வீட்டுக்கு வந்தபோது பானு இல்லை. போய் விட்டிருந்தாள். அப்பாவையும் காணோம். ஒரு மாதப் பிரச்னைக்குத் தீர்வு வந்து விட்டதா?
புவனா கொண்டுவந்த காப்பியை மேஜை மேல் வைக்கச் சொன்னேன்.
எப்படி சமாதானப்படுத்தப் போறார்? ஒரு மாதமாய்த் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. வேதாளம் முருங்கை மரத்திலிருந்து அத்தனை சுலபமாய் இறங்கி விட்டதா?
"எப்படி?" என்றேன் திகைப்புடன்.
"எது… எப்படி?"
"அவன் எதுவும் ஃபோன் செய்தானா.. கொண்டுவந்து விடச் சொல்லி?"
"இல்லை"
"பின்னே?" என்றேன் மீண்டும் குழப்பமாய்.
"போன வாரம் நீங்க போய்ப் பேசினதிலே மனசு மாறிட்டாரோ… என்னவோ?"
அவனாவது… மாறுகிறதாவது. மானிட இனத்தில் சேர்த்தியே இல்லை. கண்ணில் ஒருவித வெறி மின்னுகிற சுயநல மிருகம். எதிராளியை எந்த வகையில் மடக்கிவிடலாம் என்று ஊறிய முரடு.
"நம்ப முடியலை" என்றேன் அதிருப்தியாய்.
அப்பா எட்டு மணிக்குத் திரும்பி வந்தார். தளர்ந்திருந்தார். சாப்பாடு வேண்டாம் என்று மறுத்து விட்டு ஒரு டம்ளர் மோர் வாங்கிக் குடித்தார்.
‘கேள்’ என்று சைகை செய்தேன், புவனாவைப் பார்த்து. "பானு வீட்டுல… எதாச்சும் சொன்னாங்களா?" என்றாள்.
"இல்லம்மா… மாப்பிள்ளை நல்லாப் பேசினார். இனிமேல் இப்படி நடக்காமப் பார்த்துக்கிறேன்னார்…"
அதிசயம்தான் கல்லுக்குள் ஈரம்!
"நான் படுத்துக்கிறேம்மா. ரொம்ப அசதியா இருக்கு."
நள்ளிரவில் அப்பாவின் முனகல் எனக்குக் கேட்டது தற்செயலாய் எழுந்து ஓடினேன்.
"என்னப்பா?"
"நோவுதுடா. தண்ணி கொண்டு வா."
தண்ணீர் பாதி மார்பில் வழிந்தது. "முடியலைடா" என்றார் குழறலாய்.
பக்கத்து வீட்டுக்காரர் காரில் அழைத்து வந்து நர்சிங்ஹோமில் விட்டார்.
"சரியான நேரத்துல கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க” என்கிறார் 24 மணி நேர கிளினிக் டாக்டர்.
பக்கத்து வீட்டுக்காரரிடம் வீட்டுக்குத் தகவல் சொல்லியனுப்பிவிட்டு அப்பாவின் அருகில் அமர்ந்திருந்தேன்.
உலர்ந்த கைகள், நெஞ்சுக்கூடு என்னைச் சிறுவயதில் எத்தனை சுமந்ததோ? கண்களில் ஒளி மங்கிக் கழன்று போகிற காலத்தின் எச்சரிக்கை மணி உணர்ந்து பயம் அப்பிவிட்டது.
சட்டென்று தனிமை உணர்ந்த அப்பா. அம்மா இல்லாத அப்பா.
நானும் பானுவும்தான் இனி. தான் வாழ்ந்த காலத்தின் சாட்சிகளாய் அதிலும் பானுவின் வாழ்கை அவள் கணவனால் மிரட்டப்பட்டு ஒரு கேள்விக்குறி போல.
"என்னடா பண்றது?" என்றார், போன மாதத்தில் பானு வீட்டுக்கு வந்தபோதே. குரல் நடுங்கியது.
"நான் பேசிப் பார்க்கறேம்பா."
"பார்த்துடா. வாயை விட்டுடாதே"
அப்பா எச்சரித்திராவிடில் என் நாக்கும் கட்டவிழ்ந்திருக்கும். இன்று எதோ அதிர்வு தாக்கிப் படுத்திருப்பவரிடம் நான் அன்றே தலை குனிந்து நின்றிருப்பேன்.
சிரமப்பட்டு என்னை அடக்கிக்கொண்டேன். வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக்கொண்டு போன ரூபாய் பத்தாயிரத்தை பானுவின் கணவனிடம் நீட்டினேன்.
"உங்களுக்கு எதோ பிரச்னைன்னா பணம் தானே… இதோ என்னால முடிந்தது. திருப்பித் தரணும்னு கட்டாயம் இல்லை."
"அவ செல்லமாக வளர்ந்துட்டா. என் பிரச்னை புரியறதே இல்லை."
"சொல்லிப் புரிய வைக்கலாம்."
"பொம்பளை சுகம் வேணும்னா ஆம்பளைக்கு ஆயிரம் வழி இருக்கு… பொண்டாட்டியா எப்படி இருக்கணும்… சொல்லி வளர்ந்திருக்கணும்.
மறுபடி மறுபடி சீண்டினான். ஒரு கட்டத்தில் எழுந்து விட்டேன்.
"உங்க இரண்டு பேருக்கும் நடுவிலே வேற யாரும் தேவையில்லை. அது நானா… அல்லது எங்கப்பாவா… யாரா இருந்தாலும் சரி… நீங்க பேசுங்க…"
வந்துவிட்டேன். ஒரு வாரம் கழித்து அப்பா போனதன் விளைவு… இன்றிரவு ஆஸ்பத்திரியில். என்ன சொன்னானோ?
காலையில் அப்பா கண் விழித்தபோது புன்னகை புரிந்தார்.
"என்னடா. .. பயந்துட்டியா?"
கையைப் பற்றி அழுத்தினேன்.
காபி வந்தது. கிளினிக் வாசலில் பிளாஸ்க்குகளில் கொண்டு வந்து சப்ளை செய்தார் ஒருவர். ஒவ்வொரு அறையாக விசாரித்து ஒரு பையன் கொண்டு வந்தான்.
இரவு டியூட்டி டாக்டர் வந்தார். "யூ ஆர் ஆல்ரைட்… "
"எப்ப வீட்டுக்குப் போகலாம்? "
"ஒருநாள் இருங்களேன்"
டாக்டர் போனதும் புவனாவிற்கு ஃபோன் செய்துவிட்டு வந்தேன்.
"நீ வேணா வீட்டுக்குப் போயிட்டு வா."
"இல்லப்பா! எனக்கும் உங்களுக்கும் டிரஸ் கொண்டு வரச் சொல்லிட்டேன்"
"பணம் கொடுத்தியா?"
திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன்.
"ஏன் என்கிட்டே சொல்லலை?"
அவரிடம் இதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று தீர்மானித்திருந்தேன். அவரே துருவுகிறார்.
"விடுங்கப்பா.. அவ நல்லா இருந்தா சரி"
"என்னவோ உளர்றான்டா… உங்க பொண்ணு எதுக்கும் உபயோகமில்லை, தத்தி… மக்குன்னு…"
"விடுங்கப்பா!"
"பயப்படாதே. இனிமேல எனக்கு எதுவும் ஆகாது. பேசாம விட்டாத்தான் மனசு பாரமா நிற்கும்.." சிரித்தார்.
"அவன் முரடன் அப்பா"
"முட்டாளாவும் இருக்கான்… என்ன புரிஞ்சுக்கிட்டானோ… வாழ்க்கையைப் பத்தி? ஆனா தவறாப் புரிஞ்சுக்கிட்டுருக்கான். அது தெரியுது."
"எப்படிப்பா, அவனை சமாதானம் செய்தீங்க?"
கேட்கக் கூடாது என்ற புதைத்த கேள்வி விடுபட்டு விட்டது.
"காலிலே விழுந்தேன்டா…"
"அப்பா!" ஒரு நிமிடம் உடல் நடுங்கியது. என் முயற்ச்சியில் கிடடாத வெற்றி. ஒரு பெரியவரைக் கால்களில் விழ வைத்து குரூர திருப்தியில் சமாதானம் அடைந்த மிருகம்.
"எனக்குத் தவறாத் தெரியலைடா! கடவுளுக்கு நமஸ்காரம் செய்யற மாதிரி. அந்த நிமிஷம் சக்தியோட நின்ன சாத்தானுக்கும் நமஸ்காரம்… இப்ப பாரு… தோல்வி இல்லாம… பானுவை அவன் கூடச் சேர்த்து வச்சிட்டேன்… அவன் ஜெயிச்சதா அவனும் நினைச்சுக்கட்டும்.."
"அப்பா!" என்னுள் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. அவனை… அவனை… ரெளத்திரம் எழும்பி என்னை அலைக்கழிக்க முற்பட்டது.
"பானுவுக்கும் அதிர்ச்சி கொடுத்துட்டேன். சில நேரங்களிலே சொல்லாமல் புரிய வைக்கிறோம்.. வீம்பா நிக்காம.. விட்டுக் கொடுக்கிறதை அவளும் கத்துக்கட்டும்…"
"இனிமேலே… அவங்க வீட்டுக்கு நீங்க போக வேணாம்" என்றேன் வேகமாய்.
"எதையும் தீர்மானிக்காதே…" என்றார் நிதானமாய்.
எனக்குத்தான் மனசு சமாதானம் ஆகவில்லை. உள்ளூர் முனகிக் கொண்டிருந்தேன். புவனா வந்துவிட்டுப் போனாள். பானு வீட்டுக்கும் தகவல் சொல்லிவிட்டாளாம்.
பகல் இரண்டு மணி இருக்கும். பானு தன் கணவனுடன் வந்தால், ஹார்லிக்ஸ், சாத்துக்குடியுடன்.
"அப்பா!" என்றாள் அழுகையாய்.
"ஒன்னும் இல்லைம்மா" என்கிறார் தெம்பாக.
தயங்கி நின்றவன் மெல்ல அவர் முன் வந்தான்.
"எப்படி… திடீர்னு?"
"ப்ச்" என்றார்.
"கேட்டதும் சங்கடமாப் போச்சு… நேரே வந்து உடனே பார்க்கணும்னு…"
நான் அவன் முகத்தையே பார்க்கவில்லை, பார்க்கப் பிடிக்கவில்லை.
நல்லா ரெஸ்ட்ல இருங்க, பானுவை வேணா உதவிக்கு விடட்டுமா?"
"வேணாம். நாளைக்கே நான் வீட்டுக்குப் போயிடுவேன். எனக்கு ஒன்னும் இல்லை" என்றார் அப்பா.
"அப்ப… நாங்க கிளம்பறோம். ரொம்ப பேச்சு கொடுக்க வேணாம்னு.."
அவனுக்கும் என்னைப் பார்க்கச் சங்கடம். உணர்ந்திருக்க வேண்டும்.
பானு என் அருகில் வந்தாள். அவன் வெளியே போயிட்டான்."என்னை மன்னிச்சிடு" என்றாள் அழுகையாய்.
"ச்சீ.. பைத்தியம்… உளறாதே.."
போய்விட்டாள். எட்டிப் பார்த்ததில் ஆஸ்பத்திரி வாசல் தெரிந்தது. பைக்கில் இருவரும் போவது தெரிந்தது.
அப்பா கண்மூடிப் படுத்திருந்தார். உள்ளே நுழைந்து தொந்தரவு செய்ய மனமில்லை. வராந்தாவில் கிடந்த இருக்கையில் அமர்ந்தேன்.
பானு வாழ்க்கையைப் புரிந்து கொள்வது கிடக்கட்டும். எனக்கு நிமிடம் மனசுக்குள் அலையடிக்கத் தொடங்கிற்று.