அதுவொரு வெற்றுப்பாறைதான். பல வருடங்கள் கேட்பாரற்று, சீண்டுவார் இல்லாமல் காலியாகவே கிடந்தது. அந்த இடத்தை ஒருவரும் வாங்க வரவில்லை. காரணம், அந்தப் பாறைகளின் பிரம்மாண்டம் அத்தனை பேரையும் பயமுறுத்தியது. எப்படி அவற்றை அகற்றுவது, யாரால் அது முடியும் என்ற என்ற எண்ணத்தில் ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பாகவே அது பெங்களூரில் காட்சியளித்து வந்தது. 1988-வரை அப்படியே பாறையாகக் கிடந்த இந்த இடத்தைச் சுற்றிலும் அப்போதே பல வீடுகளும் இருந்து வந்தன. ஆனால் இப்போது..?
அந்தப் பாறைகள் காணாமல்போய் ‘ஸ்ரீராதாகிருஷ்ண சந்திர’ ஆலயம் பெங்களூர் நகருக்கே பெருமை சேர்க்கும் விதமாகக் காட்சியளிக்கிறது.
பல வண்ண விளக்குகளும், சலவைக் கற்களினால் செய்த படிகளும், தெய்வங்களின் சிலைகளும் பார்ப்போர் கண்களைக் கவர்கின்றன. பாறைகளைக் குடைந்து இந்த அளவுக்குப் புகழ் பெற்றதொரு ஆலயமாக உருமாற்றியவர்கள் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினர்தான். அதாவது ‘இஸ்கான்’ அமைப்பினர். இவர்களின் கோஷம் "ஹரே ராமா ஹரே கிருஷணா" என்பதே. தீவிர கிருஷ்ண பக்தர்களான இவர்களது குரு ஸ்ரீல பிரபுபாதா. ஸ்ரீசைத்தன்ய மஹாபிரபுவின் வழி வந்து, அவரது கொள்கைகளைக் கடைபிடிக்கும் இயக்கம் இஸ்கான்.
ஸ்ரீல பிரபுபாதா தனது குருவான சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமியை முதன்முதலாக கொல்கத்தாவில் சந்தித்தார். அங்கு அவரிடம் தீக்ஷை பெற்று அவருக்குப் பிரியமான சீடருமானார். கிருஷ்ணனின் மேல் பிரியமும், பக்தியும் கொண்டு சன்யாசமும் வாங்கிக் கொண்ட பிரபுபாதா, பல ஆன்மீகப் புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஸ்ரீமத் பாகவதத்திற்கு மிகச் சிறப்பான கருத்துரை நூல் ஒன்றை எழுதியுள்ளார் பிரபுபாதா. இன்றும் உலகம் முழுவதும் அதிகம் விற்பனையான பாகவதம் சார்ந்த நூல் இதுதான்.
பின்னர் கிருஷ்ண பகவானைப் பற்றி உலகம் முழுவதும் தெரியப்படுத்தவும், புகழ் பரப்பவும் தனது குருவின் ஆசியுடன் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குப் பயணமானார் பிரபுபாதா. அவர் நியூயார்க் நகருக்கு வந்துசேரும்போது அவரிடம் மீதமிருந்தது சொற்பத் தொகைதான். ஆனாலும் மனம் தளராமல் பிரபுபாதா, கிருஷ்ணனுக்காக நியூயார்க்கில் "இஸ்கான்" இயக்கத்தைத் துவக்கினார். இயக்கத்தை ஆரம்பித்து அது ஒரு குறிப்பிட்ட அளவு புகழ் பெறும்வரையில் வளர்த்தெடுக்க அவர் படாத கஷ்டமில்லை.
மும்பையிலும், லண்டனிலும் இருக்கின்ற இஸ்கான் இயக்கத்தின் இராதாகிருஷ்ண ஆலயங்களிலிருந்து பெங்களூர் ஆலயம் வேறுபட்டது; தனிச் சிறப்பு வாய்ந்தது.
வெடி வைத்தால்கூட உடைக்க முடியாத அளவுக்கு இறுகிப் போய் கடினமாக இருந்த பாறைகளைக் குடைந்து பூலோகத்து சொர்க்கம்போல ஒரு கோவிலாக உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இது நிச்சயம் சாதனைதானே..!
இருபதாண்டுகளுக்கு முன்பாக ராமகிருஷ்ணஹெக்டே கர்நாடக முதல்வராக இருந்தபோதுதான், இந்த இடத்தை ‘இஸ்கான்’ அமைப்பிற்கு கோவில் கட்டுவதற்காக அளித்தார். அப்போதே இந்தச் செய்தியைக் கேட்டு அனைவரும் சிரித்தார்கள். இந்தப் பாறைகளை அகற்றிவிட்டு கோவில் கட்டிவிட்டால், அப்படி கட்டுபவர்களுக்கே நாம் கோவில் கட்டிவிடலாம் என்பதுதான் அப்போதைக்கு பெங்களூருவில் பேச்சு.
ஆனால் பகவான் கிருஷ்ணனின் ஆசியும், வழிகாட்டுதலும் ‘இஸ்கான்’ அமைப்பிற்குக் கை கொடுக்க அந்தப் பாறைகளை தெய்வ பலத்துடன் அகற்றி, அற்புதமான ஒரு சித்திரக்கூடமாக உருவாக்கியிருக்கிறார்கள். இன்றைக்கும் பெங்களூருக்கே ஒரு அடையாளச் சின்னமாக திகழ்ந்து வருகிறது இந்தக் கோவில்.
இனி ஆலயத்திற்குள் நாமும் செல்வோம்.
ஆலயத்தின் உள்ளே செல்ல ஒரு பாதையும், வெளியில் வர மற்றொரு பாதையுமாக மிகப் பெரும் வசதியைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். நடந்து செல்லும் பாதைகள் முழுவதிலும் கிரானைட் கற்கள் பளபளக்கின்றன.
வெயில் காலங்களில் படிகளில் படிந்திருக்கும் வெயில் நம் கால்களைத் துளைக்காத வண்ணம் அவ்வப்போது குளிர்ந்த நீர்கள் படிகளை நனைத்தபடியே செல்ல நமக்கும் குளிர்கிறது.
கோவிலின் அருகே செல்லச் செல்ல, கோவிலின் மேலே அகன்று பரந்த நிலையில் இருக்கும் ராஜகோபுரம் கண்ணில்படுகிறது. கன்னத்தில் கை வைத்து வேண்டியபடியே உள்ளே நுழைந்தால் துவஜஸ்தம்பத்தின் நிழல் நம் மீது படிகிறது. மேலே நிமிர்ந்து பார்க்கின்றபோது நிஜமான தங்கத்தைத் தாங்கிக் கொண்டு அந்த உச்சி வெயிலிலும் பலவிதமான ஒளிகளை தன்னிடமிருந்து ஜெகஜோதியாக வெளிப்படுத்துகிறது துவஜஸ்தமபம்.
அங்கே நின்று அந்த அதிசயத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட பின்பு 108 படிகளைக் கடந்து கண்ணபிரானை காண அவனது வைகுண்டவாசலுக்கு வருகிறோம். வருகின்ற வழிகளிலெல்லாம் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டிருப்பதால் கோவிலின் உள்ளே எப்போதும் ஒலித்து வரும் மந்திரங்களும், கிருஷ்ணனின் பஜனைகளும் நம் காதில் ஒலித்தபடியே நம்முடன் கூடவே வருகின்றன.
கோவிலின் மூலவரான கிருஷ்ணன் பரவசமான நிலையில் பக்தர்களுக்குக் காட்சியளித்தபடியே இருக்கிறார். அவரது அருகில் பிரஹலாத நரசிம்மரும் நமக்கு அருள்பாலிக்கிறார். கோவில் முழுவதும் ‘ஹரே ராமா! ஹரே ராமா! கிருஷ்ண! கிருஷ்ண! ஹரே! ஹரே!’ என்கிற மூலமந்திரம் எப்போதும், எங்கேயும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
கோவிலின் பிரம்மாண்டத்தை அப்படியே உள்வாங்கிய நிலைமையில் சலவைக்கல்லில் ஜொலிக்கிறது கோவிலின் உள்மண்டபம். சுமார் 10000 சதுர அடியில், ஒரே சமயத்தில் 2500 பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்டமாக இருக்கிறது இந்த மண்டபம்.
ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் நமக்குத் தெய்வங்களாகக் காட்சியளிக்க அவர்களுடைய பரப்புரைத் தூதுவர்களாக அவதாரமெடுத்திருந்த ஸ்ரீசைத்தனய மஹாபிரபு, ஸ்ரீராதாகிருஷ்ண சந்திரர் ஆகியோரும் மகாமண்டபத்தில் சிலை வடிவத்தில் காட்சியளிக்கின்றனர்.
இந்த மூலவர்களுக்குத் தினமும் தனி பூஜையும் உண்டு. அந்த ஆராதனையைப் பார்க்க ஜனத்திரள் கூடி நிற்கும்போது மண்டபமே நிறைந்திருக்கும். இந்த மண்டபத்தின் உச்சியில்தான் ‘சாண்டில்யர்’ என்று சொல்லப்படும் தங்க முலாம் பூசப்பட்ட பிரம்மாண்டமான தொங்கும் விளக்கு தனது பிரகாசமான ஒளியை மண்டபம் முழுவதும் வழங்கிக் கொண்டிருக்கிறது. 1008 பல்புகளைக் கொண்ட இந்த விளக்கின் அபரிமிதமான வெளிச்சத்தில், கோவிலின் அனைத்துப் பகுதிகளும் நமது கண்களுக்குக் காட்சியளிக்கின்றன.
கிருஷ்ணனை எங்கிருந்தாலும் காணலாம் என்றபடியே மேல்விதாரத்தில் தனிப்பாதை அமைக்கப்பட்டு அங்கும் இருப்பிடங்கள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து அந்தக் கோவிலின் அமைப்பைப் பார்வையிடும்போது நமக்குள் ஏற்படும் பரவசத்திற்கு அளவே கிடையாது.
ஸ்ரீலபிரபுபாதாவின் சிலை தவிர பெரியதொரு திரை அரங்கத்தையும் கோவிலின் உள்ளே அமைத்திருக்கிறார்கள். அந்த அரங்கத்தில் பகவான் கிருஷ்ணனின் புராணக் கதைகள் அனைத்தும் முப்பரிமாணத் தோற்றத்தில் விஞ்ஞானத்தின் துணைகொண்டு பக்தர்களுக்கு பழங்கதைகளை எடுத்துச் சொல்கின்றன.
கோவிலுக்கு வருபவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. எல்லையற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும் அந்த பகவான் கிருஷ்ணனின் தோற்றத்தைக் கண்டு பிரமித்துப் போய்தான் திரும்புகின்றனர் பக்தர்கள்.
இஸ்கான் இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் பலரும் இங்கேயே தங்கியிருந்து பகவான் கிருஷ்ணனின் புகழ் பரப்பும் பணியினைச் செவ்வனே செய்து வருகிறார்கள்.
பஞ்சகச்சம் போல் வேஷ்டியுடனும், நெற்றியில் திருமண்ணுடனும், தலையில் குடுமியுடனும் காட்சி அளிக்கும் இவர்களது முடிவில்லாத, எதிர்பார்ப்பில்லாத அர்ப்பணிப்பினால்தான் நமது இந்திய தேசத்தின் பக்தி இயக்கங்களில் ஒன்றான ‘இஸ்கான்’ பகவான் கிருஷ்ணனின் புகழை உலகம் முழுவதும் பரப்பிவருகிறது.
ஒரு முறையாவது இந்தக் கோவிலை பார்த்தே தீர வேண்டும் என்கிற ஆசையுடனும், பக்தியுடனும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்தக் கோவில் இந்தியாவின் ஆன்மீகச் சுற்றுலாத் தளங்களில் குறிப்பிடத்தக்கது என்று நிச்சயம் சொல்லலாம்.
தெ அர்டிcலெ இச் வெர்ய் கோட். Tகெரெ அரெ ஷொப்ச் அல்சொ இன் இச்க்cஒன் அன்ட் யொஉ நில்ல் கெட் கோட் ஒர்கனிc இடெம்ச் அன்ட் கிfட்ச் அல்சொ. Tகெ பெச்ட் பர்ட் இச் தெஇர் ஆKஷய பட்ர ச்செமெ ந்கிச் cஅடெர்ச் மன்ய் ச்சோல்ச் அன்ட் கொச்பிடல்ச். பெஒப்லெ அரெ டொனடிங் fஒர் தெ கோட் cஔசெ.