புராணத் துளிகள் (5)

வாஹனம்!

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாஹனம் உண்டு. யார் யாருக்கு எது வாஹனம் என்பதைப் பல புராணங்கள் தெரிவிக்கின்றன.

விஷ்ணு பகவானின் வாஹனம் கருடன் – மத்ஸ்ய புராணம்.
சிவனின் வாஹனம் நந்தி (காளை) – சிவ புராணம்.
இந்திரனின் வாஹனம் ஐராவதம் (யானை) – நாரதீய புராணம், வாயு புராணம்.
சூரியனின் வாஹனம் ஏழு குதிரைகள் பூட்டிய தேர் – மத்ஸ்ய புராணம்.
துர்க்கையின் வாஹனம் சிம்மம் – சிவ புராணம்.
யமராஜனின் வாஹனம் எருமை – நாரதீய புராணம், பால ராமாயணம்.
சரஸ்வதியின் வாஹனம் அன்னப் பறவை – மார்க்கண்டேய புராணம்.
லக்ஷ்மியின் வாஹனமும் அன்னப் பறவை – உலூக தந்த்ரம்.
முருகனின் வாஹனம் மயில்.
கணேசனின் வாஹனம் மூஞ்சுறு.
கங்கையின் வாஹனம் மகர மீன்.

தேவியின் கண்கள்

தராந்தோளித தீர்காக்ஷீ

லலிதா சஹஸ்ரநாமத்தில் 601ஆவது நாமமாக வருவது இது.
இதன் பொருள்: கொஞ்சம் சஞ்சலமானதும், (காது வரையில்) நீண்டதுமான கண்களை உடையவள்.

-பிரம்மாண்ட புராணத்தில் இடம்பெறும் லலிதா சஹஸ்ர நாமம் – 601ஆவது நாமம்.

இதன் பொருளை விவரிக்கையில் கூறப்படுவது:

தரமென்றால் பயம் என்று பொருள். பயத்தைச் சஞ்சலம் அடையச் செய்யும், அதாவது பயத்தைப் போக்கும் நீண்ட கண்கள் என்று இதற்கு அர்த்தம் சொல்லலாம். அதாவது, தேவியின் திருக் கடாட்சம் பட்டாலேயே போதும்; பயமானது நாசமடையும் என்பது தாத்பரியம். அம்பாளுடைய நேத்ரங்களின் அழகைப் பற்றி ‘சௌந்தர்ய லஹரி’யில் பதினோரு ஸ்லோகங்களில் ஆதி சங்கரர், அழகாக வர்ணித்திருக்கிறார்.

பாரத தேசத்தின் பெருமை

பாரத தேசத்தின் பெருமையை நாராயணர் கூறுவதாக தேவி பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் 11ஆவது அத்தியாயத்தில் வருவது இப்பகுதி.

"இந்த பாரதவர்ஷத்திலிருக்கும் மனிதர்கள் என்ன புண்ணியம் செய்ததனாலோ விஷ்ணு பகவான் தானே அவர்களுக்குப் பிரசன்னராய் தரிசனம் கொடுக்கின்றார்! இப்புண்ணிய சீலர்களைப் போல் விஷ்ணு பகவானுடைய சேவைக்கு உபயோகமான மானிட சரீரத்தையாவது அந்த பாரத வர்ஷத்தில் எடுப்பதற்கு ஆசைப்படுகிறேன். எது யாகம் முதலியவற்றால் சாதிப்பதற்கு அருமையாக இருக்கின்றதோ, அது அந்த பகவானை உச்சரிப்பதனாலேயே உண்டாகின்றது. அவரது பாதங்களை உச்சரித்தால் யாருக்குத்தான் பாவ நாசம் உண்டாவதில்லை! ஏனைய தேசங்களில் கற்பகால பரியந்தம் ஆயுள் அடைந்திருப்பதைக் காட்டிலும் இந்த பாரத வருஷத்தில் க்ஷண காலம் ஜீவதசையோடு இருப்பது மிக உயர்ந்தது."

-நாராயணர் நாரத முனிவருக்கு உரைத்தது – தேவி பாகவதம் எட்டாம் ஸ்கந்தம், 11ஆவது அத்தியாயம்.

தர்ப்பம் ஏன் புனிதமானது?

தர்ப்பத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறோம். அது ஏன் என்பதை ஸ்ரீமத் பாகவதம் விளக்குகிறது.

மன்னனாகிய மனுவின் பட்டணம் பர்ஹிஷ்மதி என்ற பெயர் பூண்டு புகழ் பெற்றது. அந்நகரம் அனைத்து ஸம்பத்துகளினாலும் நிறைந்திருக்கும். யஜ்ஞ ஸ்வரூபியாகிய ஆதி வராஹ பகவான் தன் சரீரத்தை உதறும் காலத்தில் அந்தச் சரீரத்திலுள்ள ரோமங்கள் எந்த இடத்தில் உதிர்ந்தனவோ அந்த இடத்தில் இந்த பர்ஹிஷ்மதி நகரம் உருவானது. அங்ஙனம் உதிர்ந்த ரோமங்களே பச்சை நிறமுடைய தர்ப்பங்களாகவும் நாணல்களாகவும் விளைந்தன. அந்த தர்ப்பங்களாலும் நாணல்களாலும் யஜ்ஞங்களுக்கு விரோதிகளான ராக்ஷஸர்களை அழித்து ரிஷிகள் யஜ்ஞங்களால் பகவானை ஆராதித்தார்கள். ஆகவேதான் அவை பகவானுடைய ஆராதனத்திற்கு உபயோகப்படுகின்றன. மஹானுபாவனாகிய அந்த மனு சக்கரவர்த்தி, பாதாளத்தில் மூழ்கிக் கிடந்த பூமியை இந்த ஆதி வராஹன் மேலே எடுத்து அதைத் தன் சக்தியால் ஜலத்தின் மீது நிலை நிற்கச் செய்த காரணத்தினால் அந்த உதவியை நினைத்து பர்ஹிஸ் என்று கூறப்படுகின்ற தர்ப்பங்களையும் நாணல்களையும் பரப்பி அந்த யஜ்ஞ புருஷனை யாகங்களால் ஆராதித்தான். ஆகவே, அந்த நகரம் பர்ஹிஷ்மதி என்று பெயர் பெற்றது.

-ஸ்ரீ மைத்ரேயர் விதுரனிடம் கூறியது,
-ஸ்ரீமத் பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம் 22ஆம் அத்தியாயம்.

வைரத்தைப் பரிசோதித்த பின்னரே அணிய வேண்டும்!

வளத்தை விரும்பும் மன்னன் வைரத்தைச் சேகரிப்பதையோ அணிவதையோ நன்கு பரிசோதித்த பின்னரே செய்ய வேண்டும். அதைப் பற்றிய தொழில்நுட்ப அறிவு உள்ளவரும் அதில் நன்கு பரிச்சயம் உள்ளவரும் ஆகிய ஒருவரே அதன் விலை மற்றும் தரம் பற்றி அறிந்தவராக இருக்கும் தகுதி வாய்ந்தவர் ஆவர்.

நிபுணர்கள் வைரத்தை மிகவும் செல்வாக்குப் படைத்தது என்று கூறுகின்றனர். ஆகவே, நமது விவரங்களும் வைரம் பற்றிய விவரமான விளக்கத்துடன் ஆரம்பிக்கப்படுகின்றன.

-கருட புராணம் 68ஆம் அத்தியாயம்.

வைரத்தை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உரைக்கும் அத்தியாயத்தில் வருவது இது. இதைத் தொடர்ந்து வைரம் கிடைக்கும் இடங்கள், அதன் குணாதிசயங்கள், தரத்தைச் சோதிக்கும் முறைகள் விளக்கப்படுகின்றன.

–தொடரும்…

About The Author