அடுத்து ஒரு வாரமும் அப்பா வினுவிற்கு கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் எல்லாவற்றிற்கும் வாதிட்ட வினு, நாளாக.. ஆக, வாதம் புரிவதை நிறுத்தினாள். கல்யாணத்துக்கு பின் வரும் சங்கடங்கள், சோஷியல் ஸ்டேட்டஸ் என எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார் அப்பா.
இந்த ஒரு வாரமும் அவளுக்கு மார்னிங் ஷிஃப்ட். விடியற்காலையிலேயே வேலைக்குச் சென்று விடுவாள். இன்றும் அப்படியே சென்று விட்டாள். 7.30 மணியிருக்கும். வினுவிடமிருந்து ஃபோன் வந்தது.
”ஸாரிப்பா. நீங்க என்னோட காதலைப் புரிஞ்சிக்கல. உங்க பார்வையில காதல் வேற மாதிரி இருக்கு. என் பார்வை வேற. முத்து வீட்ல, எங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்காங்க. நான் இன்னிக்கு ஷிஃப்ட் முடிஞ்சு அவங்க வீட்டுக்குப் போறேன். நாளைக்கு காலைல 9 – 10.30 முகூர்த்தம். எங்களை ஏத்துக்க முடிஞ்சா கல்யாணத்துக்கு வாங்க, இல்லன்னா மன்னிச்சுடுங்க!” என்று பதில் சொல்லக் காத்திருக்காமல் ஃபோனை வைத்துவிட்டாள். அழுகையுடன் பேசிய மாதிரி இருந்தது. வினு இப்படிச் செய்வாளென்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்ட அப்பாவும், அம்மாவும் எதுவும் பேசவில்லை. நான் மட்டும் அவளைத் திட்டிக் கொண்டேயிருந்தேன். ஷரத்திடம் ஃபோனில் புலம்பித் தீர்த்தேன். எந்த வகையிலும் பொருத்தமில்லாத ஒருவனை ”பெஸ்ட் சாய்ஸ்” என்று எப்படித் தேர்ந்தெடுத்தாள் என்று அரற்றினேன். கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி இருந்தோம். என்றபோதும், எனக்கு மட்டும் அவள் மீதான கோபம் முழுவதும் மறையாமல் வருத்தமாக தொக்கி நின்றது.
ஷரத்தின் ப்ராஜெக்ட் இந்த மாதத்தில் முடிவதாக இருந்தது. கடைசியாக அவர் என்னிடம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் பேசினார். அன்று பேசும்போதே அவர் சரியாக இல்லை. எப்போதும் துள்ளலுடனும், ஹாஸ்யமாகவும் இருக்கும் அவரது பேச்சு, அன்று சோகமாகவே இருந்தது.
”அனு, என்னால தூங்கக்கூட முடியல. ஏற்கனவே, எனக்கும் என் லீடுக்கும் ஆகாது. இப்ப இந்த ஃப்ராஜெக்ட் வேற எக்ஸ்டெண்ட் ஆகும் போல இருக்கு.”
”கவலைப்படாதே, ஷரத்! எல்லாம் நல்லதாகவே நடக்கும்!”
”இதுல ‘ரிஸெஷன்’ பிரச்சனை வேற! இன்கிரிமெண்ட்டும் கிடையாது. வொர்க் பிரஷரும் அதிகம். உன்கிட்ட பேசக்கூட டைம் கிடைக்கறதில்ல! கல்யாணம் ஆகாம இருப்பது கூட ஒரு விதத்தில நல்லதாத்தான் இருக்கு..”
”என்ன ஷரத் இது? ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?”
”இல்லடா அனு, ஃப்யூச்சர் பத்தி யோசிச்சாலே பயந்தான் வருது. ஐ லாஸ்ட் மை ஹோப். வாழ்க்கை முழுக்க நிரந்தரமான ஒரு பயத்தோடதான் வாழணும் போலிருக்கு!”
”என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி கோழை மாதிரி பேசறீங்க? ரெண்டு பேரும் சம்பாதிக்கறோம், படிச்சிருக்கோம். அப்புறம் என்ன பயம்?”
”லூசு, ரெண்டு பேருக்கும் ஜாப் செக்யூரிட்டி கிடையாது. நீ குழந்தை பிறந்தா வேலைக்கு போகமாட்டேன்னு சொல்லியிருக்க… என் வேலையிலும் பிரச்சினை ஏற்பட்டால், என்ன பண்றது, நோ ஸேவிங்ஸ், நோ ப்ராபர்ட்டிஸ், எப்படி சமாளிப்போம்?”
ஷரத் பேச்சு போன விதம் பிடிக்காததால் நான் விவாதம் பண்ணாமல் முடித்துக்கொண்டேன். பின் நான் அழைக்கும்போதெல்லாம் அவர் எடுக்கவே இல்லை. மெயில் வந்தது. ப்ராஜெக்ட் 2 மாசம் எக்ஸ்டெண்ட் ஆகி உள்ளதாம். நான் அவரிடம் பேசுவது அவருக்குக் கொஞ்சம் தொல்லை தருகிறதாம். அதனால் அவரே பின்னால் ஃபோன் செய்வாராம். இந்த மெயில் வந்த பின் நாட்கள் நிமிடத்தில் ஒடிப்போய் விட்டன. அவர் சொன்ன 2 மாதமும் முடிந்துவிட்டது. இப்போது நான் ஃபோன் செய்தாலும் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.
வினு திடீரென்று ஒருநாள் முத்துவுடன் வீட்டிற்கு வந்தாள். காலம் காலமாக காதலித்தவர்களின் வீடுகளில் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நடக்கும் எல்லாமும் சற்றே குறைவான டெஸிபலில், எங்கள் வீட்டிலும் நடந்தேறி அம்மாவும், அப்பாவும் சமாதானமானார்கள்.
ஆனால் என்னால் மட்டும் இதனை சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வினுவிடம் நான் பேசவில்லை என்பதைவிட என்னால் பேச முடியவில்லை என்பதுதான் நிஜம்.
வினு எங்கள் வீட்டிற்கு வந்தது பற்றி ஷரத்திடம் சொல்ல வேண்டி மெயிலை ஓப்பன் செய்தபோதுதான் கவனித்தேன், ஷரத் அனுப்பியிருந்த மெயில் இன்பாக்ஸில் இருந்தது. ஷரத் வேறு கம்பெனி மாறி விட்டாராம். அது ஒரு யு.எஸ் கம்பெனியாம். அவரின் ஃப்யூச்சருக்கு அங்குதான் சான்ஸஸ் அதிகமாம்.
அவரைப் பற்றியே நீண்ட அந்த மெயிலின் இறுதியில் எனக்கொரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கேயே வேலை பார்க்கும் ஒரு இந்திய வம்சாவளிப் பெண்ணை ஷரத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம். என்னிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார்.
ஷரத் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார்? பிரச்சினைகளை சந்திக்க விரும்பாமலா அல்லது தைரியம் இல்லாமலா? அவரை நான் எவ்வளவு நேசித்தேன்! அவரைப் பற்றிய மரியாதை மெல்லத் தகர்ந்து கொண்டிருந்தது என்னுள்.
என்னால் அழவும் முடியவில்லை. கோபப்படவும் முடியவில்லை. இயலாமை என்னை எரித்துக் கொண்டிருந்தது. நான் உண்மையாய் காதலித்தேன், ஏன் உண்மையானவரை காதலிக்காமல் போனேன்? என்னாலேயே இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. வெளியில் வினு முத்துவுடன் அப்பா, அம்மா காலில் விழுந்து நமஸ்கரித்து விடைபெற்றுக் கொண்டிருந்தாள். கண்களில் திரையிட்டிருந்த நீர் வழியே பார்த்தபோது எனக்கும் முத்து, வினுவின் பெஸ்ட் சாய்ஸாகவே தோன்றினான்.