"சரவணா! நீதான் பெரியம்மாவிற்குக் கொள்ளி வைக்கவேண்டுமென்று அம்மா சொல்கிறாள். வா!" என்று அழைத்த விஸ்வநாதன் மாமாவை அதிர்ச்சியுடன் ஏறிட்டான் சரவணன்.
"என்ன மாமா சொல்கிறீர்கள்? நான் எப்படி……?" என்று அவன் கேள்வியை முடிக்குமுன்னேயே இடைமறித்தார் மாமா.
”நான் பரிமளத்திடம் பேசிவிட்டேன், சரவணா! அவள் இதில் பிடிவாதமாக இருக்கிறாள். இதைப் பற்றிப் பிறகு பேசுவோம். இப்போது அதற்கான நேரமில்லை. பல வருடங்களாகப் படுக்கையில் கிடந்த உடம்பு! ரொம்ப நேரம் வைத்திருக்க முடியாது. வா! மேற்கொண்டு ஆக வேண்டியவற்றைப் பார்ப்போம்!"
சரவணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நடுக்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அந்த சடலத்தைப் பார்த்தான். பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் பாதி வெந்த உடல் அது! அதற்கு தான் மேலும் தீ மூட்டவேண்டுமாம்! வெறுப்பை விழுங்கியவனாக மீண்டும் நோக்கினான். முகம் கூட வெளியில் தெரியாதபடி முழுவதும் போர்த்தப்பட்டிருந்தது. பார்த்தவன், திடுக்கிட்டான். அந்தக் கோடித்துணி………?
சரவணனின் முதல் மாதச்சம்பளத்தில் அவன் அம்மாவுக்காக வாங்கித்தந்த வெண்பட்டுச் சேலை அது! எவ்வளவு ஆசையாகப் பெற்றுக்கொண்டாள்! அதை அவள் உடுத்தவே இல்லையா?
பெரியம்மாவென்று சொல்லப்பட்டவள் யாரென்று கூட அவனுக்கு சரிவரத் தெரியாது. அவன் அறிந்தவரை ‘அது’ தன் வீட்டிலிருக்கும் ஒரு ஜடம். அவ்வளவுதான்! அதைப் ‘பெரியம்மா’ என்றுதான் அழைக்க வேண்டும் என்பது பரிமளத்தின் கட்டளை. அதைப் பராமரிப்பதற்காகவே சொத்து முழுவதையும் செலவழித்தாள். அவர்களது பரம்பரைச் சொத்தில் இப்போது கால்பங்கு கூட இல்லை. அதற்காக பரிமளம் கவலைப்படவும் இல்லை.
சரவணன் படித்து முடித்து நல்ல வேலையும் கிடைத்துவிட்டதால், இனி அவனைப் பற்றிய கவலையில்லையென்றும், மீதமிருக்கும் சொத்துகளை வைத்து, பெரியம்மாவின் கடைசிக்காலம் வரை தன்னால் காப்பாற்ற இயலும் என்றும் அம்மா அடிக்கடி விஸ்வநாதன் மாமாவிடம் கூறுவாள். அம்மா மட்டும் இப்படி பார்த்துப் பார்த்துக் கவனித்திராவிடில் இந்த ஜடம் என்றோ போய்ச் சேர்ந்திருக்கும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
பரிமளத்தின் பொறுமையும், சகிப்புத்தன்மையும் எவரையும் வியப்பில் ஆழ்த்தும். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக அந்த ஜடத்திற்குப் பணிவிடை செய்து பராமரித்திருக்கிறாள். அதுவும் சாதாரண ஜடமில்லை; தீயில் வெந்த கை, கால் நரம்புகள் உள்ளிழுக்கப்பட்டு, தசைகள் பின்னப்பட்டு, பாதி முகம் கருகி, கண்கள் இடுங்கி, வாய் கோணி விகாரத்தின் மொத்த வடிவமாக அது இருந்தது. சுயநினைவு இருந்ததாகக் கூட தெரியவில்லை. எப்போதும் ஒரு வெறித்த பார்வை! பரிமளம்தான் அதற்கு உணவூட்டுவாள்; உடல் துடைப்பாள்; சிறுநீர், மலப்பாத்திரம் மாற்றுவாள். ஒரு குழந்தையைப் போல் கவனித்துக் கொண்டாள். ஒவ்வொரு இரவும் அதனருகில் அமர்ந்து அன்றைய நிகழ்ச்சிகளை விவரிப்பாள். சரவணனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
சரவணன் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை அவனும், அவன் நண்பர்களும் சன்னல் வழியே பெரியம்மாவைப் பார்த்துவிட்டு, ‘பேய், பேய்’ என்று கூச்சலிட்டனர். அதைக் கண்டு பரிமளத்திற்கு வந்ததே கோபம்! இனி அவன் நண்பர்கள் யாரும் வீட்டுக்கு வரக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டுவிட்டாள். இன்று வரை அவன் நண்பர்கள் யாரையும் வீட்டுக்கு அழைக்கும் துணிவு அவனுக்கு வரவில்லை.
அம்மா கடுமையாகப் பேசினாலும், அன்பின் மறு உருவம் அவள் என்பதை அவன் அறியாமல் இல்லை. அவன் மீது அளவு கடந்த பாசம் வைத்தவள். கண்டிக்க வேண்டிய நேரங்களில் ஒரு ஆசிரியையாகவும், அன்பைச் செலுத்துவதில் நல்ல தாயாகவும், விவாதிக்கும் தருணங்களில் ஒரு தோழியாகவும் செயல்படுபவள். ஆனால் ‘பெரியம்மா’ விஷயத்தில் மட்டும் அம்மாவிடமிருந்து எந்தச் சலுகையையும் பெற இயலவில்லை. பரிமளம் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பாள். ஆனால் பெரியம்மாவைப்பற்றி யாராவது விமர்சித்தால் தாங்கிக்கொள்ள மாட்டாள். கடுமையாகப் பேசிவிடுவாள்.
விஸ்வநாதன், பரிமளத்திற்கு ஒன்று விட்ட அண்ணன் முறை. சரவணன் மேல் அவருக்குப் பாசம் அதிகம். தன் மகள் வேணியை சரவணனுக்குக் கொடுக்கும் எண்ணம் அவருக்கு ரொம்ப நாட்களாகவே இருந்தது. சரவணனுக்கும் வேணி மேல் பிரியம்தான். ஆனால் வேணி, ‘அந்தப் பேயிருக்கும் வீட்டில் நானிருக்க மாட்டேன்’ என்று பிடிவாதமாக சொல்லிவிட்டாளாம். இதை நாசூக்காக பரிமளத்திடம் தெரிவிக்க எண்ணி, ”ஏன் பரிமளம், இதை இன்னும் எத்தனை நாள் வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கப் போகிறாய்? உனக்கும் வயதாகிக் கொண்டே போகிறது. சரவணனுக்குத் திருமணம் செய்யும் எண்ணமில்லையா? அதற்குமுன் இதற்கு என்ன வழி செய்யலாம் என்று யோசி” என்றார்.
பரிமளம் ஆத்திரத்தோடு, "என்ன வழி செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? ஏதாவது காப்பகத்திற்கு அனுப்பிவிடலாம் என்றா அல்லது மேலோகத்துக்கேவா? அவள் என் தெய்வம்! அவளை வைத்து பராமரிக்கும் எண்ணமுள்ளவள் இந்த வீட்டுக்கு மருமகளாக வரட்டும்; இல்லையெனில் சரவணனுடன் தனிக்குடித்தனம் போகட்டும்! எனக்குக் கவலையில்லை. நான் சாகும்வரை அவள் என் பராமரிப்பில் இந்த வீட்டில்தான் இருப்பாள். இதைப் பற்றிப் பேசுவதென்றால் இனி நீங்கள் இங்கு வரவேண்டாம்" என்று கூறிவிட்டாள். விஸ்வநாதன் பரிமளத்தின் கோபத்தை அறியாதவர் இல்லை; எனினும் சற்றே பயந்துதான் போனார். ”என்னை மன்னித்து விடம்மா" என்று தலை கவிழ்ந்து வெளியேறிவிட்டார்.
இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டு இருந்த சரவணனுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படிக் கடுமையாகப் பேசியே பல உறவுகளை இழந்தவள், இன்று தான் பெற்ற பிள்ளையையே விலக்கி வைக்கத் துணிந்துவிட்டாள் என்றால்……. அவள் யார்? துணிந்து அம்மாவிடம் கேட்டான். ”அவள்தான் என்னை இன்றும் வாழவைத்துக் கொண்டிருக்கும் தெய்வம்!” என்ற ஒற்றை வரியே பதிலாகக் கிடைத்தது.