கிளியோபாட்ராவும், ஜூலியஸ் சீஸரும் புறப்பட்ட உல்லாசப்படகு நைல் நதியில் மெதுவாக பாய்ந்து சென்றது. சிறிது தூரம் சென்றதும் படகை நிறுத்திக்கொண்டார் சீஸர்.
கிளியோபாட்ரா அவருக்கு பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள். துடுப்பை ஒரு ஓரமாக வைத்துவிட்டு கிளியோபாட்ரா நோக்கி வந்த சீஸர், அவளை அப்படியே தன்னோடு அணைத்துக்கொண்டார்.
"எனக்கே எனக்காய் உரியவளே! இந்த அழகான நைல் நதியில் பேரழகியான உன்னோடு பயணிப்பது, ஏதோ உல்லாச உலகத்தில் மிதப்பதுபோல் இருக்கிறது. சொர்க்கம் சொர்க்கம் என்று சொல்கிறார்களே, அங்கேயும் இதே அனுபவம்தான் இருக்குமோ என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய்?"
"எனக்கும் அப்படித்தான் பேரரசே! உலகமே வியக்கும் ஒரு மாவீரனோடு தன்னந்தனியாக, அவருக்கே உரியவளாக பயணிப்பதில் எனக்கும் பரமானந்தம்தான்…" என்ற கிளியோபாட்ராவை, செல்லமாய் இழுத்துக்கொண்டு படகில் இருந்த சிறிய அறைக்குள் நுழைந்தார் சீஸர்.
அந்த படகின் அறை அழகாய் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விலை உயர்ந்த பளபளக்கும் அரேபிய கம்பளம் அங்கிருந்த சிறிய படுக்கையில் விரிக்கப்பட்டுக் கிடந்தது. அதில் இருந்து வந்த வாசணை திரவியங்களின் மணம் 52 வயது சீஸரை 25 வயது வாலிபனாக்கியது.
அந்த உயரிய படுக்கையில் கிளியோபாட்ராவும், சீஸரும் நெருக்கமாக அமர்ந்தனர். படகில் வேறு எவரும் இல்லை என்பதால், கணவன் ஒருவன் தனது மனைவியை அணைத்துக்கொள்வதுபோல் கிளியோபாட்ராவை உரிமையோடு அணைத்துக்கொண்டார் சீஸர்.
அவர்களது அணைப்பில் அங்கே காமத்திற்கு பதிலாக அன்புதான் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. காரணம், ஜூலியஸ் சீஸர் உருக்கமாக பேசியதுதான்.
"அன்பே! உன்னைப் பார்த்த நாள் முதல் எதையோ பறிகொடுத்ததுபோல் உணர்கிறேன். எனக்கும் உன்னை ஒத்த வயதாக இருந்தால் எப்படி இருக்கும் என்றுகூட அடிக்கடி சிந்தித்துப் பார்க்கிறேன்".
"அதனால் என்ன பேரரசே! மனம்தானே வயதை நிர்ணயிக்கிறது. அழகு இன்று இருக்கும், நாளை போய்விடும். மனம் என்றும் ஆரோக்கியமாக இருந்தால், என்றும் 16 வயதாக வாழலாம்…" என்று கிளியோபாட்ரா சொன்னபோது, அவளது மதிநுட்பத்தைக் கண்டு, வியப்பில் புருவங்களை உயர்த்தினார் சீஸர்.
"உன்னுடைய மதிநுட்பம், பேரழகு, பழகும் தன்மை – இவற்றை எல்லாம் பார்க்கும்போது, உன்னை எனது அதிகாரப்பூர்வ மனைவியாக அடைய முடியவில்லையே என்று அவ்வபோது தவிக்கிறேன். உன் மூலம் எனக்கொரு மாவீரன் மகனாய்ப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது நடக்குமா?" என்று கேட்டார் சீஸர்,
"ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? உங்கள் மனைவியாக வாழ நான் தயாராக இருக்கும்போது வேறு எதை நினைத்து கவலைப்படுகிறீர்கள்?"
"உன்னை எனது மனைவியாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், ரோம் மக்கள் எப்படி அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான் எண்ணுகிறேன்".
"அதைப்பற்றி இப்போதே ஏன் யோசிக்கிறீர்கள்? நாம் இப்போதைக்கு கணவன்-மனைவியாக வாழ்வோம். ரோமுக்கு சென்ற பிறகு, அப்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்து, மேற்கொண்டு முடிவு எடுப்போம்." என்று கிளியோபாட்ரா சொன்ன பிறகுதான், சீஸருக்கு தைரியம் வந்தது.
அவர்கள் இவ்வளவும் பேசி முடிக்க அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகியிருந்தது.
சிறிதுநேரம் கிளியோபாட்ராவும், சீஸரும் அமைதியாக இருந்தனர். நீளமான நைல் நதியை முத்தமிட்டு வந்த பாலைவனக் காற்று, அவர்கள் மீது குளிர்ந்த சாரலை வீசிவிட்டுச் சென்றது. மனதிற்குள் அருவி கொட்டுவதுபோல் ஜில்லென இருந்தது.
சுமார் 2 மணி நேரம் இருவரும் நைல் நதியில் மிதந்திருப்பார்கள். அவர்களது மகிழ்ச்சியான தேனிலவு கொண்டாட்டம் அந்தச் சூரியனுக்கு பிடிக்கவில்லை போலும்; கோபத்தில் கிழக்கே மறைய ஆரம்பித்து இருந்தான். நைல் நதி இருளில் கரைய ஆரம்பித்து இருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் பயணித்த உல்லாசப் படகு கரையை நோக்கித் திரும்பியது. அப்போது யதார்த்தமாக பின்னே திரும்பினாள் கிளியோபாட்ரா.
அவர்கள் சென்று கொண்டிருந்த படகை சில படகுகள் பின்தொடர்ந்தபடி வேகமாக வந்து கொண்டிருந்தன. அந்த படகுகளில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் இருப்பதும் அவளது பார்வையில் தெரிந்தது. அடுத்த நொடியே பதற்றமானாள் கிளியோபாட்ரா.
(இன்னும் வருவாள்)
சுமார் 2 மணி நேரம் இருவரும் நைல் நதியில் மிதந்திருப்பார்கள். அவர்களது மகிழ்ச்சியான தேனிலவு கொண்டாட்டம் அந்தச் சூரியனுக்கு பிடிக்கவில்லை போலும்; கோபத்தில் கிழக்கே மறைய ஆரம்பித்து இருந்தான். நைல் நதி இருளில் கரைய ஆரம்பித்து இருந்தது.
– இந்த பகுதியில் இடம்பெற்றுள்ள, மேற்படி பாராவில் கோபத்தில் கிழக்கே மறைய ஆரம்பித்துவிட்டான் என்பதை, மேற்கே மறைய ஆரம்பித்துவிட்டான் என்று திருத்தி வாசித்துக்கொள்ளவும்.
சீஸர், கிளியோபாட்ராவின் உருக்கமான பேச்சு என்னையும் உருக வைத்துவிட்டது.
னேலமன நயல் நதிகரையை முதமிடு வந்த பலைவன கட்ரு…….