பேரழகி கிளியோபாட்ரா – 18

கிளியோபாட்ரா ரோமுக்கு வந்துவிட்டதால், எகிப்து பேரரசின் ஆட்சி நிர்வாகத்தை அவளது நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் சிலர் பார்த்துக்கொண்டனர். சிலநேரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அதுபற்றிய தனது கருத்தை செயல்படுத்த எகிப்துக்கு ஒற்றர்களை அனுப்பி வைத்தாள் கிளியோபாட்ரா.

ஆனாலும், ரோமில் ஜூலியஸ் சீஸரின் விருந்தாளியாக – ஆசை நாயகியாக தங்கியிருந்த அவளது மனம் மட்டும் ஏனோ அலைபாய்ந்தது. சீஸர், தன்னை அவரது அதிகாரப்பூர்வ மனைவியாக அறிவிப்பாரா, சீஸருக்கும் தனக்கும் பிறந்த டாலமி சீஸர் அவரது வாரிசாக அறிவிக்கப்படுவானா என்றெல்லாம் யோசித்ததில் பல இரவுகள் தூக்கத்தைத் தொலைத்திருந்தாள்.

ஒருநாள் நள்ளிரவு –

யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அணைத்துப் படுத்திருந்த 2 வயது குழந்தையான டாலமி சீசரை பாதுகாப்பாக அகற்றி வைத்துவிட்டு கதவைத் திறக்க வந்தாள் கிளியோபாட்ரா. சீஸரின் பலத்த பாதுகாப்புக்கு உட்பட்டிருந்த அந்த அரண்மனைக்குள் எதிரிகள் யாரும் சட்டென்று நுழைந்துவிட முடியாது என்பதால், தைரியமாகவே கதவைத் திறந்தாள்.

கதவைத் திறந்த மாத்திரத்தில் கிளியோபாட்ராவின் முகத்தில் திடீர் பிரகாசம். ஆம்… ஜூலியஸ் சீஸர்தான் அவளைத் தேடி வந்திருந்தார். கையில் ஏதோ ஒரு பொருள் இருந்தது.

"உள்ளே வாருங்கள் பேரரசே! உங்களின் இந்த நேர வருகையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை".

"உன்னைப் பார்க்க வேண்டும் என்பதுபோல் தோன்றியது. அதனால்தான் உடனே புறப்பட்டு வந்துவிட்டேன்".

சில நிமிடங்கள் மவுனமாகக் கரைந்தன.

"பேரரசே! ஏன் வந்தது முதல் மவுனமாக இருக்கிறீர்கள்? நான் இங்கே தங்கியிருப்பது உங்கள் மனைவி கல்பூர்ணியாவுக்கு பிடிக்கவில்லையா?" – கிளியோபாட்ராவே அங்கே நிலவிய மவுனத்தை கிழித்துக்கொண்டு பேசினாள்.

"ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறாய்? எல்லா மனைவிக்குமே தனது கணவன் உத்தமபுத்திரனாக இருக்க வேண்டும் என்ற ஆசைதானே இருக்கும்? அந்தவகையில், அவள் வருத்தப்படுகிறாள். அவ்வளவுதான்! ஆனால்…"

"என்ன ஆனால்…"

"இல்லை. இப்போது நீ ஏன் அவளைப் பற்றி பேசுகிறாய்? உன்னுடன் இருக்கும்போது உனது கணவனாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன். இது எனது ஆசை மட்டுமல்ல பேராசையும்கூட!"

சீஸர் இப்படிச் சொன்னதும், தனது மேனியில் அலைபாய்ந்த அவரது கரங்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, அழகான இடுப்பை வளைத்து அப்படியே திரும்பினாள் கிளியோபாட்ரா.

இப்போது இருவரது முகமும் மிக மிக நெருக்கத்தில்!

அந்த குளிர்ந்த இரவிலும் அனலாக புறப்பட்டு வந்த இருவரது மூச்சுக்காற்றும் மோதிக்கொண்டு ஒன்றாய் கலந்தன. இருவரது கண்களும் காதல் போதையில் வெட்கப்பட்டு நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் தவித்தன. அந்த நிசப்தமான பரவசத்தின் ஊடே மெல்லப் பேச்சை ஆரம்பித்தார் சீஸர்.

"அழகே! உன்னுடன் தனிமையில் இருக்கும்போது நான் இந்த நாட்டுக்கு வேந்தன் என்பதையே மறந்துபோய் விடுகிறேன். உன் அழகில் சிறைபிடிக்கப்பட்ட நான், உன் உள்ளம் என்னும் சிறையில் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து முடிக்க ஆசைப்படுகிறேன்." – கற்பனையில் உச்சத்தில் நின்று கொண்டு பேசினார் அவர்.

"இதில் ஏன் உங்களுக்கு சந்தேகம்? அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் நான் உங்களது மனைவிதானே? விரைவில் உங்களது மனைவியாக அறிவிக்கப்போகிறீர்கள்தானே?"

"ஆமாம்! இதில் எந்த சந்தேகமும் இல்லை! நீ என்னுடைய அதிகாரப்பூர்வமான மனைவி ஆகிவிட்டால் எனக்கு புது தெம்பு கிடைத்துவிடும். மாவீரன் அலெக்ஸாண்டர் போல் இந்த உலகத்தையே எனது தலைமையின் கீழ்க் கொண்டு வரவேண்டும். இந்த உலகத்துக்கே நான் பேரரசனாக இருக்க வேண்டும். என்னருகில் நீ நீ மட்டும் மகராணியாக வீற்றிருக்க வேண்டும். இது என்னுடைய பேராசையாகக்கூட இருக்கலாம். நீ மட்டும் என்னுடன் கடைசிவரை இருந்தால் எனது லட்சியங்கள் அனைத்துமே நிறைவேறிவிடும்."

தீர்க்கமாக – அதுவும் பேராசையோடு சொன்ன சீஸரை அணைத்தபடி அவரது மார்பிள் தலை சாய்த்தாள் கிளியோபாட்ரா.

அப்போதுதான் சீஸருக்கு அந்த நினைவு வந்தது. கிளியோபாட்ராவை ஒற்றைக்கையால் தாங்கியபடியே படுக்கையில் இருந்து எழுந்தார்.

"உனக்காக பரிசு ஒன்றை வாங்கி வந்தேன். உன்னைப் பார்த்த மாத்திரத்தில் அந்த பரிசையே மறந்து போய்விட்டேன்…" என்ற சீஸர் லேசாக சிரித்து வைத்தார். அருகே வைக்கப்பட்டு இருந்த பரிசுப் பொருளை எடுத்துப் பிரித்தார்.

அந்த பரிசை பார்த்த மாத்திரத்தில் கிளியோபாட்ராவின் கயல் விழிகள் வியப்பில் விரிந்தன. விலை உயர்ந்த நவரத்தினங்கள் கோர்க்கப்பட்ட ஆபரணம்தான் அது.

கிளியோபாட்ராவின் பேரழகுக்கு பேரழகு சேர்த்தது அந்த நவரத்தின மாலை.

(இன்னும் வருவாள்…)

About The Author

2 Comments

  1. uma ananthi

    கிளியோபாட்ராவும், சீஸரும் ரொமான்சாக பேசுவது பற்றி படிக்கும்போது எனது மனத்திரையிலும் அவர்கள் காட்சிகளாக வந்துவிட்டு போகிறார்கள்.

Comments are closed.