பெரிய செல்வந்தரும் கர்வம் பிடித்தவருமான நிலச்சுவான்தார் ஒருவர் மேட்டுக்குடி என்ற ஊரில் வசித்து வந்தார். அவர் மிகச் சிலரை மட்டும் நேரில் பார்த்துப் பேசுவதற்குச் சம்மதிப்பார். குடியானவர்களைப் பொறுத்த வரை அவர்களை அவர் மனிதப் பிறவிகளாகவே மதிக்க மாட்டார், அவர்களிடமிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் மண்ணின் வீச்சம் எழுவதாகவும் சொல்லி. அவர்களில் யாரும் நெருங்கி வரத் துணிந்தால் உடனே விரட்டியடிக்குமாறு தமது வேலைக்காரர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஒருநாள் குடியானவர்கள் இருவர் இந்த நிலச்சுவான்தார் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
"அருகாமையில் நின்று நான் அவரைப் பார்த்தேன்" என்றான் ஒருவன்.
"வயலுக்கு அருகே சந்தித்தேன்" என்று மற்றொரு குடியானவன் பெருமை பேசினான்.
"நேற்று நான் வேலிக்கு அப்பாலிருந்து எட்டிப் பார்த்தபோது உப்பரிகையில் அவர் காப்பி சாப்பிடுவதைக் கண்டேன்" என்று முதல் குடியானவன் கூறினான்.
அப்பொழுது அங்கு வந்த ஏழையிலும் ஏழையான மூன்றாவது குடியானவன் குமரேசன் இதைக் கேட்டதும் சிரித்து விட்டான்.
"பூ! இதைப் போய்ப் பெரிதாகச் சொல்கிறாயே!" என்று கேலி செய்தான். "வேலிக்கு அப்பால் இருந்து யார்தான் அவரை எட்டிப் பார்க்க முடியாது? நான் நினைத்தால் அவருடன் அமர்ந்து உணவு சாப்பிடுவேனே!" என்றான்.
"என்ன சொன்னாய் குமரேசா! அவருடன் அமர்ந்து உணவு சாப்பிடுவாயா? சாப்பிடுவாய், சாப்பிடுவாய்!" என்று முதல் இரு குடியானவர்களும் வாய்விட்டுச் சிரித்தனர். "உன்னைப் பார்த்ததுமே வெளியே விரட்டியடித்து விடுவாரே! அவருடைய வீட்டை நெருங்கவே விட மாட்டாரே!" என்று இரு குடியானவர்களுமாய்ச் சேர்ந்து குமரேசனை ஏளனம் செய்தனர்.
"முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. அதற்குச் சிறிது புத்தி இருந்தால் போதும்" என்றான் குமரேசன்.
"நீ ஒரு வாய்வீச்சுக்காரன்! உன்னால் இதைச் செய்து காட்ட முடியுமா?" என்று குடியானவர்கள் கேட்டனர்.
"முடியும். நான் செய்து காட்டுகிறேன்" என்று உறுதியான குரலில் கூறினான் குமரேசன்.
"சரி! அப்படி நீ அந்த நிலச்சுவான்தாருடன் அமர்ந்து உணவு அருந்தினால் நாங்கள் உனக்கு இரண்டு மூட்டை அரிசியும், இரண்டு காளைகளும் தருகிறோம். ஆனால், நீ அப்படிச் செய்யாவிட்டால் நாங்கள் சொல்வதை எல்லாம் நீ செய்ய வேண்டும்" என்றனர்.
"சரி! அப்படியே செய்வோம்" என்று குமரேசன் பதிலளித்தான்.
அவன் நிலச்சுவான்தார் வீட்டின் வெளி முற்றத்துக்குச் சென்றான். அவனைப் பார்த்ததுமே அவருடைய வேலைக்காரர்கள் அவனை விரட்டியடிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தனர்.
"இருங்கள், இருங்கள்! நான் நம் முதலாளிக்கு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன்" என்றான் குமரேசன்.
"என்ன செய்தி அது?" என்று வேலைக்காரர்கள் கேட்டனர்.
"நான் முதலாளி அன்றி வேறு யாரிடமும் அதைச் சொல்ல மாட்டேன்" என்றான் குமரேசன்.
உடனே வேலைக்காரர்கள் நிலச்சுவான்தாரிடம் ஓடி, குமரேசன் சொன்னதை அவரிடம் கூறினர்.
உடனே, அவருக்கு அது என்ன செய்தி என்று தெரிந்து கொள்ள ஆவல் தோன்றியது. ‘எனக்குப் பயன்படக்கூடிய முக்கியத் தகவலாய் இருந்தாலும் இருக்கும்’ என்று நினைத்தவாறு,
"அந்தக் குடியானவனை உள்ளே அழைத்து வாருங்கள்" என்று அவர் தன் வேலைக்காரர்களிடம் கூறினார்.
வேலைக்காரர்கள் குமரேசனை உள்ளே அழைத்துச் சென்றனர். அவனைச் சந்திப்பதற்காக நிலச்சுவான்தார் வெளியே வந்தார். பட்டு வேட்டியும், பட்டுச் சட்டையும் அணிந்து கம்பீரமாகக் காட்சியளித்தார். ஆனால், மனம்தான் சிறியதாக இருந்தது.
அவர் குமரேசனைப் பார்த்து, "நீ கொண்டு வந்த செய்தி என்ன?" என்றார்.
குமரேசன் வேலைக்காரர்கள் பக்கம் திரும்பிப் பார்த்தான்.
"முதலாளி! உங்களுடன் தனிமையில் பேச விரும்புகிறேன்" என்றான்.
இப்பொழுது நிலச்சுவான்தாருக்கு அதிக ஆவல் உண்டாகி விட்டது. “இந்தக் குடியானவன் ஏதோ இரகசியம் அல்லவா சொல்ல விரும்புகிறான்! என்னவாக இருக்கும்?” என்று யோசித்தவாறு வேலைக்காரர்களை விலகிச் செல்லும்படிக் கூறினார்.
அவரும் குமரேசனும் தனியே விடப்பட்டதும் குமரேசன் இரகசியக் குரலில், "முதலாளி! ஒரு குதிரைத் தலை அளவு இருக்கும் தங்கக் கட்டியின் விலை எவ்வளவு இருக்குமெனச் சொல்லுங்களேன்?" என்று கேட்டான்.
"நீ ஏன் அதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறாய்?" என்று குமரேசனிடம் அவர் திருப்பிக் கேட்டார்.
"நான் காரணம் இல்லாமல் கேட்கவில்லை" என்றான் குமரேசன்.
முதலாளியின் கண்கள் பளிச்சிட்டன. அவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிய ஆரம்பித்தது. காரணமின்றி ஒருவன் சும்மா இப்படி ஒரு கேள்வி கேட்க மாட்டான். அவனுக்கு ஏதோ புதையல் கிடைத்திருக்கிறது என்று தம்முள் கூறிக் கொண்டார். குமரேசனைத் தந்திரமாய் விசாரிக்க முற்பட்டார். சிறிது சிறிதாய்த் தகவலைக் கறந்து கொள்ள முயன்றார்.
"நல்ல ஆளப்பா நீ! இது பற்றி நீ ஏன் தெரிந்து கொள்ள விரும்புகிறாய்? அதைச் சொல்லு" என்று திரும்பவும் கேட்டார்.
குமரேசன் பெருமுச்செறிந்து கொண்டான்.
"சரி, சொல்வதற்கு உங்களுக்கு விருப்பமில்லையென்றால் சொல்ல வேண்டாம். நேரமாகி விட்டது, போக வேண்டும். வீட்டில் என் மனைவி காத்திருப்பாள். எனக்காகச் சாப்பாடு காத்துக் கொண்டிருக்கும்" என்று குமரேசன் கிளம்ப முற்பட்டான்.
நிலச்சுவான்தாரின் கர்வம் எல்லாம் பறந்து விட்டது. பேராசையால் அவருக்கு உடம்பு நடுங்கிற்று.
‘இவனை எப்படியாவது சரிக்கட்டி, தங்கக் கட்டியைப் பெற்றுக் கொண்டு விட வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டார். பிறகு, குமரேசன் பக்கம் திரும்பி, “நீ நல்லவனாக இருக்கிறாய். நான் சொல்வதைக் கேள்! அவசரமாய் இப்பொழுது நீ வீட்டுக்குப் போக வேண்டாம். உனக்குப் பசித்தால் என்னுடன் அமர்ந்து உணவு அருந்தலாம்” என்றார்.
வேலைக்காரர்களை அழைத்துச் சாப்பிடுவதற்கு உடனடியாக உணவு வகைகளை எடுத்து வருமாறு கட்டளையிட்டார்.
வேலைக்காரர்கள், சாப்பிடுவதற்காக எல்லாவற்றையும் தயார் செய்தனர். சுவைமிக்க பானங்களையும் பழரசங்களையும் எடுத்து வரும்படி நிலச்சுவான்தார் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
பிறகு, குமரேசனை உட்கார வைத்து ஒவ்வொரு உணவு வகையையும், பானத்தையும் பழரசத்தையும் அவனுக்கு அளித்து உபசரித்தார்.
"நல்லாச் சாப்பிடு அப்பா! நிறையக் குடி! கூச்சப்படாதே" என்றார்.
குமரேசன் எதையும் வேண்டாமெனச் சொல்லாமல் வேண்டிய மட்டும் யாவற்றையும் உண்டான். பானம் அருந்தினான். நிலச்சுவான்தார் மீண்டும் மீண்டும் அவன் தட்டை நிரப்பிக் கொண்டும், பழரசத்தை ஊற்றிக் கொண்டும் உட்கார்ந்திருந்தார்.
இதற்கு மேல் ஒரு வாயளவுகூடச் சாப்பிட முடியாது என்னும் அளவிற்குச் சாப்பிட்டதும் நிலச்சுவான்தார் அவனிடம், "இப்பொழுது நீ சீக்கிரமாய்ச் சென்று குதிரையின் தலை அளவுள்ள உன்னுடைய தங்கக் கட்டியை எடுத்து வா! அதை என்ன செய்வதென்று உன்னைவிட எனக்குத்தான் நன்றாகத் தெரியும். அதனால் அதைக் கொண்டு வந்து கொடு. உனக்கு நூறு ரூபாய் சன்மானம் தருகிறேன்" என்றார்.
"முதலாளி! தங்கக் கட்டியைக் கொண்டு வந்து கொடுக்க முடியாதே!" என்றான் குமரேசன்.
"ஏன் முடியாது?" என்றார் அவர்.
"ஏனென்றால், என்னிடம் தங்கக்கட்டி எதுவும் இல்லையே" என்றான் குமரேசன்.
"இல்லையா? பிறகு எதற்காக நீ அதன் விலையைத் தெரிந்து கொள்ள விரும்பினாய்" என்று கேட்டார் நிலச்சுவான்தார்.
"சும்மா அப்படி ஒரு ஆவல் உண்டாயிற்று" என்று பதிலளித்தான் குமரேசன்.
நிலச்சுவான்தாருக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. அவர் முகம் செக்கச் செவேலென்று ஆகி விட்டது. காலால் பலமாகத் தரையை உதைத்தார்.
"முட்டாளே! போ வெளியே!" என்று கூச்சலிட்டார்.
"மாண்புமிக்க முதலாளியே! நீங்கள் நினைப்பது போல நான் ஒன்றும் முட்டாளல்ல! உங்கள் செலவில் ஒரு கூத்து நடத்தி உண்டு களித்தேன். அதோடு என் நண்பர்களிடத்திலிருந்து இரண்டு மூட்டை அரிசியும், இரண்டு காளைகளையும் வென்றேன். முட்டாள் செய்கிற காரியமல்லவே இது!" என்றான் குமரேசன் நிதானமாக. சிரித்தவாறே அங்கிருந்து நடையைக் கட்டினான்.
நிலச்சுவான்தார் தான் முட்டாளானதை உணர்ந்து திகைத்து நின்றார்.