சிரியாவுக்குத் தப்பிச் சென்ற கிளியோபாட்ரா, கார்ஸா என்ற இடத்திற்கு வடக்கே உள்ள கடற்கரை நகரமான அஸ்கலன் என்ற இடத்தில் தங்கினாள். அங்கிருந்தபடி தனது ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில், இத்தாலியில் ஆட்சியைக் கைப்பற்ற ரோமானிய செனட் உறுப்பினர்கள் இடையே கடும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இதையொட்டி, கி.மு.48 ஆகஸ்ட் மாதம் பர்சலஸ் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீஸரிடம் படுதோல்வி அடைந்த பாம்பே, எகிப்து மன்னன் 13-ம் டாலமியின் ஆதரவைப் பெறுவதற்காக அலெக்ஸாண்டிரியாவுக்கு ஓடினார்.
இந்த பாம்பே வேறு யாரும் அல்ல. ரோமானியப் பேரரசின் படைத் தளபதிதான். ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீஸரின் இரண்டாவது மனைவியான பாம்பியா இவரது சகோதரியே!
பாம்பே மிகச் சிறந்த மாவீரனாகத் திகழ்ந்ததோடு, ரோமப் பேரரசின் கீழ் இருந்த எகிப்து உள்ளிட்ட கீழ்திசை நாடுகளுக்குத் தலைவராகவும் இருந்தார். தனது சகோதரி பாம்பியாவை சீஸர் விவாகரத்து செய்ததால், அவருக்கும், சீஸருக்கும் பகைமை வளர்ந்தது. இருவரும் இரு பிரிவினராக செயல்பட்டனர். சீஸரை எப்போது பேரரசர் பொறுப்பில் இருந்து அகற்றலாம் என்று காத்திருந்தார் பாம்பே.
அதனால்தான் பர்சலஸ் போரில் சீஸருக்கு எதிராகப் போர் புரிந்தார். ஆனால் அவரது துரதிர்ஷ்டம், படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது. சீஸரிடம் சிக்கினால் தான் கொலை செய்யப்படுவோம் என்று அஞ்சிய பாம்பே, அதுவரை தனது தலைமையின் கீழ் இயங்கி வந்த எகிப்து பேரரசிடம் அடைக்கலம் கேட்டு ஓடி வந்தார்.
எகிப்து பேரரசின் அரசனாக இருந்த 13-ம் டாலமி தனக்கு உதவுவான் என்று எதிர்பார்த்தார். ஆனால், நடந்ததோ வேறு.
பாம்பேயை ஆதரித்தால் ஜூலியஸ் சீஸரின் கோபத்திற்கு ஆளாகலாம் என்று எண்ணினான் 13-ம் டாலமி. அதனால், சீஸரை ஆதரிப்பதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தான்.
அதன் தொடர்ச்சியாக, அலெக்ஸாண்டிரியாவுக்கு தஞ்சம் புக வந்த பாம்பே, கி.மு.48 செப்டம்பர் மாதம் அலெக்ஸாண்டிரியா கடற்கரையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். பாய்மரக் கப்பலில் இருந்து கடற்கரையில் கால் பதித்த பாம்பே, தனக்கு எதிரே சற்று தொலைவில் 13-ம் டாலமியின் படைவீரர்கள் சிலர் நிற்பதைக் கண்டார். தனக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தப்பு கணக்குப் போட்ட பாம்பே, அவர்களை நோக்கி உற்சாகத்துடன் சென்றார்.
"என்னை வரவேற்க வந்ததற்கு நன்றி. உங்கள் மன்னருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துவிடுங்கள்…" என்று அவர் சொன்னபோதே, ஒரு வீரனின் கூரிய வாள் பாம்பேயின் உடலைத் துளைத்தது. அதிர்ச்சியான பாம்பே சுதாரிப்பதற்குள் அடுத்த வீரன் இன்னொரு வாளை அவர்மீது பாய்ச்சினான். அடுத்த நிமிடமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார் பாம்பே.
அவரது உடலை கடற்கரையோரம் வீசியெறிந்துவிட்டு, மன்னனிடம் தகவலைக் கூற அரண்மனைக்கு விரைந்தனர் வீரர்கள்.
ஆனால், மன்னன் 13-ம் டாலமியோ கடலுக்குள் சற்றுத் தொலைவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு கப்பலில் நின்று கொண்டிருந்தான். பாம்பே கொலை செய்யப்பட்டதை பார்த்துக் கொண்டுதான் இருந்தான் அவன். அவனுடன், அவனது பிரதான அமைச்சர்கள் சிலரும் இருந்தனர். பாம்பே படுகொலை செய்யப்பட்டு நான்கு நாட்கள் இருக்கும். ஜூலியஸ் சீஸர் எகிப்துக்கு பெரும் படையுடன் திடீர் விஜயம் செய்தார்.
நாட்டை விட்டு விரட்டப்பட்ட, அதுவரை அவர் காணாத கிளியோபாட்ராவுக்கும், அவளது கணவன் 13-ம் டாலமிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், பர்சலஸ் போரில் தப்பிச் சென்ற பாம்பேவை கைது செய்யும் எண்ணத்திலும் அவரது இந்த பயணம் அமைந்திருந்தது.
அலெக்ஸாண்டிரியா வந்த சீஸரைக் காண 13-ம் டாலமி தனது அமைச்சர்களுடன் சென்றான். சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்த சீஸரைப் பார்த்த 13-ம் டாலமிக்கு பயமே வந்துவிட்டது. அவன் சிறுவன் அல்லவா? இப்போதுதான் முதன்முறையாக அந்த மாபெரும் வீரனைப் பார்க்கிறான்.
சீஸரிடம் 13-ம் டாலமி, "நான் உங்களுக்கு, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பரிசு ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன்…" என்றான்.
சீஸருக்கு புரியவில்லை.
"என்னது… நான் ஆவலுடன் எதிர்பார்த்த பரிசா?"
"ஆமாம் பேரரசே…!"
"சரி… நீ கொண்டு வந்த பரிசைக் கொடு. பார்க்கலாம்…" என்று கர்ஜனையோடு சொன்னார் சீஸர்.
அடுத்த நொடியே தனது அமைச்சர்களைப் பார்த்தான் 13-ம் டாலமி. அவர்கள் ஒரு பெரிய தாம்பாளத் தட்டில் ஒரு பொருளை வைத்து, அதை ஒரு துணியால் மூடிக் கொண்டு வந்தனர்.
அதைப் பார்த்த சீஸருக்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியது. அது என்ன பொருள் என்பதை அறிய ஆவலானார்.
சீஸர் முன்பு வைக்கப்பட்ட அந்த தாம்பாளத்தில் இருந்த பொருள் மீது மூடப்பட்ட துணியை விலக்கினான் ஒரு வீரன்.
துணி விலக்கப்பட்ட அடுத்த நொடியே திடுக்கிட்டார் சீஸர். அந்தத் தட்டில் இருந்தது நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பாம்பேயின் தலை..!
(இன்னும் வருவாள்…)