What”s in a name? என்று ஆரம்பித்தவர் ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியர். கவிஞர் என்ன நோக்கத்தில் சொன்னாரோ, பெயரிலென்ன என்று நாத்திகவாதிகளும், பெயர்தான் எல்லாமே என்று ஆன்மீகவாதிகளும் பிரிந்து நிற்கின்றனர்.
29.3.2007 அன்று கோயம்புத்தூரில் திராவிடர் கழகத்தினரால் நடத்தப்பட்ட புரட்சி விழாவில் (கலப்பு மணம் மூலமாகப் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழா) சூட்டப்பட்ட சில பெயர்கள் – ருஷ்யா, க்யூபா, வியட்நாம், வவுனியா, திரிபுரா, ஜகார்த்தா, மலேசியா, மணிலா, தமிழ் ஈழம்.
இப்பெயர்களுக்குக் காரணமாகச் சொல்லைப்படுவன : ஒன்று, இப்பெயர்கள் விடுதலை உணர்வு, புரட்சி சிந்தனைகள் மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களைப் பிரதிபலிக்கின்றன. இரண்டு, சிதம்பரம், பழனி, திருப்பதி என்று ஊர்ப் பெயர்கள் வழக்கமாக வைக்கப்படுவதால், உலக நாடுகளின் பெயர்களை வைத்துக் கொள்வதில் தவறில்லை!
இதோடு திருப்தி அடையாத சிலர், தங்கள் குழந்தைகளுக்கு (ஆன்மீக) வில்லன்களான ராவணன், ஹிரண்யன், மண்டோதரி போன்ற பெயர்களையும் கூட வைக்கிறார்கள்.
விசித்திரமான, நடைமுறையில் அதிகமாக இல்லாத பெயர்களைக் கொண்ட குழந்தைகள், சாதாரணமான பெயர்களைக் கொண்ட குழந்தைகளை விட அதிக அளவில் மன நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது 11.5.2007 அன்று டெக்கான் கிரானிக்கிளில் வந்த ஒரு கட்டுரை.
இது இப்படி இருக்க, பெயரைக் கொண்டு ஒரு புரட்சியே நடத்தியிருக்கிறது விபசாரத்திற்குப் பெயர் பெற்றிருந்த ஒரு சிறு கிராமம். தற்போது திருந்தி வாழ்ந்தாலும், தங்கள் முன்னோர்களால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்கக் கங்கணம் பூண்டார்கள் கிராமத்து மக்கள். தங்கள் குழந்தைகளுக்குக் கடந்த சில வருடங்களாகவே தாசில்தார், தானேதார், ராஷ்டிரபதி, ராஜ்யபால், காங்கிரஸ், ராஜிவ் காந்தி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்கள். இப்பெயர்களினால் சிறுவர்களிடம் நல்ல முன்னேற்ற மனோபாவமும், அவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் கிடைப்பதாகப் பூரிப்படைகிறார்கள். இராஜஸ்தான் மாநிலம் புந்தி மாவட்டம் ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்த கஞ்சார் இன மக்களே இவர்கள்.
பெயர்களை ஆன்மீக முன்னேற்றத்திற்கும் தனி மனித ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கும் பயன்படுத்தியவர்கள் நமது முன்னோர்கள். குழந்தைகளுக்கு இறைவன் நாமத்தைச் சூட்ட வேண்டும். அவ்வாறு பெயரிடப்பட்ட குழந்தையின் பெயரைக் கூப்பிடும் நேரத்திலாவது மனிதன் கெட்ட எண்ணங்களை மறந்து இறைவனை நினைத்துப் புண்ணியம் தேடிக் கொள்வான் என்பது அடிப்படை நோக்கம்.
இதைத்தான் பெரியாழ்வாரும் (பாசுரம் 30 ),
மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஒரு மல வூத்தையை,
மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கில்லை,
குன்றிடைக் கோவிந்தா! கோவிந்தா! என்று அழைத்தக் கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரம்புகாள்.
என்று அறிவிக்கின்றார்.
பெயர்கள் நிகழ்காலத்தை உணர்த்துவதாகக் கவிப்பேரரசு வைரமுத்து கூறுகிறார். 16.5.2007 குமுதம் இதழில் வெளி வந்த கேள்வி-பதில் பகுதியில் இந்தக் கேள்வி இடம் பெற்றிருந்தது.
"ஒரு பெயரைக் கொண்டு ஒருவரின் எதிர்காலத்தைக் கண்டு பிடிக்க முடியுமா?”
கவிஞரின் பதில் : "எதிர்காலம் தெரியுமோ இல்லையோ, சில பெயர்களைக் கொண்டு நிகழ்காலம் கண்டுபிடிக்க முடியும்."
குப்புஸ்வாமி
குப்புசாமி
குப்பன்
குப்பு
"இந்த நான்கும் பெயர்கள் மட்டுமல்ல. வர்க்க அடுக்குகள். ஜாதி-பொருளாதாரம்-வாழ்நிலை-மன நிலை போன்றவற்றை மங்கலாகக் காட்டக்கூடிய கண்ணாடிகள்தாம் இந்தப் பெயர்கள். இப்படிப் பெயர்கள் நிகழ்காலம் சொல்லலாமே தவிர, எதிர்காலம் சொல்லும் என்று எண்ண முடியவில்லை என்னால்" என்கிறார் கவியரசு.
இதே மாதிரியான கருத்தைத் தெரிவிக்கிறார் FREAKONOMICS என்ற வித்தியாசமான பொருளாதார ஆய்வுப் புத்தகத்தை எழுதிய Rogue economist என்று பெயர் பெற்ற ஸ்டீஃபன் டி. லிவிட் என்ற அமெரிக்கப் பொருளாதார மேதை. (ISBN 0-141-02580-8)
பெற்றோர்களுடைய வாழ்க்கைத் தரத்துக்கும் அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் இவர். இதற்கு உதாரணமாக, அமெரிக்கக் கறுப்பர்களையும், அமெரிக்க வெள்ளையர்களையும் எடுத்துக் காட்டுகிறார். கருப்பர்களுக்கே உரிய மற்றும் வெள்ளையர்களுக்கே உரிய பெயர்கள் என சிலவற்றைப் பட்டியலிடுகிறார்.
1. வெள்ளை நிறம் கொண்ட பெண்களுக்கு மட்டுமே வைக்கப்படும் சில பெயர்கள் —- Molly, Amy,Claire, Emily, Katie, Madeline,Katherine, Hannah, Emma, Kaitlin, Carly
2. கரிய நிறம் கொண்ட பெண்களுக்கு மட்டுமே வைக்கப்படும் சில பெயர்கள் —- Jazmin, Jasmin, Jasmine, Jazmine, Ebony, Imani, Shanice, Nia, Aaliyah, Precious, Deja, Asia, Aliyah, Diamond, Jada, Kiara
3. வெள்ளை நிறம் கொண்ட பையன்களுக்கு மட்டுமே வைக்கப்படும் சில பெயர்கள் —- Jake, Connor, Tanner, Dustin, Luke, Jack, Scott, Logan, Cole, Lucas, Bradley, Jacob, Maxwell, Hunter, Brett, Colin
4. கரிய நிறம் கொண்ட பையன்களுக்கு மட்டுமே வைக்கப்படும் சில பெயர்கள் —– De Shawn, DeAndre, Marquis, Darnell, Willie, Dominique, Demetrius, Reginald, Xavier, Terrance, Darryl, Jalen
புதுமையான பெயர்கள் புதுப்பணக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டு, அவை நடுத்தர வர்க்க மக்களால் காப்பி அடிக்கப்படுகின்றன என்கிறார் லிவிட்.
லிவிட்டின் பெயர் ஆராய்ச்சி மேலும் பல அதிசய உண்மைகளை வெளிப்படுத்துகிறது. நிறப்பாகுபாடுகள் பெயர்ப் பாகுபாடுகளாகி, அவை மேலும் பகுக்கப்படுகின்றன.
அதை அடுத்த வாரம் காணலாம்.
பெயரில் இவலலு அர்புதங்கல
பெயரில் இவ்வலவு விளக்கம் இருக்கும்னு சத்யமா தெரியாதுங்கோ. ஆனா பேருக்கேதா மாதிரி கொனமும் இருக்கும்னு எங பாட்டி சொன்னதா நெனப்பு.”