பேரழகி கிளியோபாட்ரா – 16

கிளியோபாட்ரா மூலம் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததால் ஜூலியஸ் சீஸர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அந்தக் குழந்தைக்கு சிசேரியன் என்று பெயர் வைத்தாலும், "டாலமி சீஸர்" என்று, தனது மரபுப் பெயரையும், சீஸர் பெயரையும் இணைத்துச் சூட்டி மகிழ்ந்தாள் கிளியோபாட்ரா. குழந்தை டாலமி சீஸர் தாயைப் போலவே பேரழகனான இருந்தான். அவனது சின்னச்சின்ன குறும்புகளால் சிலிர்த்துப் போனார்கள் சீஸர் – கிளியோபாட்ரா தம்பதியர்.

சில மாதங்கள் வேகமாக ஓடின. கிளியோபாட்ராவுடன் வாழ்ந்து, மகன் டாலமி சீஸரை நன்கு கவனித்துக்கொண்டார் சீஸர். அதேநேரம், தாய்நாடு நினைப்பும் அவருக்கு வந்துபோனது. கிளியோபாட்ராவே கதியென்று கிடந்தால் தனது பெயர் கெட்டுப்போய்விடும் என்று கருதிய சீஸர் ரோமாபுரிக்குச் செல்ல முடிவெடுத்தார். தன்னுடன் ஒரு மனைவியாக வாழ்ந்து கொண்டிருந்த கிளியோபாட்ராவிடம் தனது முடிவைச் சொன்னார்.

"என்னவளே! காலம் முழுவதும் உன்னுடனேயே சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனாலும், எனக்கென்று சில கடமைகள் உள்ளன. ரோமாபுரியின் முதன்மை வேந்தனாக இருந்துகொண்டு, என்னால் இங்கேயே இருந்துவிட முடியாது. எனது வெற்றிகள் எகிப்து வரையில் மட்டும் போதாது. இன்னும் பல தேசங்களை நான் வெல்ல வேண்டும். மாவீரன் அலெக்ஸாண்டர்போல் பெயரெடுக்க வேண்டும்."

"அதனால், இப்போதே ரோமாபுரிக்கு புறப்படப் போகிறீர்களா?" – கிளியோபாட்ரா கேட்டாள்

"ஆமாம்! நான் எப்படியும் அங்கே போய்த்தானே ஆக வேண்டும்?"

"அப்படியென்றால், என்னைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்கு இல்லையா?"

"ஏன் இல்லை? இந்த எகிப்து மட்டுமின்றி கீழ்த்திசை நாடுகளையும், மேல்திசை நாடுகளையும் இணைத்த ஒரு மாபெரும் பேரரசுக்கு உன்னை பேரரசி ஆக்கவே நான் எண்ணுகிறேன். கூடிய விரைவில் ரோமாபுரி போன்ற ஒரு மாபெரும் தேசத்துக்கும் மகாராணி ஆகப்போகிறாய்."

சீஸர் இப்படிச் சொன்னதும் தன்னையே மறந்துபோனாள் கிளியோபாட்ரா. அவள் அடைந்த பேரானந்தத்திற்கு அளவே இல்லை.
"நீங்கள் எதிர்பார்க்கும் புதிய பேரரசுக்கு என்னை மகாராணியாக்கும் முடிவை ரோமாபுரி மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?"

"உடனே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்தான். ரோமாபுரியின் இப்போதைய குடியாட்சி முறையை ஒழிக்கப்போகிறேன். வாழ்நாள் சர்வாதிகாரியாக என்னை பிரகடனப்படுத்தப் போகிறேன். ரோமப் பேரரசுக்கு இதுவரை முதன்மை ஆட்சியாளராகவே இருக்கும் நான் பேரரசர் ஆகப்போகிறேன். அதன்பிறகு குடியாட்சிக்குப் பதிலாக என்னுடைய முடியாட்சிதான் ரோமாபுரியில் நடக்கும்."

"நீங்கள் மாவீரர் என்பதை நான் அறிவேன். உங்களது இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சினை வராதா? ரோமாபுரி மக்கள் கிளர்ச்சி செய்ய மாட்டார்களா? உங்கள் செனட் உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்களா? ரோமாபுரி ராணுவத்திற்கும் தலைவராக பொறுப்பு வகிக்கும் உங்களால், அந்த ராணுவத்தை ஒட்டுமொத்தமாக உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியுமா?"

"நிச்சயம் எல்லாமே முடியும்! உலகத்தையே எனக்குக் கீழ் கொண்டு வரமுடியும் என்று அலெக்ஸாண்டர் சூளுரைத்ததால்தான் அவரால் மாபெரும் வெற்றிபெற முடிந்தது. என்னாலும் வெற்றி பெற முடியும். செனட்டர்களையும் சமாளிப்பேன். ராணுவத்தையும் எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவேன்."

"உங்களை நான் முழுமையாக நம்புகிறேன்." என்ற கிளியோபாட்ரா, சீஸரை கட்டியணைத்து தனது ஆதரவைத் தெரிவித்தாள்.

"சரி. நான் இங்கு உன்னுடன் சில காலம் வாழ்ந்ததற்கும், எகிப்துவரை நான் பெற்ற வெற்றிக்கும் ஒரு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த விழா என்னை மட்டுமின்றி உன்னையும், நம் குழந்தையையும் மகிழ்விப்பதாக இருக்க வேண்டும். எகிப்தின் பேரரசியான நீயே அதற்கு ஏற்பாடுகளை செய்" என்று அடுத்ததாக சொன்ன சீஸரை இன்னும் இறுக்கமாக அணைத்து சில முத்தங்களை பதித்து விடைபெற்றாள் கிளியோபாட்ரா.

அடுத்த நாளே எகிப்து மக்களுக்கு நாட்டின் பேரரசி சார்பில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பேரரசியான கிளியோபாட்ரா "இசிஸ்" என்ற பெண் கடவுளின் மறுபிறவி என்றும், ஜூலியஸ் சீஸர், "அமான்" என்னும் கடவுளின் மறுஅவதாரம் என்றும், இவர்களுக்கு பிறந்த குழந்தை தெய்வக் குழந்தை என்றும் கருத்துகள் பரப்பப்பட்டன. ஏற்கெனவே இத்தகைய நம்பிக்கைகளில் ஊறிப்போய் இருந்த எகிப்து மக்கள் அதை தெய்வ வாக்காக ஏற்றுக்கொண்டனர்.

அத்துடன், சீஸரின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கான அறிவிப்பும் எகிப்து பேரரசு சார்பில் வெளியிடப்பட்டது. அந்த நாளும் வந்தது.

சீஸரும், கிளியோபாட்ராவும் தங்கள் குழந்தையுடன் அலெக்ஸாண்டிரியா நகர் வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்தனர். வீதிகளின் இருபுறமும் மக்கள் திரண்டிருந்து, அவர்களைத் தெய்வமாகவே வணங்கினர்.

நிலப்பரப்பில் மட்டுமின்றி, எகிப்துக்கு வளம் சேர்க்கும் நைல் நதியிலும் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. கப்பல் போன்ற மிகப்பெரிய படகில் சீஸரும், கிளியோபாட்ராவும் குழந்தையுடன் தம்பதி சமேதராக வீற்றிருந்தனர். அவர்கள் பவனி வந்த கப்பலைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான படகுகளில் பாதுகாப்பு படை வீரர்கள் உலா வந்தனர்.

மறுநாள் –

வெற்றி விழா கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து சீஸர் விடைபெறும் நேரம் வந்தது. கிளியோபாட்ராவும், சீஸரும் தனிமையில் சந்தித்துக்கொண்டனர்

"எகிப்தின் வேந்தரே! தாங்கள் என்னைப் பிரிந்துதான் ஆகவேண்டுமா?"

"நிச்சயமாக! என் நாட்டு மக்களையும் நான் பார்த்துதானே ஆகவேண்டும்?"

"இப்போது நான் ரோமாபுரிக்கு புறப்பட்டுச் செல்கிறேன். அங்குள்ள சூழ்நிலைகள் மாறியதும் உன்னையும், நம் குழந்தையையும் அழைத்துக்கொள்கிறேன்".

"சரி… இப்போதாவது ரோமாபுரிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னீர்களே. ஒருவேளை, நீங்கள் என்னை அங்கு அழைத்துச் செல்ல மாட்டீர்களோ என்றுகூட நினைத்தேன்".

"ஏன் பயப்படுகிறாய்? நமக்குள் ஏற்பட்ட இந்த பந்தம் ஒரு கணவன்-மனைவி உறவைவிட புனிதமானது. இப்போது நீ என் அதிகாரப்பூர்வ மனைவியாக இல்லாவிட்டாலும், நிச்சயம் ஓர்நாள் அதுபற்றி அறிவிப்பேன்." என்ற சீஸர், தவிப்புடன் நின்று கொண்டிருந்த கிளியோபாட்ராவை ஏறெடுத்துப் பார்த்தார்.

"என்ன. எதையோ சொல்ல நினைக்கிறாய்? ஆனால், தொண்டைக்கு மேல்தான் வர மறுக்கிறது. என்ன விஷயம்? எதுவாக இருந்தாலும் கேள்."

"நான் சொல்வதை நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது."

"நிச்சயமாக.!"

"நீங்கள் எகிப்துப் பேரரசை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத்தானே இங்கு படையெடுத்து வந்தீர்கள்?"

"ஆமாம்! என்னுடைய எதிரி பாம்பேவை சிறைபிடித்த மாதிரியும் ஆயிற்று, எகிப்தும் நம் வசம் ஆயிற்று, ரோமப் பேரரசையும் என் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாயிற்று என்கிற நிலை ஏற்பட வேண்டும் என்று எண்ணினேன். பாம்பே கொல்லப்பட்டு விட்டதால் என் பணி எளிதாயிற்று. ஆனால்.." அதற்கு மேல் எப்படி பேசுவது என்ற தவிப்பு சீஸரிடம் எட்டிப் பார்த்தது.

"என்ன ஆனால்…?" – கிளியோபாட்ரா கேட்டாள்

"வேறு ஒன்றுமில்லை; இந்த நாட்டின் பேரரசியாக நீ மட்டும் இல்லையென்றால், நான் அன்றே எகிப்தை ரோமாபுரிப் பேரரசுடன் இணைத்து, அன்றே வெற்றி விழாவை கொண்டாடி, ரோமாபுரிக்கு நிரந்தர பேரரசரும் ஆகியிருப்பேன்."

"ஏன் என்னைப் பார்த்ததால் என்ன ஆயிற்று?"

"உன்னை முதன் முதலாகப் பார்த்தபோதே உன் வசம் ஆகிவிட்டேன். ஏதோ பல ஜென்ம தொடர்பு நமக்குள் இருப்பதுபோல் உணர்ந்தேன். மேலும், உனது பேரழகும் என்னை சிறைப்பிடித்துவிட்டது." – சீஸர் இப்படிச் சொன்னபோது வெட்கத்தில் இன்னும் முகம் சிவந்து போனாள் கிளியோபாட்ரா.

"சரிசரி என்னைப் புகழ்ந்தது எல்லாம் போதும். இப்போது நீங்கள் ரோமுக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். நம் உறவு பற்றி அங்கே பல வதந்திகள் நிலவலாம். பொறுமையாக அந்த பிரச்சினையை கையாளுங்கள். உங்கள் எதிர்கால கனவு நிச்சயம் நிறைவேறும்.!" என்று நம்பிக்கை கூறிய கிளியோபாட்ராவின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, விடைபெற்றார் ஜூலியஸ் சீஸர்.

(இன்னும் வருவாள்.)

About The Author

2 Comments

  1. உமா ஆனந்தி

    இந்த தொடர் மூலம் பல்வேறு புதிய தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது.

  2. robertraj

    juliussessor and kliopatra are love symbols of the universe. only today i know many details of their life .
    thank you sir

Comments are closed.