"சத்தியமாச் சொல்லுதேன் மச்சான். எம்புள்ள மேல சத்தியம். ஊரு போய்ச் சேந்தவொடன மொத வேலயா எங்கப்பங் கையக் காலப் புடிச்சி வயக்காட்ட எளுதிக் குடுக்கச் சொல்லுதேன். நீ சந்தேகமே படாத மச்சான்."
வயக்காடு வேலையைக் காட்டியது. மாடசாமி கொஞ்சம் இறங்கி வந்தான்.
"ஒத்தயில என்னமாப் போவ?"
"அபிசேகப்பட்டி வெலக்குல பஸ்ஸு ஏத்தி வுட்ரு மச்சான், நாம் போயிருவேன்"
"சங்சன்ல எறங்கி பஸ்ஸு மாறனும்லா?"
"நாஞ் சமாளிச்சிருவேன் மச்சான். வெசாரிச்சிப் போயிருவேன்."
"அதெல்லாஞ் சரி வராது புள்ள. ஒத்தயில நீ பேய்க்கிர மாட்ட. திருநவேலி வரக்யும் நா வாறேன். அங்ஙன தூத்துக்குடி பஸ்ஸுல ஏத்திவுட்டா வல்லநாட்ல கண்ட்ரக்டர்ட்ட கேட்டு எறங்கிருவேல்லா?"
"மவராசனாயிருப்ப, கெளம்பு மச்சான், ஒங்காத்தா கண்ணுல மாட்டதுக்கு முந்தி வெரசாப் போயிருவோம்."
தூளியில் கிடந்த குழந்தையை அவசரமாய் அள்ளிக் கொண்டாள். மாற்றுத் துணிமணிகளோ வேறு எந்தப் பொருளையுமோ எடுத்துக் கொள்ளத் தோணவில்லை. ‘குழந்தை, குழந்தை என் குழந்தை.’ குழந்தையைத் தாண்டி சிந்தனை ஓடவில்லை. ‘அந்த ராட்சசி எந்த நேரத்திலும் வரக்கூடும். அதற்கு முன்னால் இங்கிருந்து காணாமல் போய்விட வேண்டும்.’
"பூட்டு எங்க புள்ள வச்ச?"
"பூட்ட வேணாம் மச்சான். ஆத்தா வந்து பூட்டுன கதவப் பாத்தா நம்ம பொறத்தாலேயே வந்தாலும் வந்துரும் சும்மா சாத்திட்டு வா. இங்ஙனதாம் பக்கத்துல போயிருக்காவன்னு நெனச்சிக்கிரட்டும்"
குழந்தையைப் பாதுகாப்பாய் அணைத்தபடி ஓட்டமும் நடையுமாய் வரப்புகளையும் ஒத்தையடிப் பாதைகளையும் கடந்தாள். பின்தொடர்ந்து வந்த மாடசாமிக்கும் இவளுக்கும் இடைவெளி விரிவடைகிறபோது, தவிப்போடு சில விநாடிகள் நின்று மூச்சு வாங்கிக் கொண்டாள்.
அவனைத் துரிதப்படுத்த முடியாது. இருந்தாற்போல அவன் முரண்டு பிடித்து விட்டால் காரியம் கெட்டுப் போகும்.
அபிஷேகப்பட்டி விலக்கையடைந்து, திருநெல்வேலி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பிறகுதான் பாதி உயிர் வந்தது.
பஸ் கிளம்புகிற போது, ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள், இவர்கள் நடந்து வந்த பாதையை. யாரும் பின் தொடரவில்லை.
கடவுளே!
பஸ், திருநெல்வேலி ஜங்ஷனை அடைந்ததும் அடுத்த இடி காத்திருந்தது.
பஸ் ஸ்டாண்டில் எங்கே நோக்கினாலும் பரபரப்பு.
திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் இணைக்கிற தாமிரபரணிப் பாலத்தை யொட்டிப் பெரிய கலவரமாம். போலீஸ் துப்பாக்கிச் சூடாம். ஆற்றுக்குள்ளே அநியாயத்துக்குப் பிணங்களாம்!
"கொக்கர கொளத்துல என்னமோ கலாட்டாவாம் புள்ள, பஸ்ஸு எதுவும் போவலேங்காவ. இங்ஙனயே குத்தவச்சி இரி. நாம் போய் வெசாரிச்சிட்டு வாறேன்."
இவளைத் தனியாய் விட்டு விட்டு மாடசாமி நகர்ந்தான்.
‘இது என்ன ஆண்டவா புதுச் சோதனை’ என்று வேதனையோடு நட்டமாய் நின்று கொண்டிருந்தாள், குழந்தையை மார்பில் ஏத்தியபடி.
பஸ் ஸ்டாண்ட் முழுக்கப் போலீஸ் தடியடி, துப்பாக்கிச் சூடு என்று தான் ஆளாளுக்குப் பேச்சு.
இவளுக்கு சமீபத்தில் ஏழெட்டு ஆண்களின் ஒரு சிறு கூட்டம். நடுவில் கழுத்தில் காமரா தொங்க ஓர் இளைஞன், கலவர நிகழ்ச்சிகளை மற்றவர்களுக்கு விவரித்தபடி.
சிவகாமி அந்தக் கும்பலை நெருங்கி, அவர்களின் கவனத்தைக் தன்பக்கம் ஈர்த்தாள்.
"ஐயா, வல்லநாட்டுக்கு பஸ்ஸு ஏதும் இப்பப் போவாதுங்களா?"
கிட்டத்தட்ட எல்லாரும் இவளைப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவன் எகத்தாளமாய்ப் பார்த்தான்.
"வாம்மா, ஒன்னயத்தான தேடிட்டிருக்கோம்! அவனவன் துண்டக்காணும் துணியக்காணும்னு ஓடிட்ருக்கான். ஒனக்கு வல்லநாட்டுக்கு பஸ்ஸா! காலாகாலத்துல வீட்டுக்குப்போய்ச் சேரும்மா, ரெண்டு நாளக்கி பஸ் ஸ்டாண்ட் பக்கமே வராத."
இன்னொரு பெரியவர் கொஞ்சம் சமாதானமாய்ப் பேசினார்.
"பாலத்தத் தாண்டி வண்டி ஏதும் ரெண்டு நாளக்கிப் போகாதும்மா. ஊரே டென்ஷனாக் கெடக்கு. ஊரடங்கு உத்தரவு போடப் போறாங்காக. வெள்ளன வீடு போய்ச் சேரு. கொளந்தய வேற வச்சிருக்க. தனியாவா வந்த?"
"இல்லிங்கய்யா, எங்க மச்சான், எம்புருசன் வந்தாவ. பஸ்ஸு வெசாரிச்சிட்டு வாறேம்னுட்டுப் போனாவ. இன்னா வந்துட்டாவளே, மச்சான் பஸ்ஸு ஏதும் இப்பப் போவாதுங்காவளே, பெசல் பஸ்ஸு ஏதும் வல்ல நாட்டுக்கு வுட்ருக்காவளான்னு கேட்டியா?"
இறுக்கத்தை மீறி ஒரு சிரிப்பெழுந்தது அந்தச் சிறு கூட்டத்தில். மாடசாமிக்கோ சரியான கடுப்பு.
"பெசல் பஸ்ஸும் கெடயாது, ஒரு தாலியுங் கெடயாது. சத்தங்காட்டாம வா, ஊரப்பாக்கப் போவலாம்."
"சார், இவ்ளோ நேரம் சொல்லிட்டிருந்தாரே கேக்கலியாம்மா? எல்லாத்தையும் போட்டோ புடிச்சி வச்சிர்க்கார். நாளக்கிப் பேப்பர்ல வரும் பாரு."
சிவகாமிக்கு ஓர் அசட்டு தைரியம் வந்தது. அந்தக் காமராக்கார இளைஞனைக் குறித்துக் கேட்டாள்.
"இந்த அண்ணாச்சி பேப்பர்க்காரவுளா?"
(தொடரும்)
(குமுதம், 15.10.2001)”