ஒரு மதிய உணவுக்குப் பின் சற்றே கண்ணயர்ந்த விஜயா, எழுந்து வந்தபோது, ரேகா, கன்னத்தில் கையூன்றியவளாய், எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். தான் அருகில் நின்று கொண்டிருப்பதையும் உணராதவள் போல், சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளைப் பார்த்து விஜயா கவலையுற்றாள்.
பத்து வயது சிறுமிக்கு என்ன கவலை இருக்கக்கூடும்? ஆழ்ந்த யோசனை என்றாலும் எதைப் பற்றியதாக இருக்கும்?
கலவரப்பட்ட மனத்துடன், ரேகாவின் தோள் பற்றினாள். சட்டென்று இயல்புநிலைக்கு வந்த ரேகா, அத்தையைப் பார்த்து புன்னகை பூத்தாள்.
விஜயா ஆதரவாக, ”ரேகா! உனக்கு ஏதாவது மனக்குறை இருக்கிறதா, அம்மா? எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லம்மா!” என்றாள்.
”எனக்கென்ன குறை, அத்தை? எனக்குத் தேவையான எல்லாவற்றையும் நீங்கள் பார்த்துப் பார்த்துச் செய்கிறீர்கள், என் அம்மாவைப் போல்……” ரேகாவின் கண்கள் கலங்கின.
”அசடு! அழாதே! நான் இங்கு கேட்கவில்லை! உன் வீட்டில்….உன் அப்பா, அம்மாவிடத்தில்… ஏதாவது குறை காண்கிறாயா?”
”அப்படி எதுவும் இல்லை, அத்தை! நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்!” என்ற ரேகா பேச்சை மாற்றும் விதத்தில், ”அங்கே பாருங்கள், அத்தை! நம் வீட்டுத் தாழ்வாரத்தில் சிட்டுக் குருவிகள் கூடு கட்டத் துவங்கியுள்ளன.” என்றாள்.
விஜயா, ரேகா காட்டிய திக்கில் பார்வையைச் செலுத்தியபோது, சிட்டுக் குருவிகள் இரண்டு, அலகில் வைக்கோல் போல் எதையோ வைத்துக் கொண்டு, அங்குமிங்கும் நோட்டமிட்டபடி, அங்கிருந்த இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பொ¢ய புகைப்படத்தின் பின்னே ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று வந்தன.
விஜயாவுக்குப் புரிந்து போனது. சுவரை விட்டுத் தள்ளி ஒரு கோணத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அந்தப் படத்தின் பின்புறத்தைthதான் அச்சிட்டுக்குருவிகள் தங்கள் கூட்டுக்கெனத் தேர்ந்தெடுத்துள்ளன.
ரேகா ரகசியம் பேசுவதுபோல், ”அத்தை! ஒரு குருவிக்கு கழுத்து கருப்பாக உள்ளது; மற்றொன்றிற்கு அவ்வாறில்லை, கவனித்தீர்களா?” என்றாள்.
விஜயாவும் அதே குரலில், ”ஆமாம்! கழுத்து கருப்பாயிருப்பது, ஆண்குருவி; மற்றது பெண்!” என்றாள்.
அன்றிலிருந்து ரேகாவின் வழக்கமான செயல்கள் யாவும் தேங்கிவிட்டன. தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஓய்வு கொடுத்தாகிவிட்டது. கதைப் புத்தகங்கள் சீண்டுவாரின்றிச் சிதறிக் கிடந்தன.
குருவிகளை நோட்டமிடுவதே ரேகாவின் முழுநேரத் தொழிலாயிற்று. கூடு கட்டி, முட்டையிட்டுக் குஞ்சுகளும் பொரித்தாகிவிட்டது. ஆவல் தாளாமல் ஒருநாள் அத்தைக்கும் தெரியாமல் குருவிகள் இல்லாத சமயம் ஒன்றில், ஒரு முக்காலியில் ஏறி அக்குஞ்சுகளைப் பார்த்தாள். மொத்தம் மூன்று குஞ்சுகள். கண் திறவாத, இறகு முளைக்காத அவற்றைப் பார்த்து ரேகாவுக்குப் பரிதாபமாயிருந்தது.
பறக்க இயலா அக்குஞ்சுகளுக்கு, தாயும் தந்தையும் மாறி மாறி உணவூட்டிக்கொண்டிருந்தன. விர்ர்..ரென்று வெளியில் பறந்த வேகத்திலேயே திரும்பி வந்தன, வாயில் ஒரு புழுவுடன்! எங்கிருந்துதான் கண்டெடுக்கின்றனவோ, அத்தனை விரைவில்! ஆச்சர்யத்தோடு மனம் லயித்துப் பார்த்துக் கொண்டிருந்த வேளை, அத்தை கொல்லைப் புறத்திலிருந்து ஆரவாரமாகக் குரல் கொடுத்தாள்.
”ரேகா…ரேகாம்மா….! வாசல் கதவையும், சன்னல்களையும் அடைத்து வையம்மா! குரங்குகள் வந்துவிட்டன!”
ரேகா திடுக்கிட்டாள். சென்ற வருடமும் குரங்குப் பட்டாளம் வந்திறங்கி, அத்தையின் அழகுத் தோட்டத்தையே பாழாக்கிவிட்டது. பூத்திருந்த அத்தனைப் பூக்களையும் கொய்துவிட்டன; கூடவே செடிகளையும் வேரோடு! கொய்யா, மாதுளைகளின் பூ, பிஞ்சையும் விட்டு வைக்கவில்லை. தென்னங் குரும்பைகளைத் திருகி எறிவதென்ன? மாமரக் கிளைகளை ஊஞ்சலாடி உடைப்பதென்ன? விரட்டச் சென்றால் பல்லைக் காட்டி பயமுறுத்துவதென்ன? அப்பப்பா! தோட்டத்தையே துவம்சமாக்கிவிட்டுத்தான் அகன்றன.
தோட்டத்தையே அந்தப் பாடு படுத்தினால், வீட்டுக்குள் புகுந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வர, ரேகா வேகமாகச் சென்று கதவு, சன்னல்களை மூடினாள். அதற்குள் ஏழெட்டுக் குரங்குகள் வாசற்புறம் வந்துவிட்டிருந்தன. தாழ்வாரத்தின் இரும்புக் கம்பிகளில் இருந்த இடைவெளி, குரங்குகள் நுழையப் போதுமானதாக இல்லாதபோதும், சில குட்டிகள் கம்பிகளில் ஏறித் தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.
குரங்குகளைப் பார்த்தக் குருவிகள் பதற்றமடைத்தன. சிறகுகளைப் படபடவென்று அடித்துக்கொண்டு, அங்குமிங்கும் பறந்தன. ‘கீச்…கீச்…’என்ற கதறலுடன் அவை நிலைகொள்ளாமல் தவிப்பதைப் பார்த்த ரேகாவுக்கு இரக்கம் ஊற்றெடுத்தது. குரங்குகளால் குருவிக் குஞ்சுகளுக்கு ஆபத்து நேராது என்பதை அக்குருவிகளுக்கு எப்படி உணர்த்துவது? ரேகாவும் தவித்தாள்.
அப்போதுதான் அந்த துர்சம்பவம் நிகழ்ந்தது. படபடத்து சிறகடித்தக் குருவியொன்று, கண்ணிமைக்கும் நேரத்தில், வீட்டின் உட்புறம் சர்ரென்று பறக்க, ரேகா நிறுத்த மறந்துவிட்டிருந்த மின்விசிறியின் இறக்கையில் அடிபட்டு, பொத்தென்று தரையில் விழுந்தது. இலவம்பஞ்சு போன்ற அதன் மெல்லிறகுகள் காற்றில் நாலாபுறமும் பறந்தலைந்தன.
ரேகா அதிர்ந்துபோய் ‘ஓ…..’வென ஓலமிட்டாள். கொல்லைப்புற கதவு, சன்னல்களைப் பாதுகாப்பாக மூடிவிட்டு வந்த விஜயாவை, ரேகாவின் கூக்குரல் கலவரமடையச் செய்தது. ஓடி வந்தவளுக்கு, ரேகா கூறுமுன்னரே நிலைமை புரிந்தது. துடிதுடித்துக் கொண்டிருந்த சிட்டுக்குருவியின் துடிப்பு, அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மெல்ல அடங்கியது.
ரேகா மருண்டவளாக, அத்தையின் கைகளை இறுக்கிக் கொண்டாள். அவளது பிஞ்சுக் கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. விஜயா, ரேகாவைத் தன்னுடன் அணைத்துக் கொண்டாள். அவள் அதிர்ந்தாலும், சின்னப் பெண்ணின் முன் காண்பிக்க விரும்பாமல், ”பயப்படாதே, அம்மா! நீ கொஞ்ச நேரம் அறையில் இரு! நான் பார்க்கிறேன்!” என்று கூறி, ரேகாவை அங்கிருந்து அனுப்பினாள்.
விஜயா, அடிபட்ட குருவியைக் கையிலெடுத்தாள். இறந்துவிட்டதென்று உறுதியாய்ப் புலப்பட்டது. கழுத்து வெட்டுப்பட்டு இரத்தம் வந்திருந்தது. அதன் உடலில் இருந்த இளஞ்சூடு, அவள் இதயத்தைப் பிசைந்தது. பெண்குருவி!
துளிர்த்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்தாள். குரங்குகளின் ஆர்ப்பாட்டம் ஓயும் வரைக் காத்திருந்து, கொல்லையில் சிறிய குழி தோண்டிப் புதைத்தாள்.
பாரமான மனத்துடன், தோட்டத்தை நோட்டமிட்டவள், அங்கே தனக்கு இரண்டு நாட்களுக்காவது வேலை இருக்கும் என்பதை உணர்ந்தாள். பெருமூச்சு விட்டபடி வீட்டுக்குள் வந்தாள், விஜயா.
ரேகா அழுதுகொண்டேயிருந்தாள். குரங்கைக் கண்டு பயந்து, வீட்டினுள் வந்ததால்தான் குருவிக்கு அடிபட்டது என்றும், இதில் ரேகாவின் தவறு எதுவுமில்லையென்றும் தனபாலனும், விஜயாவும் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லி, அவளைத் தேற்றினர்.
அன்றிரவு முழுவதும் ரேகா புலம்பிக் கொண்டேயிருந்தாள். ‘இனி அக்குருவிக்குஞ்சுகள் என்ன செய்யும்? அம்மாவை இழந்து எப்படி வாழும்? அப்பாக் குருவி அவற்றைக் கவனித்துக் கொள்ளுமா? அம்மாக் குருவி இறந்ததை அப்பாக் குருவி அறியுமா?’
தாயை இழந்து தவிக்கும் தன்னை, அக்குருவிக் குஞ்சுகளுடன் ஒப்பிட்டுக் கொண்டாள். திடீரென்று ஓர் சந்தேகம் தோன்றியது. இந்த அப்பாக் குருவியும், தன் அப்பாவைப் போலவே வேறோர் துணையைத் தேடிக்கொண்டால்….. தன்னை விடுதியில் சேர்த்துவிடுமாறு அப்பாவிடம் சொன்ன தன் புது அம்மாவைப் போலவே அந்த புது அம்மாக் குருவியும் பாராமுகமாக இருந்துவிட்டால்…… அக்குஞ்சுகளின் நிலை என்ன?
என்னென்னவோ சிந்தனைகள்! மன ஓட்டங்கள்! எல்லாம்….எல்லாம் தன்னால்தானே! இல்லையில்லை! தன்னால் இல்லை!
வேதனையில் மனம் விம்ம, உடல் நடுங்க, அருகில் படுத்திருந்த அத்தையை இறுக அணைத்துக் கொண்டாள்.
மறுநாள் விடிந்ததும், விடியாததுமாக, ‘கீச்,கீச்’ என்று சத்தம் வரவும், ரேகா ஓடிவந்து பார்த்தாள். ஆண்குருவி குஞ்சுகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தது. ஒரு நொடி ஓய்வில்லாமல், பறந்து பறந்து உணவு தேடிக் கொண்டு வந்து ஊட்டியது, இரு குருவிகள் செய்த வேலையை இன்று ஒற்றையாய்! மலைத்து நின்றாள் ரேகா.
அப்பாக் குருவி, தன் குஞ்சுகளைக் கைவிட்டுவிடவில்லை. வேறு துணை தேடிப் போகவில்லை. பெட்டை இனி வாராது என்று உணர்ந்துகொண்டது போல், தன் உடலில் பலம் உள்ளவரை போராடி வளர்க்க முனைந்துவிட்டது.
ரேகாவுக்கு, ஆனந்தத்தின் அடையாளமாகக் கன்னங்களில் நீர் கோடிட்டது. அத்தை அவள் தோள் பற்றி, ”ஏனம்மா, அழுகிறாய்? அப்பாக் குருவியைப் பார்! என்னமாய் விரைந்து விரைந்து உணவூட்டுகிறது? உன் கவலைகள் இப்போது தீர்ந்தனவா? ”என்றாள்.
”பாக்கியசாலிகள்!” குருவிக்கூட்டைப் பார்த்துக்கொண்டே சொன்னாள், ரேகா.
”என்னம்மா சொல்கிறாய்?” குழப்பத்தோடு வினவினாள், விஜயா.
”ப்ச்! ஒன்றுமில்லை, அத்தை!”
”சொல்லம்மா! என்னிடம் சொல்வதற்கென்ன?”
”அத்தை! உங்களைத் தவிர வேறு யாரிடம் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள இயலும்? என் தாயின் மறு உருவமல்லவா, நீங்கள்!” ரேகாவின் குரல் தழுதழுத்தது.
விஜயா நெகிழ்ந்து போனாள். ”பின் என்னம்மா? சொல்! ஏன் அழுகிறாய்? என் கண்ணே!”
”அக்குருவிக் குஞ்சுகளைப் பார்த்தால், எனக்குப் பொறாமையாக உள்ளது, அத்தை! அவற்றுள் ஒன்றாக நானும் இருந்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது,” என்றவள் விஜயாவின் மடியில் முகம் புதைத்து விசும்பலானாள்.
தனபாலனும், விஜயாவும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்தப் பார்வைகளில் பொதிந்திருந்த அர்த்தத்தை இருவருமே படித்தனர்.
இந்தக் குழந்தையின் மனத்தில் இப்படி ஒரு ஏக்கம் வரக் காரணம் என்ன? தந்தையின் புறக்கணிப்பா? மாற்றாந்தாயின் அலட்சியப் போக்கா? எதுவாயிருப்பினும், அதைப்போக்கி, இச்சிறு பெண்ணின் உள்ளத்தில் மறுபடியும் உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் கொணர்வதே தன் தலையாய வேலை என்று உறுதி பூண்டாள், விஜயா.
பாழ்பட்டுக் கிடந்த நிலத்தைப் பண்படுத்தி, பார்ப்போர் மெச்சும் பூங்காவனமாக்கத் தன்னால் முடியும் என்றால்……குரங்குப் பட்டாளம் கும்மாளமிட்டுச் சீரழித்தத் தோட்டத்தை மீண்டும் செம்மையுறச் செய்ய தன்னால் முடியும் என்றால்….
மனவேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் மருமகளின் வாழ்வை வளமாக்க இயலாதா, என்ன! நிச்சயம் முடியும்! முயன்றால் முடியாதது உண்டோ?
இச்சிறுமியின் உள்ளமும் ஓர் அழகிய பூந்தோட்டம்தானே! அதை கண்ணாகப் பேண வேண்டியது தன் கடமை அல்லவா?
விஜயா, தன் மடியில் புதைந்திருந்த ரேகாவின் முகத்தை நிமிர்த்தினாள். அவள் கண்ணீரைத் துடைத்து, அவளிரு கன்னங்களிலும் இதமாய் முத்தமிட்டாள். பின் அவளை நோக்கி,
”எங்களுடனேயே இருந்துவிடுகிறாயா? நாங்கள் படிக்க வைக்கிறோம்!” என்றாள்.
ரேகா பிரமிப்புடன் கண்களை அகல விரித்து, ”உண்மையாகவா சொல்கிறீர்கள், அத்தை? ஆனால்…அப்பா…” என்று தயங்கினாள்.
தனபாலன் குறுக்கிட்டு, ”அப்பாவிடம் நான் பேசுகிறேன், உனக்குச் சம்மதமா?” என்றார்.
ரேகா சந்தோஷத்தின் எல்லையைத் தொட்டுவிட்டிருந்தாள். ”நான் மிகவும் பாக்கியசாலி, மாமா!”
”அந்தக் குருவிக் குஞ்சுகளை விடவா?” விஜயா கிண்டலடித்தாள்.
”ஆமாம், அத்தை! எனக்கு வாய்த்ததுபோல் அருமையான மாமா, அத்தைக் குருவிகள் அவற்றிற்கு வாய்க்கவில்லையே!” என்று கூறிச் சிரித்தாள் ரேகா.
“
தாயில்லாக் குழந்தையின் மனவோட்டத்தையும் வாட்டத்தையும் மனதைத் தொடுமாறு பதிய வைத்துள்ளார் ஆசிரியர். நன்று.
காக்கை குருவி எங்கள் ஜாதி-என்று பாரதி பாடியதுபோல் மனித நேயத்தை அழகாக வெளிப்படுத்தும் கதை!
ரொம்ப அழகான கதை!