ஆறறிவுள்ள மனிதன் மட்டும்தான் பேசும் வல்லமை படைத்த ஒரே உயிரினம் ஆகும். தனி மரம் தோப்பாகாது என்பது போல ஒருவர் தனித்து இயங்கவோ, செயல்படவோ முடியாது. ஆக, சமுதாயத்தில் மக்கள் கூடி வாழும்போது, ஒவ்வொருவரும் பலவிதம், நாம் நினைப்பதை மற்றவர் நினைப்பதில்லை, நமக்கு சரி என்பது மற்றவருக்கு தவறு, நமது இடப்புறம் எதிரில் உள்ளவருக்கு வலப்புறம், என முரண்பாடுகள் எங்கு காணினும் முந்தி வந்து சந்தி சிரிக்கின்றன.
இந்த முரண்பட்ட உலகில் ஒருவர் மற்றொருவருடன் தொடர்புகொள்ளக்கூடிய பேச்சில் சாதுர்யம் என்பது மிக மிக அத்தியாவசியமான ஒரு திறமையாகும். மக்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்த பேச்சு சாமர்த்தியம், மிகவும் தேவையானதாகிறது.
நம் வாழ்வில் தேவைகள் பலவாறு உள்ளன. புகழ், சுதந்திரம், பணம், சமூகநீதி, அந்தஸ்து, கௌரவம், அன்பு, பாசம், பாதுகாப்பு, மதிப்பு, மரியாதை என நாம் வாழ்வில் அடைய, பெற வேண்டியது ஏகமாக உள்ளது. மேற்சொன்ன யாவும், சாமர்த்தியம், படிப்பு, அர்ப்பணிப்பு ஆகிய குணம் கொண்டவர்களிடம் தானாக வந்து சேரும் எனக் கூறப்படுவது வழக்கமான ஒன்றாகும். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள், வெறும் திறமைசாலிகள் மட்டுமல்லாது, பேச்சு வார்த்தையின் மூலம் வாய் ஜாலத்தின் மூலம் மற்றவர்ளிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்தி தமக்கென்ன தேவையோ அதைப்பெறும் வல்லமை படைத்தவர்களாக இருக்கின்றனர்.
அன்றாட வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் நாம் பேச்சின் அவசியத்தையும், திறம்பட பேசுவதின் மகத்துவத்தையும் அறிய நேரிடுகிறது. கணவன் தன் மனைவியின் நகையை அடகுவைக்கக் கேட்கும்போதுஎத்தனைவகையான பேச்சு சாமர்த்தியம் தேவைப்படுகிறது! அதேபோல மனைவியும் தனக்குத் தேவையானவற்றை தன் கணவனிடம் இருந்து பெற உபயோகிக்கும் மந்திரங்கள் எந்த வகையான பேச்சு!
ஒவ்வொரு மனிதனுக்கும் அடுத்தவரை ஏதாவதொரு விஷயத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஒருவர் சாமர்த்தியமான பேச்சு, செயல் ஆகியவற்றைப்பெற தகவல்கள், நேரம், வலிமை என மூன்றையும் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும். இதைத்தான் நம் முன்னோர்கள் இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஒரு பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும் இருவரும் ஜெயிக்கும்படியான ஒன்றே சிறந்த சுமூகமான பேச்சு வார்த்தையாகும், அதுவே நிலைத்து நிற்கும். இரண்டு பேச்சாளர்களும் ஜெயிப்பது இதில் சாத்தியம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒன்றை விட்டு மற்றொன்றைப்பெற்று சமாதானமடைவது தான் உண்மையான வார்த்தைப் பரிமாற்றமாகும்.
“