அழகு என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருபவள் எகிப்து பேரரசி கிளியோபாட்ரா. உலகப் பேரழகி பட்டத்தை இன்றுவரையிலும் தக்க வைத்துக் கொண்டிருப்பவள் கிளியோபாட்ராதான். அவளுடைய அழகால் கவிழ்ந்த அரசுகளும் உண்டு. அந்த ஆழகை ஆராதித்த அரசுகளும் உண்டு. அந்த அழகின் வசீகரத்தால் சிதறுண்டு போனது ராஜ்ஜியங்கள் மட்டுமல்ல.. அவளது வாழ்க்கையும்தான்..!
அந்தப் பேரழகியின் வாழ்க்கை வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
கி.மு.51-ம் ஆண்டில் ஒரு நாள்.
வடக்கு எகிப்தின் கடற்கரையில் அமைந்திருந்த அலெக்சாண்டிரியா நகர மக்கள் அனைவரும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய ஆவலோடு காத்திருந்தனர்.
நாட்டை ஆளும் பேரரசரின் அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்ததுதான் அதற்குக் காரணம். அமைச்சர்கள் மற்றும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே அங்கே கூடி இருந்தனர்.
அவர்களின் பார்வை எல்லாம் நம் கதாநாயகியான 18 வயது இளம்பெண்ணையும், 12 வயதான ஒரு பையனையும் மொய்த்துக் கொண்டிருந்தது. இவர்கள் இருவரும் அக்காள், தம்பி. இவர்களது திருமணத்தைக் காணவே இந்த அரண்மனை விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
என்னது…? அக்காள்- தம்பிக்குத் திருமணமா என்று அதிர்ச்சியடைகிறீர்களா?
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பான காலகட்டத்தில் ஒவ்வொரு ராஜ்ஜியத்திலும் இப்படி குடும்பத்துக்குள் மணம் செய்யும் சம்பிரதாயம் இருந்து வந்திருக்கிறது..
ஏன்?
அந்தக் காலத்தில் அரச பரம்பரையில், அரசாளும் உரிமை ஒரு குடும்பத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் காரணம்.
அரசர் இறந்துவிட்டால், அவரது மனைவியைப் பேரரசி ஆக்கிவிடுவார்கள். அரசியும் கொல்லப்பட்டுவிட்டால் (இது போராகவும் இருக்கலாம், அரசியலுக்காக நடக்கும் கொலையாகவும் இருக்கலாம்) வாரிசை நியமிப்பார்கள். அந்த வாரிசு வயதுக்கு வந்த ஆணாக இருந்தால் பிரச்சினை இல்லை. அவன், சிறுவனாக இருந்துவிட்டால்?
அவனுக்கு மூத்த சகோதரி இருந்தால் அவளுக்கும், இவனுக்கும் திருமணம் செய்து வைத்து, அவளை அரசியாக்கி விடுவார்கள். அப்படித்தான் பட்டத்துக்கு வந்தாள் நம் கதாநாயகி கிளியோபாட்ரா!
திருமணம் நடைபெறும் இடத்தில் நம் கதாநாயகி மிடுக்கோடு காட்சியளிக்க மணமகனான அவளது தம்பிதான், விரல் சூப்பாத குறையாக நின்று கொண்டிருந்தான்.
பளபளக்கும் ஆடையில் வசீகரமாக அந்தக் கூட்டத்தில் மின்னிக் கொண்டிருந்த நம் கதாநாயகியைப் பற்றி கொஞ்சம் வர்ணித்துதான் ஆக வேண்டும்.
வயதுக்கு வந்த 18 வயது பெண் என்பதால், ஒட்டுமொத்த அழகும் அவளது தேகத்தில் நைல் நதியாக நீளமாக நெளிந்து வளர்ந்து படர்ந்திருந்தது.தலையை அலங்கரித்த, பளிச்சிடும் வைரங்கள் பதிக்கப்பட்டிருந்த கிரீடம் அவளது அழகில் தோற்றுப்போய் ஒதுங்கி இருந்தது. கறுத்துச் செழித்து வளர்ந்திருந்த அவளது தலை முடி, மெல்லிய இடுப்பு வரையிலும் உரசிக் கொண்டிருந்தது.
உருண்டையாகவும் இல்லாமல், சப்பையாகவும் இல்லாமல், இவை இரண்டும் இடையில் அமைந்த அவளது பிரகாசமான முகம், அந்த அரண்மனைக்கு இன்னும் வெளிச்சமூட்டியது. மெல்லிடையிலும், மாராப்பிலும் தொங்கிக் கொண்டிருந்த ஆபரணங்கள், அவளை குட்டித் தேவதைபோல் அலங்கரித்திருந்தன. அவளது கண்களில் மிரட்சிக்கு பதில் தைரியம்… தைரியம்… தைரியம் மாத்திரமே!
இந்த உலகமே ஒரு நாள் எனது கடைக்கண் பார்வையில் சொக்கி என் காலடியில் விழத்தான் போகிறது…" என்று சொல்வதுபோல் திமிராக காட்சி தந்து கொண்டிருந்தன அவளது கண்கள்.
ஆனாலும், அந்த கண்களுக்குள் காதலும் ஒரு ஓரமாக இழையோடிக் கொண்டிருந்தது. காமன் கைக்கரும்பாய் வளைந்திருந்த அவளது புருவ இதழ்கள் அதை வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருந்தன. சிறிதுநேரத்தில் நடந்து முடிந்தது திருமணம்.
(வருவாள்…)
“
கிளியோபாட்ரா வாழ்க்கை திகில் நிறைந்தது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அவளது வாழ்க்கை வரலாற்றை நம் நிலாச்சாரலில் தொடர்ந்து படிக்க ஆவலோடு இருக்கிறேன்…
ஆரம்பமே மிகவும் சிறப்பாக இருக்கிறது வரும் வாரங்களுக்காகக் காத்திருக்கிறேன்