விசித்திரமான நாடு
பதிநான்காம் நூற்றாண்டின் பிரபலமான வரலாற்று ஆசிரியரும் முஸ்லீம் யாத்ரீகருமான அப்துல்லா வஸாப் தனது நூலான தஸ்ஜியாதல் அம்ஸரில் (Tazjiyatal Amsar) இந்தியாவைப் பற்றிக் கூறுகையில், “இதனுடைய புழுதி கூட காற்றை விடப் புனிதமானது; இதன் காற்றோ புனிதத்தை விடப் புனிதமானது.இது சொர்க்கத்திற்கு சமமாகும் என்று நிச்சயப்படுத்தப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம்.ஏனெனில் சொர்க்கத்தைக் கூட இதனுடன் ஒப்பிட முடியாது!” என்று மனம் வியந்து கூவினார்
.
"அங்கு பத்திரங்கள் எதுவும் எழுத்து வடிவத்தில் பதிவு செய்யப்படுவதில்லை; வாய் வார்த்தையாகக் கூறுவதே சத்தியமாகும்" என்று இந்திய மக்களின் வாழ்க்கை முறை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.
குப்தர்களின் காலம் பொற்காலம் என்று ஆனதற்கு காரணம் அலங்கார பூஷிதையாக ஒரு யௌவன யுவதி நள்ளிரவில் தனியாக குப்த சாம்ராஜ்யத்தில் பயமில்லாமல் பயணம் செய்ய முடியும் என்பது முக்கிய காரணமாக இருந்தது.
மக்களின் ஒழுக்கமும் மதாசாரியர்களின் ஒழுக்கமும் மன்னர்களின் ஒழுக்கமும் மகோன்னத ஸ்திதியில் இருந்ததாலேயே நாம் இந்தியர்கள்; பண்பாட்டின் காவலர்கள் என்று மார்தட்டிக் கொண்டு இதுவரை இருக்கிறோம்.
இந்த வகையில் உலகிலேயே விசித்திரமான நாடாக இருந்த நாம் அதன் நேர் எதிர் திசையில் விசித்திரமான நாடாக ஆகி வருகிறோமா என்ற வினா சமீபத்திய நிகழ்வுகளால் எழுகிறது!
கதவைத் திறந்தால் காணும் காட்சிகள்
உலகில் ஒழுக்கத்தை உபதேசிக்க வந்த ஆன்மீகவாதிகள் நடிகைகளுடன் கட்டிப் புரள்வதும் அந்த ஆபாசத்தை குழந்தைகள் உள்ளிட்டோர் பார்க்கும் வண்ணம் தொலைக்காட்சி ஒளிபரப்ப அதை அனைவரும் பார்ப்பதும் நடுக்கத்தின் உச்சிக்கே நம்மைக் கொண்டு செல்கிறது.
கதவைத் திறந்தால் காற்று வருமா என்று பார்க்கக் கதவைத் திறந்தால் உள்ளே இருப்பது அவமானகரமான ஒழுக்கம் கெட்ட காட்சிகள் என்பதை நினைக்கும் போது உள்ளம் வேதனை அடைகிறது அல்லவா?
திருச்சிக்கருகே ஒரு சாமியார் இளம் பெண்களை விசேஷ குகை வழியாக நிர்வாணமாக அழைத்துக் கற்பழித்ததையும் கர்ப்பம் தரிக்கும் பெண்களை கருத்தடை செய்யச் சொன்னதையும் கேட்டோம். இந்த அவலத்திலிருந்து வெளி வருவதற்குள் வி.ஐ.பிக்கள் ஓட்டம் என்று இன்னொரு சாமியாரின் லீலைகளைக் கேட்கவும் பார்க்கவும் மக்களுக்குத் தென்பு இல்லை தான்!சதுர்வேதி என்று நான்கு வேதங்களையும் படித்தவர் சர்ச்சைக்குள் சிக்குவதற்குள் அவதாரத்தைப் பெயராகக் கொண்டவரின் ஆசிரமம் பற்றிய திடுக்கிடும் செய்திகளைப் பத்திரிக்கையில் படித்து மலைக்கிறோம்!
எப்படி இப்படி பிரபலமான சாமியார்கள் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் என்பது இந்த விஞ்ஞான யுகத்தின் மாபெரும் வினா!
இது ஒருபுறமிருக்க, இதே போலவே அரசியல்வாதிகள், பிரபல திரைப்பட நடிகர்கள், நடிகையர், விளையாட்டு வீரர்கள் சிலரும் ஒழுக்கத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மனம் போனபடி அதற்கு புது வியாக்கியானம் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி நம்மை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை நினைக்கும் போது கோபமும் ஆத்திரமும் தான் வருகிறது.ஆனால் கோபம் அவர்கள் மீது வரக்கூடாது; அதை அனுமதிக்கும் நம் மீது தான் நாம் கோபப்படவேண்டும்.
இராவணன் வீழ்ச்சி
முக்கோடி வாழ் நாள் உடையவன்; பிரம்மாவின் பேரன்; முயன்றுடைய பெரும் தவம் செய்தவன். எக்கோடியாராலும் வெ(ல்)லப்படாய் என்று வரம் வாங்கியவன்; நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நா உடையவன்; தாரணி மௌலி பத்து கொண்டவன்; சங்கரன் கொடுத்த வாளை உடையவன்; கயிலையைத் தூக்கியவன்; சாம கானம் இசைப்பதில் வல்லவன். அண்ட பகிரண்டம் அனைத்தையும் ஆள்பவன் என இப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட ராவணன் ஒரே ஒரு தவறு செய்தான்; இன்னொரு மனிதனின் மனைவி மீது தகாத ஆசை வைத்தான்; அதனால் முற்றிலுமாக அழிந்தான். இன்றும் தகாத உறவுக்கான தண்டனை அடைந்தவன் என்று உலகமெங்கும் பிரசித்தி பெற்ற இராமாயண காவியத்தால் பேசப்படுகிறான்; ஏசப்படுகிறான்.
தேவியைத் தூக்கிய பாவியான இராவணனை சம்ஹாரம் செய்த ராமனே நமது தேசீய வீரன் என்பது ஒன்று தான் நமக்கு உண்மையான பெருமை. கும்பகர்ணன் ராவணனை கிண்டல் செய்யும் காட்சியை கம்பர் அமைத்த விதமே தனி; அது இன்றைய தினத்திற்கும் பொருத்தமான காட்சி!
“ஆசில் பர தாரம் அஞ்சிறை அடைப்பேம்
மாசில் புகழ் காதல் உறுவேம் வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்! கூசுவது மானுடரை
நன்று நம கொற்றம்.” என்று கும்பகர்ணன் வாயிலாகக் கம்பர் ஒரு நையாண்டி காட்சியை சிருஷ்டிக்கிறார்!
‘சொல்வது ஒன்று செய்வது ஒன்று; என்ன அரசாட்சி ஐயா நமது அரசாட்சி!
பேசுவது மானம் ஆனால் பெண்ணின் இடையைத் தொட்டுத் தொட்டு பேணுவது காமம்’ என்ற வார்த்தைகள் நமது இன்றைய அரசியல்வாதிகளுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது, இல்லையா?
நிஜ வாழ்க்கையிலும் நடிப்பா?
இரண்டு மூன்று பெண்டாட்டிகள் என பகிரங்க ஊர்வலம்; பொது நிகழ்ச்சிகளில் பங்கு, எழுபது கடந்த வயதில் மஸாஜ் செய்ய ராஜ பவனத்திற்கு அழைத்து வரப்படும் அழகிகளோடு உல்லாசம் என்று இருக்கும் அரசியல்வாதிகளின் பட்டியல் வெகு நீளமான ஒன்று! இது ஒரு புறம் இருக்க; பெரும் சினிமா கதாநாயகன் என்பதால் இரண்டு அல்லது மூன்று மனைவிகள் அல்லது உடன் உறைபவருடன் வாழ்க்கை நடத்துவதைப் பார்க்கிறோம். பெரிய கதாநாயகி என்பதால் ஒன்று, இரண்டு, மூன்று என கணவர்களை மாற்றிக் கொண்டு பெண் உரிமைகளைப் பற்றியும் அவர்கள் "செய்ய வேண்டுவனவற்றைப் பற்றி" தொலைக்காட்சியில் ஆவேசமாக உபதேசம் செய்யும் நாயகியையும் பார்த்து வியக்கிறோம்; திகைக்கிறோம். நிஜ வாழ்க்கையிலுமா நடிப்பு!
கிரிக்கட் வீரர் என்பதாலேயே புகழ் போதையில் அனைவரையும் துச்சமாக மதித்து ஆசைநாயகியைத் தேர்ந்தெடுத்து அந்த அவலம் வெளிவந்தவுடன் எதையும் "கண்டுகொள்ளாத" வீரரையும் பார்க்கிறோம்.
துஷ்ட சாமியார்களைத் தூக்கி எறிக
அழகிகளுடன் ஆனந்த நடனம்; பெரிய சொகுசு குடியிருப்புகளில் யோகா என்று ஆன்மீகத்தை சிற்றின்பமாக்கி கமர்ஷியல் ஆதாயம் தேடும் சாமியார்களையும் பார்த்துத் திகைக்கிறோம்.
நமது அஸ்திவாரமான ஆலயங்களை நாளும் பழிக்கும் நாத்திகவாதிகளுக்கு இந்த சாமியார்களைப் பார்த்தால் கொண்டாட்டம்; எப்படியாவது கோவில்களையும் அதைப் போற்றும் இந்து மதத்தையும் ஒழித்துக் கட்டி கோடானு கோடி ரூபாய்களையும் கோவில் சொத்துக்களையும் கபளீகரம் செய்யக் காத்திருக்கும் இவர்களுக்கு வேறு என்ன பொருத்தமான காரணம் வேண்டும்! ஆனால் இவர்களுக்கு இந்த சாமியார்களை விட்டு வைக்காமல் இந்து அமைப்புக்களும் இந்துக்களுமே சரியான பாடம் புகட்ட வேண்டும்,
சுருக்கமாகச் சொன்னால் அரசியல்வாதிகளோ, ஆன்மீகவாதிகளோ, விளையாட்டு வீரர்களோ, சினிமா நாயக நாயகிகளோ யாரானாலும் சரி துஷ்டர்கள் எனில் இவர்களைத் தூக்கி எறிய வேண்டும்; தூர எறிய வேண்டும்.
மேலை நாட்டு உதாரணங்கள்
மேலை நாடுகளைப் பார்ப்போம்: அங்கு உரிய விதத்தில் கணவன் மனைவி இருவரும் ஒப்பி செய்து கொள்ளும் விவாகாரத்துக்கள் அதிகம் தான்! ஆனாலும் ஒழுக்கம் கெட்டவர்களை அவர்கள் உயர்த்தில் வைத்துக் கொண்டாடுவதில்லை!
1963ல் பிரிட்டிஷ் அமைச்சர் புரொப்யூமா கிறிஸ்டின் கீலர் என்ற அழகியுடன் சல்லாபம் செய்ததால் ராணுவ ரகசியத்திற்கு ஆபத்து என்று கருதிய பிரிட்டிஷ் மக்கள் அவரைத் தூக்கி எறிந்தனர். அவரால் பிரதம மந்திரி ஹெரால்ட் மாக்மில்லனும் உடல்நலம் கெட்டு ராஜிநாமா செய்தார்.
அமெரிக்க ஜனாதிபதி க்ளிண்டன் மோனிகா லெவின்ஸ்கியுடன் தகாத உறவு கொண்டதால் உலகப் பெரும் அவமானம் அடைந்தார். அமெரிக்க மக்களும் அவரை ஒதுக்கி வைத்துப் பாடம் புகட்டினர்.
பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ் ஜைமி க்ரப்ஸ், ராக்கேல் உச்டெல் என ஆரம்பித்து ஏராளமான அழகிகளுடன் (16 பேர்!) உல்லாசமாக இருந்து அது வெளியில் வரவே பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடினார்; "என் மனைவியை விட்டு விடுங்கள். அவரை வம்பில் இழுக்காதீர்கள்!அரைக் கடவுள் என என்னை நானே நினைத்துக் கொண்டு மனம் போனபடி ஆடி விட்டேன்." என்று பகிரங்கமாக அறிக்கை விடுத்து மன்னிப்புக் கேட்டு அழுதார். என்றாலும் மக்கள் மன்னிக்கவில்லை; அவரையும் ஒதுக்கினர்.
இப்படி மேலை நாட்டு மக்கள் சரியான முடிவை எடுத்து ஒழுக்கம் கெட்ட பிரபலங்களை அவர்களுக்கு உரிய இடத்தில் வைக்கின்றனர்.
வள்ளுவன் வழியில் நடக்க வேண்டாமா!
ஆனால் வள்ளுவன் வாழ்ந்த நாட்டில் அவருக்கு நாம் துரோகம் செய்கிறோம் என்பது அதிசயமான ஆச்சரியம் தான். நிலையின் இழிந்து விட்டால் அப்படிப்பட்ட மாந்தரை தலையின் இழிந்த மயிர் அனையர் என்றார் அவர்!. ஒழுக்கம் கெட்டவனுக்குத் தலையில் இருந்து நீங்கிய முடிக்குத் தரும் மரியாதை தான் உரியது என்று அவர் ஆணித்தரமாகக் கூறுகிறார். ஆனால் நாமோ நிலையின் இழிந்தவரை உச்சி மேல் ஏற்றி பூ வைத்துக் கொண்டாடுகிறோம்!
ரமணர் கூறிய துரியோதனனின் ஸ்லோகம்
ரமண மகரிஷியைச் சந்தித்த ஒரு பக்தர் தன் மனம் போனபடியெல்லாம் நடந்து கொண்டு அவரிடம் வந்து "நீங்கள் தான் என்னை வழி நடத்துகிறீர்கள்; நீங்கள் தரும் உத்வேகத்தால் தான் நான் இப்படி செய்கிறேன்" என்று சொன்ன போது அவர்," துரியோதனனும் இப்படித்தான் சொன்னான். உங்கள் இருவருக்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்டார்.
துரியோதனன்,
ஜானாமி தர்மம் நச மே ப்ரவிருத்தி
ஜானாம்யதர்மம் ந ச மே நிவ்ருத்தி
கேனபி தேவேன ஹ்ருதி ஸ்திதேன
யதா நியுக்தோஸ்மி ததா கரோமி
என்று கூறியதை ரமண மகரிஷி எடுத்துக்காட்டி மனம் போனபடி நடப்பதைக் கூட துஷ்டர்கள் நியாயப்படுத்துவதை உணர்த்தினார்.
புறக்கணிப்போம்; நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த அனைத்து பிரபலங்களும் மக்களாகிய நம்மைத் தான் வாழ வைக்கும் தெய்வங்கள் என்று கூறி தங்களின் தரம் கெட்ட வாழ்க்கையை தைரியமாக நடத்தி நமக்கே நல்லுபதேசம் செய்து வருகின்றனர்.
நமது சந்ததியினரின் நன்மையை உத்தேசித்து இவர்களை முற்றிலுமாகப் புறக்கணிப்பது ஒன்றே, நல்லனவற்றிற்கு மட்டுமே நாம் மரியாதை தருவோம் என்பதை உறுதிப்படுத்தும்; இவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையையும் தரும். அற உணர்வுள்ள மக்கள் விழிப்புணர்ச்சியுடன் எழ வேண்டும். தகுதியானவரையே தாங்கள் மதிப்போம், கொண்டாடுவோம் என்பதை உணர்த்த வேண்டும். செய்வோமா?
நன்றி: சினேகிதி
“
ஏ௯cஎல்லென்ட்!!!