பீன்ஸ் வெண்டைக் கறி

தேவையானவை:

பீன்ஸ் – ¼ கிலோ
வெண்டைக்காய் – ¼ கிலோ
வெங்காயம் – 1
பூண்டு – 2 பல்
தண்ணீர் – ¾ கோப்பை
தக்காளி பேஸ்ட் – ½ கோப்பை
வினிகர் – ½ தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
மிளகுப் பொடி, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பீன்ஸ், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள்.

வெண்டைக்காயைக் கழுவித் தலைப்பகுதியையும், நுனிகளையும் மட்டும் வெட்டுங்கள். வேண்டுமென்றால் இரண்டாக வெட்டிக் கொள்ளலாம். பிறகு, அரை மணி நேரம் அதை வினிகரில் ஊற வையுங்கள். இது வெண்டைக்காயின் கொழகொழப்பைக் குறைக்கும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு, உப்பு, மிளகுப்பொடி, தக்காளி பேஸ்ட் எல்லாவற்றையும் போட்டு வதக்கி, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடுங்கள்.

நீர் கொதித்ததும் வெண்டைக்காய், பீன்ஸ் சேர்த்துத் தீயைக் குறைத்து மூடி வேக விடுங்கள். வெந்ததும் இறக்கி விடலாம்.

சுவையான ‘பீன்ஸ் வெண்டைக் கறி’ தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author