மகாத்மா காந்தியைக் கொன்றது கோட்சே என்பது தெரியும். கோட்சேயுடன் இன்னொருவரும் தூக்கில் இடப்பட்டார் என்பதும் அவர் பெயர் என்ன என்பதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?…
காந்தியடிகளின் கொலை பற்றி இப்படி அரிய தகவல்களைக் கொண்ட மகாத்மா காந்தி கொலை வழக்கு என்னும் ஒரு நூலை அண்மையில் வெளியிட்டிருக்கிறது, கிழக்கு பதிப்பகம். எழுத்தாளர் என்.சொக்கன் அவர்கள் எழுதியுள்ள இந்தப் புத்தகத்திலிருந்து சில தகவல்கள் :
நிற்போர்: சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே, மதன்லால் பகுவா, திகாம்பர் பாட்கே (காவல்துறைத் தரப்பாக மாறியவர்).
அமர்ந்திருப்போர்: நாராயண ஆப்தே, சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணு கார்கரே.
* ஜனவரி 30, 1948 – அன்று காந்தியடிகள் கொல்லப்படுவதற்கு இருபது நாட்களுக்கு முன்பே ஒருமுறை கோட்சே குழு காந்தியை அதே இடத்தில் கொல்ல முயன்றுள்ளது. கையெறி குண்டுகளை வீசி விட்டுத் தப்பி ஓடும்போது மதன்லால் என்ற நபர் மட்டும் மாட்டிக்கொள்ள, மற்றவர்கள் தப்பி விட்டனர். போலீஸ் மதன்லாலிடம் விசாரித்தபோது, அவர் நான்கைந்து பேர் சேர்ந்து காந்தியைக் கொல்லத் திட்டம் தீட்டியதைச் சொல்லி விட்டார். ஆனால் டில்லி, மும்பை காவல்துறையினர், தீவிரமாக இயங்கிக் குற்றவாளிகளை பிடிக்கத் தவறி விட்டனர்.
* மகாத்மாவின் உயிருக்கு ஆபத்து என்று அறிந்து அவருக்குப் பாதுகாப்புத் தரக் காவல்துறையினர் முன்வந்தபொழுது காந்தியடிகள் அதை ஏற்கவில்லை. சரியான பாதுகாப்பு இருந்திருந்தால் அவர் கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்றும், அதனால் காந்தியைக் கொன்றது காந்தியேதான் என்றும் ஒரு கருத்து உண்டு!
* பாகிஸ்தான் பிரிந்தபோது அவர்களுக்குத் தன்னிடம் இருந்த பணத்தில் 75 கோடி தருவதாக இந்தியா ஒப்புக் கொண்டது. அதன்படி முதல் தவணையாக 20 கோடியைத் தந்தாலும், மீதம் 55 கோடியை இந்தியா தரவில்லை. காரணம், அதற்குள் பாகிஸ்தானால் காஷ்மீர் ஆக்கிரமிப்புப் பிரச்சினை வந்து விட்டது. ஆனால் இது தெரிந்து காந்தி கோபிக்கவே, இந்திய அரசு அந்தப் பணத்தைப் பாகிஸ்தானுக்குத் தந்து விட்டது. ஏற்கெனவே, காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவாக உள்ளார் என்று எண்ணியிருந்த கோட்சே குழுவுக்கு இது பெரும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது.
* கோட்சே முதலில் காந்தியின் கொள்கைகளை விரும்பிய மனிதனாக இருந்தார் என்று அறிய ஆச்சரியமாக உள்ளது. பின்னர், இந்துக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு வீர சாவர்க்கரின் அடியொற்றி ஆகி விட்டார் கோட்சே.
* நாராயண ஆப்தே, விஷ்ணு கார்கரே ஆகிய இருவரும் கோட்சே காந்தியைச் சுட்டபோது உடன் இருந்தவர்கள். இதில் நாராயண ஆப்தேவுக்குக் கோட்சேயுடன் சேர்த்துத் தூக்கு கிடைத்தது. கார்கரே முதலான மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
* சுதந்திரத்துக்கு முன்பும் ஒருமுறை கோட்சே காந்தியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றுள்ளானர். கூட்டத்தில் இது நிகழ, பலரும் சேர்ந்து காப்பாற்றி விட்டனர். காந்தி அப்போது "அந்த மனிதரை எதுவும் செய்யாதீர்கள்! விட்டு விடுங்கள்! அவரை என்னுடன் எட்டு நாட்கள் வந்து தங்கச் சொல்லுங்கள்! அவரது கருத்தை நான் அறிய விரும்புகிறேன்" என்றார். ஆனால், (அது ஆபத்து என்பதால்) மக்கள் யாரும் அதை விரும்பவில்லை.
* காந்தியைக் கொல்ல வாங்கிய துப்பாக்கி பற்றிப் பெரிய கதையே விரிகிறது. முதலில் ஒரு துப்பாக்கி வாங்கி, அது திருப்தி இன்றி, அப்புறம் இத்தாலியத் துப்பாக்கி ஒன்றை ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கிக் காந்தியைச் சுட்டுள்ளனர்.
* கொலை செய்வதற்கு ஒரு நாளுக்கு முன், கோட்சே தன்னுடன் இருந்த கார்கரே, ஆப்தே ஆகிய இருவர் பெயருக்கும் ஒரு கடிதம் எழுதி அவர்கள் ஊரான மகாராஷ்டிராவுக்கு அனுப்பியிருக்கிறார். காரணம், குற்றம் நிகழ்ந்தபொழுது அவர்கள் தன்னுடன் இல்லை; ஊரில் இருந்தார்கள் என்று நிரூபிக்க! வழக்கு நடந்தபோதும் "நான்தான் கொன்றேன்; அவர்கள் உடன் இல்லை" என்று கோட்சே வாதிட்டிருக்கிறார். ஆனால் காவல்துறை, அவர்களும் உடன் இருந்ததை ஆதாரத்துடன் நிரூபித்தது.
* முதலில், பர்தா அணிந்து போய்க் கொல்லலாம் என்று புதுப் பர்தா ஒன்றை வாங்கி முயன்றுள்ளனர். பின், அது சரியாக இல்லை என்று கோட்சே கூறவே ராணுவ வீரன் போன்ற உடை அணிந்து சென்றுள்ளனர். கொல்லும் முன், கோட்சே உப்புக் கடலை சாப்பிட ஆசைப்பட்டிருக்கிறார். பல இடங்களில் கிடைக்காமல் கடைசியாய் எப்படியோ அவன் விருப்பத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளனர் உடன் இருந்தவர்கள்.
* குறிப்பிட்ட தினத்தன்று, காந்தியைச் சுடக் கோட்சே காத்திருக்க, காந்தி உள்துறை அமைச்சர் பட்டேலுடன் தீவிர ஆலோசனையில் இருந்துள்ளார். பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அப்போது ஏதோ கருத்து வேறுபாடு. அது பற்றிக் காந்தியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் பட்டேல். பட்டேலுடன் பேசியதில் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரமாகி விட்டது என்று அவசரமாகக் குறுக்கு வழியில் காந்தி சென்றுள்ளார். காந்தியை மேடையில் வைத்துச் சுடத்தான் கோட்சே நினைத்திருக்கிறான். ஆனால், காந்தி வழக்கமாய்ச் செல்லும் வழியை விடுத்துக் கோட்சே நின்ற வழியே செல்ல, அங்கேயே அவரைச் சுட்டார் கோட்சே. மூன்று குண்டுகள் மகாத்மா மார்பைத் துளைக்க, அங்கேயே இறந்து விட்டார். சுட்ட கோட்சே, மக்கள் தாக்கி விடுவார்களோ என்று அஞ்சிக் கைகளைத் தூக்கியவாறு, "போலிஸ்!… போலிஸ்!…" என்று கத்தியிருக்கிறார்.
* அண்ணல் இறந்தது இந்து – முஸ்லீம் பிரச்சினை பற்றி எரிந்து கொண்டிருந்த நேரமாதலால் வானொலியில் திரும்பத் திரும்பக் "காந்தியை ஓர் இந்து சுட்டுக் கொன்றார்" என்று அறிவித்துள்ளனர்.
* வழக்கு 1948 மே மாதம் தொடங்கி, தொடர்ந்து நடந்து 7 மாதங்களில் (1948 டிசம்பர் 30-இல்) முதல் தீர்ப்பு வந்தது. அதன் பின், மேல்முறையீடு செய்யப்பட்டு அது சிம்லாவில் நடந்தது. அங்கு பிப்ரவரி 10, 1949-இல் இறுதித் தீர்ப்பு வெளிவந்தது. கோட்சேவும் ஆப்தேவும் நவம்பர் 15, 1949இல் தூக்கில் போடப்பட்டனர். ஆனால், அவர்களைத் தூக்கில் போடுவதைக் காந்தி குடும்பத்தினரே எதிர்த்தனர்.
* காந்தியைக் கொன்ற காரணம் என்று கோட்சே நீதிமன்றத்தில் ஐந்து மணி நேரம் பேசியது "May it please your honour!" என்னும் புத்தகமாக வெளிவந்துள்ளது. கோர்ட்டில் அன்று அவன் பேச்சைக் கேட்டவர்கள் கண்ணீர் விட்டு அழுததாகவும், கோட்சேயை விடுதலை செய்ய வேண்டும் என்று பலரும் கூறுமளவுக்கு அந்தப் பேச்சு இருந்ததாகவும் நீதிபதியே தீர்ப்பில் கூறியுள்ளார்.
நன்றி: திரு.மோகன்குமார், வல்லமை வலைத்தளத்தில் எழுதிய நூல் விமர்சனம்.
“
இதுவரை அறியாத சில தகவல்கள் கிடைத்தது, நன்றி..