கிளியோபாட்ராவுடன் நைல் நதிக்கரையோரம் தேனிலவு கொண்டாட வந்த ஜூலியஸ் சீஸர், தேனிலவு நாட்களை உற்சாகமாகக் கழித்தார். நாட்கள் வேகமாக நகர்ந்தன.
சுமார் 2 மாதம்வரை அவர்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள். கிளியோபாட்ரா எகிப்து மக்களை மறந்து போனாள். சீஸர் ரோம சாம்ராஜ்யத்தை நினைத்துப் பார்க்கத் தவறினார்.
கிளியோபாட்ரா – ஜூலியஸ் சீஸர் தேனிலவு கொண்டாட்டம் முடிந்தபோது, அவர்களுக்கு மாபெரும் பரிசு ஒன்றும் கிடைத்தது. அந்த பரிசு ஒரு உயிருள்ள பொருள். அதுதான், கிளியோபாட்ரா வயிற்றில் உருவான குழந்தை.
கிளியோபாட்ரா கர்ப்பமாகி இருக்கிறாள் என்பதை அறிந்த சீஸர் அதனால் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கிளியோபாட்ராவை கண்ணும் கருத்துமாகவே உடனிருந்து பார்த்துக்கொண்டார்.
சீஸரின் மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருந்தது. தனக்கு வாரிசு இல்லையே என்ற குறை இந்த மூலம் தீரப் போகிறது என்று அவர் எண்ணினார்.
அது என்ன காரணம்? சற்று விரிவாகவே பார்ப்போம்.
இறந்துபோன, ஜூலியஸ் சீஸரின் முதல் மனைவியான கெர்னெலியாவுக்கு குழந்தை இல்லை. இரண்டாவது மனைவி பாம்பியாவை விவாகரத்து செய்துவிட்டதால் அவள் மூலமும் குழந்தை இல்லை. இரண்டாம் மனைவி விவாகரத்துக்குப் பிறகு மூன்றாவதாக கல்பூர்ணியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஜூலியா என்ற ஒரு மகளும் உண்டு. இவள் எந்த மனைவி மூலம் பிறந்தவள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
சீஸர் பாம்பியாவை திருமணம் செய்த பிறகுதான் அவரது வாழ்வில் ஏறுமுகம் ஏற்பட்டது. ரோமானிய அரசியலில் மிகவும் உயர்ந்த பதவியான சர்வாதிகாரி ஆனார்.
அதே மனைவி பிறரால் சந்தேகத்திற்கு உட்பட்டதால் அவளை விவாகரத்து செய்துவிட்டார் சீஸர். அந்த சம்பவம் எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று.
இந்த சம்பவம் நடந்தது கிமு. 62-ம் ஆண்டு (அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 8).
அன்றைய தினம் ஜூலியஸ் சீஸரின் மாளிகையில் மதச்சடங்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெண்கள் மட்டும்தான் அந்தச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்பதால், சீஸரின் மனைவி பாம்பியா தனக்கு வேண்டிய மற்றும் மிகவும் நெருங்கிய உறவுப் பெண்களையே விழாவுக்கு அழைத்திருந்தாள்.
சடங்கு நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு வீரர்களுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், அந்த இடம் முழுக்க பெண்களாகவே தெரிந்தனர். பாதுகாப்பு படையினரின் பரிசோதனைக்குப் பிறகே அவர்கள் அங்கே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால், இந்த பலத்த பாதுகாப்பையும் மீறி ஒருவன் அங்கே நுழைந்துவிட்டான். அவன் பெயர் ப்யூப்ளியாஸ் கிளாடியஸ் (இதற்கு வசீகரமானவன் என்று அர்த்தம்). அவன் வந்தது பெண் வேடத்தில் என்பதால் அவனைச் சரியாக கவனிக்காமல் முதலில் உள்ளே அனுமதித்துவிட்டனர் படைவீரர்கள்.
பின், அவனது நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் கவனித்த வீரர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. அவனைப் பரிசோதித்ததில் குட்டு வெளிப்பட்டுவிட அவனை அப்படியே அமுக்கிப் பிடித்துவிட்டனர்.
அந்தநேரம் ஜூலியஸ் சீஸர் அங்கே வந்துவிட்டார். மதச்சடங்கில் கலந்துகொள்ள வந்த பெண்களும் பரபரப்பாகிவிட்டனர். அவர்களில் சிலர், சீஸரின் மனைவி பாம்பியா அழைக்கப்போய்தான் அவன் மாறுவேடத்தில் வந்திருக்க முடியும் என்று பேச ஆரம்பித்துவிட்டனர். இந்தப் பேச்சு சீஸரின் காதிலும் விழுந்துவிட்டது.
"இந்த சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்" என்று கர்ஜித்த சீஸர், அதன்பிறகு தனது மனைவி பாம்பியாவைப் பார்க்கவே மறுத்துவிட்டார். மறுநாளே அவளை விவாகரத்தும் செய்துவிட்டார்.
தனது சகோதரியை சீஸர் விவாகரத்து செய்துவிட்டார் என்பதை அறிந்த பாம்பே கொதித்தெழுந்தான். அன்று முதல் அவருக்கு முதல் எதிரி ஆகிவிட்டான். மேலும், இருவருக்கும் அரசியல் ரீதியாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் பிரச்சினை இருந்து வந்தது. அதனால், சீஸரை எப்போது விரட்டலாம் என்று காத்திருந்தான் பாம்பே.
ஆனால் அவன் சீஸரிடம் தோல்வியுற்று, கிளியோபாட்ராவின் முதல் கணவன் 13&ம் டாலமியின் ஆதரவாளர்களால் தலை கொய்து கொலை செய்யப்பட்டது உங்களுக்கு தெரிந்ததுதானே?
இந்த சம்பவத்தில் சீஸர் உதிர்த்த, "சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்" என்ற வாக்கியம், இன்றும் உலகப் புகழ்பெற்றதாக கருதப்படுகிறது.
சரி இனி விஷயத்திற்கு வருவோம்…
கிளியோபாட்ரா தன்னால் கருவுற்று இருப்பதை அறிந்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற சீஸருக்கு இன்னொரு ஆத்ம திருப்தியும் ஏற்பட்டது. ஏற்கெனவே தனது மகள் ஜூலியா இறந்துபோன ஏக்கத்தில் வாரிசு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த சீஸர், தனக்கு கிளியோபாட்ரா எப்படியும் ஒரு ஆண் வாரிசை பெற்றுத்தருவாள் என்று எதிர்பார்த்தார். அதனால் அவர் எகிப்திலேயே கிளியோபாட்ராவுடன் தங்கியிருக்க நேரிட்டது.
அதேநேரம், ரோமிலோ அவர் பற்றிய தவறான தகவல்கள் அவரது அரசியல் எதிரிகளால் மக்களிடம் வேகமாக பரப்பப்பட்டன. சீஸர் கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டுவிட்டார். வேற்று நாட்டு அரசியான அவளை இந்த ரோமாபுரிக்கும் அரசியாக்க முயற்சிக்கிறார். அதனால், அவரை ரோமானிய முதன்மை வேந்தர் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும். என்று தகவல்கள் பரப்பப்பட்டன.
“நம் மாவீரர் சீஸரா இப்படி கிளியோபாட்ராவின் பேரழகில் மயங்கிக் கிடக்கிறார்? ஒரு மாவீரருக்கு இது அழகா?“ என்று ரோமானிய மக்களும் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
இந்த சூழ்நிலையில் சரியாக 10 மாதம் ஆவதற்கு முன்பே ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் கிளியோபாட்ரா. கிமு47ல் இந்த குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு "சிசேரியன்" என்று பெயரிட்டார்கள் சீஸர் & கிளியோபாட்ரா தம்பதியர்.
இந்தக் குழந்தை கிளியோபாட்ராவுக்கு அறுவைச் சிகிச்சை மூலமே பிறந்தது, அவளது வயிற்றைக் கீறி சீஸரே பிரசவம் பார்த்தார் என்ற கருத்தும் உள்ளது.
மனிதனது அறிவுக்கு எட்டிய வகையில், உலகின் முதன் முதலில் ஆபரேஷன் மூலம் பிறந்த குழந்தையும் இதுதான் என்பதாலும், அதைச் செய்தது சீஸர்தான் என்பதாலும், ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்ப்பதற்கு "சிசேரியன்" என்றே பெயர் வைத்து பெருமை சேர்த்துள்ளது இன்றைய மருத்துவ உலகம்.
(இன்னும் வருவாள்…)
தவறான கருத்து. சீசர் பிறந்த முறை என்பதால் தான் சிசேரியன் என்று வந்தது. சீசருக்கும் கிளியோபெட்ராவுக்கும் குழந்தை பிறக்கவில்லை.
கிளியோபாட்ராவுக்கும் ஜூலியஸ் சீசருக்கும் சிசேரியன் அல்லது சீசரியன் பிறந்தான் என்ற கருத்து உண்மையானதுதான். அவளுக்கு மொத்தம் 4 குழந்தைகள். சீசருடன் ஒரு ஆண் குழந்தை. மற்ற 3 குழந்தைகள், ஆண்டனிக்கும் அவளுக்கும் பிறந்தவை. இவர்களில் ஒரு இரட்டையர், ஒரு மகன். அவர்கள் பெயர் முறையே இரண்டாம் கிளியோபாட்ரா செலீன், அலெக்சாண்டர் ஹெலியோஸ் மற்றும் டாலமி பிலடெல்பஸ். கிளியோபாட்ரா தனது சகோதரர்களுடன் மண உறவு கொண்டிருந்தாலும், அவர்கள் வழியாக பிள்ளை பெற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவர்கள் இருவரும் தம்பிகள் – வயது மிக குறைவானவர்கள்.
மற்றும், சிசேரியன் பெயர் காரணத்திற்கு இரு விதமாக தகவல்கள் கூறப்படுகின்றன. சீசர், சிசேரியன் மூலம், அதாவது வயிற்றை கீறி பிறக்க வைக்கப்பட்டதால் அந்த பெயர் ஏற்பட்டது என்றும், கிளியோபாட்ராவுக்கும், சீசருக்கும் பிறந்த ஒரே மகன் ஆபரேஷன் மூலம் பிறந்ததால் அந்த பெயர் ஏற்பட்டது என்றும் கருத்துகள் உள்ளன.
கிளியோபாட்ரா வரலாறு பெரும்பாலும் கற்பனையே! ஷேக்ஸ்பியர் கூட, தனது கற்பனை திறத்தை வெளிப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை கூறியுள்ளார். ஜூலியஸ் சீஸர், ஆண்டனி அன்ட் கிளியோபாட்ரா நாவல்களை படித்தால், ஒரு வரலாற்றை பதிவு செய்ய எவ்வளவு கற்பனைகளை ஷேக்ஸ்பியர் கையாண்டுள்ளார் என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்பதையும் நேயர்கள் கவனிக்க வேண்டுகிறேன்.
– நெல்லை விவேகநந்தா
வெர்ய் இன்டெர்ச்டிங் ச்ட்ரொய், வெர்ய் நிcஎ, தன்க்ச் டொ நெல்லை வெவெக நன்ட