மூன்றாவது முறையாக வருகிறேன். ஆனால் இம்முறை தனியாக, எனக்கென விரிந்து கிடக்கும் ஒரு உலகை தரிசிக்கும் ஆவலோடு தனியாக வந்திருக்கிறேன். முதல் முறை குடும்பத்தோடு வந்ததும், இரண்டாவது முறை நண்பர்களோடு வந்ததும், நான் அவர்களின் உலகத்தில் இருந்தது போன்ற உணர்வைத் தந்ததே தவிர.. நான் என் உலகத்தில் இருந்தது போல் உணரவில்லை. ஆகையால் எனக்கென்று இறைவன் படைத்துள்ள ஒரு உலகை தரிசிக்கும் ஆவலோடு இன்று என் பயணம் தனியாய்… ஒரு வேளை இன்றைய என் தனிமையும் திருடு போய்விட்டால்…!
எதை எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி சொல்ல வேண்டாமா?.. சொல்கிறேன். என் பெயர் இன்பானந்தன். முதுகலை சமூகவியல் இறுதியாண்டு படிக்கிறேன். நான் இப்பொழுது மூன்றாவது முறையாக பார்க்க வந்திருப்பது சுற்றுலா பொருட்காட்சி.
பெரியவர்களுக்கான நுழைவு கட்டணம் ஏழு ரூபாயை கொடுத்து டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தேன். பொருட்காட்சியின் கிழக்கு வாயிலின் வழியாக செல்வதில் சிறப்பு என்னவென்றால், நுழைந்த உடனே நம் எதிரில் இருக்கும் சிறுவர்களுக்கான இரயில் வண்டி. மேலும், வட்டவடிவ பூங்காவுக்குள் அமைக்கப்பட்டிருந்த தோட்டக்கலை துறை அதனருகில் அழகுக்கு அழகு கூட்டியிருந்தது.
அன்று திங்கள்கிழமை ஆதலால் சிறுவர் ரயிலில் ஏற காத்திருந்த கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. முதலில் ரயில் பயணத்தை முடித்துவிடலாம் என முடிவு செய்து ஐந்து ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி யாருமில்லாத ஒரு ரயில் பெட்டியில் அமர்ந்தேன். மக்கள் கூட்டத்தை கவர்ந்திழுக்கும் முயற்சியாக ரயில் வண்டியின் ஹார்ன் சப்தத்தை அலறவிட்டுக் கொண்டிருந்தான் டிரைவர்.
காத்திருக்கிறேன்! ஒரு குட்டி ரயில் சிறிய தண்டவாளத்தில் செல்லவிருக்கும் சிறிய பயணத்திற்காக காத்திருக்கிறேன்! கொஞ்சம் கொஞ்சமாக ரயிலில் மக்கள் கூட்டம் நிறைய ஆரம்பித்தது. குடும்பம் குடும்பமாய் வந்த மக்கள் பெட்டி பெட்டியாக அமர்ந்தனர். அதனால் நான் அமர்ந்திருந்த பெட்டிக்கு யாரும் வரவில்லை. ரயிலை கிளப்பலாமா என ஹார்ன் அடித்தவாறே டிக்கட் கவுண்டர் பக்கம் திரும்பிப் பார்த்தார் டிரைவர்.
இளம் பெண்களின் கூட்டமொன்று, ஒரு ஆறேழு பேர் இருக்கக்கூடும். அவர்கள் டிக்கட் வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தேன். கைகளில் உள்ளவைகளையும் நீள நோட்டுப் புத்தகங்களையும் பார்த்தால் கல்லூரி மாணவிகள் என்று நிச்சயமாய் தெரிகிறது. எந்தக் கல்லூரியாய் இருக்கும்?
ஏறக்குறைய எல்லாப் பெட்டிகளும் நிறைந்திருக்க எங்கு போய் உட்காருவார்கள் என கேள்வி எழுந்தது. அவர்கள் ரயிலை நோக்கி வரத் துவங்கினர். இனிமேலும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காது என நினைத்து பார்வையை திருப்பிக் கொண்டேன்.
உள்ளுக்குள் குறுகுறுவென்று எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது. நான் மட்டுமே அமர்ந்திருக்கும் இப்பெட்டியில் வந்தமர்ந்தால் நன்றாயிருக்குமே என மனதிற்குள் எதிர்பார்த்தவாறே அவர்கள் வரும் திசையை கவனிக்காதவாறு அமர்ந்திருந்தேன். பெட்டி அருகே சலசலப்பு கேட்டது. அட! என் பெட்டியில்தான் ஏறுகிறார்கள். வாவ்…… மனதிற்குள் உற்சாகம் பொங்கியது. அதை வெளிக்காட்டாதவாறு அமர்ந்திருந்தேன். என் பக்கத்து இருக்கையில் ஒருத்தியும், எதிரில் மூன்று பேரும், மீதியுள்ளவர்கள் பின் பெட்டியில் அமர்ந்தனர்.
ரயிலின் ஹார்ன் அலறியது. வண்டி புறப்பட்டது. வந்தமர்ந்த பெண்கள் ஓ.. வென்று உற்சாகமாக கத்தினர். அவர்களின் எல்லோர் கண்களிலும் உற்சாக வெள்ளம். ரயில் ஒரு குகை போன்ற அமைப்பை கடந்து சென்றது. ஒன்றும் தெரியாத அப்பாவி போல் அவர்கள் பக்கம் திரும்பாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
பேச ஆரம்பித்தனர். "ரயில் நின்னு போய்ட்டா என்ன செய்வது?" என ஒருத்தி கேட்க, "இறங்கி தள்ள வேண்டியதுதான்!" என இன்னொருத்தி சொன்னாள். "ஆமாம், அதை நீ தான் செய்ய வேண்டும்" என கொஞ்சம் குண்டாக இருந்தவளைப் பார்த்து கலாய்த்தார்கள். அவள் கோபமாக முறைக்க, ஒருத்தி கேட்டாள். "உன் பக்கத்தில் இருக்கிறவரைக் கேட்டா தள்ள மாட்டாரா?". அவள் கேட்டது என் அருகில் அமர்ந்திருந்தவளை. அவர்கள் வம்பு பேச்சில் என்னையும் இழுத்தனர். சற்று திரும்பி என் அருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தேன். ஆரஞ்சு நிற சுடிதாரில் அழகானவளாய்த் தென்பட்டாள்.
"ஏய்! அவரை எதுக்குடி வம்புக்கு இழுக்குற?" எனக்காக பரிந்து பேசியது ஆரஞ்சு சுடிதார். அவள் குரல் இனிமையாக இருந்தது. உண்மையாகவே அவள் குரல் இனிமைதானா, இல்லை எனக்குப் பரிந்து பேசியதால் இனிமையாகத் தோன்றியதா?
"சாரிங்க.. என் தோழிகள் எப்பொழுதும் இப்படித்தான்" என்று என்னைப் பார்த்து மன்னிப்புக் கோருவதுபோல் சொன்னாள். "பரவாயில்லீங்க.. சும்மா விளையாட்டுக்குத்தானே சொல்றாங்க" என்றேன் அந்த தேவதையிடம்.
கலையரங்கம் தாண்டி கூவம் நதிக்கரையோரம் ஓடிக் கொண்டிருந்தது ரயில். திரும்பிப் அவளைப் பார்த்தேன். மாலை நேர வெயில் பட்டு பளிச்சென்று தெரிந்ததால் அவளின் கண்கள் குறும்பாய் சிரித்துக்கொண்டே இருந்தன.
"ஏய் சுவாதி, இந்த பொருட்காட்சியை சுற்றி பார்க்க ஒரு கைடு வைத்துக் கொள்ளலாமா?" என என் அருகிலிருந்தவளிடம் ஒரு பெண் கேட்டாள்.
அட! உன் பெயர் சுவாதியா…!!
மனதுள் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். இனம் புரியாததொரு உணர்வு உள்ளுக்குள் பரவியது. முதல் பார்வையிலேயே மனதைக் கவர்ந்த ஒரு பெண்ணின் பெயரை முதன்முதலாய் கேட்டது, மனதுக்குள் கிளர்ச்சியை ஊட்டியது.
கைடு வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு சுவாதி பதில் சொன்னாள்."தாராளமாய் வைத்துக் கொள்ளலாம். ஆனால் யாரும் கிடைக்க மாட்டார்களே..!"
ஒரு பொய்யான சோகத்தை வெளிப்படுத்தியவாறே பதில் சொன்னாள்.
இந்த கேள்வியை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தீர்மானித்து சுவாதியைப் பார்த்து கேட்டேன். "நான் உங்களுக்கு கைடாக வரட்டுமா..?"
அவர்கள் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
"நீங்க, சும்மா ஒரு விளையாட்டுக்கு சொன்னீங்களோ.. இல்லை உண்மையாக சொன்னீங்களோ எனக்குத் தெரியாது. ஆனால் நீங்க சொன்ன ஐடியா எனக்கு பிடித்திருந்தது. நான் ஏற்கனவே இரண்டு முறை இங்கு வந்திருக்கிறேன்".
ரயில் நின்றது. அவர்கள் எல்லோரும் இறங்கினார்கள். சுவாதி, "ஒரு நிமிடம் காத்திருங்கள்" என்று சொல்லிவிட்டு, அவளின் தோழிகளோடு விவாதித்தாள். ஏதோ அவர்கள் தீவிரமாய் விவாதிப்பது போலத் தோன்றியது. நாம் கிளம்புவதாக சொல்லிவிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போதே சுவாதி என் அருகில் வந்தாள்.
"நீங்க எங்க கூட வாங்க. ஆனால் கைடு மாதிரியெல்லாம் வேண்டாம். அப்புறம் ஒரு முக்கிய விஷயம். நாங்க எந்தக் கல்லூரி; எங்கிருந்து வருகிறோம்; எங்க செல் நம்பர்…. இது போன்ற தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் கேட்கக் கூடாது."
ஒற்றை வார்த்தையாய் இதுவரை பேசிக்கொண்டிருந்த அவளின் சற்றே நெடிய பேச்சை ரசித்தேன்.
எவ்வளவு அழகாய் பேசுகிறாள்! இனிமையாய், குழைவாய், நெகிழ்வாய், மென்மையாய்… எப்படிப் பேசுகிறாள்!.
"சரி..போகலாம் வாங்க"
சுவாதி எனக்குப் பக்கத்திலும், மற்றவர்கள் எனக்கு பின்னாலும் நடந்து வந்தனர்.
மத்திய மாநில அரசுத்துறைகளின் அரங்குகள் நிறைந்த பாதையில் செல்லத் துவங்கினோம்.
"ஏய்! கப்பல் பாருங்கடி…. இங்கே போகலாமா?" என கேட்டாள் ஒருத்தி.
சுவாதி என் பக்கம் திரும்பிப் பார்த்தாள். சரி.. போகலாம் என்று தலையசைத்தேன். அது சென்னைத் துறைமுகத்தின் அரங்கு. கப்பல் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. எல்லோரும் உள்ளே நுழைந்தோம்.
விதவிதமான கப்பல்கள், கிரேன்கள் என நிறைய மாதிரிகள் வைக்கப்பட்டு இருந்தன. வழக்கமாய் எல்லோரையும் கலாய்க்கும் அந்தப் பெண் அரங்கிலிருந்த மாதிரியைப் பார்த்து கேட்டாள். "இது என்னங்க?"
"நிலக்கரி மாசுபடுத்தாமல் இருக்க நீர் தெளிக்கப்படுகிறது" என பதில் சொல்லிக் கொண்டிருந்தார் பொறுப்பாளர்.
"இது ஏன் கருப்பா இருக்கு?"
அவர் அவளை வியப்புடன் பார்த்தார். இது என்ன முட்டாள்தனமான கேள்வி என நினைத்திருக்கக் கூடும்! ஆனால் அதை வெளிக்காட்டாமல், "நிலக்கரி என்பது ஒரு வகையான கரி. அது கருமை நிறத்தில்தான் இருக்கும். இதுதான் வைரமாகவும் மாறுகிறது" என்றார்.
அவரை இடைமறித்து "இதை எடுத்துக் கொண்டுபோய் எங்க வீட்டில் புதைத்தால் வைரம் கிடைக்குமா?"
"ஏய் வாடி போகலாம் கேட்டது போதும்" என சொல்லி அவளை இழுத்துக் கொண்டு போனாள் என் தேவதை. எனக்கு நிம்மதியாகவும் என் சுவாதியை நினைத்தால் பெருமையாகவும் இருந்தது.
இனிமேல் இது போன்ற அரங்குகளுக்கு இவர்களை அழைத்து செல்லக்கூடாது என தீர்மானித்து,
"வாங்க அந்த ஐஸ் கிரீம் கடைக்கு போகலாம்" ஐஸ் கிரீம் கடைக்கு அழைத்துச் சென்றேன்.
"ஏய் பாருடி நம்ம கைடு ட்ரீட் தர்றார்." அந்த குறும்புக்காரியிடமிருந்து வழக்கம்போல் ஒரு கிண்டல் பேச்சு வெளிப்பட்டது.
சுவாதி என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.
(மீதி அடுத்த இதழில்)
சுவாரசியமான கதை அடுத்த இதழை எதிர் பார்த்த படி