திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கி.மீ தூரத்தில் இருக்கிறது புகழ்பெற்ற திருத்தலமான திருவானைக்கா. இங்கு இருக்கும் கோயில் மிகவும் பிரசித்தம்! மிகப் பழமை வாய்ந்த கோயில்.
இங்கு, ஈசன் அம்பிகையாக மாறிப் புடவையுடன் வலம் வருவார். அதே போல், அம்பிகை அகிலாண்டேஸ்வரி, ஆண்டவனாக ஆண்கோலம் பூண்டு அருள்புரிவார். இது ஒரு கோயிலிலும் நடக்காத அரிய காட்சி! இதற்குக் காரணம் என்ன?
ஒரு சமயம் பிரும்மாவுக்கு, தான் இல்லாமல் சிருஷ்டி இல்லையாதலால் தானே பெரியவன் என்ற கர்வம் உண்டாயிற்று. அந்த அகந்தை வளர, அவரால் சிருஷ்டிக்கும் தொழிலை மனம் ஒன்றிச் சரியாகச் செய்ய முடியாமல் போனது. அதனால் படைப்புத்தொழிலில் தடங்கல் உண்டாக, பின்னர் ஈசனால் அவருக்குத் தகுந்த தண்டனை கிடைத்தது. தன் தவற்றுக்குப் பிரும்மா மனம் வருந்தினார். பிராயச்சித்தம் செய்ய ஈசனை மனமுருகி வழிபட ஆரம்பித்தார். ஆனாலும் மனம் அமைதியடையவில்லை. அதற்குத் தகுந்த இடம் தேடிக்கொண்டு வந்தார். கடைசியில், சம்புவனம் என்ற ஆனைக்காவுக்கு வந்தார். யானை ஈசனை வழிபட்ட இடமானதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. அந்த ஆலயத்தின் பிராகாரத்தைச் சுற்றி வந்ததுமே அவரது மனம் அமைதி அடைந்தது. அந்த இடத்தையே தன் தவத்திற்கு ஏற்ற இடம் என்று உணர்ந்து ஆலயம் அருகே ஒரு திருக்குளத்தை அமைத்தார். தவமும் ஆரம்பமாகியது.
குளக்கரையில் மோனத்தவம் செய்யும் பிரும்மனைச் சோதிக்க நினைத்த ஈசன் ஜம்புலிங்கேஸ்வரர் பெண் போலவும் அகிலாண்டேஸ்வரி தேவி ஆண் போலவும் உருமாறி வந்து பிரும்மனுக்குத் தரிசனம் அளித்தனர். பிரும்மா தன் தவ வலிமையினால், உருமாறி வந்திருப்பவர்களின் உண்மை வடிவங்களைக் கண்டுகொண்டு அவர்களை வணங்கிப் பணிந்தார். ஈசனும் அவருக்குத் திரும்பவும் படைக்கும் தொழிலைத் திறம்படச் செய்ய ஆசியும் சக்தியும் வழங்கினார். இன்றும் அந்த இடத்தில் பிரும்மா ஏற்படுத்திய திருக்குளமும், அவர் தவம் செய்த இடமும் உள்ளன!
பிரும்மா தனக்கு அருளிய ஈசனுக்குப் பெருந்திருவிழா ஒன்றை எடுத்துத் தன் நன்றியைத் தெரிவிக்க விரும்பினார். திருவிழாவும் மிகப்பெரிய அளவில் நடந்தது. பிரும்மன் எடுத்த திருவிழா ஆனதால் இதற்கு ‘பிரும்மோத்சவம்’ எனும் பெயர் வழங்கலாயிற்று.
பிரும்ம தீர்த்த மண்டபத்திலிருந்து ஆரம்பித்து விழாவை நடத்துகிறார்கள். இந்தத் திருவிழா மாசி மாதம் தொடங்கி சித்திரை மாதம் வரை தொடர்கிறது. மிருகசீர்ஷ நட்சத்திரத்தில், மாசி மாதக் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகிறது. பின், பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் ‘பஞ்சப் பிராகாரத் திருவிழா’ நடைபெறுகிறது. பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் தேரோட்டத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
பிரும்மனுக்கு முதலில் ஈசன் புடவையுடன், அம்பாள் வேஷம் தரித்துக் காட்சி கொடுத்ததை நினைவுபடுத்த, உச்சிக்காலப் பூஜையின்போது அம்பிகை சன்னதியில் இருக்கும் அர்ச்சகர் சிவப்புப் புடவை அணிந்தபடி, தலையில் பூக்கள் தரித்து, அழகான சிவந்த குங்குமம் நெற்றியை அலங்கரிக்க, நாதஸ்வர மங்கள ஒலியுடன் மேள தாளம் முழங்க சுவாமி சன்னதிக்கு வருகிறார். அங்கு அவர் தன்னை அகிலாண்டேஸ்வரியாகப் பாவித்துக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம், பூஜை முதலானவற்றைச் செய்து பின் கோபூஜையும் செய்து, பின் அம்பாள் சன்னிதானம் செல்கிறார். இந்தப் பூஜையைப் பார்க்கப் பக்தர்கள் திரள் திரளாகக் கூடுகிறார்கள். இதைத் தவிர, அருள்மிகு ஜம்புலிங்கேஸ்வரர் அம்பிகை திருக்கோலம் பூண்டும், அன்னை அகிலாண்டேஸ்வரி ஆண்டவனாக அலங்கரித்துக்கொண்டும் கோயிலைச் சுற்றி இருக்கும் ஐந்து பிராகாரங்களில் திருஉலா வந்து பக்தர்களுக்கு அருள்புரிவது தினமும் நடக்கும் காட்சி.
திருவானைக்கா ஈசனைத் தினமும் அகிலாண்டேஸ்வரி அன்னை பூஜித்து வருவதாக ஐதீகம். இன்றும் ஜம்புலிங்கேஸ்வரர் இருக்கும் இடத்தில் நீர் கசிந்துகொண்டே இருப்பதையும் அவர் நீரில் நனைந்தபடியே இருப்பதையும் காணலாம். பஞ்சபூத ஸ்தலங்களில் இது நீர் ஸ்தலம்.
திருச்சி போகும்போது அவசியம் திருவானைக்காவுக்கும் விஜயம் செய்து, ஜம்புலிங்கேஸ்வரர், அகிலாண்டேஸ்வரியின் அருளை எல்லோரும் பெறவேண்டும்!