பேய்களுடன் ஆன
எனது தொடர்பு
பூசாரிகளுக்குப் பிடிப்பதில்லை.
எனக்குப் பேய்கள்…
முருங்கை மரத்தில் தொங்க
கற்றுக்கொடுத்தன
நடு நிசி இரவில்
இஷ்டம் போல் சுற்றித் திரிய
கற்றுக்கொடுத்தன
அயல் உடலில்
அந்நியம் இல்லாது
ஊடுருவக் கற்றுக்கொடுத்தன
விரட்டு விரட்டு என
எனக்கு வேண்டாதவரை
விரட்டக் கற்றுக்கொடுத்தன
எனக்கே எனக்காக
பேய்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த
வித்தைகளை
பூசாரிகளுக்குப்
பிடிப்பதில்லை.
எனக்கும் பேய்களுக்குமான
தொடர்பு
மிக மிக வேகமாக
வளர
நானும் பேயாகி இருந்த நேரம்…
பூசாரிகள்
மாறிப்போய் இருந்தனர்.
அவர்கள்
முருங்கை மரம் ஏற
பழகிக்கொண்டிருந்தனர்.