கிளியோபாட்ராவிடம் முதன் முறையாக வெட்கத்தை, அதுவும் மிக நெருக்கத்தில் பார்த்த ஜூலியஸ் சீஸரின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்றும் உணர்ந்தார். வானத்தில் இறக்கை விரித்து முதன் முதலாக பறந்தால் எப்படி இருக்குமோ… அந்த உணர்வும் வந்து போனது.
இருவரும் உடலால் மட்டுமின்றி மனதாலும் கலந்தனர்.
கிளியோபாட்ராவும், ஜூலியஸ் சீஸரும் ஒன்றாகக் கலந்துவிட்ட தகவல் அறிந்த, 13-ம் டாலமி வெகுண்டு எழுந்தான். தன்னை ஏமாற்றிய கிளியோபாட்ரா, ஆட்சியைக் கைப்பற்ற ஏதோ பெரிய திட்டம் போட்டிருப்பதாகவே கருதினான். ஒருவேளை, சீஸரின் உதவியால் அவள் ஆட்சிக்கு வந்துவிட்டால், அவளை விரட்டிவிட்ட தன்னை எப்படியும் கொன்றுவிடலாம் என்று பயந்தான் 13-ம் டாலமி.
உடனே தனது ஆதரவாளர்களைத் திரட்டினான். அவர்களைப் பொதுமக்களிடம் அனுப்பி, கிளியோபாட்ராவுக்கு எதிராக தூண்டிவிட்டான். கிளர்ச்சி ஏற்பட்டது, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது.
இதையறிந்த ஜூலியஸ் சீஸர் கோபம் கொண்டார். 13-ம் டாலமியை உடனே கைது செய்யுமாறு தனது படைவீரர்களுக்கு உத்தரவிட்டார். அடுத்த நிமிடமே 13-ம் டாலமியைத் தேடி ஒரு படை சென்றது. அவர்கள் தலைமறைவாக இருந்த 13-ம் டாலமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், கிளியோபாட்ராவின் தங்கையான நான்காம் அர்சினி, 13-ம் டாலமியிடம் செல்வாக்கு பெற்றிருந்த பொதினஸ் மற்றும் படைத்தளபதி அச்சிலெஸ் உதவியுடன் சேர்ந்து ஒரு பெரும் படையை திரட்டினாள். சீஸரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்பது அவளது திட்டமாக இருந்தது. அவள் 20 ஆயிரம் படைவீரர்களுடன் சீஸர் கைப்பற்றிய பகுதியை முற்றுகையிட்டாள். அர்சினியின் படைகளும், சீஸரின் படைகளும் மோதின.
இந்தப் போரில் இருதரப்பிலும் பல வீரர்கள் பலியாகினர். பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அலெக்ஸாண்டிரியாவில் இருந்த நூலகத்துக்குத் தீ வைக்கப்பட்டது. உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்புக் கிடங்குகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இந்தப் போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் அர்சினி தனது ஆதரவாளர்களைத் திரட்டினாள். சீஸரை எதிர்த்த எகிப்து மக்கள் இவளுடன் சேர்ந்து கொண்டனர். அந்த தைரியத்தில் எகிப்தின் மகாராணியாக தன்னை அறிவித்தாள் அர்சினி.
எகிப்தைக் கைப்பற்றிய ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீஸர் இந்த அறிவிப்பால் கொஞ்சம் யோசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தனக்கு எதிராகக் கிளம்பியுள்ள அர்சினியை எப்படி அடக்குவது என்று யோசித்தார். ராஜதந்திரத்துடன் காய்களை நகர்த்தினார்.
சிறைபிடிக்கப்பட்ட 13-ம் டாலமியை விடுதலை செய்தார். ஆனாலும், சுமார் 6 மாதங்கள்வரை போர் நீடித்தது. அந்தப் போரில் பொதினஸ் கொல்லப்பட்டான். அடுத்ததாக படைத்தளபதி அச்சிலெசும் பலியானான். எகிப்து படை பின்வாங்கியது.
இதனால் விடுதலையான 13-ம் டாலமிக்கு பயம் அதிகமானது. சீஸரின் படைவீரர்கள் தன்னைக் கொன்று விடுவார்களோ என்று பயந்தான். உடன் இருந்து ஆலோசனை கூறிவந்த பொதினஸ், படைத்தளபதி அச்சிலெஸ் ஆகியோர் கொல்லப்பட்டது அவனுக்குப் பேரிழப்பாக இருந்தது. அதனால் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல முடிவெடுத்தான்.
ஒருநாள் இரவு தன்னந்தனியாக நாட்டைவிட்டு ஓடினான் 13-ம் டாலமி. இரவு நேரம் என்பதால் எந்தத் திசை நோக்கிச் செல்கிறோம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. சீஸரின் படைவீரர்கள் எங்கெங்கு முகாமிட்டு இருக்கிறார்களோ, அதற்கு எதிர்த்திசையில் ஓடினான்.
ஓரிடத்தில் நைல் நதி குறுக்கிட்டது. அதை எப்படி கடப்பது என்று சிறுவனான 13-ம் டாலமியால் யோசிக்க முடியவில்லை. ஒரு மரக்கட்டையை கையில் எடுத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கினான். ஆனால் ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அதில் அடித்துச் செல்லப்பட்டு, நீருக்குள் மூழ்கி இறந்தான். அப்போது அவனுக்கு வயது 15.
அதே நேரம், எகிப்தின் பேரரசியாக அறிவிக்கப்பட்ட அர்சினி சிறைபிடிக்கப்பட்டாள். இதுதான் தகுந்த சமயம் என்று, அதற்காகவே காத்திருந்த கிளியோபாட்ரா சீஸரிடம் மெல்லக் காயை நகர்த்தினாள்.
ஒருநாள் இரவு – சீஸரைத் தனிமையில் சந்தித்தாள். படுக்கையில் அவரை அணைத்தபடியே பேச்சைத் தொடர்ந்தாள் கிளியோபாட்ரா.
"பேரரசரே! என் அன்புக்கு உரியவரே! இப்போது எகிப்து முழுவதும் தங்கள் வசமாகிவிட்டது…"
"அது எதிர்பார்த்த விஷயம்தானே?"
"ஆமாம்! இப்போது, நான் எகிப்து பேரரசியாக ஆசைப்படுகிறேன். அதுவும், உங்களின் நிரந்தர துணையுடன்…" என்ற கிளியோபாட்ரா, சீஸரை இறுக்கமாக அணைத்துக்கொண்டு. அவரது உதட்டில் அழுத்தி முத்தமும் கொடுத்து சிலிர்ப்பூட்டினாள்.
ஏற்கெனவே கிளியோபாட்ராவின் பேரழகு என்ற வலையில் கவிழ்ந்து கிடந்த சீஸர், அவளை எகிப்தின் மகாராணியாக்க சம்மதித்தார்.
அடுத்த சிலநாட்களில் அதற்கான விழா நடந்தது. பெண்களே நேரடியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியாது என்பதால், மீண்டும் ஒருமுறை அதிகாரப்பூர்வமாக ஒரு திருமணம் செய்ய வேண்டிய அவசியம் கிளியோபாட்ராவுக்கு ஏற்பட்டது. சீஸருடன் "இணைந்து" மட்டுமே வாழ முடியும் என்பதால், தனது இன்னொரு தம்பியை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தாள் கிளியோபாட்ரா.
அந்த தம்பியின் பெயர் 14-ம் டாலமி. அவனுக்கு அப்போது 16 வயதே ஆகியிருந்தது. அதாவது, இறந்துபோன 13-ம் டாலமியைவிட ஒரு வயது அதிகம். அவனை கணவனாக ஏற்றுக்கொண்ட கிளியோபாட்ரா, ஜூலியஸ் சீஸர் உதவியுடன் மீண்டும் எகிப்தின் மகாராணி ஆனாள்.
அடுத்த சில நாட்களில் அவள் தேனிலவுக்குப் புறப்பட்டாள். புதிய கணவன் 14-ம் டாலமியை அழைத்துக்கொண்டு அல்ல; ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீஸருடன்!
(இன்னும் வருவாள்…)
திருமணம் ஆனவுடன் கணவனைக் கூட்டிக்கொண்டுதானே தேனிலவு புறப்படுவார்கள்? ஆனால், கிளியோபாட்ரா, கணவன் இருக்க… காதலனை அல்லவா கூட்டிக்கொண்டு போகிறார். படிக்கவே விறுவிறுப்பாக இருக்கிறது.