சுஜி வீடு வரும்போது மணி ஏழடிக்கும் தறுவாயாகி விடுகிறது.
குழந்தை, குழந்தைப் பை இரண்டையும் சுமந்து கொண்டு வருகிறாள். வாசல் கேட் தாழ் திறக்கும் ‘கிளிக்’ ஓசை கேட்டதும், உள்ளே இருந்து அபிராமி விரைந்து வந்து குழந்தையைக் கையில் வாங்கிக் கொள்வாளே?
இன்று அவள் நெஞ்சுள் குற்ற முள் உறுத்துகிறது.
வாயில் விளக்கைப் போட்டு விட்டு நிற்கிறாள்.
அக்கம் பக்கக் குழந்தைகள் சத்தம் கூடக் கேட்கவில்லை. தொலைக்காட்சிச் செய்திச் சுருக்கம் செவிகளில் விழுகிறது.
சுஜி அறைக்குள் சென்று, குழந்தையைத் தொட்டிலில் விடுகிறாள். அது சிணுங்குகிறது.
"இருடா கண்ணா! அம்மா, மூஞ்சியலம்பிட்டுப் பால் கொண்டு வருவேன். சமர்த்தில்ல?"
முத்தமிட்டு விட்டுக் குளியலறைக்குச் செல்கிறாள்.
பால் புட்டி டப்பா, கசங்கிய துணிகள் எல்லாவற்றையும் குழாயடியில் போட்டு விட்டு சொர்ரென்று கொட்டும் நீரில் முகம் கழுவிக் கொள்கிறாள். அபிராமி, உள்ளே சென்று காய்ச்சிய பாலைப் பதமான சூட்டில் ஆற்றிச் சர்க்கரை போட்டு, விட்டுச் சென்றிருக்கும் இன்னொரு புட்டியில் ஊற்றி ரப்பரைப் போடுகிறாள்.
"நீ என்னம்மா சாப்பிடறே? காபி கலக்கட்டுமா?…"
"குழந்தைக்கு உடம்பு சுடுவது போலிருந்தது. டாக்டர்ட்டப் போகலாம்னு நின்னேன். இந்தத் தாட்சாயணிக்கு எத்தனை கூட்டம்! சரின்னு பேசாமல் வந்தேன். ஞாயிற்றுக்கிழமை பிரேம்கிட்ட கொண்டு போய்க் காட்டணும்… என்னமோ மனசே சரியில்ல. காப்பிதான் ஒருவாய் கலந்து குடுங்க போதும்."
அபிராமி காபியைக் கலந்து கொடுக்கிறாள். சுஜி காபியுடன் அறைக்கு வந்து, குழந்தைக்குப் பால் கொடுத்து விட்டு, அவளைத் தட்டி உறங்கச் செய்கிறாள்.
பிறகு முன் அறைக்கு வந்து, டி.வி-யைப் போடுகிறாள். செவ்வாய்க்கிழமை நாடகம்.
மேசை மீதிருக்கும் குங்குமம் திருநீற்றுப் பூப் பிரசாதம், எலுமிச்சம்பழம் சட்டென்று அவள் கண்களில் பட்டு விடுகிறது.
சுஜாவின் முகம் இறுகிப் போகிறது.
அடுத்த கணம் அந்த எலுமிச்சம்பழத்தைத் தூக்கி எறிகிறாள்.
"ஆரம்பிச்சாச்சா இந்த பிஸினஸ்?"
அபிராமி நடுங்கிப் போகிறாள். எலுமிச்சம்பழம் அவள் காலடியில் உருண்டோடுகிறது.
"கோவிலுக்குப் போய்த்தான் இந்த கதிக்கு வந்திருக்கேன். நான் பாட்டில வேலை செஞ்சிட்டு ஏதோ சந்தோஷமாய் வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டு, உடுத்தி வாழ்ந்திருப்பேன். கல்யாணமாம் கல்யாணம். புடிச்சுக்கன்னு விலங்கை மாட்டி ஒரு பொறுப்பையும் கொடுத்திட்டு இன்னும் பத்தலியா?… இத பாருங்க! உங்கள் பிள்ளையோட நான் குடும்பம் பண்ண முடியும்னு எனக்குத் தோணல!"
அபிராமி அவளருகில் சென்று அவள் கையை ஆதரவோடு பற்றுகிறாள்.
"சுஜாம்மா, வருத்தப்படாதே. என்னமோ எனக்கு அஞ்ஞானம், கோயிலுக்குப் போகலாம், அவ கூட்டி வச்சதுதானேன்னு தோணித்து; போனேன். எலுமிச்சம்பழமெல்லாம் நான் வாங்கிட்டுப் போகல – அப்படியெல்லாம் ஒரு தீர்மானமும் இல்ல. ஏதோ மனசு ஆறுதல் – யாரிட்டயேனும் சொல்லி ஆறணும், எங்க போக?… சாந்தமடை சுஜா, உன் கஷ்டம் எனக்கும் தெரியிதம்மா. காபி ஆறிச் சில்னு போயிட்டுதே… ஓவல்டின் வாணா கரைச்சிட்டு வரேன். அலைஞ்சிட்டு வரே…"
"எனக்கு ஒண்ணும் வேணாம்… உங்களை யாரு இப்ப கோவிலுக்குப் போகச் சொன்னது?"
"தப்புத்தாம்மா…"
"எப்படியானும் கழுத்தில தாலி விழணும். எவளானும் ஏமாந்தவளப் புடிச்சிக் கட்டணும். அத்தோட உங்க பிறவி மோட்சம் வந்துடும். அப்படித்தானே நினைக்கிறீங்க?"
அபிராமிக்குத் துயரம் பொங்கி வருகிறது.
"இப்படி எல்லாம் பேசாதே சுஜா, என் மனசு எவ்வளவு வேதனைப்படுகிறதுன்னு உனக்குச் சொல்ல முடியல…"
"நீங்கதான் வேதனைப்படுறீங்க. எனக்கு குளுகுளுன்னு சந்தோஷமா இருக்கு, இல்ல?… ஆபீசில கூட தலைதூக்க முடியாதபடி அவமானமா இருக்கு. அங்க வந்து நாலு பேர் முன்னே வாடி போடின்னு பேசறான். என் கண் முன்ன, வேணுன்னு, எவ தோளிலோ கையப் போட்டுப் போறான்…"
"ஆ…? யாரம்மா?"
"யாரு? அவன்தான்! அவன் இவன்னுதான் சொல்லுவேன். தினமும் குடிச்சிட்டுக் கண்ட நேரத்துக்கு வந்தா நீங்க கதவத் திறந்து விடுறீங்க. நான் சொல்றேன், நீங்க குடுக்கிற இடம்தான் இவ்வளவுக்கு வந்தது. அப்படி என்ன பிள்ளை?…"
"சரி, இன்னிக்குக் கதவு திறக்கல."
கண்ணீரை விழுங்கிக் கொள்கிறாள்.
அபிராமிக்குத் தாலி கட்டியவன், இந்தப் பையனைத் தவிர அவள் நினைவில் நிற்க எந்த ஒரு நலமும் இன்பமும் கொடுக்கவில்லை. என்றாலும் இன்று வரை அவனை ஏக வசனத்தில் அவன் இவன் என்று குறிப்பிட்டதில்லை.
இது வேறு தலைமுறை; நியாயம் கேட்கிறாள். நியாயம்; நியாயம்.
"எங்கிட்ட கேக்காம எதுக்குக் கோயிலுக்குப் போகணும்? ஆறு வாரத்துக்குள்ள தாலி ஏறிடும்… தாலி! பிள்ளைக்கு இன்னும் எவளானும் ஏமாந்த சோணகிரி மஞ்சக் கயிறுக்கு ஏங்கி நின்னிட்டிருப்பா, கட்டி வக்கலாம்னு நினைச்சிருப்பிங்க!… அப்படித்தானே? ஆறு வாரம் இப்ப நீங்க போயி வரத்துக்குள்ள ஏறின இது எறங்கிடும்னு நினைச்சிக்குங்க! இந்த மஞ்சக் கயிறு, மகத்துவம் எல்லாம் கூடி இருந்தாத்தான். இல்லேன்னா வெறும், வெறும் கயிறு! இது கழுத்தை – இல்ல – வாழ்க்கையை அறுக்கிற கயிறு!"
கழுத்திலிருக்கும் அந்தக் கயிற்றை வெறுப்புடன் கையில் சுற்றி முறுக்குகிறாள். பிறகு, கையில் கழற்றி வைத்துக் கொள்கிறாள்.
அபிராமி இடித்த புளிபோல் நிற்கிறாள்.
"நீங்க வாழ்க்கையில் பட்டவங்கதானே? நீங்களே சொல்லுங்கம்மா! உங்களுக்கு புருசன்ங்கறவன் இந்தப் புள்ளயைக் குடுத்ததைத் தவிர ஒண்ணும் நல்லதச் செய்யல. அந்தப் பெண்சாதிக்கும் மூணு நாலு பந்தம். நாளெல்லாம் ரேசு, குடின்னு ஆடிட்டு ஒருநா கண்ணை மூடிட்டான். எம் புள்ளக்கி அப்பா முகம் கூட நினைப்பிருக்காதுன்னு சொன்னீங்க. அப்படி இருந்தும், புள்ள மேல கேட்டபோதெல்லாம் பணம் குடுக்கும் பாசம் எப்படிம்மா வந்தது உங்களுக்கு?"
நியாயம்… நியாயம்…
"ஹனிமூன்லயே இவன் சாயம் வெளுத்துப் போச்சி. ‘தபாரு சுஜி, அதோ அந்தப் பொண்ணுகள்ளாம் என்னயே வச்ச கண் வாங்காம பாக்குறாங்க. நா என்ன செய்ய, நாஅவ்வளவு அழகா இருக்கிறேன்… இல்ல’ன்னு கண் சிமிட்டினான். எனக்கு எப்படி இருந்திருக்கும்? நினைச்சிப் பாருங்க…"
"சுஜிம்மா, இப்ப அதெல்லாம் என்னத்துக்கு… நா தப்புதா பண்ணிட்டேன். நிமிர்த்த முடியாம ஒரு வளைசல்ல நெருக்க வச்சிட்டேன். என்ன மன்னிச்சிடும்மா!…"
"அம்மாக்கு சுஜி, பிரதர்ஸ்னா ஒரு வீக்னஸ். டெல்லில இருக்கிற மாமா ஸர்வோதய காலனில ஃப்ளாட் வாங்கினாரா – ஒரு ஃப்யூ தௌஸன்ட்ஸ் குறையிதுன்னு கேட்டாரு. நாங்க வேற இங்க வீடு கட்டிருக்கமா? அதனால ஹெவி ஸ்ட்ரெயின். என் சம்பளம் அப்படியே அம்மாவிடம்தான் கொடுத்திடுவேன். இப்ப அம்மாட்ட அன்னன்னிக்குச் செலவுக்கு வாங்க வேண்டி இருக்கு. இப்பப் பாரு, உனக்கு இஷ்டப்பட்ட ஸாரி வாங்கிக் குடுக்கணும், ஸ்டார் ஓட்டலுக்குக் கூட்டிப் போகணும்னெல்லாம் ஆசையாக இருக்கு. இந்த இளம் வயசில அநுபவிக்காம எப்ப அநுபவிக்கிறது? ஆனா… அம்மா… அம்மாட்ட நீ கேக்காதே. அவங்க ரொம்ப கன்ஸர்வேடிவ். ஓல்ட் ஃபாஷன்ட் வியூஸ் உள்ளவங்க. இதெல்லாம் அநாவசியம்னு நினைப்பா. ‘இப்ப எதுக்குடா அவளுக்குப் புடவை? அம்பது புடவை வச்சிட்டிருக்கா. ஹாங்கரில் அடுக்கடுக்காத் தொங்குது’ம்பா… என் பாலிஸி அது இல்ல. என் சுஜிக்கு எப்படியெல்லாமோ அலங்காரம் பண்ணிப் பார்க்கணும்னு ஆசை. ஸல்வார் கமிஸ் போட்டுட்டா உனக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்."
அவன் நடிப்பை அவள் சொல்லிக் காட்டும்போது அபிராமியினால் குலுங்காமல் இருக்க முடியவில்லை.
இவளிடம் என்ன சொன்னான்?
"அம்மா, உன் மருமகள் என்னமோன்னு நினைச்சியே? சம்பளம் எல்லாம் ஒரு காசு மிச்சம் இல்லாம அம்மா வீட்டில குடுத்திட்டுத்தா வரா. அவ கல்யாணத்துக்குக் கடன் வாங்கி இருக்கிறாளாம். நியாயம்தான?"
"எல்லாமே குடுத்துடறாளா? ஆயிரத்துக்கு மேலே வருமானமாச்சே?"
"வெக்கக் கேடம்மா! பஸ் பாஸ், கான்டீன், எல்லாச் செலவுக்கும் நான்தான் கொடுக்கிறேன். வாந்தியா எடுத்திட்டு ஒண்ணும் சாப்பிடாம ஆபீஸில இருந்திருக்கா. நல்லவேளை, நான் போயி டாக்டரிடம் கூட்டிப் போனேன். டாக்டர் செலவெல்லாம் நாந்தான் கொடுக்கிறேன்… ரிஎம்பர்ஸ்மண்ட் வரும்னு கூட அவ சொல்லல."
"அப்படியா?…"
"ஆமாம். மாமியார் எதானும் சொல்லுவாங்கன்னு பயப்படுறா. நீ ஒண்ணும் கேட்டுக்காதே. நீ வரதட்சணை வாணாம், அது இதுன்னு சொல்ல, அவங்க ஒரேயடியா லெவலை எறக்கிட்டாங்க."
இருவரிடமும் பெரிய பிளவைத் தோற்றுவிக்க அவன் மிகச் சாமர்த்தியமாகப் போட்ட நாடகம்.
எவ்வளவு எளிதாகப் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர்?
கர்ப்பிணிப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய வண்மை வரிசைகள் செய்யக் கூட அவர்கள் வீட்டில் இடம் கொடுக்கவில்லை என்று உருகினான்! அவள் அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்திருக்கக் கூடாது.
ஒழுங்கில்லை என்று தெரிந்து…
தன் உலகமும் அவன் உலகமும் வெவ்வேறு துருவங்களில் போய்விட்டன என்று தெரிந்து…
அவளால் அவனைத் தட்டிக் கேட்க முடியவில்லை, ஏன்?
பி.எஸ்.ஸி-யில் தேறவில்லை. பிறகு, அவிழ்த்து விட்ட கழுதைதான்.
"சீனி, மேல அதைப் படிச்சு பாஸ் செய்ய வேண்டாமா? எதானும் ட்யூட்டோரியலில்…"
"அம்மா, இந்த டிகிரில ஒரு மண்ணும் கிடையாது. நான் முதல்லயே தப்புப் பண்ணிட்டேன். இப்ப கூட, எலக்ட்ரானிக்ஸ், டி.வி மெக்கானிஸம் கோர்ஸ் இருக்கு. பண்ணலாம்னு இருக்கேன். ஒண்ணரை வருஷம்."
அது பற்றியானும் அபிராமி விசாரித்தாளா?
பையன் சொன்னால் அதற்கு மேல் விசாரணையே இல்லை. சீனி கெட்டிக்காரன், பிழைக்கச் சாமர்த்தியம் உண்டு… என்று ஒரு உறுதியான நம்பிக்கை மலை போல் இருந்தது.
கேட்பவர்களிடமெல்லாம், "எலக்ட்ரானிக்ஸ், டி.வி மெக்கானிஸம் படிக்கிறான்" என்று சொன்னாள்.
படித்து, ஆசிரியைத் தொழில் செய்தும் எத்தனை பெரிய முட்டாள் அவள்!
சில ஆயிரங்கள் இந்தச் சாக்கில் அவன் கறந்தான். ஒரு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளாமல், அம்பது பைசா காபி வாங்கிக் குடிக்காமல் உழைத்துச் சேமித்த பணம், கிடுகிடென்று எப்படிக் கரைந்தது!
கல்லூரி – அது மாலை நேரந்தான்.
இவள் பள்ளிக்குச் செல்கையில் அவன் எழுந்திருந்திருக்க மாட்டான்.
"சீனி, எழுந்திரப்பா! கதவைச் சாத்திக்கோ. நான் ஸ்கூலுக்குப் போறேன். ஃபிளாஸ்கில் காபி இருக்கு. சாப்பாடெல்லாம் எடுத்து வச்சிருக்கேன். அவல் டிஃபன் பண்ணி டப்பில வச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு இன்ஸ்டிட்யூட்டுக்குப் போ!"
அவன் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து கதவைப் பூட்டிக் கொள்வான். அவள் மாலையில் திரும்பி வரும்போது, வீடு அலங்கோலமாக இருக்கும். இளவட்டங்கள் கூடி அரட்டையோ சீட்டாட்டமோ நடத்தின தடயங்கள் இருக்கும். ரேடியோவைக் கூட மூடியிருக்க மாட்டான். விசிறி ஓடிக் கொண்டிருக்கும். ஆங்காங்கு சிகரெட் துண்டுகளுடன் கதவைத் திறந்ததுமே புகையிலைப் புகையின் நெடி நாசியில் ஏறும். இவன் சாப்பிட்ட தட்டும், பாத்திரங்களும் மிச்சம் மீதி கூட மூடப்படாமல் இரைந்து கிடக்கும். பால் பாக்கெட் அப்படியே இருக்கும். அழுக்கு பனியன், ஈரத்துண்டு கண்ட இடத்தில் விசிறப்பட்டிருக்கும்…
இரவு வரும்போது பதினொன்றுக்கு மேலாகும்.
இலை மறை காய்மறையாக… அப்போதே குடிக்கப் பழகியிருக்கிறானோ என்ற சந்தேகம் தோன்றியிருந்தது. ஆனால், அம்மாவின் இயல்பை எவ்வளவு சாதுரியமாக இவன் பயன்படுத்திக் கொண்டான்!
குடிப்பவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசுவான்.
"அம்மா, அந்த போஜு, சிவராம், பாலு எல்லாம் என்னமா குடிக்கறாங்கறே?…"
போஜு, அவளுக்கு தெரிந்து மிக நல்ல ஒழுக்கமான பையன். இவனுடன் அதே பேட்டையில், அரிச்சுவடியில் இருந்து படித்தவன். அண்ணாமலையில் கெமிகல் இன்ஜினியரிங் படித்து, நகரில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான்.
சிவராம், எம்.ஏ பண்ணிவிட்டு, எங்கோ அலுவலகத்தில் வேலை செய்கிறான். பாலு… எல்.ஸி.இ பண்ணிவிட்டு எங்கோ தாற்காலிகமாக வேலை செய்கிறான். "ஏ.எம்.ஐ.சி பண்றேன் டீச்சர்" என்று சொன்னான். இந்தப் பிள்ளைகளைப் போல் எத்தனையோ பையன்கள் இவன் வயசுக்குப் பொறுப்பாக இல்லையா? இவன் மட்டும் காலம் கடத்துகிறானே என்று அவள் நினைத்து விடாமல் இருக்க, அவர்கள் எல்லாரையும்விடத் தான் உயர்வு என்று கண்ணை மூடி மண் பூசி விட்டான்.
"ஏண்டா போஜுவா?…"
"பின்னென்னம்மா? உனக்கு இன்னிக்கு உலகம் தெரியாது… தே டிரிங்க் லைக் ஃபிஷ்."
ஒன்றரை வருஷம் ஓடிற்று. ஆனால், இவனுடைய கொட்டம் அதிகமாயிற்று. "அந்த இன்ஸ்டிட்யூட்டே ஃப்ராடம்மா! தெரியாமயே போயிட்டுது. நான் ஸீரியஸ்ஸா பிஸினஸ் பண்றதைப் பத்தி யோசனை பண்றேம்மா!" என்று சொல்லிவிட்டு, இவன் போக்கிரி அரசகுமரானாக அவளை உரித்தெடுத்தான்.
வீட்டிலேயே சில நாட்களில் சிநேகிதர்கள் வந்து கொட்டம் அடிப்பார்கள். டிரான்ஸிஸ்டர் காட்டுக் கத்தலாக இரைச்சல் போட, இவர்களும் இரைச்சல் போட்டுக் கொண்டிருப்பார்கள். வாசலில் மோட்டார் பைக், செருப்புகள், இவள் வீட்டில் இல்லை என்று அறிவிக்கும்.
இவள் வீடு திரும்பியது, (இவர்கள் யாருமே அவளுக்குத் தெரிந்த, அவன் மாசு கற்பிக்கக் குறிப்பிட்ட பிள்ளைகளாக இருக்க மாட்டார்கள்) எல்லோரும் எழுந்து வெளிக் கிளம்பி விடுவார்கள். அவனும் வெளிக் கிளம்புமுன், பணம் பணம் என்று இரந்து, கெஞ்சி, அழுது, அடம்பிடித்து வாங்கிக் கொண்டு போவான்.
வெளியே அக்கம்பக்கங்களில் சீனியின் நடத்தை விமரிசனத்துக்குள்ளாகக் கூடாது என்று கௌரவம் கட்டிக்காப்பதில், இடைநிலை வருத்தத்துக்குரிய போலித்தனமான ஒரு கர்வம் அவளுக்கு இருந்தது. சீனியுடன் உரத்துக் குரல் கொடுத்துச் சண்டை போடாமல் அவள் தவிர்த்ததற்கு அதுவும் ஒரு காரணம். அவளுக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதி, ஆலோசகர், ஆதரவாளர் என்று நம்பியவள் – சுந்தரம்மாதான். இன்று அவள் வேலை பார்த்த மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியப் பொறுப்பில் இல்லை எனினும் தாளாளராக இருக்கிறாள். அவள்தான் "எத்தனையோ மோசமான பிள்ளைகள் திருந்தியிருக்கிறார்கள். வேலை என்று ஒன்றையும் கூட்டி, கால்கட்டையும் போட்டுவிட்டால் திருந்திவிடுவான்" என்று யோசனை சொன்னாள். வேலை… அது எப்படி இவனுக்குக் கிடைக்கும்?
இவனுக்கென்று பட்டம், பயிற்சித் தகுதிகள் இல்லாமல் வெறும் வாயரட்டை அடிப்பவனுக்கு, இந்தப் போட்டா போட்டி யுகத்தில், வேலை எப்படிக் கிடைக்கும்?
மதிக்கவில்லை என்று ரோசத்துடன் கழித்து விட்ட உறவுத் தொடர்பாக, அபிராமியின் ஒன்று விட்ட அத்தை குடும்பம் – பெரிய தொழிலதிபர் வாரிசாக அத்தையின் பெண் வயிற்றுப் பேரன், இளைய மகன், இருவரும் தொழில்-வர்த்தக உலகில் பெரிய புள்ளிகள். அவர்களுக்குச் சொந்தமாகக் கிண்டியில் பல தொழிலகங்கள் இருக்கின்றன. பென்சிலில் இருந்து பிஸ்கோத்து வரையிலும் அவர்கள் தயாரிப்பதாக அறிந்திருக்கிறாள்.
வெட்கத்தை விட்டு அபிராமி அங்கே சென்றாள். ஸாந்தோம் சாலையில் அவர்கள் பங்களாவில் நுழைவதற்கும் கூடக் கூச்சமாக இருந்தது. அவர்கள் வீட்டில் இருந்து நவராத்திரி மற்றும் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு இன்று வரை அழைப்பு வராமல் இல்லை. பேத்தி கல்யாணத்துக்கு காலை முகூர்த்தத்தில் தலைகாட்டிவிட்டு, அத்தை மகளைப் பார்த்து, உள்ளே படுத்திருக்கும் அத்தையைப் பற்றி விசாரித்து விட்டு வந்திருக்கிறாள். இதுவரையிலும் அவள் எந்த உதவி நாடியும் உறவு சொல்லிச் சென்றதில்லை.
அத்தை மகள் சிங்காரி, பறங்கிப் பழம் போல் நரைத்த தலையும், வெண்பட்டுச் சேலையுமாக உட்கார்ந்திருந்தாள், உள் அறையில்.
"அபிராமியா? என்ன அத்தி பூத்தாப்பல…?"
"ஒண்ணுமில்ல அக்கா, சீனி விஷயமாத்தான்… அவனை ஒரு வேலையில் சேர்த்துவிடணும். ரொம்ப கஷ்டமாயிருக்கு. நாதனில்லாம, சேர்வாரோடு சேர்ந்து கெட்டுப்போயிடுமோன்னு பயமா இருக்கு. அவனும் எங்கெல்லாமோ போடறான்; ஒண்ணும் கூடிவரல…"
காலைப் பிடிக்காத குறைதான்.
"நீதான் வந்து போறதில்லன்னு வச்சிட்ட. யார் யாருக்கெல்லாமோ செய்யிறான். காலம ஏழரை மணிக்குள்ள அவனை வரச் சொல்லு. பரசுட்டச் சொல்றேன்" என்றாள்.
இவனை, முதலில் நானூறு ரூபாய் சம்பளமும், அன்றாடம் வெளியூர்ப் படியும் கொடுத்து, விற்பனைப் பிரதிநிதியாகப் போட்டார்கள்.
இந்த ஊர் சுற்றல் தொழில் – அவனுடைய சவடாலுக்கும் கட்டற்ற வாழ்வுக்கும் சாதகமாக இருந்தனவே ஒழிய திருந்தவில்லை.
அடுத்த இலட்சியமான கல்யாணம்…
அவள் எதிர்பார்த்தபடி அவன், "அட போம்மா, இப்ப எதுக்குக் கல்யாணம்" என்று கேட்கவில்லை. முரண்டவில்லை.
"கமர்ஷியல் டாக்ஸில வேலையா?… ஆயிரத்துக்கு மேல தேறும்" என்றான் பச்சையாக.
"இத பாரு சீனி, நீ நல்லபடியாத் திருந்தணும்னு நம்பி நான் கல்யாணம்னு இறங்கறேன். சொற்பமா ஸ்கூல் மாஸ்டரா இருந்தவர். இந்தம்மா ரெண்டாந்தாரம். பொண்ணு லட்சணமா குடும்பப் பாங்கா இருக்கா. அவ காலில நிக்கறவ. அதப் போடு இதப் போடுன்னு நான் கேட்கப் போறதில்ல. வடபழனி கோவில்ல வச்சு சுருக்கமா கல்யாணத்த முடிச்சிடலாம்னு இருக்கேன். அவரால வெளில வாசல்ல வர முடியாதாம். அந்தம்மா, கொழுந்தனார் மகனைக் கூட்டிட்டு வரேன்னா. நீ நாளைக்குதானே டூர் போற?"
"சரி வரட்டும்மா…"
"ஆமா… ஒழுங்கா… நல்லபடியா இரு…" என்றாள்.
வெற்றிலை பாக்கு பழம், லாலா கடை இனிப்பு, காரசேவு வாங்கி வைத்தாள். ஒரு பாக்கெட் பால் கூட வாங்கிக் காய்ச்சி, காபி டிகாஷனும் போட்டு வைத்தாள்.
சீனி, முகம் வழித்து குளித்து, நெற்றியில் துளி நீறு தரித்து, மிகவும் யோக்கியமான தோற்றத்துடன் வீட்டில் இருந்தான். எல்லாம் சொல்லி வைத்தாற்போல் கச்சிதமாக அமைந்து விட்டது.
அவர்களுக்கு இவனுடைய தோற்றம், பேச்சு, அடக்கம், எல்லாம் மிகவும் பிடித்து விட்டன. மறுநாள் வந்து பெண் பார்க்கவும் ஒப்புக் கொண்டான்.
"எனக்கு ரொம்ப நம்பிக்கைங்க. இது தெய்வ சித்தமாக ஏற்பட்டது இல்லையா? பையனுக்குப் பொண்ணைப் புடிச்சி பொண்ணும் சரின்னு சொல்லுவான்னு. எங்களுக்கு இவ ஒரே பொண்ணுதா. அதனால, அதது குறை வைக்க மாட்டோம்" என்று மங்களம்மா மனம் பூரித்துப் போனாள்.
ஆனாலும் அபிராமிக்கு உள்ளே முள் அவ்வப்போது உறுத்திக் கொண்டிருந்தது.
"அவங்கிட்ட எல்லாம் நல்லாப் பேசிக்கங்கம்மா. ஆயிரங்காலத்துப் பயிரு. வேலை, சம்பளம், மற்ற எல்லா சமாசாரமும் நான் சொல்லிட்டேன்னாலும், நீங்கதா குடும்பம் பண்ணப் போறீங்க. நல்லாப் பேசி முடிவு பண்ணிக்கங்கம்மா?" என்றாள் பெண்ணின் பக்கம் அமர்ந்தபடி.
கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. அவன் சுற்றுப் பயணம் கிளம்பிவிட்டான்.
அபிராமிக்கு உள் உறுத்தல் குடைச்சலாகி விட்டது.
என் பையன் யோக்கியமானவன் அல்ல – என்பதை எப்படிச் சொல்ல?
ஆனால் சொல்லாமல் எப்படி மறைக்க?
பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றுவிடவில்லை அப்போது. ஞாயிற்றுக்கிழமை காலையில், பத்தரை மணி சுமாருக்குக் கதவைப் பூட்டிக் கொண்டு பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனாள்.
புரட்டாசிப் புழுக்கம்; வெயில்.
வீட்டில் மங்களம் இல்லை. சுஜாவும் இல்லை.
பெரியவர்தாம், பழைய நாளைய அந்த வீட்டின் முற்றக் குறட்டில், ஏதோ பழைய கணக்கைப் புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
"வாங்கோ… வாங்கோம்மா…! இப்பத்தான் ரெண்டு பேரும் டவுனுக்குப் போனா. வெள்ளி சாமான் ரெண்டு ரொம்பப் பழசா இருந்தது. தோது பண்ணிண்டு வரேன்னு போனா… உட்காருங்கோ…"
அபிராமி கீழே உட்கார்ந்தாள்.
"ம்மா, கீழே உட்காரறீங்க! இப்படி நாற்காலில…"
"பரவாயில்லை. வசதியாயிருக்கு…" என்று முகத்தைத் துடைத்துக் கொண்டாள். இறுக்கம்… எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
"இந்தப் பக்கம் வேற ஒரு காரியமா வந்தேன். அப்படியே பாத்துட்டுப் போகலாம்னு… எதுக்குச் சொல்றேன்னா. தெய்வசித்தம்னு வச்சாக் கூட, நாமும் பத்துத் தடவை யோசனை பண்ணிச் செய்வது நல்லதுன்னு தோணுது…"
"ஆமாம் வாஸ்தவம். நல்ல குடும்பம் குலம் எல்லாம் அதான் விசாரிக்கிறது. நீங்க ஸித்தா இண்டஸ்ட்ரீஸ் ஃபாமிலின்னு சொன்னதே வேற விசாரிக்கணும்னு அவசியமில்லாம போயிட்டுது. நம்ம வீட்டிலும் பயங்கள்ளாம் அங்கங்க இருக்கிறாங்க. கல்யாணம்னா முத நா வந்திட்டு மறுநா போவானுக. எல்லாருக்கும் ஐப்பசில முகூர்த்தம்னு எழுதிப் போட்டிருக்கே."
"அதுக்குச் சொல்லல… இந்தக் காலத்தில என்ன நெருக்கம்னாலும் தாய்புள்ள கூட வேற வேற உலகமாப் போயிடுது. எங்க குடும்பம், சீனி அப்பா பத்தி…"
"அதெல்லாம் தெரியும். அப்படிப் பாத்தா எங்க குடும்பத்திலியும் ஒரு இசுக்கு இல்லாம இல்ல. இதெல்லாம் இப்ப யாரம்மா பாக்கிறாங்க? இதெல்லாம் தப்புன்னு இந்த காலத்தில யாரானும் சொல்லுவாங்களா?"
"அதில்ல… இந்தக் காலத்துப் பையன்கள், நடவடிக்கை நாம எதிர்பார்க்கிறாப்பல இருக்கிறதில்ல. சீனி வீட்டில எனக்கு முன்ன சிகரட் குடிச்சதில்ல. டிரிங்க் பண்ணதில்ல. ஆனா, நாலு இடம் போகிறவன். பார்ட்டி, கீர்ட்டின்னு போகாதவன் இல்ல. நாளைக்கு நீங்க, இந்தம்மா சொல்லாம மறச்சிட்டாளேன்னு நினைக்கக் கூடாது. நல்லா நாலிடத்தில விசாரிச்சிக்குங்க…"
இதைச் சொல்வதற்குள் அவளுக்குக் குப்பென்று வியர்வை பூத்துவிட்டது.
"இதென்னம்மா, இதைப் போய் மூட்டை கட்டிண்டு சொல்ல வரேள்? சிகரெட் பிடிக்காத பையன் இந்தக் காலத்துல சலிச்சாக் கூடக் கிடைக்காது. என் மூத்த மாப்பிள்ளை, மூத்த பையன் எல்லாரும் சிகரெட் குடிக்கிறவாதான். பார்ட்டி கீர்ட்டி எல்லாம் இப்ப சர்வ சகஜமாய் போயிட்டுது. சுஜாவே சொல்றா, ‘என்னப்பா, பொம்பிளங்கல்லாம் குடிக்கிறா’ன்னு. அரசு மட்டத்திலியே குடிக்கிற நாகரிகம் பரவிருக்கு. அதுவும் பிஸினஸ் லைன்னா நாலும்தானிருக்கும். இதெல்லாம் குடுத்துக் காரியத்தைச் சாதிக்கிறதுதான் இன்னிக்குக் கெட்டிக்காரத்தனம்."
"நா… உங்ககிட்டச் சொல்லிடணும்னுதான் வந்தேன். நாளைக்கு நான் மறைச்சிட்டேன்னு நினைக்கக் கூடாது…"
"இதென்னம்மா, நீங்கள் இவ்வளவு டெலிகேட்டா இருக்கீங்க? இது குத்தமேயில்ல, இந்தக் கால ஸ்டான்டர்டுக்கு. சுஜிக்குப் புடிச்சிருக்கு. அவ கெட்டிக்காரி. குடும்பம்னு ஆனதும் அவங்கவங்களுக்குப் பொறுப்பும் வந்திடும்."
மனசிலிருந்து பாரம் அப்போதைக்கு இறங்கியிருந்தது.
திருமணநாள் வரையிலும் கூட, அவன் இலட்சியமான பிள்ளையாக நடந்தான். மனமகிழ்ந்த அபிராமி, தேன்நிலவுக்காக இரண்டாயிரம் வைத்திருந்து செலவு செய்யக் கொடுத்தாள்.
தேன்நிலவு முடிந்து வந்த புதிதில், இவள் எதிர்பார்த்தபடி, சுஜி இவளிடம் அவன் பழக்கங்கள் குறித்து வெளிப்படையாகச் சாடவில்லை. ஆனால், இரகசியமாகக் கண்டிக்கிறாள் என்பதை ஊகிக்க முடிந்தது. ஊசிக்குத்து விழுந்துவிட்டது. பலூன் எத்தனை நாட்கள் தாங்கும்?
அபிராமி அந்த முதல் சில மாதங்களில் மாலை நேரங்களில் சமைத்து வைத்துவிட்டு, தொலைக்காட்சி பார்க்கும் சாக்கில், பக்கத்து வீட்டுக்குச் சென்றுவிடுவாள். திரும்ப எட்டு மணிக்கு வருகையில், அவர்கள் கலகலப்பாகப் பேசிச் சிரிக்கும் ஒலி இருக்காது. அவள் மட்டும் ஏதேனும் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள்.
"ஏம்மா?சீனி இல்ல?…"
"இல்ல. வெளில போயிட்டு வரேன்னாரு…"
"உங்க மகன் குடிச்சிட்டு வரார்?” என்று அவள் வெடித்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் அவளுக்கும் தெரியாதோ?"
–முளைக்கும் மீண்டும்…
“