பெண்வீட்டினர் மேல்தளத்திற்கு வந்ததுமே, விருந்தினர்களான தங்களுக்கு முதலிடம் தந்து விருந்து வைக்காமல் மாப்பிள்ளை வீட்டார் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து மனவருத்தப்பட்டு ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக் கொண்டபடி சரியான நேரத்திற்கு முந்தியே வந்துவிட்டார்கள். அப்படியிருந்தும் மாப்பிள்ளை வீட்டினர் தங்களைப் புறக்கணித்துவிட்டது, முகச்சுளிப்பை உண்டாக்கியது. சிலர் இதைப் பெண்ணின் வாப்பா ஹாஜாகனியிடமும் பெண்ணின் தாய்மாமன் தமீமுல் அன்சாரியிடமும் போய்ச் சொன்னார்கள். குழந்தைகள் பாக்கியவான்கள். அவர்கள் விசாலமான மண்டபத்திற்கு வந்ததும் தங்களுக்கான வெளியொன்று பரந்து கிடப்பதை உடனடியாகக் கண்டுணர்ந்து தங்களின் சிறகுகளை விரித்துக் கொண்டார்கள். ஓடவும் சாடவும், சேர்களை அங்கிட்டும் இங்கிட்டுமாகத் தள்ளிப் போடுவதும், ‘ஹோ’ என்ற உற்சவக் குரலை எழுப்பியபடி, ஒருவரையொருவர் விரட்டிப் பிடிப்பதுமாகக் களேபரம் பண்ணலானார்கள்.
ஹாஜாகனிக்கும் தமீமுல் அன்சாரிக்கும் இது சரியில்லை என்று ஏற்கெனவே உறைத்துவிட்டது. அதையே தங்களைச் சார்ந்தோரும் வந்து கூறிய பொழுது வேதனையாக இருந்தது. ஹாஜாகனிக்கும் அவருடைய மனைவிக்கும் மண்டபத்திற்கு வந்தவுடன் தங்களின் மகளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்கிற அவாவாக இருந்தது. அதற்கு ஓர் இடைஞ்சல் போலவும் இப்போது இருந்தது. விருந்து சாப்பிட வந்த மகிழ்ச்சி வடிந்துபோய்விட்டதை எல்லா முகங்களும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அவரும் அவன் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்தபடி நகர்ந்தாலும் பல பேரின் பார்வைகளும் அவர்களை மொய்த்துக்கொண்டு கூடவே வந்ததால் ஒரே மாதிரியான் கூச்சத்துடன் அவர்கள் மேலும் நகர முடியாமல் நின்றுவிட்டார்கள். தன் மகன் வயிற்றுப் பேரன் எங்கே என்று ஹாஜாகனி தேடினார். இப்போது அவன் வந்தால் அவனைத் தூக்கிக்கொண்டு அப்படியே வேறு திசை நோக்கி நின்றுவிடலாம் என்று எண்ணினார்.
புதுப்பெண் சிறிது நேரம் கழித்துத் தன் உறவினர்களைப் பார்க்க மேல்தளத்திற்கு வந்தாள். அவள் சந்தோஷமாகப் பூத்திருந்தாள். நேற்றைக்கும் இன்றைக்குமான இடைவெளியில் ஒரு சுற்றுக்குப் பெருத்திருந்தவள் போலக் காணப்பட்டாள். வாப்பாவும் ம்மாவும் அவளைக் கண்டதும் புது உற்சாகம் பெற்றுக் கொண்டார்கள். பெண்ணின் முகம் ஒளிவீசிக் கொண்டிருந்தடு. எல்லோரும் பெண்ணைச் சுற்றி அவளுடன் பேசியபடியிருந்தரக்ள். மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒருவர் வந்து முதலில் குழந்தைகளையும் பெண்களையும் சாப்பிட வரும்படிக் கீழ்தளத்திற்கு அழைத்துச் சென்றார். கீழ்தளத்தில் இப்போதும் நிறைய மாப்பிள்ளை வீட்டார் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே சில இடங்கள் காலியாக இருந்தன. இருந்தாலும் ஒரே வரிசையாக உட்காரும் வாய்ப்பு உருவான பின்னரே அவர்க்ள் அமர்ந்தார்கள். பிரியாணியின் மணம் தூக்கலாம் இருந்தது. இன்று நெய்ச்சோறு என்றுதான் சொல்லியிருந்தார்கள். நேற்று பிரியாணி சாப்பிட்டுவிட்டதால் இன்றும் பிரியாணி போட்டால் முகத்திலடித்தாற்போலிருக்கும் என்று சொல்லியே, நெய்ச்சோறு ஏற்பாடு செய்வதாக இருந்தது. ஆனால் என்ன நிகழ்ந்ததோ, இன்றும் பிரியாணி என்றாகியது.
பெண்கள் சாப்பிட்டு மேல்தளத்திற்கு வந்தபின்னும் மாப்பிள்ளை வீட்டாரின் பந்தி முடியாமலேயெ இருந்தது. பெண் வீட்டைச் சேர்ந்த ஆண்களும், இளைஞர்களும் மண்டபத்தில் ஒரே இடத்திலிருந்து ஒரே விஷயத்தையே பேசிக் கொண்டிருப்பதில் சலித்துப்போய், சாலையின் மீதேறி வந்தார்கள். மலையின் எழில் மூன்று திசைகளிலும் வெவ்வேறு வடிவம் பூண்டிருந்தது. அது காற்றையும் பறவைகளையும் அனுப்பியபடி இருந்தது; சிறிது நேரம் கழித்து பறவைகளைத் தன்னுள் இழுத்துக் கொண்டது. இப்போது அவர்களின் பசியையும் துயரையும் ஆற்றிக் கொண்டிருந்த ஒரே சாதனம் மலை மட்டும்தான். மணி இரண்டையும் தாண்டி விட்டது.
பந்தி வரிசையில் காலியிடம் இருப்பதாகச் சிலர் வந்து சொன்னதைக் கேட்டுப் பலரும் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். சரசரவென்று உள்ளே நுழைந்தார்கள். உட்கர்ந்து விட்டார்கள். மாப்பிள்ளை வீட்டாரில் எஞ்சிய ஒரு சிலர் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களும் முழுவதுமாய்ச் சாப்பிட்டு முடிக்க, இப்போது வரிசையில் இருப்பவர்கள் பெண் வீட்டார் மாத்திரமே! பெண்ணின் வாப்பாவும் தாய்மாமனும் பந்தியின் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து யாருமறியாவண்ணம் எதையோ பேசினார்கள். இருவரின் முகங்களும் துலக்கமின்றி இருந்தன். கொஞ்ச நேரம் கழியவிட்டே சாப்பிட்ட எச்சில் இலைகள் எடுக்கப்பட்டன. பரிமாறும் ஆட்கள் எங்கே என்று சுற்றுமுற்றும் தேட வேண்டியதாயிற்று. தண்ணீர் தம்ளர்களை ஒரு பையன் வைத்துச் சென்றான். பின்பு அவனே சில நிமிட நேரங்கள் கழியவிட்டு தண்ணீரரல் நிரப்பிச் சென்றான். அனேகமாக எல்லோருமே தன்ணீரைக் குடித்து காலி பண்ணி வைத்தார்கள்.
சற்று நேரம் கழித்து ஒருவர் வந்தார். வரிசையாக இலையைப் போட்டார். அவர் மட்டுமே இலை போட்டார். ஒவ்வொரு இலையாகப் பிரித்துப் பார்த்து, அது திருப்தியைத் தந்தபின் அடுத்த அடியைக் கடந்தார். மறுபடியும் தண்ணீர்ப் பையன் வந்தான். தண்ணீர் எங்கள் கைவசம் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது என்பதைப் பகிரங்கப்படுத்துவதுபோல மீண்டும் தண்ணீராக ஊற்றிச் செல்லலானான். மண்டபத்தின் பின்பக்கமாகத் தெளிந்த நீரோடை ஓடுவதாகச் சொல்லிப் பலரும் அங்கே போய் ஏற்கெனவே சிறுநீர் கழித்துவிட்டு வந்திருந்தார்கள். ஆனால், அந்தச் சிற்றோடையின் நீர்தானா இது என்று எவரும் ஆராயவில்லை. நேர விரைசலைக் கருதினால் இந்நேரம் அனைவரும் பாதிச் சாப்பாட்டை முடித்திருக்க வேண்டும்.
(தொடரும்)
(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“