புரட்டியதும் திரட்டியதும்

கோபம்

புத்தரிடம் ஒருவர், "கோபத்தை எதனுடன் ஒப்பிடலாம்?" என்று கேட்டார். அதற்குப் புத்தர், "கோபம் என்பது தீயில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் எடுத்து நமக்கு வேண்டாதவரைத் தாக்க முயற்சிப்பதைப் போன்றது. அதைக் கையில் எடுப்பதன் மூலம் நாமும்தான் சுட்டுக் கொள்கிறோம்!" என்றார்.

உணவு

ஏசுநாதரிடம் சீடர் ஒருவர், "உலகிலேயே மிகவும் இனிமையான உணவு எது?" என்று கேட்டார். அதற்கு ஏசுநாதர், "ஒருவன் தன் உழைப்பால் பெற்ற கூழ் அமிர்தத்திலும் மேலானது" என்று பதிலளித்தார்.

— தினத்தந்தி இலவச இணைப்பு 27-05-2008.

சங்கீதம்

சங்கீதத்தில் ‘கல்பித சங்கீதம்’, ‘கல்பனா சங்கீதம்’ என இரண்டு வகைகள் உண்டு. சொல்லிக் கொடுப்பதை அப்படியே பாடுவது ‘கல்பித சங்கீதம்’. உள்ளத்தில் எழும் உணர்வுகளை அந்தந்த நேரத்திற்கு ஏற்ப இசையில் வெளிப்படுத்துவது ‘கல்பனா சங்கீதம்’.

— குங்குமம் 31-01-1982.

விஸ்வபாரதி

தாகூர் எழுதிய ‘கீதாஞ்சலி’ கவிதை நூலுக்கு 1913-ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. அந்தப் பரிசுப் பணத்தைக் கொண்டு 1921-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி அவர் நிறுவியதுதான் ‘விஸ்வபாரதி’ பல்கலைக்கழகம்.

— தினமலர் 23-12-2008.

பிஸ்கெட்

‘பிஸ்கெட்’ என்கிற வார்த்தை பிரெஞ்சு மொழியிலிருந்து பிறந்தது.இதற்கு, இரண்டு முறை சமைக்கப்பட்டது எனப் பொருள். பிஸ்கெட்டுக்கள் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருப்பதற்கு இரண்டு முறை வேகவைக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தவே அதற்கு அப்படி ஒரு பெயரை வைத்தனர் பிரெஞ்சு மக்கள்.

— குமுதம் சினேகிதி, செப்டம்பர் 16, 2008.

மிஸ்ஸான ‘ஜெ’

ஆங்கில எழுத்துக்கள் ஆரம்பத்தில் இருபத்து நாலுதானாம்! ‘J’ எழுத்து ஆரம்பத்தில் இல்லை. அதற்கும் அப்புறம் கடைசியாக வந்து சேர்ந்தவிருந்தாளி ‘U’!

காலம்

தமிழ்நாட்டில் ‘தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்’ 1956-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

சங்ககாலம் (கி.மு.300 -கி.பி.300).
சங்கம் மருவிய காலம் (கி.பி.300 -கி.பி.700).
பக்தி இலக்கியக் காலம் (கி.பி.700 – கி.பி.1200).
மத்திய காலம்(கி.பி.1200 – கி.பி.1800).
இக்காலம் (கி.பி.1800 – இன்று வரை) எனத் தமிழ் மொழி வரலாறு பிரிக்கப்படுகிறது.

— தினமலர், 27-12-2008.

நன்றி: க.சந்தானம் வலைப்பதிவு

About The Author