பூந்தோட்டம் (1)

கூ……..குக்கூ…….கூ………

தோட்டத்து மாமரத்தின் அடர்ந்த கிளைகளில் ஒளிந்து கொண்டு குயில் கூவிக் கொண்டிருந்தது. கதைப் புத்தகத்தில் ஆழ்ந்திருந்த விஜயா, குயிலைக் காணும் ஆவலில், தோட்டத்து சன்னல் அருகே வந்து, மெல்ல திரைச் சீலை விலக்கினாள்.

குகுகூ…..குகுகூ…..குகூ….குகூ…..

சத்தம் கேட்டு அந்தக் கரிய பறவை, சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு பறந்து போனது.

ச்சே! என்ன மடத்தனம்! குயிலைக் கண்ணால் பார்க்கும் அவசியம் என்ன இப்போது? இன்னும் கொஞ்ச நேரம் அதன் இன்குரலை அருகிருந்து ரசித்திருக்கலாமே!

விஜயா, தன்னையே நொந்து கொண்டவளாக, தோட்டத்தைப் பார்வையிட்டாள். அவளுள் பெருமிதம் பொங்கி வழிந்தது.

அத்தோட்டம், பலவிதப் பறவைகளின் புகலிடமாக இருந்தது. ஏழு சகோதரிக் குருவிகளின் கீச்…கீச்சென்ற கூச்சல் காதைப் பிளந்தது. இரு அணிற்பிள்ளைகள் ஒன்றையொன்று துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன. மாமரக்கிளையில் அமர்ந்திருந்த காகம் ஒன்று, அலகால் தன் இணையின் தலையை இதமாகக் கோதிக் கொண்டிருந்தது. தேன்சிட்டுகள் மடல் வி ரிந்திருந்த பேயன் வாழைப்பூவில் தேன் உறிஞ்சிக் கொண்டிருந்தன.

மாம்பூக்களின் வாசமும், கொய்யாப்பழ வாசமும் போட்டி போட்டுக் கொண்டு நாசியைத் துளைத்தன. மா, கொய்யா, மாதுளை, வாழை என்று பழமரங்கள் யாவும் கொல்லையில் கொலு வீற்றிருக்க, தென்னையும், வேம்பும் தெரு வாசலை அலங்கரித்திருந்தன. பக்கமிருந்தப் பந்தலில், மல்லிகையும், முல்லையும் பின்னிப் பிணைந்து மணம் வீசி மனத்தை மயக்கின. கோயில் மணியென ஆங்காங்கே தலைகவிழ்ந்து தொங்கிய தங்க அரளி மலர்களும், இன்ன நிறமென்று வரையறுத்துச் சொல்ல இயலா வண்ணங்களில் செம்பருத்திப் பூக்களும், ரோஜாக்களும் மலர்ந்து, அத்தோட்டத்தை ஒரு நந்தவனமாகவே மாற்றியிருந்தன. பவளமல்லி மரமும், பன்னீர்ப்பூ மரமும் என்றும்போல் இன்றும் பூச்சொரியும் போட்டி நிகழ்த்திக் களைத்துப் போயிருந்தன. அவற்றோடு போட்டியிட விரும்பாத அந்திமந்தாரை மலர்கள், மாலைப் பொழுதைத் தமதாக்கிக் கொண்டு ஆரவாரமின்றி அமைதியாய் மலரத் துவங்கியிருந்தன.

வேலியில் படர்ந்து பூத்திருந்த வெண்சங்கு புஷ்பங்கள் தம் பங்குக்கு, வெளியிலிருந்து அழகு சேர்க்க, அவ்வீட்டைக் கடந்து செல்லும் எவரும் ஒரு கணம் தம்மை மறந்து அவ்வழகில் லயிப்பது உறுதி. அவ்வளவு பொரிய தோட்டத்தை, விஜயா ஒருத்தியே பராமாரித்தாள் என்றால், நம்பமுடியாதுதான். ஆயினும் உண்மை அதுவே!

சில வருடங்களுக்கு முன், தோட்டம் என்று சொல்வதற்கு அங்கு எதுவும் இல்லை. அவ்வளவு பொரிய வீட்டை நிர்வகிப்பதே விஜயாவுக்குப் பெரும்பாடாக இருந்ததால், சுற்றுப்புறம் கவனிப்பாரற்று, புற்கள் வளர்ந்து, புதர் மண்டிக் கிடந்தது. பொந்துகளும், வளைகளும் பெருகி…. பெருச்சாளிகளும், பாம்புகளும் உலவ….. மனிதர் நடமாடத் தகுதியற்றதாகிப் போனது. அவ்வாறிருந்த இடத்தைப் பண்படுத்தி, சீராக்கி, நடைபாதை அமைத்து, விதவிதமான பூஞ்செடிகளை நட்டு அழகுபடுத்தவும், புதுமணப் பெண்ணாகவே மாறிப்போனது, விஜயாவின் வீடு! இதற்கெல்லாம் காரணம் விஜயாவின் கணவர் தனபாலனே!

மகன்கள் இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒவ்வொருவராக வெளிநாடு செல்லவும், வீட்டின் வெறுமை விஜயாவைப் பாதிக்கத் துவங்கியது. வியாபாரம் தொடர்பாக, தனபாலனும் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய நிலையில், தனிமை அவளைப் பாடாய்ப் படுத்தியது. சாரிவர உண்ணாமல், உறங்காமல், வாழ்வில் எவ்விதப் பிடிப்புமின்றி விரக்தி அடைந்திருந்த விஜயா, மெல்ல மெல்ல மன அழுத்த நோய்க்கு ஆளாகிக் கொண்டிருந்தாள்.

தக்க சமயத்தில் கண்டுணர்ந்த தனபாலன், அவளைத் தகுந்த சிகிச்சைக்கு உட்படுத்த, நல்லவேளையாக, ஆரம்பத்திலேயே அவளை அந்நோயிலிருந்து மீட்டாயிற்று.

தனபாலனும் தன் அலுவல்களைக் கொஞ்ச காலம் ஒத்தி வைத்துவிட்டு, அவளுடனேயே இருந்து, அவளைத் தேற்றி, பழைய விஜயாவாக மாற்றினார். அப்படியே அவளுக்குத் தோட்டக்கலையிலும் ஆர்வத்தை உண்டாக்கி, அவ்வளவு பெரிய தோட்டத்தை அவளே நிர்வகிக்கவும் செய்தார். இன்று, விஜயாவுக்கு, மகன்களை விடவும் தோட்டமே முக்கியமாயிற்று. எங்கு மனநிம்மதி கிடைக்கிறதோ, அங்கு நாட்டம் ஏற்படுவதுதானே இயல்பு!

இயற்கையின் அழகில் சொக்கியிருந்தவளை, அழைப்பு மணிச் சத்தம் ஈர்த்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். மாலை மணி நான்கு!

இந்நேரத்தில் யார்? தனபாலனும் மும்பையில்! வருவதற்கு நான்கைந்து நாட்களாகும்!

சலவைக்காரனோ?

கதவு திறந்தவள் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனாள். சுட்டிப்பெண் ரேகா அங்கு நின்றிருந்தாள். விஜயாவின் தம்பி வாசு, காரிலிருந்து ஒரு பெட்டியை இறக்கிக் கொண்டிருந்தான்.

‘வாடி, என் ராஜாத்தி…! எப்படியிருக்கிறாய், என் செல்லம்?” என்று வாயார வரவேற்றவள், வாசுவைப் பார்த்து,

”வா…! வாசு! வா..! மல்லிகா நலம்தானே! அவளையும் அழைத்து வந்திருக்கலாமே!” என்றாள்.

வாசு தயங்கியவனாக, ”உனக்குதான் தொரியுமே, அக்கா. அவளுக்கு இது ஏழாவது மாதம்! அலைச்சல் வேண்டாமே என்றுதான்….” என்று இழுத்தான்.

”சரியப்பா, எனக்கு வருத்தமில்லை! விடு!” என்று கூறியவள், ரேகாவைப் பார்த்து, ”என்னம்மா, உனக்கு இப்போதுதான் தேர்வு முடிந்ததா?” என்றாள்.

”எனக்கு விடுமுறை விடப்பட்டு ஒரு வாரம் ஆகிறது, அத்தை! அப்பாதான் வேலை…வேலை…என்று சொல்லி இவ்வளவு நாட்களைக் கடத்திவிட்டார்!”

பொரிய மனுஷி போன்ற தோரணையோடு பேசியவளைப் பார்த்து விஜயாவுக்கு சிரிப்பு வந்தது.

பத்து வயது முடிந்துவிட்டதே! இன்னும் சின்னப் பெண்ணா என்ன! சென்ற முறை பார்த்ததற்கு சற்று வளர்ந்திருக்கிறாள்.

”அதையேன் கேட்கிறாய், அக்கா! ஒரு வாரமாக ஒரே தொல்லை. உனக்கு முன்கூட்டியே தகவலும் தெரிவிக்கக் கூடாதாம்! திடும்மென்று போய் நின்றால்தான் சுவாரசியமாக இருக்குமாம்! அவளையே கேள்!” வாசு அலுத்துக் கொண்டான்.

விஜயாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு வருடமும், ரேகாவின் விடுமுறை கழிவது இங்குதான். முன்பெல்லாம் ஹரியும், கிரியும் இருந்துகொண்டு அவளைச் சீண்டி வேடிக்கை பார்ப்பார்கள். இப்போது அவள் தனிக்காட்டு ராணி! இந்த ஒரு மாதம் முழுவதும் அவள் வைத்ததே சட்டம்!

பாவம்! தாயில்லாக் குழந்தை! நினைவே வேதனையைத் தந்தது.

ரேகா ஜாடையில் அவள் தாய் பத்மாவைப் போல்! குணமும் அப்படியே! பத்மாவுக்கு எல்லா உறவுகளும் வேண்டும். உறவற்ற வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்பாள்.

வாசுவின் வாழ்க்கையும் விஜயாவின் தோட்டத்தைப் போன்றதுதான். கரடுமுரடாக இருந்த அவன் வாழ்க்கையை நெறிப்படுத்திய பெருமை பத்மாவையே சாரும். முன்கோபத்திற்கு முதல் எடுத்துக்காட்டாய் விளங்கியவன் வாசு! ஆத்திரத்தால் அறிவிழந்த அவனுக்கு, அறிவுரை பகன்ற நண்பர்களும், உறவுகளும் எதிரிகளாகவே தோன்றினர். அவன்பால் உண்மையான அக்கறை கொண்டவர்களும் அவனால் காயப்பட்ட பின் அவன் விஷயத்தில் தலையிட விரும்பவில்லை.

காட்டு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த வாசுவின் வாழ்க்கையில் பத்மா இணைந்தபின், வெள்ளத்தின் வேகம் சற்றே மட்டுப்பட்டது. பத்மா தன் அன்பால் அணை கட்டினாள் என்றே சொல்ல வேண்டும். சுள்ளென்ற சூரியனாய் அவன் சுட்டபோதும், நிலவெனக் குளிர்ந்தாள். அவனுடைய தவறுகளைத் தயக்கமின்றிச் சுட்டிக் காட்டினாள்.

கொதித்திருந்த எரிமலையைக் குளிரச் செய்தாள். கொஞ்சும் மழலை ஒன்றை ஈன்று, அவனைக் குறைவற்ற வாழ்வு வாழச் செய்தாள்.

இல்லமும், உள்ளமும் நிறைந்திருந்த வேளையிலே, ஒருநாள் காய்ச்சல் என்று படுத்தவள் எழவே இல்லை. முழு நிலவென வலம் வந்தவள் மூளைக்காய்ச்சல் வந்து முழுதாய்த் தேய்ந்து போனாள்.

இருண்டிருந்த வாசுவின் வானிலே மறுபடியும் ஒளிவீச வந்தவள்தான் மல்லிகா! அவளுடன் பழகிய ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களைக் கொண்டு, விஜயாவால், மல்லிகாவின் குணநலங்களை அனுமானிக்க இயலவில்லை. ஆயினும், புகுந்த வீட்டில் தன் கணவனைத் தவிர, மற்ற உறவுகளுடன் எந்தப் பிடிப்பையும் ஏற்படுத்திக் கொள்ள அவள் விரும்பவில்லை என்பது மட்டும் புரிந்தது.

"அத்தை….அத்தை….!”

ரேகா உலுக்கிய பின்பே நிகழ்காலத்துக்கு வந்தாள் விஜயா.

”அத்தை! பூனைக்குட்டிகள் எங்கே?”

”பூனைக்குட்டிகளா? அவையெல்லாம் வளர்ந்து வெளியேறிவிட்டன. எப்போதாவதுதான் இங்கு வரும்”

”அச்சச்சோ! நான் அவற்றோடு விளையாடலாம் என்று ஆசையோடு வந்தேன்”

நிமிடத்தில் ரேகாவின் முகம் வாடிப்போனது. ரேகாவின் முகவாட்டத்தைக் காணச் சகியாத விஜயா, அதைப் போக்கும் விதமாக, உற்சாகத்துடன், ”ரேகாக்குட்டி! சென்ற முறை நீ நட்டுவைத்துச் சென்ற சென்ற மஞ்சள் ரோஜாச் செடியைப் போய்ப் பாரேன்! பூத்துக் குலுங்குகிறது!” என்றாள்.

கண்கள் பிரகாசிக்க, ஒரே தாவலில் தோட்டத்தை நோக்கி ஓடினாள் ரேகா.

”அத்தான் எங்கே? உள்ளூரிலா? வெளியூ ரிலா? ஹரியும், கிரியும் வாரந்தவறாமல் உன்னுடன் பேசுகிறார்களா? உன் உடல் நிலை எப்படியுள்ளது? சிகிச்சையைத் தொடர்கிறாயா?” போன்ற வாசுவின் சம்பிரதாயக் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டே, விஜயா பலகாரம் தயாரிக்கும் வேலையில் முனைந்தாள்.

ரேகா ஓரிடத்தில் நில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டே இருந்தாள்.

சற்று நேரத்தில், தேங்காய்ச் சட்னியுடன், சுடச்சுட வெங்காய பக்கோடா பாரிமாறப்பட்டது. காப்பி, பலகாரம் முடிந்தவுடன், வாசு கிளம்ப ஆயத்தமானான்.

நாளை போகலாம் என்ற விஜயாவின் வேண்டுகோளை மறுத்தவன், உதவிக்கு எவரும் இல்லாமல் மல்லிகா தனியாக இருக்கும் காரணத்தைச் சொல்லி விடைபெற்றான்.

”சரியப்பா! மல்லிகாவை நல்லவிதமாகக் கவனித்துக் கொள்! ரேகாவைப் பற்றிக் கவலைப்படாதே! பள்ளி திறக்குமுன், அவளை அங்குக் கொண்டுவந்து விட வேண்டியது என் பொறுப்பு!” என்றவள், தன் வீட்டுத் தோட்டத்தில் விளைந்திருந்த மாங்காய், தேங்காய் போன்றவற்றைக் காரில் ஏற்றினாள்.

********

ரேகா வந்தபிறகு, வீடே குதூகலம் நிறைந்ததாகிவிட்டது. ‘ஜல்…ஜல்…என்ற கொலுசுச் சத்தம் எங்கும் வியாபித்திருந்தது. தோட்டத்துப் பறவைகளுக்குப் போட்டியாக அவளும் பறந்து திரிந்து கொண்டிருந்தாள். அணிற்குஞ்சுகள் அவளுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தன. தினம் தினம் பூத்து, பறிப்பாரற்று உதிர்ந்து கிடந்த மல்லிகையும், முல்லையும் சரம் சரமாகத் தொடுக்கப்பட்டு, ரேகாவின் தோள்களைத் தழுவிக் கொண்டிருந்தன. நீண்ட நாட்களாய் முடங்கிப் போயிருந்த விஜயாவின் கைமணம், ரேகாவின் வரவால் புத்துயிர் பெற்றது.

மும்பையிலிருந்து திரும்பிய தனபாலன், வீட்டுக்குள் நுழைந்ததுமே கவனித்துவிட்டார். என்னதான் ரேகாவை மறைத்து வைத்து, திடும்மென்று தோன்றச் செய்து, அவரை சந்தோஷ அதிர்ச்சிக்குள்ளாக்க விஜயா திட்டமிட்டிருந்தாலும், எவரும் சொல்லாமலேயே தனபாலன் சாரியாக ஊகித்துவிட்டர்.

அறையெங்கும் ஏலக்காய் மணத்தது. பூச்சாடியில் அன்றலர்ந்த மலர்களின் அழகிய அணிவகுப்பு; தொலைக் காட்சியில் கேலிச் சித்திரம்! இவை யாவினும், விஜயாவின் முகத்தில் தோன்றியிருந்த மலர்ச்சி! யாவும் பறைசாற்றின, சுட்டிப் பெண்ணின் இருப்பை!

”ரேகாக்குட்டி! நீ வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. நீயாக வந்துவிடு! மாமா கண்டுபிடித்தால் என்ன நடக்கும் என்று தொரியுமில்லையா?”

மாமாவின் கிச்சுகிச்சு விளையாட்டை எண்ணி பயந்தவளாக, பந்து போல் எகிறிக் குதித்து அறையிலிருந்து ஓடி வந்து தனபாலனைக் கட்டிக்கொண்டாள், ரேகா.

”மாமா…….!”

”ரேகாக் குட்டி! கண்டுபிடித்துவிட்டேன், பார்த்தாயா? உன்னை ஒளித்து வைக்கத் தெரிந்த உன் அத்தைக்கு, ஏலக்காய் வாசனையை மறைக்கத் தொரியவில்லையே!”

”ஏலக்காய் வாசனை வைத்து ரேகாதான் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்ட மனைவியின் அப்பாவித்தனத்தை ரசித்தவராக, ”சர்க்கரை வியாதியின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கும் நமக்காக நிச்சயம் இந்த வீட்டில் இனிப்பு தயாராகாது. யாராவது விருந்தினர் வந்திருக்கக்கூடும்; அதுவும், கேலிச்சித்திரம் பார்க்கும் விருந்தினர் என்றால், சுட்டிப்பெண் ரேகாவைத் தவிர வேறு யார்? எப்படி என் புலனாய்வு?” என்றவரை வியந்து பாராட்டினர், ரேகாவும், விஜயாவும்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author