பெயர் தெரியாத கவிஞர்!
போட்டி ஆரம்பமாயிற்று. அப்பமும், வடையும் ஒவ்வொன்றாகக் கவிமணி அவர்களிடம் சரணடைந்தன. கொஞ்ச நேரத்தில் மொத்தம் இருந்த அப்பம் வடைகளில் முக்கால் பங்குக்கு மேல் கவிமணியிடம் வந்து சேர்ந்துவிட்டன!
ஆனால் கவிமணி, போட்டியில் பரிசாகக் கிடைத்த அந்த வடைகளையும், அப்பங்களையும் தாமாகத் தின்றுவிடவில்லை! எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துத் தாமும் அவர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்தார்.
* * *
கவிமணி வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு நண்பர் இருந்தார். அவருடைய குடும்பத்தில் ஒரு விழா நடைபெற இருந்தது. விழாவிற்கு உறவினர்களும், நண்பர்களும் ஏராளமாக வருவார்கள்.
அவ்வளவு பேரும் தங்குவதற்கு அவருடைய வீடு போதாது. ஆகையால், ‘விழாவை நடத்துவதற்குத் தங்கள் வீட்டைத் தந்துதவ வேண்டு’ மெனக் கவிமணியை அவர் கேட்டார். கவிமணியும் அதற்கு இசைந்தார்.
அன்று கவிமணி வீட்டில் ஏராளமான கூட்டம். விருந்து நடப்பதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்தது.
அப்போது வெளியிலிருந்த ஓர் ஆள் வீட்டுக்குள் ஓடி வந்தான். கவிமணியை நெருங்கி அவர் காதுக்குள், "உங்கள் பெயருக்கு ஒரு தந்தி வந்திருக்கின்றது!" என்று மெதுவாகச் சொன்னான்.
உடனே, கவிமணி எதுவும் கூறாமல் மெதுவாக எழுந்து வந்தார். வாசலில் நின்று தந்திச் சேவகனை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றார். அவனிடமிருந்த தந்தியைக் கையிலே வாங்கினார். ஆனால், உடனே அதை அவர் பிரித்துப் பார்க்கவில்லை. பேசாமல், தம்முடைய சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு உள்ளே போய்விட்டார்.
இந்தக் காலத்தில் நாம் எடுத்ததற்கெல்லாம் தந்தி கொடுக்கிறோம். பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து, பரீட்சையில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து – இப்படி எத்தனையோ விதமான வாழ்த்துத் தந்திகள் அனுப்புகிறோம். ஆனால், அந்தக் காலத்தில் ஏதேனும் துன்பமான செய்தியாக இருந்தால்தான் தந்தி வருவது வழக்கம். ஆகையால் ‘தந்தி’ என்றாலே எல்லோருக்கும் பயம்தான்!
அப்படியிருக்கும்போது, தந்தியை வாங்கியதும் உடனே பரபரப்புடன் பிரித்துப் பார்த்திருக்க வேண்டாமோ? பார்க்கவில்லை நமது கவிமணி. ஏன்?
‘இதில் ஏதேனும் துன்பச் செய்தி இருக்கலாம். அது எப்படிப்பட்டதாக இருக்குமோ? அதைப் படித்ததும், நிச்சயம் நமக்குக் கலக்கம் ஏற்படும். மற்றவர்களும் செய்தியை அறிந்து கொண்டு விடுவார்கள். மகிழ்ச்சியோடு எல்லோரும் சாப்பிடப் போகிறார்கள். இப்போது இந்தத் தந்தியை வெளியிட்டால் எல்லோரும் வருந்துவார்கள். விழாவும் அமங்கலமாக முடியும்’ என்று எண்ணியே தந்தியைப் பிரித்துப் பார்க்காமல் வைத்திருந்தார்.
‘தந்தியில் என்ன இருக்குமோ! எது இருக்குமோ!’ என்று உள்ளூர அவர் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருந்தார். ஆயினும், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
மாலை நேரம் விழா முடிந்து எல்லோரும் அவரவர் வீடு சென்றனர். எல்லோரும் சென்ற பிறகு, கவிமணி அந்தத் தந்தியை எடுத்துப் பிரித்துப் படித்துப் பார்த்தார். உடனே திடுக்கிட்டார்; கண் கலங்கினார்.’
‘தங்கள் மருமகள் இறந்து விட்டாள். உடனே புறப்பட்டு வர வேண்டும்’ என்று அந்தத் தந்தியில் இருந்தது!
உடனே அங்கிருந்து புறப்பட்டு விட்டார் கவிமணி. அந்த அவசரத்தில் மனைவியிடம் கூட அவர் செய்தியைச் சொல்லவில்லை!
* * *
"கிளிக்கு ஒரு காலில் எத்தனை விரல்கள்?" என்று கேட்டால், பலர் "ஐந்து" என்று தயங்காமல் கூறுவார்கள்.
ஆனால், நம்மைப்போல் அதற்கு ஐந்து விரல்கள் இருப்பதில்லை. நான்கே விரல்கள்தாம் உண்டு.
இந்த நான்கு விரல்களில், "முன்னால் இருக்கும் விரல்கள் எத்தனை? பின்னால் இருக்கும் விரல்கள் எத்தனை?" என்று ஒரு கேள்வியை ஒரு சமயம் கவிமணி சில இளைஞர்களைப் பார்த்துக் கேட்டார். அப்போது அவர் ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.
பாடப் புத்தகத்தில் கிளியைப் பற்றி ஒரு பாடம் இருந்தது. அதில் கிளியின் படமும் வரையப்பட்டிருந்தது. அந்தக் கிளியின் படத்தைப் பார்த்த பிறகுதான் கவிமணி இந்தக் கேள்வியைக் கேட்டார்.
இளைஞர்கள் புத்தகத்தைப் பார்த்துக் கூற முயன்றனர். ஆனால், கவிமணி, "புத்தகத்தை எல்லோரும் மூடி வைத்துவிட வேண்டும்" என்று முன்பே அறிவித்து விட்டார்.
எல்லோரும் அவ்வாறே புத்தகத்தை மூடி வைத்து விட்டனர். சிலர், "கிளிக்கு முன்னால் மூன்று விரல்களும், பின்னால் ஒரு விரலும் இருக்கின்றன" என்றனர். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
உடனே கவிமணி, புத்தகத்தைத் திறந்து கிளியின் படத்தைப் பார்க்கச் சொன்னார். பார்த்ததும் "நாங்கள் கூறியதுதான் சரி. படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. முன்னால் மூன்று விரல்கள்; பின்னால் ஒரு விரல்!" என்று ஆனந்தக் கூச்சலிட்டனர், இளைஞர்கள்.
ஆனால் கவிமணி, "நீங்கள் சொன்னதும் தவறு; இந்தப் படத்தில் இருப்பதும் தவறு. கிளிக்கு முன்னால் இரண்டு விரல்களும் பின்னால் இரண்டு விரல்களுமே உண்டு" என்றார்!
அதை அப்போது சிலர் நம்பவில்லை. ஆனால், கிளியை நேரில் பார்த்த பிறகுதான், "ஆமாம், கவிமணி கூறியது சரிதான்" என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
–நிகழ்ச்சிகள் தொடரும்…
படம்: நன்றி தமிழ் இணையக் கல்விக்கழகம்
“