"பேரரசே! அங்கே திரும்பிப் பாருங்கள். நம்மை யாரோ பின்தொடர்கிறார்கள். ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது" – பதற்றமான கிளியோபாட்ராவை சட்டென்று திரும்பிப் பார்த்தார் ஜூலியஸ் சீஸர்.
அவரது பார்வையிலும் அந்த படகுகள் பின்தொடர்ந்து வருவது தெரிந்தது. ஆனால், அவர் நிதானமாகவே இருந்தார்.
"ஏன் பதற்றப்படுகிறாய் கிளியோபாட்ரா? அவர்கள் நம் எதிரிகள் அல்ல. நம் பாதுகாப்பு வீரர்கள். ஒரு முன்னெச்சரிக்கைகாகத்தான் அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட வைத்தேன். இப்போது நாம் கரைக்கு திரும்புகிறோம் அல்லவா? அதனால்தான் அவர்கள் விரைந்து வருகிறார்கள். "
"அப்படியா பேரரசே! நான் என்னவோ எதிரிகள்தான் வந்துவிட்டார்கள் என்று கொஞ்சம் பயந்துவிட்டேன்".
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கரைக்கு வந்து சேர்ந்த அவர்கள், நதிக்கரைக்கு அருகில் அமைந்திருந்த தற்காலிகக் குடியிருப்புக்குள் அடைக்கலம் புகுந்தார்கள். அந்த இரவை அங்கேயே கழித்தார்கள்.
இரண்டு நாட்களாக ஒரே இடத்தையே சுற்றிச்சுற்றி வந்ததால் சீஸருக்கு போர் அடித்ததுபோல் இருந்தது. கிளியோபாட்ராவுடன் வேறு எங்கே செல்லலாம் என்று எண்ணியபோதுதான் எகிப்து பிரமிடுகள் பற்றிய நினைவு வந்தது. உடனே கிளியோபாட்ராவை அழைத்தார்.
"அன்பே! நான் எகிப்துக்கு வரும் வழியில் கூம்பு வடிவில் பெரிய கட்டிடங்களைப் பார்த்தேன். நான் வீரர்களிடம் விசாரித்தபோது, அவை இறந்தவர்கள் புதைக்கப்பட்ட இடங்கள் என்றார்கள். அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நீ இந்த நாட்டுக்கு மகாராணி என்பதால் உனக்கு அதுபற்றி நிறையவே தெரிந்திருக்கும். இப்போது நாம் அந்த இடத்துக்குச் செல்வோமா?"
"நான்கூட உங்களிடம் அதுபற்றி பேச வேண்டும் என்று நினைத்தேன். அந்த கல்லறைகள் எங்கள் நம்பிகைக்கு உரியவை. அதனால், அவற்றை சற்றுத் தொலைவில் இருந்து மட்டுமே பார்க்க முடியும்" என்றாள் கிளியோபாட்ரா.
"சரி கிளம்புவோமா?"
"நினைத்த நேரத்தில் அங்கே செல்ல முடியாது. அது பாலைவனப் பகுதி. வெயில் சுட்டெரிக்கும். நிழலில் ஒதுங்குவதற்குக்கூட இடம் இருக்காது. குடிக்கத் தண்ணீரும் கிடைக்காது. அதனால், இன்று அந்தி சாயும் வேளையில் அங்கே செல்வோம்" என்றாள் கிளியோபாட்ரா.
சீஸரும் அதற்கு ஒப்புக்கொண்டார். மாலையில் எகிப்து பிரமிடுகளைச் சுற்றிப் பார்க்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தனது படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்.
மாலை நேரம் வந்ததும் கிளியோபாட்ராவை அழைத்துக்கொண்டு பிரமிடுகளைக் காண புறப்பட்டார் சீஸர். பாதுகாப்புக்கு சில குதிரைப்படை வீரர்களையும் அழைத்துச் சென்றார்.
சில கிலோமீட்டர் தொலைவு பயணத்திற்குப் பிறகு எகிப்து பிரமிடுகள் காணப்படும் இடத்தை அடைந்தார்கள். அப்போது சூரியன் கோபத்தின் அனலை கக்கிக் கொண்டிருந்தான். அந்த பாலைவன மணலும் அனலால் தகித்துக் கொண்டிருந்தது.
பிரமிடுகள் பகுதியை அடைந்ததும் குதிரையில் இருந்து கிளியோபாட்ராவும், சீஸரும் இறங்கிக்கொண்டார்கள். பிரமிடுகள் அமைந்த பகுதியை நோக்கி நடந்தார்கள். ஒரு மேடான பகுதியை ஏறி இறங்கியதும் சீஸருக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
அந்த பள்ளமான பகுதியில் ஏராளமான பிரமிடுகள் இருந்தன. அவை அத்தனையும் வானத்தை நோக்கி நீண்டிருந்தன. அதுபற்றி தெரிந்துகொள்ள கிளியோபாட்ரா பக்கம் பார்வையைத் திருப்பினார் சீஸர்.
"என்னவளே! இங்கே இவ்வளவு கல்லறைகள் கட்டப்பட்டு இருக்கின்றனவே… இவை எல்லாம் யாருடையவை? எதற்காக கட்டப்பட்டன?"
"இவை எல்லாம் எங்கள் மன்னர் பரம்பரைக்கு மட்டுமே உரியவை. இந்த கல்லறைகளுக்குள் உறங்கிக்கொண்டிருப்பவர்கள் எங்கள் முன்னோர்கள் – இந்த எகிப்து பேரரசை ஆண்ட பேரரசர்கள் மற்றும் குடும்பத்தினர். இறந்துபோன இவர்கள் இங்கு புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார்கள்."
கிளியோபாட்ரா இப்படிச் சொன்னதும் ஜூலியஸ் சீஸர் குறுக்கிட்டார்.
"என்னது இவர்கள் இங்கே விதைக்கப்பட்டு இருக்கிறார்களா? எனக்குச் சுத்தமாக புரியவில்லையே."
"இதுபற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் எங்கள் நம்பிக்கைகள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். இறக்கின்ற அனைவருக்குமே மறுபிறவி என்ற ஒன்று உண்டு. இங்கே நாம் எப்படி வாழ்கிறோமோ அதுபோன்று மறுமை உலகத்திலும் வாழ முடியும். அதனால்தான், இறந்த எங்கள் முன்னோர்களை இந்த பிரம்மாண்ட கல்லறைகளில் பாதுகாப்பாக உடல் கெடாதவாறு புதைத்து வைத்திருக்கிறார்கள்."
"இறந்த ஒருவரது உடல் அழுகித்தானே ஆகவேண்டும்? அது எப்படி கெடாமல் இருக்கும்?"
"இதுதான் உங்கள் நாட்டினருக்கும், எங்கள் நாட்டினருக்கும் உள்ள வித்தியாசம். எங்கள் அரண்மனையில் சிறப்பு வைத்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இறந்த ஒருவரது உடலை அப்படியே வைத்திருக்கும் ரகசியம் தெரியும். அதன்படிதான் நாங்கள் இறந்தவர்களது உடலை மறுமை வாழ்வுக்காக பாதுகாக்கிறோம்".
"நீ சொல்வதைப் பார்த்தால் ஏதோ திகில் கதை கேட்பதுபோல் இருக்கிறது. மேற்கொண்டு சொல் " என்று கூறிக் கொண்டே பிரமிடுகளை நெருங்கினார் சீஸர்.
அப்போது கிளியோபாட்ரா அவரைத் தடுத்தாள்.
"மாவீரரே! என்னவரே! சற்றுத் தொலைவில் இருந்தபடி இவற்றைப் பார்ப்பது நமக்கு நல்லது என்று நினைக்கிறேன். நான் இந்த நாட்டுக்கு மகாராணி என்றாலும், ஒரு பெண்தான். இங்கு பெண்கள் வரக்கூடாது என்ற நியதி உள்ளது. அதை நாம் மீறப்போய் நமக்கு ஏதேனும் ஆகிவிட்டால்… நினைக்கவே பயமாக இருக்கிறது. அதனால் அவற்றின் அருகில் செல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்."
"என்ன கிளியோபாட்ரா பயந்துவிட்டாய்? ஒரு நாட்டை ஆளும் பேரரசி இப்படி பயப்படலாமா? உனக்குத் துணையாக நான் இருக்கிறேன். அருகே எங்கள் நாட்டு மாவீரர்கள் ஆயுதங்களோடு பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். வேறு ஏன் பயப்பட வேண்டும்?"
"நான் சொன்னவை எல்லாம் எங்கள் நம்பிக்கைகள். அவை பொய்த்துப் போய்விடாது என்று 100 சதவீதம் நம்புகிறேன். ஆபத்து ஏற்படாமல் இருக்க நாம்தான் உஷாராக இருந்துகொள்ள வேண்டும்" என்றாள் கிளியோபாட்ரா.
சீஸரும் அவளது யோசனையை சரி என்று ஏற்றுக்கொண்டார். சற்று தொலைவில் இருந்தபடியே பிரமிடுகளைப் பார்த்து வியந்தார் சீஸர்.
"இந்த கல்லறைகளுக்கு என்ன பெயர்?" – சீஸர் கேட்டார்.
"இவைகளுக்குப் பெயர் மெர் (பிரமிடு என்பது பிரமிஸ் என்கிற கிரேக்கச் சொல்லில் இருந்து பிறந்ததாகும்). இறப்புக்குப் பிறகு மறு உலகத்திற்கு செல்லத் தயாராகும் இடம் இது."
"நீ சொல்வது எல்லாமே வியப்பாக இருக்கிறது. நீ இந்த கல்லறைகள் பற்றி சொல்லச் சொல்ல… அவைகளுக்குள் என்னதான் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பதுபோல் இருக்கிறது. நிச்சயம் அவற்றை எனது வீரர்கள் துணையுடன் பார்த்துவிடுவேன்."
சீஸர் இப்படிச் சொன்ன மாத்திரத்தில் அந்த இடத்தில் சட்டென்று பல மாற்றங்கள் ஏற்பட்டன. அனலை கக்கிக் கொண்டிருந்த சூரியன் திடீரென மறைந்து போனான். எங்கிருந்தோ ஓடி வந்த இருள் கவ்விக் கொண்டது. கூடவே, காற்றும் புயல் வேகத்தில் வீச ஆரம்பித்தது.
வேகமாக வீசிய காற்றில் பாலைவன மணல் அப்படியே மேலெழும்பியது. காய்ந்துபோன தாவரங்களின் கழிவுகளான சருகுகள் பலமாய் சலசலத்தன.
இந்த மாற்றங்களை திடீரென்று பார்த்த சீஸர் நடுங்கிப் போய்விட்டார். கிளியோபாட்ராவும் அப்படித்தான்.
இதற்குமேல் இங்கிருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த அவர்கள் வந்த வழியே வேகமாகத் திரும்பினர்.
(இன்னும் வருவாள்)
எவ்வளவு ஆர்வத்துடன் வாசித்தேன் இப்படி தொடரும் என்று சொல்வீர்கள் என்று நினைக்கவே இல்லை.
ஷகீல்
அபுதாபி
Very interesting article. We, as a family went to Egypt last year and amazed to see all the pyramids and the history behind it. You should visit to see the Architectural monuments and the beauty.
Regards
Darshi Yamunarajan
உங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. அடுத்த வாரமும் சஸ்பென்ஸ் தொடரும் என்பதால், உங்களது பார்வையை மீண்டும் சுழல விடுங்கள்.