கணக்குப் போடாமல் கவி பாடியவர்!
அப்போது அந்தப் பெண்ணுக்கு வயது பதினொன்றுதானிருக்கும். படிப்பிலே அவள் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். அவளுடைய அப்பா, ‘நம்முடைய மகள் ஒரு பெரிய கணித மேதையாகவோ ஒரு சிறந்த விஞ்ஞானியாகவோ விளங்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டார். ஆனால், அவர் நினைத்தபடி நடக்கவில்லை!
அந்தப் பெண்ணுக்குக் கணக்குப் போடுவதிலோ, விஞ்ஞானச் சோதனைகள் செய்வதிலோ விருப்பமே இல்லை. அடிக்கடி அவள் ஏதாவது கற்பனை செய்து கொண்டிருப்பாள்; கனவு கண்டு கொண்டிருப்பாள்.
ஒரு நாள், அவள் வீட்டிலே உட்கார்ந்து ‘அல்ஜீப்ரா’ கணக்கு ஒன்றைப் போட ஆரம்பித்தாள். விடை சரியாக வரவில்லை. பல முறை போட்டாள்; பயனில்லை. அவள் கவனம் முழுவதும் கணக்கிலே ஈடுபட்டிருந்தால்தானே விடை சரியாக வரும்? அதுதான் வேறு எங்கேயோ சென்று விட்டதே!
சிறிது நேரம் சென்றது. திடீரென்று அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். ‘மளமள’வென்று ஏதோ சில வரிகளை ஆங்கிலத்தில் எழுதினாள். எழுதிவிட்டுப் படித்துப் பார்த்தாள். படித்துப் பார்த்தாளா? இல்லை, இல்லை! கணக்குக்கு விடையாக இருந்தால், ‘அவள் படித்துப் பார்த்தாள்’ என்று சொல்லலாம். ஆனால், அவள் எழுதியது விடையன்று; ஒரு கவிதை! ஆகையால், அதை ‘அவள் பாடிப் பார்த்தாள்’ என்றுதானே கூறவேண்டும்?
ஆம், அவள் பாடினாள். அவள் பிற்காலத்தில் உலகம் போற்றும் ஒரு சிறந்த கவியரசியாவதற்குரிய அறிகுறி அச்சின்னஞ்சிறு பருவத்திலேயே காணப்பட்டது.
‘உலகம் போற்றும் கவியரசி’ என்று சொன்னதுமே, ‘அவர் யார்?’ என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். கவியரசி சரோஜினி தேவியைத் தவிர வேறு யாரை நாம் அப்படிச் சொல்லப் போகிறோம்!
* * *
சரோஜினி தேவிக்கு வயது பதின்மூன்று இருக்கும். உடம்பு மிகவும் பலவீனமாக இருந்தது. ‘எழுதவோ படிக்கவோ கூடாது; முழு நேர ஓய்வு வேண்டும்’ என்பது டாக்டர் உத்தரவு.
சரோஜினிக்கு சும்மா இருக்க முடியவில்லை. அவர் எதையாவது படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டுமே இருப்பார். டாக்டர் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். சரோஜினியின் ஆர்வத்திற்கு அவரால் அணைபோட முடியவில்லை.
சரோஜினியின் அப்பாவும் எவ்வளவோ கூறிப் பார்த்தார்; பயனில்லை. பள்ளிக்கூடம் போவதைக் கூடச் சிறிது காலம் நிறுத்தி வைத்தார். ஆனால், அதற்குப் பலன் இல்லாமல் போகவில்லை. சரோஜினி, வீட்டில் இருந்து கொண்டே ஒரு பெரிய கவிதையை எழுதிவிட்டார். 1300 வரிகள் கொண்டது அந்தக் கவிதை! ஆறே நாட்களில் அதை இயற்றிவிட்டார்! அத்துடன் ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார்! அப்போது அவர் எழுதிய கவிதை, சர் வால்டர் ஸ்காட் என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதுவதைப் போல் மிகவும் அழகாகவும், அருமையாகவும் இருந்ததென்று பலர் போற்றினர்; சரோஜினியைப் பாராட்டினர்.
–நிகழ்ச்சிகள் தொடரும்…
படம்: நன்றி .தமிழ் இணையக் கல்விக்கழகம்.
“