பெருசு (2)

கால்களில் வேகம் கூடிக்கொண்டது. ரிசப்ஷனில் இந்து நர்ஸ் இவரைப் பார்த்ததும் அதட்டுகிற குரலில் கேட்டாள். "என்ன…?"

முதலாளி அய்யாவ பார்க்கணும்" பெரியசாமிக்கு குரல் கம்மியது.
"யாரு"
"அதாங்க… மாணிக்கம் கம்பெனி முதலாளி"
"ரும் நம்பர் 113,. மாடியிலே. ஆனா இப்ப பார்க்க முடியாது. விசிட்டிங் அவர்ல வாங்க"
"என்னங்க " பெரியவருக்குப் புரியவில்லை.
"இப்ப பார்க்க முடியாது. சாயங்காலம் ஆறு மணிக்கு வாங்க"

பெரியவருக்குத் திணறிப் போனது.

"அம்மா… தாயி. கொஞ்சம் தயவு பண்ணும்மா. வயசானவன்.. தொலைவுலேர்ந்து வரேன்..ரெண்டே நிமிஷம்.. பார்த்துட்டு ஓடியாந்துடறேன்.." கெஞ்சினார்.

"இங்கே பாருங்க. உங்களுக்காக எங்க ஹாஸ்பிடல் ரூல்ஸை மாட்ட முடியாது. அப்புறம் வாங்க" கறாராய் சொல்லிவிட்டாள்.

பெரியவர் தெம்பிழந்து போய்விட்டார். கால்கள் நடுங்க ஒரு நிமிஷம் வருகிற மனிதர்களை உற்றுப் பார்த்தார். எத்தனை அலட்சியமாய் போய் வருகிறார்கள். இவர்களுக்கு இருக்கிற சுதந்திரம் எனக்கு இல்லையா.

பொருமித் தீர்த்த மனசுக்கு கண்ணெதிரில் நின்ற மனிதர் தெரியவில்லை. இடித்துக் கொண்டதும் புரிந்தது.

"ஆமா… நீங்களா"
மகராசி. பெரிய முதலாளி வீட்டம்மா. கும்பிடப் போன தெய்வம் போல.

"என்ன… பெரியசாமி"
குரல் தான் எத்தனை அனுசரணை.

"அய்யா உடம்பு சொகமில்லேன்னு கேட்டு பதறிப்போய் ஓடி யாந் தேன்.."

"வா.. எங் கூட"

அவள் கையில் பிடித்திருந்த சாப்பாட்டுக் கூடையை பெரியசாமி வாங்கிக் கொண்டார். என்னைப் போக வேணாம்னு எப்படித் தடுக்க முடியும். உடம்பு குறுகி நடந்தாலும் நெஞ்சு நிமிர்ந்து இருந்தது.

அறைக்குள் போனதுள் போனதும் கட்டிலில் படுத்திருந்தவரைப் பார்த்தார். "அய்யா.. நீங்களா"
என்ன கம்பீரமாய் பார்த்த உருவம். எலும்பு கஊடு மட்டும். கெளரவமாய் தோஸ் போர்த்திய தினசில் இருந்தார்.

"வா… எப்படி இருக்கே"

பெரியசாமிக்கு வார்த்தை வரவில்லை.
முதலாளியம்மாதான் சொன்னாள்.
கீழே நின்னுகிட்டிருந்தார்.. நாந்தான் பார்த்துட்டு கூட்டிக்கிட்டு வந்தேன்."
"உனக்கு ஒரு பெட்டி இருக்குதானே"

எவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறார். சிலிர்த்துப் போனது பெரியசாமிக்கு.
"எனக்குத்தான் ஆளே இல்லே. எப்படி கெடக்கேன் பாரு"

முதலாளியம்மா அதட்டினாள். "என்னது… என்ன பேசறோம்னு புரியாமே"

“அட.. இவன் யாரு.. எங்கம்பெனில எத்தனை வருஷம் வேலை பார்த்தவன்.. அவனுக்குத் தெரியாத விஷயமா"

பெரியசாமி கைகளைக் கட்டிக் கொண்டார். "அய்யா.. நான் என்ன செய்யணும்.. சொல்லுங்க"

"இவ ஒருத்தி தான் அலையறா. வீட்டுக்கும்.. ஆசுபத்திரிக்குமா, என்னை வேற தனியா விட்டுட்டு போறானா. நர்ஸ் இருக்காங்க.. ஆனாலும் ஒரு பயம்.."

முதலாளி சொல்லச் சொல்ல பெரியசாமிக்கு ஜுரம் போலத் ததித்தது. "நா இருக்கேன்யா ஒங்க கூட"

"அது போதும். ஏய் அப்புறம் என்ன. புள்ளைங்க கைவிட்டாலும் நான் செஞ்ச தர்மம் கைவிடலே"
பெரிய முதலாளியின் எலும்புக்கூடு ஒரு தரம் நடுங்கியது.

"என்னால முழு நேரமும் இருக்க முடியுமா.."

"அட .. இருப்பான்னு சொல்றேன்.. போவியா.. சும்மா வளவன்னு கிட்டு" அதட்டினார் முதலாளி.

"அய்யா… ஒரே ஒரு வார்த்தை வீட்டுல சொல்லிட்டு வந்திடறேன். அதுக்கு அனுமதி கொடுங்கய்யா "

"போ.. சீக்கிரம் வந்துரு"

ஹாஸ்பிடல் வாசலை விட்டு வெளியே வரும்போது பெரியசாமிக்கு ஒருவித கர்வம் அப்பியிருந்தது மனசுக்குள்.

இனி தைரியமாகக் சொல்லலாம்." அய்யாவ பார்த்துக்கிற வேலை கிடைச்சிருக்குன்னு"
ஒரு வாரம் ஓடிப்போனது.

முதல் ரெண்டு நாட்கள் முதலாளியம்மாவே சாப்பாடு கொண்டுவந்தாள். அப்புறம் டிரைவர் கொண்டுவந்தான். முதலாளி முகம் இருண்டு போனதைப் பார்த்து விட்டார் பெரியசாமி.
ஒவ்வொருத்தரா வேணாம்னு உதறித் தள்ளறாங்க போல இருக்கு…"

முதலாளி முனகியது புரிந்தது. “பெரியசாமி.. எப்பவும் அடுத்தவங்க தயவும் நிக்கிராப்ள நம்மள வச்சிக்கக் கூடாது.. வயசாச்சுன்னா பட்டுன்னு போயிரண்டு.. புரியாது"

பழைய கதைகளை நினைவு கூர்வதில் பெரிய முதலாளிக்கு ஒரு சந்தோஷம் அரை மூலையில் கீழே அமர்ந்திருந்தவரைக் கூப்பிட்டார். "இங்கே வா.."

அருகில் வந்ததும் தலையணை அடியிலிருந்து ஒரு பர்ஸை எடுக்கச் சொன்னார். "இந்தா.. வச்சுக்க" நாலைந்து நூறு ருபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தார்.

"எதுக்குய்யா.."

"அட.. புடி.. நாளைக்கு நா உசுரோட இருக்கேனோ, இல்லியோ.. எங்கையால கொடுத்துட்டா ஒரு திருப்தி"

கைகள் நடுங்க வங்கிக் கொண்டார் பெரியசாமி.

"நல்லா இரு.."

முதலாளிக்கு அதற்கு மேல் பேச்சு ஓடவில்லை. கண் மூடிப் படுத்துக் கொண்டார். நர்ஸ் வந்து பார்த்து பொது முதலாளியின் உடம்பில் அசைவில்லை.

"எதாச்சும் கேட்டாரா"

"இல்லீங்களே.. நா இப்படி ஓரமா படுத்திரு ந்தேன்…"பெரியசாமிக்குக் குழறியது.

"துக்கத்திலே போயிட்டாரு.."

நர்ஸ் முனகலாய் சொல்லிவிட்டு வெளியே போனாள். எலும்புக் கூடு அசை வற்றுப் படுத்திருந்தது.

“முதலாளி.."

வீட்டுக்குள் வந்த தாத்தாவை பேத்தி திகைப்புடன் பார்த்தது.

"என்ன… வேலை போச்சா"

"ஆமாம்மா.. பெரிய முதலாளியே போய்ட்டாரு.."

"சின்ன மொதலாளி இருக்காரில்லே.."

"அவருக்கு நா இப்ப தேவையில்லெம்மா"

பெரியவரின் பதில் பேத்திக்குப் புரியவில்லை.

About The Author

1 Comment

  1. Vai. Gopalakrishnan

    வெகு நாட்களுக்குப்பின் நிலாச்சாரலில் புகுந்து, இந்தக்கதையை மட்டும், மீண்டும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன். அருமை.

Comments are closed.