சொந்தக் கையிலே சூடு போட்டுக் கொண்டவர்!
ஓர் ஆசிரியர் வீடு. அந்த வீட்டில் படேலும், அவருடன் சில சிறுவர்களும் தங்கியிருந்து படித்து வந்தனர். அவர்கள் படிப்பது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாம் அங்கேதான். மொத்தத்தில் அது ஒரு சிறு குருகுலம் போலவே விளங்கி வந்தது.
படிப்பைப் பற்றிய செய்திகளை ஆசிரியர் கவனித்து வந்தார். சாப்பாடு பற்றிய விஷயங்களை அவருடைய மனைவி கவனித்து வந்தாள்.
எல்லோருக்கும் இரவில் தூங்கப் போவதற்கு முன்னால் பால் கொடுப்பது வழக்கம். ஆசிரியரின் மனைவி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குவளை நிறையப் பால் கொண்டு வந்து கொடுப்பாள். அன்று ஒவ்வொருவருக்கும் கொடுத்துக்கொண்டே வந்தாள். இறுதியாகப் படேலுக்குக் கொடுக்க மட்டும் பால் இல்லை. என்ன காரணத்தாலோ, அன்று பால் குறைந்துவிட்டது. வேறு வழியில்லாததால் அவள் பேசாமல் இருந்து விட்டாள்.
படேல் பால் சாப்பிடவில்லை என்பதை ஆசிரியர் தெரிந்து கொண்டு விட்டார். உடனே அவர் தம் மனைவியைப் பார்த்து, “படேலுக்கு ஏன் பால் கொடுக்கவில்லை?” என்று கேட்டார்.
"பால் என்றால் படேலுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை" என்று ஏதோ ஒரு சாக்குச் சொல்லி வைத்தாள் அந்த அம்மாள்.
படேல், அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டுதான் படுத்திருந்தார். அப்போது அவர் தூங்கவில்லை!
மறுநாள், ஆசிரியரின் மனைவி முன்போல் பால் கொண்டு வந்து கொடுத்ததும், “வேண்டாம். எனக்குப் பால் பிடிக்காது!” என்று கூறிவிட்டார் படேல்.
அந்த அம்மாள் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள்; கொஞ்சிப் பார்த்தாள். ஊஹும்… ஒன்றும் பலிக்கவில்லை!
அன்றிலிருந்து படேல் அந்த ஆசிரியர் வீட்டில் தங்கியிருக்கும் வரை ஒரு தடவை கூடப் பால் அருந்தவில்லை! அவருடைய பிடிவாதத்தைக் கண்டு அந்த அம்மாளே ஆச்சரியப்பட்டாள்!
* * *
1917-ஆம் ஆண்டு ஆமதாபாத் நகரில் பல இடங்களில் கொடிய பிளேக் நோய் பரவியது. பிளேக் நோய் என்றால் யார்தான் பயப்படாமல் இருக்க முடியும்? வசதியுள்ளவர்கள் நகரைவிட்டு வெளியூருக்கு ஓடிவிட்டனர். கோர்ட்டுகள், சர்க்கார் அலுவலகங்கள் மூடப்பட்டன.
அப்போது படேல், நகர சுகாதாரக் குழுவின் தலைவராயிருந்தார். அவர் பிளேக் நோயை ஒழிக்கத் தீவிரமாகப் பாடுபட்டார். காலையிலும் மாலையிலும் சுகாதார அதிகாரிகளுடன் புறப்பட்டு ஒவ்வொரு வீடாகச் செல்வார்.
வீடு வீடாகச் செல்லும்போது ஓர் ஏழைக் குடும்பத்தைப் பார்க்க நேர்ந்தது. அக்குடும்பத்தில் இருந்த அனைவரிடமும் பிளேக் நோய் உண்டாவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. அப்போதே தக்க மருந்து கொடுத்தால் நோய் வராமல் தடுத்துவிடலாம் என்று படேல் நினைத்தார். நினைத்தபடி காலையிலும், மாலையிலும் தாமே நேராகச் சென்று அக்குடும்பத்தாருக்கு மருந்து கொடுத்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக ஒரே ஒருவர் மட்டும் அக்குடும்பத்தில் இறந்து விட்டார். மற்றவர்கள் படேலின் தீவிர முயற்சியால் உயிர் தப்பினர்.
"இவ்வளவு தைரியமாக அவர் பிளேக் இருந்த இடங்களுக்குச் சென்றாரே, அது தொற்று நோயல்லவா? அவரையும் பிடித்துக் கொள்ளாதா?" என்றுதானே கேட்கிறீர்கள்?
ஆம், ஆம், அது தொற்று நோய்தான். படேலையும் அது சும்மா விடவில்லை. அவருக்கும் பிளேக் நோய் கண்டுவிட்டது!
‘ஐயோ! ஊருக்கு உழைக்கப் போய்த் தம் உயிருக்கே ஆபத்தைத் தேடிக்கொண்டு விட்டாரே!’ என்று பலரும் நினைத்து வருந்தினர். ஆனால், கடவுள் அருளால் அப்போது நம் படேல் உயிர் பிழைத்துவிட்டார் என்று நான் சொல்லாமலே நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள்!
* * *
படேல் பாரிஸ்டராக இருந்து தொழில் நடத்தும்போது அவருக்கு நல்ல வருமானம் வந்தது. வாதாடுவதிலும், சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்வதிலும் அவர் மிகவும் கெட்டிக்காரர் என்று கூறுவார்கள்.
ஒரு சமயம் மடாதிபதி ஒருவர், யாரோ ஒருவரைக் கொலை செய்து விட்டதாக ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கில் மடாதிபதிக்காகப் படேல் ஆஜரானார். வெள்ளைக்காரர் ஒருவர் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்து வழக்கை நடத்தினார்.
மடாதிபதி நிரபராதி என்றும், போலீசார் வேண்டுமென்றே அந்த வழக்கைக் கற்பனை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் படேல் அறிந்து கொண்டார். மடாதிபதியைக் காப்பாற்ற வேண்டியது தம் கடமை என்று கருதினார்.
போலீசார் எட்டு சாட்சிகளைக் கொண்டு வந்தனர். ஏழு சாட்சிகளும் போலீசார் சொல்லிக் கொடுத்தபடி ஒப்புவித்தனர். எட்டாவது சாட்சி ஒரு மணியக்காரர். அவர் கொலை நடந்ததைப் பார்த்ததாகக் கூறும்போது படேல் கவனமாகக் கேட்டார். போலீசார் அவருக்கு மட்டும் சரியாகப் பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை என்பதை ஊகித்து அறிந்தார். உடனே, திடீரென்று அவரைக் குறுக்குக் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
அந்த மணியக்காரர் முன்னுக்குப் பின் முரணாக உளறுவதைக் கண்டதும், போலீசார் பயந்து போயினர். வெள்ளைக்கார மாஜிஸ்ட்ரேட்டும் போலீஸாருக்குச் சாதகம் செய்ய நினைத்தார். உடனே, "நீர் முதலில் வந்த ஏழு சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவில்லை. இவரை மட்டும் விசாரணை செய்கிறீரே, ஏன்?" என்று கோபமாய்க் கேட்டார்.
உடனே படேல், "அது என் விருப்பம்" என்றார்.
இதைக் கேட்ட மாஜிஸ்ட்ரேட், "என்ன, உமது விருப்பமா?" என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
"சந்தேகமென்ன? இதை வழக்குமன்றம் மறுக்க முடியாது. இங்கு நடப்பது வழக்கே அல்ல; வெறும் நாடகம். போலீஸாரே இந்த நாடகத்தைத் தயாரித்திருக்கிறார்கள். மடாதிபதியை உடனே விடுதலை செய்ய வேண்டும். பொய் கூறிய சாட்சிகளை உடனே கைது செய்ய வேண்டும். இல்லாவிடில் நான் விடப் போவதில்லை. மேல் கோர்ட்டில் இதே வழக்கை நடத்தி உண்மையை அம்பலப்படுத்துவேன். அப்போது தாங்களும் அங்கு வந்து நிற்க வேண்டியிருக்கும்" என்று அடித்துப் பேசினார் படேல்.
இதைக் கேட்ட மாஜிஸ்ட்ரேட்டும் போலீஸாரும் பதைபதைத்துப் போயினர். முடிவு?
அன்றே மடாதிபதிக்கு விடுதலை கிடைத்தது!
—நிகழ்ச்சிகள் தொடரும்…
படம்: நன்றி விக்கிமீடியா
“