பேரழகி கிளியோபாட்ரா (2)

யார் இந்த கிளியோபாட்ரா?

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, அதாவது கி.மு.69-ம் ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தை ஆண்டு வந்த டாலமி வம்ச மன்னரான 12-ம் டாலமிக்கு மகளாகப் பிறந்தவள்தான் நம் கதாநாயகி கிளியோபாட்ரா. இவளுக்கு முன்பு, அவளது அரசவம்சத்தில் ஏற்கெனவே கிளியோபாட்ரா என்ற பெயரில் 6 பேர் வாழ்ந்து முடித்துவிட்டதால், நம் கதாநாயகி 7-ம் கிளியோபாட்ரா என்று அழைக்கப்படுகிறாள்.

தந்தை ஓ.கே. தாய் யார்?

இந்த கேள்விக்குத்தான் இன்றுவரையிலும் உறுதியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும், அவளது தாய் பெயர் இஸிஸ் என்று கூறுவோரும் உண்டு.

கிளியோபாட்ரா எப்படிப்பட்டவள், அவளிடம் என்னென்ன திறமைகள் இருந்தன என்பவை பற்றியெல்லாம் புகழ்ந்திருந்த அவள் காலத்து எழுத்தாளர்களின் விரிவான ஆதாரங்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டன.

அதேநேரம், அவள் வாழ்ந்த 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது இயேசு கிறிஸ்து பிறந்த 150 ஆண்டுகளுக்குப் பிறகு, அவளைப் பார்த்தவர்கள் மற்றும் அவளை சந்தித்தவர்கள் விட்டுச் சென்ற குறிப்புகளைக் கொண்டு, புளுடார்ச் என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியவைதான் இன்றும் நமக்கு அவளைப் பற்றிய ஆதாரங்களாக உள்ளன.

அவள் சிவந்த நிற மேனி கொண்டவள் அல்ல; ஆனால், அழகாகவும், கவர்ச்சியாகவும், பார்த்த மாத்திரத்தில் மற்றவர்களைக் கவரும் தோற்றப் பொலிவைக் கொண்டவளாகவும், இனிமையான குரலுக்கு சொந்தக்காரியாகவும் திகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார் இவர்.

கிளியோபாட்ரா பிறந்த டாலமி வம்சத்தினர், பரம்பரை பரம்பரையாக அரசவம்ச வழியினர் கிடையாது. கி.மு. 345-களில் பரந்து விரிந்து காணப்பட்ட பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே, அதாவது ஒரு மாகாணமாகவே எகிப்து இருந்தது.

உலகையே தனது ஆட்சியின் கீழ் கொண்டு வரப் புறப்பட்டு, வெற்றிமேல் வெற்றிபெற்ற மாவீரன், மாசிடோனிய பேரரசன் அலெக்ஸாண்டர் எகிப்து மாகாணத்தின் மீதும் படையெடுத்து வெற்றிகொண்டான்.

எகிப்து வெற்றியைத் தொடர்ந்து, நைல் நதி வழியாக பெரும் படைகளுடன் இந்தியா நோக்கிப் புறப்பட்ட அலெக்ஸாண்டர், தான் வென்ற பகுதிகளை ஆட்சி செய்ய சில கவர்னர்களை நியமித்தார். அவர்கள் அந்த நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக் கொண்டனர்.

அவ்வாறு அலெக்ஸாண்டரால் நியமிக்கப்பட்ட கவர்னர்களில் ஒருவர்தான் டாலமி. இவர், அலெக்ஸாண்டரின் மிகச் சிறந்த படைத்தளபதி மட்டுமின்றி சிறந்த நண்பரும்கூட. மாசிடோனியாவின் ஆர்டியா மாவட்டத்தைச் சேர்ந்த செல்வந்தரான லகஸ் என்பவரின் மகன்தான் இந்த டாலமி. தாய் பெயர் அர்சினி.

ஆரம்பத்தில் எகிப்து, லிபியா, அரேபியப் பகுதிகளின் கவர்னராக மட்டுமே இருந்து வந்த டாலமி, கி.மு. 305 முதல் அலெக்ஸாண்டருக்குப் பிறகு மன்னராக நாட்டை ஆளத் தொடங்கினார். அதுவரை, எகிப்தை ஆண்டு வந்த பல வம்சத்தினரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். டாலமி என்ற புதிய வம்சம் ஆரம்பமானது.

சரி.. கிளியோபாட்ரா பேரழகி ஆனது எப்படி? அடுத்த பகுதியில்…

(இன்னும் வருவாள்…)

About The Author

3 Comments

  1. uma

    கிளியோபாட்ரா பற்றி தெரிந்துகொள்ள இவ்வளவு சஸ்பென்ஸ் வைக்கிறாரே நெல்லை விவேகநந்தா. உங்கள் படைப்புகள் தொடர வாழ்த்துகள்…

  2. இரா.சேகர்(ஷக்தி)

    பேரழகியின் மூக்கு பற்றி அவசியம் எழுதவும்.

Comments are closed.