பெண்வீடு (1)

கல்யாண வீட்டில் அந்த இக்கட்டான தர்மசங்கடமான கட்டம் நிறைவு பெற்றுவிட்டது. விருந்து வைபவம் மோதல் உள் உரசல்கள் எதுவும் இல்லாமல் நல்லபடியாக முடிந்திருந்தது. வந்திருந்த மாப்பிள்ளை வீட்டார்கள் எல்லாம் நல்ல மனிதர்களாக இருந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். பல கல்யாண வீடுகளிலும் சாப்பாட்டு விசயத்தில் அடிக்கடி மோதல், மன வருத்தங்கள், தரக்குறைவான வார்த்தையாடல்கள் என நிகழ்ந்தபடியே இருந்ததினால் மாப்பிள்ளை வீட்டாருக்கு எந்தவிதமான குறைபாடுகளும் உண்டாகி விடக்கூடாதென பெண்வீட்டார் எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார்கள்.

தங்கள் குடும்பத்திலுள்ள உறவுக்காரப் பையன்கள், பெரியவர்கள் என விருந்துக்களத்தில் பம்பரமாய் சுழன்று வந்து கவனித்துக் கொள்ளும்படி மணப்பெண்ணின் வாப்பாவும், ம்மாவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். விருந்துபசாரத்தை எப்படி நடத்தி முடிப்பதென்று நேற்று இரவே தீவிரமாக அனைவரும் கூடி கலந்து பேசியிருந்தார்கள். அந்தப் படியாக அச்சுப்பிசகாமல் நடந்து கொண்டார்கள்.

மாப்பிள்ளை வீட்டார் புதுமணத் தம்பதிகளையும் தங்களின் ஊருக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள். அப்படிப் போகும் போது மாப்பிள்ளையின் வாப்பா சம்சுதீன் பெண்ணின் வாப்பா எங்கே நிற்கிறார் என்று பரபரத்துச் தேடிச் சென்று ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டார் பெண்ணின் வாப்பா. ஹாஜாகனியைத் தன் தோளோடு அரவணைத்துக் கொண்டு தம்பி சாப்பாடு எல்லாம் திருப்தியாக இருந்தது. உங்க ஆட்கள் சுத்தி சுத்தி வந்து நல்லா கவனிச்சாங்க. எங்க ஆட்கள் அத்தனை பேருக்கும் ரொம்ப திருப்தி என்றார். ஹாஜாகனிக்கு உச்சி குளிர்ந்தது. அவர் வேறு பாஷை பேசத் தெரியாமல் தலையைப் பலமாக ஆட்டி வாய்கொள்ள சிரிப்பைச் சிந்தினார். சம்சுதீன் சொன்னார். நீங்க நாளைக்கு உங்க ஆட்களைக் கூட்டிட்டு வலிமாக்கு (மாப்பிள்ளை வீட்டார் விருந்து) வாங்க. நீங்க எத்தனை பேர் வருவீங்க? மாப்பிள்ளை வீட்டில் விருந்து சாப்பிட்ட கையோடு மாப்பிள்ளையும் பெண்ணையும் மறுவீடு அழைத்து வர வேண்டும். அந்த வகைக்குப் பெண் வீட்டார் நூறு பேர் சென்று வருவது என்று ஹாஜாகனி குடும்பத்தில் ஏற்கனவே தீர்மானித்திருந்தார்கள். நாங்கள் நூறு பேர் என்றார் ஹாஜாகனி.

“நல்லது. மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் வந்திருங்க. நீங்க இங்க இருந்து 11 மணிக்கெல்லாம் புறப்பட்டாத்தான் ஒரு மணிக்காவது வந்து சேர முடியும். இது ஞாபகத்துல வச்சிக்கிடுங்க” என்றார் சம்சுதீன்.

மாப்பிள்ளை வீட்டு வலிமாவுக்குச் சொன்னபடி நூறு பேர் திரளவில்லை. அன்று வேலை நாளாக இருந்தாலும் வேறு பல காரணங்களினாலும் எண்பது பேர் தான் பெண்வீட்டார் சார்பில் புறப்பட்டார்கள். அதனால் ஐந்து வேன்களில் சொகுசாகப் பாட்டும் ஆட்டமுமாக புறப்பட்டுப் போனார்கள். மலையடிவாரத்தையொட்டியே நீண்டு கிடந்த பாதை எங்கும் பசுமை. சமீபத்தில் பெய்த மழையின் விளைவு பசுமையாய்ப் பொங்கியிருந்தது. வேனல் காலத்தை உணர முடியாத குளுமையான காற்று, இடையிடையே ஓடறுத்துக் கொண்டு ஓடிய சின்னஞ்சிறிய ஓடைகள், ஏரிகள், குளங்கள். ஊடாடிவரும் காற்றுக்கு அசையும் பயிர்கள். ஜாலியாக இருந்தது பயணம்.

மாப்பிள்ளை ஊர் கச்சிதமாக சந்து பொந்துகளில் பதுங்கிக் கிடந்தது. சாலைகள் மேடாய் ஏறும் போதே பள்ளங்களில் சரிந்து விழுந்தன. மரங்கள் தங்கள் கிளைகளை விசாலமாய் அசைக்கவும் படர்ந்து வளரவும் வாய்ப்பில்லாமல் நெருக்கியடித்துக் கொண்டு வளர்ந்திருந்தன. விருந்து நடைபெறும் மண்டபத்தைக் கண்டுபிடிக்கச் சிரமமில்லாமல் சாலையே ஊராகவும், ஊரே சாலையாகவும் இருந்தது. மண்டபம் உச்சியில் ஜீசஸ் தன் இதயத்திற்குள் எல்லோரையும் புதைத்துக் கொள்ள விரும்புகிறவராய் இரண்டு கைகளையும் அகல விரித்தபடி நின்று கொண்டிருந்தார்.

பத்து நிமிடங்கள் முன்னதாகப் போய்ச் சேர்ந்தன வேன்கள். மண்டபத்தின் தரைத்தளம் சாலையிலிருந்து பத்து அடிக்கு கீழே இருந்தது. மேல் தளம்தான் சாலையின் போக்குக்கு இணையாக அமைந்திருந்தது. மேல் தளத்திலிருந்து ஒரு தாவு தாவினால், சாலையின் மேலே வந்து நின்றுவிடலாம். அந்தச் சாலை சைக்கிளில் செல்பவர்களுக்கு மட்டுமே இருக்கும் என்பது போல, அதன் அங்க அடையாளங்கள் குதறப்பட்டுக் கிடந்தன. போனவாரம் இந்த ஊரில் ஒரு லேசான மழை தூறிச் சென்றதாகச் சொல்லியிருந்தார்கள். அந்தத் தூறலில் இந்தச் சசலை மனம் இளகியிருக்கக்கூடும்.

சாலையில் பல பெண்களும் ஆண்களும் நின்றிருந்தார்கள். மரங்கள் குடைகளை விரித்திருந்ததினால் நிற்கச் சிரமமில்லை. அந்த மாப்பிள்ளை வீட்டாரோடு பெண் வீட்டாரும் சேர்ந்து கொண்டார்கள். பெண் வீட்டாரின் பெண்கள் இறங்கிச் சென்றார்கள். குழந்தைகள் அவர்களைத் தொடர்ந்து, சேலைகளின் முந்தானைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டு போயின. அங்கிருந்தே மேல்தளத்திற்கு வரவேண்டும். மேல்தளத்தில் நீளநீளமாய் விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. அப்படி பெண் வீட்டார்கள் சாலையிலிருந்து படிகளின் வழியாகக் கீழிறங்கி, மேல்தளத்திற்குச் செல்லும்போது மாப்பிள்ளை வீட்டார்களுக்கான பந்தி நடந்து கொண்டிருந்ததை பார்த்தபடி சென்றார்கள்.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author