சிறுவனாக இருந்தபோதும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறான். அப்போது, "அவள் உன் பெரியம்மா! நீ அவளை ஒரு மனுஷியாக மதிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை; அவமரியாதை மட்டும் செய்யாதே!" என்பாள். ஆனால் சரவணன் அவளை என்றுமே மதித்ததில்லை. அவள் இருக்கும் அறைப் பக்கம் போவதையே தவிர்த்தான்.
பரிமளம் சில சமயம் அவனைக்காட்டி, "இவனைத் தெரிகிறதா? நம் சரவணன்! எப்படி வளர்ந்துவிட்டான், பார்!" என்பாள். அவனுக்கு சிரிப்புதான் வரும். இந்த ஜடத்திடம் போய் சொல்கிறாளே! அது தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறது? உண்மையில் அவன் அம்மா பேசுவதையெல்லாம் உணர்கிற நிலையில் அது இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். அம்மா சுவற்றுடன் பேசுவது போலத்தான் இருக்கும் அவனுக்கு. ஆனால் அதன் விழிகள் மட்டும் அவனைப் பார்த்துவிட்டால் அலைபாயும். அதுவே பார்ப்பதற்கு இன்னும் பயங்கரமான தோற்றத்தைத் தர விருட்டென்று அறையை விட்டு வெளியேறிவிடுவான். பரிமளம் அவனைக் கடிந்து கொள்வாள். அம்மா மற்ற நேரங்களில் இருப்பதைப் போன்றே எப்போதும் தன்னிடம் அன்பாக இருக்கவேண்டுமென்று விரும்பும் அவன், அவள் தன்னிடம் கோபமுறக் காரணமான ‘பெரியம்மாவை’ முற்றிலும் வெறுத்தான். அவள் சாகவேண்டுமென்று கடவுளிடம் பிரார்த்தித்தான்.
இதோ, இப்போது பிணமாகக் கிடக்கிறாள்! போகும்போது சும்மா போகாமல், தன் தாய்க்குத் தான் செய்யவேண்டிய கடமையில் பங்கு கேட்கிறாள்! அவள்மேல் வெறுப்பு அதிகரித்தது.
வீட்டின் உள்ளே பார்த்தான். யாரும் அழவில்லை. பரிமளம் மட்டும் இறுகிய முகத்துடன் அதன் அருகில் அமர்ந்திருந்தாள். ஏற்கனவே நிறைய அழுதிருந்தாள். அப்பா இறந்தபோது கூட அவன் அம்மா இப்படி அழுததாக அவனுக்கு நினைவில்லை. உறவினர் சிலர் வந்திருந்தனர். யார் முகத்திலும் துக்கம் தென்படவில்லை. மாறாக, ஒருவிதமான நிம்மதி தெரிந்தது. விஸ்வநாதன் பம்பரம்போல் இயங்கி காரியங்களை முடித்தார். வேணி இங்கு வர இனி எந்தத் தடையும் இல்லை. பெருமூச்சு விட்டார். பரிமளத்திடம் மெதுவாகத் திருமணப் பேச்சை எடுக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டார்.
எல்லாம் முடிந்துவிட்டது. பெரியம்மாவுக்குத் தன் கையால் தீ மூட்டியாகிவிட்டது. யாவரும் போன பிறகு வீடு வெறிச்சோடியிருந்தது. பரிமளம் பூஜையறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு கண்களை மூடி தியானம் செய்வதுபோல் அமர்ந்திருந்தாள். சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அம்மாவின் மௌனம் அவனைக் கொன்றது. முன்பும் இது போன்றதொரு அமைதிதான் அந்த வீட்டில் இருந்தது என்றாலும் இந்த அமைதி அவனை அச்சுறுத்தியது.
சரவணன் சென்று பரிமளத்தின் அருகில் அமர்ந்தான். அரவம் கேட்டு பரிமளம் சற்றே கண் திறந்து அவனைப் பார்த்தாள். அவளிடமிருந்து லேசான புன்முறுவல் வெளிப்பட்டது. இதுதான் சமயமென்று அவன், "அம்மா, நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்" என்றான். அவளோ, "சரவணா! நீ என்ன கேட்கப்போகிறாய் என்று எனக்குத் தெரியும். அதை உன்னிடம் சொல்வதற்காகத்தான் என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன்" என்று கூறவும், ஏதோவொரு பூகம்பம் வெடிக்கப்போகிறதோ என்று அவன் மனம் திடுக்கிட்டது. ஆயினும் இத்தனை நாள் அம்மா மறைத்த ஒரு விஷயத்தை அறியும் ஆவலும் பெருகிற்று. ‘திக் திக்’ என்ற மனதோடு அவளை ஏறிட்டான்.
"சரவணா! உன்னை தைரியப்படுத்திக்கொள்! உன்னைப் பெற்றவள் உண்மையில் நானில்லை; இன்று கொள்ளி வைத்தாயே அவள்தான், உன் பெரியம்மாதான் உன்னைப் பத்து மாதம் தன் வயிற்றில் சுமந்து பெற்றவள்! இந்த உண்மையை இத்தனை நாள் மறைத்ததற்காக என்னை மன்னித்துவிடு, கண்ணா!"
சரளமாக வெளிப்பட்ட பரிமளத்தின் வாக்கைக் கேட்டு நிலைகுலைந்து போனான். ‘வெடிக்கப்போகிறது, வெடிக்கப்போகிறது’ என்று பயந்தது, உண்மையிலேயே வெடித்துவிட்டது. சாட்டை கொண்டு யாரோ அவன் இதயத்தைச் சுண்டியிழுப்பது போல் உணர்ந்தான். பெரும்புயலில் அகப்பட்ட சிறு படகாக அவன் மனம் தத்தளித்தது. பரிமளம் தன் தாயில்லை என்பதையே இன்னமும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், பெரியம்மாதான் அவனைப் பெற்றவள் என்பதை அவனால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.
உணர்வற்று சற்று நேரம் உறைந்திருந்தவன், பின் மெல்ல சுயநிலைக்கு வந்தான். பரிமளத்தின் கையை எடுத்துத் தன் நடுங்கும் கைகளுக்குள் பொத்தியவாறு, "அம்மா! நான் இதை நம்பமாட்டேன்! நீங்கள் ஏதோ வேதனையில் பேசுகிறீர்கள். இன்று ஓய்வெடுங்கள்! நாளை பேசலாம்!" என்றான் கெஞ்சிய குரலில்.
பரிமளமோ பிடிவாதமாக, "இல்லையப்பா! நீ அறியும் நேரம் வந்துவிட்டது. அதற்கு முன், உன் தந்தையைப் பற்றி நீ சற்றும் அறிந்திராத செய்தியைச் சொல்கிறேன், கேள். அவர் வழி வழியாக வந்த சொத்து சுகங்களை அனுபவித்துக் கொண்டு பொறுப்பற்ற வாழ்க்கை வாழ்ந்தவர். அவரது தந்தை அவரைத் திருத்த முயன்று தோற்ற நிலையில், திருமணம் செய்து வைத்தால் மகன் திருந்திவிடுவான் என்று எண்ணி, தூரத்து உறவினரான என் தந்தையிடம் பேசி என்னை மணமுடித்து வைத்தார். திருமணத்திற்குப் பிறகுதான் எனக்கு அவரது உண்மைக் குணம் புரிந்தது. என்னால் இயன்றவரை, அவரைத் திருத்தி, பொறுப்புள்ள கணவராகவும், நல்ல மனிதராகவும் வாழ வைக்க முயற்சித்தேன். ஓரளவு பலன் தெரிந்தது.
எங்களுக்குத் திருமணமாகிய சில மாதங்களிலேயே எனக்கு அடிக்கடி வயிற்றுவலி வர, பரிசோதித்துப் பார்த்ததில் கர்ப்பப்பையில் ஒரு கட்டி வளர்வது தெரிய வந்தது. அதை அப்படியே விட்டால் புற்றுநோயாக மாறும் அபாயமிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்க, அறுவை சிகிச்சை செய்து என் கர்ப்பப்பை அகற்றப்பட்டது. தாயாகும் பேறு இனி எனக்கு இல்லை என்ற உண்மையை உணர்ந்து மனம் வேதனைப்பட்டாலும், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தாவது என் தாய்மையை வாழ்விக்க எண்ணி என் யோசனையை என் கணவரிடமும், மாமனாரிடமும் சொன்னேன். அவர்கள் இருவரும் பதில் எதுவும் கூறாததால் அவர்களுக்கு இதில் உடன்பாடில்லை என்பதைப் புரிந்துகொண்டு அதன்பிறகு அந்த எண்ணத்தையே கைவிட்டு விட்டேன்.
சில நாட்களிலேயே என் மாமனார் மரணப்படுக்கையில் விழுந்துவிட்டார். சாகும் தறுவாயில், என்னிடம் தயங்கித் தயங்கி ஒரு உண்மையை வெளியிட்டார். அது, என் திருமணத்திற்கு முன் நிகழ்ந்த சம்பவம். அப்போது தன் பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த பூரணி என்னும் இளம்பெண்ணின் அழகில் மயங்கிய உன் அப்பா, அவள் வாழ்வைச் சூறையாடி விட்டதாகவும், அதனால் கர்ப்பமுற்ற அவளை, தானும் தன் மகனும் குடும்ப கௌரவம் கருதி, ஏதேதோ காரணம் காட்டி வேலையிலிருந்து அனுப்பிவிட்டதாகவும் கூறினார். அந்தப் பாவம்தான் தன் வம்சத்திற்கு வாரிசு உருவாகாமல் போன காரணம் என்றும், அந்தக் குழந்தையை எப்படியாவது கண்டுபிடித்து எடுத்து வளர்க்குமாறும் என்னிடம் வேண்டிக்கொண்டு உயிரை நீத்தார்.
எனக்குப் பேரிடியாக இந்தச் செய்தி இருந்தாலும், யாரோ ஒரு குழந்தையை வளர்ப்பதினும், என் கணவரின் குழந்தையைத்தானே வளர்க்கப்போகிறேன் என்று என் மனதைத் தேற்றிக்கொண்டேன். பலவிதங்களிலும் தேடியலைந்து பூரணி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தேன். அங்குதான் ஒரு வயதுக் குழந்தையாக உன்னை முதலில் பார்த்தேன். ஆம்; நீதான் அந்தக் குழந்தை!
(மீதி அடுத்த இதழில்)
இ நன்ட் மொரெ fரொம் யொஉ.யொஉர் ச்டொரிஎச் டொஉச் ம்ய் கெஅர்ட் கேப் ந்ரிடிங்