண்டிருப்பதாகத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். அது தொடர்ந்து மேலும் மேலும் உப்பைப் பொழிவதால்தான் இன்றும் கடல் நீர் உப்பு கரிக்கிறதாம்!
(மூலம்: தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கதைகள்)