மண்டபத்தில் அத்தனை பேரும் அமர்ந்திருப்பதற்கான சுவடுகள் இல்லாதபடிக்கு அமைதி. அப்போது அதைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை என்றும் ஆனதால்! சாப்பாடுப் புரையில் மாப்பிள்ளை வீட்டவர்கள் நெருக்கியடித்து எதையோ ரகசியம் ரகசியமாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அறை எவரையும் வெளியே விட முடியாதபடிக்கு ஏதோ வசியத்தில் பிடித்து உறைய வைத்திருப்பதுபோல இருந்தது. அவர்களின் போலித்தனமான பரபரப்பில் இவர்களுக்கெலாம் ஒன்று தெரிந்துவிட்டது. சாப்பாடு தட்டுப்பாடாகிவிட்டது. இன்று அப்படிக்கு அப்படித்தான். அறுசுவை உணவை எதிர்பார்த்து, அது இல்லாது போகிற சூழலில் பல கடல்களைக் கடந்து சென்றாவது அடைந்தாக வேண்டிய முக்திநிலை. சாப்பாட்டை எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பவர்களுக்கு என்ன செய்வது, எப்படி நடந்து கொள்வது என்பதும் பிடிபடவில்லை. மூச்சுவிடுவதும் சிரமமாகிவிட்டது. அது பெருமூச்சாகிவிட்டது. அதை விடவும் கடினம், அதை அடுத்தவர் உணர்ந்துவிடலாகாது. இப்போது ஒருவரோடொருவர் பேசிக்கொள்ள வேண்டுமானால், அதற்கான எந்த வார்த்தைகளும் எந்த மொழியிலும் இல்லை.
திடீரென்று ஒரு மாப்பிள்ளை வீட்டுக்காரர் பந்தி நடக்கும் இடத்தில் நுழைந்து சென்றர். அவர் நடந்து செல்கிற அழகையே எல்லொரும் பார்த்தபடி தங்கள் வாழ்நாளில் ஒரு நிமிடத்தைக் கழித்துக் கொண்டார்கள். சில நிமிடங்கள் கழித்து ஒரு பெரிய தட்டில் பிரியாணி பிளேட்டுகள் வந்தன. அது பார்வையில் படாத உயரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சென்றார் ஒருவர். ஹாஜாகனியாகிய பெண்ணின் தகப்பனார் மண்டபத்தின் நுழைவுவாசலையொட்டிய சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்திருந்ததை என்னவிதமான அதிசயம் என்று சொல்வது? பந்தி பரிமாறல் அங்கிருந்து துவங்கியது. அவர், அவரின் மச்சான், மச்சானின் தங்கை, ஆகிய ஹாஜாகனியின் மனைவி என்று இப்படியாக அமைந்திருந்தது அந்த வரிசை. அவர்களின் இலையில் பிரியாணி விழ எதிர்வரிசையில் இருந்தவர்களின் பார்வைகள் தவிர்க்கவியலாமல் அங்கே விழுந்தன. நான்கு இலைகளின் மீது பரிமாறப்பட்ட பிரியாணி இரண்டு முழு பிரியாணிகளுக்குச் சமமாக இருந்தது. இப்படியே வந்த பிரியாணி சுமார் இருபத்தைந்து இலைகளை நிரப்பியது. ஒவ்வொரு அவித்த முட்டையும் வெங்காயச் சம்பலும் அதையடுத்து வந்தன. கேசரி கடைசியில் விழுந்தது. முதல் இலையிலிருந்து துவங்கிய கேசரி இலைகளைத் தாண்டத் தாண்ட அதற்கேற்றபடியான அளவிற்குத் தன்னை சிறுத்துக்கொண்டே போய், அதற்கு மேல் இலையில் விழவேமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டது.
வெறும் முட்டையும் வெங்காயச் சம்பலும் கேசரியும் எனச் சில இலைகள், முட்டையும், சம்பலும் எனச் சில இலைகள். பந்தியில் இருந்தவர்களின் விழிகள் உருண்டு கொண்டிருந்தன. இந்த விழிகளுக்கு இதற்கு முன்பு ஒருநாளும் இந்தக் கதை நேர்ந்ததில்லை. மீண்டும் பிரியாணி வந்து மீதமுள்ள இலைகளைத் தொடலாம் என்கிற நம்பிக்கையும் கடைசி முறையாக விடைபெற்றுச் சென்றது. சாப்பிட்டுக் கொண்டிருந்த இருபத்தைந்து பேரும் சாப்பிட்டதே போதும் என்று ஒருவரை பார்த்து ஒருவர் தலையசைத்தவர்களாய் எழுந்து கொண்டார்கள். எதுவுமே வராதவர்கள் திடமான மனம் கைவரப்பெற்று எழுந்துவிட்டார்கள்.
பெண்ணின் தம்பிகள் இருவருக்கும் மிகுந்த அருவருப்பு தோன்றியது. நேற்று சிட்டாகப் பறந்து விருந்துபசாரம் செய்த எல்லா நண்பர்களும் வெற்று இலையோடு முகம் இருண்டு கிடந்ததைக் கண்டு சகோதர்கள் இருவரும் மனம் வெதும்பினார்கள். சின்னத்தம்பி பெரியவனிடம் சொன்னான். "காக்கா, வாங்க நாம நைஸா எழுந்து போயிரலாம். வெளியில ஏதாவது ஹோட்டல்ல.." என்று ரகசியமாய்க் கிசுகிசுத்தான். ஒருவன் சொன்னன், "ஏல, இது சின்ன கிராமம். இங்கே எங்கே ஹோட்டல் கட்டியிருக்கப் போறானுக? அப்படியே போனாலும் பன்னும் பிஸ்கட்டும் காலையில் போட்டு வச்ச ஆமவடையும்தான் மிச்சமாயிருக்கும். நம்ம கூட்டத்தைக் கண்டாலே கடை தானா சுருண்டுக்கிடும்." இப்படி அவன் சொல்லவும் அதுதான் உண்மை என்று இதர நண்பர்களுக்குத் தோன்ற, அந்த உண்மை மிகவும் பீதியூட்டக்கூடியதாக இருந்தது.
மணி 2.40. ஒவ்வொருவராக எழுந்து வரிசையாக ஊர்ந்தார்கள். மண்டபத்தின் வெளியே ஹாஜாகனியும் தமீமுல் அன்சாரியும் ஏற்கெனவே சாப்பிட்டு முடித்த பெண்களும் அவர்கள் வெளியேறுவதைப் பார்த்தார்கள். பார்வைகள் உரசும்பொழுது இருதரப்பு முகங்களும் சிறுத்துப் போவதாயின. பெரியவன் வாப்பாவை நெருங்கிச் சொன்னான். "வாப்பா, நாங்க அப்படியே கொஞ்ச தூரம் நடந்து போற மாதிரி போய், அந்தோ கடைசியா நிக்கிலியா ஒரு வேனு, அதிலே ஏறி ஊருக்குப் போற வழியிலே ஏதாவது நல்ல ஹோட்டலா இருந்தா அங்க என்ன கிடைக்குதோ அதை வாங்கிச் சாப்புடுறோம்" என்றான். மகனின் யோசனை அவர் மனதிலிருந்த சுமையைப் பிடுங்கித் தூர வீசியது மாதிரி இருந்தது. தாய்மாமனுக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. இருவரும் மெல்லியக் கோடாய்ப் புன்னகை உதிர்த்துத் தலையாட்டினார்கள். உடன் யோசனை தோன்ற, தன் சட்டைப் பையிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை எடுத்துக் கொடுத்தார்.
வெளியே வரும்போது எச்சில் இலைகளும் வாழைப்பழத் தோல்களும் ஐஸ்கிரீம் கப்புகளும் கிடந்த இடத்தில் இரண்டு மாடுகளும் ஒரு நாயும் வேட்டையாடிக் கொண்டிருந்தன. பெரிய மாடு நாயை முட்டி முட்டித் தள்ளிற்று. அது கொம்பில் குத்துப்பட்டுத் தூர விழுந்தாலும் மாடு முட்ட முடியாத எதிர்த்திசைக்குப் போய்க் கள்ளப்பார்வை பார்த்தபடியே இலைகளை நக்கலாயிற்று. வாய்க்கு வாகான எலும்புகளைக் கடித்துக் கடித்துப் பற்களின் திறனைச் சோதித்தது. அந்த நேரம் பார்த்து மேலும் இரண்டு நாய்கள் எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து வந்தன. பொறுக்க முடியாத இரண்டு மாடுகளும் பேசிவைத்தாற்போல, ஒருசேரக் கோபம் கொண்டு மூன்று நாய்களையும் முட்டித் தள்ளலாயின. நாய்கள் குரைக்க, மாடுகள் அஞ்சாறு அவற்றை விரட்டின. எனினும் நாய்கள் மூன்றும் வேறு வியூகம் வகுக்கும்பொருட்டு ஒன்றாய்க் கூடி நின்றன.
(தொடரும்)
(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“