பீடம் (2)

அவளோ தன் துயரே நீங்கிவிட்டதைப் போலக் குழந்தையை என்னிடத்தில் தந்துவிட்டு அருகில் இருந்த சிறு பாத்திரம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடினாள்.

"ஐயோ பாவம்! தெய்வத்த நம்பி வந்திருக்கிறா. அவளை தெய்வம் கைவிட்டுட்டா என்ன ஆகும்? காரணம் இல்லாம நம்மள பகவான் இவ்வளவு தூரம் இப்போ கூட்டி வருவானேன், புரியுதா?"

குருவின் வார்த்தைகள் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஒண்ணும் புரியலை ஸ்வாமி! ஆனா, ஸ்வாமி மனசுல ஏதோ இருக்குன்னு மட்டும் தெரியுது" என்றேன். அதற்கும் அவர், அவருடைய பாணியிலேயே சிரித்து வைத்தார். கண்களை மூடிக் கொண்டார். அவர் உதடுகள் வேகமாக எழுவதும் அடங்குவதுமாக இருந்தன. ஆனால், ஓசை மட்டும் வரவேயில்லை. தரையில் இருந்து கொஞ்சம் மண்ணை எடுத்தார். கைகளை மீண்டும் மூடிக் கொண்டார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் வந்தாள். அவள் கைகளிலிருந்து பாத்திரத்தை வாங்கி, அதில் கையிலிருந்த மணலிலிருந்து கொஞ்சம் தூவினார். பின்பு அதைக் கலக்கி,"சீடனே! அவரைக் கொஞ்சம் தூக்கு" என்றார். நான் என்ன உணர்வை வெளிப்படுத்துவது என்ற திகைப்பில் இருந்தேன். அந்த ஆணின் பின் தலையைப் பற்றித் தூக்கினேன்.

"அம்மா! உன் புருஷனோட வாயக் கொஞ்சம் திற!"

அவள் அவன் கன்னங்களில் கைகளை வைத்து அழுத்தி, வாயில் சிறு பிளவு ஏற்படுமாறு செய்தாள். குரு மண் கலந்த நீரை அவன் வாயில் ஊற்றினார். சில கணங்களில் அவன் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்பவனைப்போல எழுந்து கொண்டான். எனக்கு எல்லாம் விந்தையாக இருந்தன. அவள் தன் குடும்பத்தோடு அவர் கால்களில் விழுந்தாள். நானும் அவர் கால்களில் விழுந்து அவர் பாதங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டேன். அந்த நாளில் என் உணர்வுகள் பெருகிக் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டேயிருந்தது. அவர்கள் போனதும்,"கண்ணா வா! மழை வருவதைப்போல உள்ளது. இன்னொரு நாள் நாம் மலையேறிப் போய்ப் பார்ப்போம்" என்றார். எனக்கு வார்த்தைகள் வரவேயில்லை. அவரோ எதுவும் அறியாத குழந்தையின் குதூகலத்தோடு நடந்து போனார். நான் அவர் பின்னாலேயே கண்ணீரோடு பின்தொடர்ந்தேன். செத்தவன் மீண்டும் எழுந்தான். குருவின் மகிமையால் மண்ணே எமனை வெல்லும் மருந்தானது. இதற்கெல்லாம் நான் ஒருவனே சாட்சி என்று எண்ணிக்கொண்டேன்.
அவர் பட்டென்று திரும்பி என்னைப் பார்த்து, "மகனே! இங்க நடந்ததை மனசுலேயே வெச்சுக்கோ. யாரிடமும் சொல்லக்கூடாது" என்று சொல்லிவிட்டுச் சிரித்தபடி நடந்தார். எனக்கு இன்னும் உணர்வு மேலிட்டது.

******

ஓர் இரவில், தனக்குக் காய்ச்சல் என்றும், மருத்துவமனைக்குப் போகலாம் என்றும் அவர் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. மருத்துவமனையில் சேர்த்ததும் கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் நோய் அவருக்கு முற்றிய நிலையில் இருப்பதாகவும், அவர் பிழைப்பது மிகவும் கடினம் என்றும் சொன்னார்கள். கடைசியில் குணமாக்கும் முயற்சியாக அவர் காலைக்கூட எடுத்துவிட்டார்கள். எனக்கு அழுகையும் வருத்தமும் பீறிட்டு வந்தன. ஏன் அவர் தன் உடல்நிலையை இத்தனை தூரம் மோசமாக்கிக் கொண்டார்? அவர் போன்ற மகான்களெல்லாம் மருத்துவமனை வரத்தான் வேண்டுமா என்ன? எத்தனை வியாதிகள், எத்தனை பாவங்கள், எத்தனை மரணங்கள் இவர் தொடுதலில் முறிந்து போயுள்ளன! நான் அழுதுகொண்டே அவரைப் பார்த்தேன். இன்னும் அவர் குழந்தைச் சிரிப்பு மாறவேயில்லை. அனைவரையும் அழைத்து ‘அடக்கம் ஆயிரம் பொன்’ என்று சொல்லிவிட்டுத் தன் கண்களைக் கடைசியாக மூடிக் கொண்டார்.

‘அடக்கம் ஆயிரம் பொன்’ என்றால் என்ன பொருள்? அடக்கமாகிப் போகவேண்டுமா? அடக்கம் என்றால் எதன் அடக்கம்? அவர் அடங்கிப் போனதைப் போல வாழ்விலிருந்து அடங்கிக் கொள்ள வேண்டுமா? கேள்விகளை நம்முன் விட்டுப்போன குருவை அப்படியே விட்டுவிட முடியுமா? அதற்கான பதில்களை யாரிடம் பெறுவது?

அவர் அமர்ந்திருந்த இடத்தில் சின்னவர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் பீடமேறி விட்டார். இவற்றிற்கான பதில்களைக் குருவே சொல்லத்தான் வேண்டும். அவர் எங்கு இருக்கிறார்? இறந்தபின் வேறெங்கேனும் பிறந்திருப்பாரா? அல்லது சொர்க்கத்தையோ நரகத்தையோ அடைந்திருப்பாரா? இந்த வானவெளியில் ஆவிரூபம் கொண்டு அலைந்து கொண்டிருப்பாரா? வேறு வழியில்லை. அவர் பிடிவாதமாக, வருடக்கணக்கில் நுரைபொங்கும் அருவிக்கு அருகில் உள்ள பாறையில் அமர்ந்து இறைவனைக் கண்டடைந்தது போல நானும் அவரை அடையத்தான் வேண்டும். அதற்காகத்தான் இந்த மலையின் சிகரங்களை நோக்கி நடந்தவண்ணம் இருக்கிறேன். சோர்வுறுகின்றன கால்கள். ‘சற்குருநாதா! என் கால்களையும் எண்ணத்தையும் பலப்படுத்து’ என்று சொல்லிக் கொண்டேன். தொலைவுகள் தொலைந்து அருவி விழும் சத்தம் காதுகளில் சீக்கிரமே கேட்கத் தொடங்கிவிட்டது.

********

இதோ நான் தேடி வந்த இடம். வானம் பொத்துக் கொண்டு வீழ்வதைப்போல விழும் பேரருவி. சுற்றி இருக்கும் மலைகளிலும் மரங்களிலும் மோதி எதிரொலிக்கும் அதன் பெருங்குரல். அதன் மடியிலிருந்து பிறந்து தொலைவிலேயே என்னை அணைத்துக் கொள்ளும் அதன் சாரலின் குளுமை. இங்குதான் என் இறைவன் தவமியற்றி, தன் தலைவனைக் கண்டுகொண்டான். எங்கே அந்தப் பாறை? அருவி விழும் இடத்திலிருந்து கொஞ்சம் தூரமாய் வட்டமாய் இருக்கும் என்றாரே? எங்கே அந்தப் பாறை? நீர்ப் பிரவாகம் அதிகமாக இருந்ததால் அது தெறித்து எழுப்பும் புகைமண்டலம் பெரியதாக இருந்தது. புகையைப்போலக் கிளம்பியிருக்கும் அந்த வட்டத்துக்குள்தான் அந்தப் பாறை இருக்கவேண்டும்.

இன்னும் கொஞ்சதூரம் நெருங்கிச் சென்றால் அதைக் கண்டுவிடலாம். நெருங்க நெருங்க அந்தப் பாறை தெரிந்தது. அந்தப் பாறையில் யாரோ அமர்ந்திருப்பதைப்போல உணர்கிறேனே! அது என்ன எனது பிரமையா இல்லை உண்மையா? உண்மைதான். நெருங்கிச் செல்லச் செல்ல அது உண்மைதான் என்று புரிந்தது. அந்த இடம் பெரும் ஒளி பொருந்தியதாக இருந்தது. உள் அமர்ந்திருப்பவர் நான் அறிந்தவர் போலவே இருக்கிறார். ஆம்! நான் அறிந்தவர்தான் அவர். அவர் வேறு யாருமல்ல. என் குருநாதர்தான். எந்த குருநாதரைத் தேடி இங்கு வந்தேனோ அதே குருநாதர்தான். எவர் உடலை அனைவருமாய் இறைவனின் நாமத்தைச் சொல்லித் தீக்கிரையாக்கினோமோ அதே குருநாதர்தான். ஒருகணம் மனம் அச்சப்பட்டது. நான் காண்பது கனவா இல்லை மாயையா? அதிகமான மனத்தேடலினால் விளைந்த பொய்யான காட்சியா? அவரை நெருங்க அஞ்சி நின்றேன். ஒளிபொருந்திய அவர் முகத்திலிருந்து அதே குழந்தைச் சிரிப்பு பிறந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவர் நா அசைந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், அவரின் கனிவான குரல் கேட்டது. அமர்ந்த நிலையிலேயே என்னைப் பார்த்துக் கைகளை நீட்டி அழைத்தார்.

"குழந்தாய் வா! என்னிடம் வா!"

நான் காட்சியில் இலயித்து இருந்ததாலோ என்னவோ கால்கள் அவரை நோக்கி நகரவேயில்லை.

"வா குழந்தாய் வா! என்னிடம் வர உனக்கு என்ன தயக்கம்? நான் உன் அப்பன்தான் வா!"கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடியிருந்தது. ஆனாலும் கால்கள் மட்டும் நகரவேயில்லை.

"ஏன் வரமாட்டேன் என்கிறாய்? நான் உன் குருநாதர்தான். சந்தேகமாகயிருக்கிறதா? இதோ பார்! மருத்துவமனையில் என் இடதுகால் நீக்கப்பட்டதை நீ அறிவாய் அல்லவா? அதே ஒரு காலற்ற நிலையில் என்னைப் பார். உனக்காகத்தான் இன்னும் அக்கோலத்தை நான் கலைத்துக் கொள்ளவில்லை. வா குழந்தாய்! வா!"

இதற்குமேல் என்னால் நிற்கமுடியாது. ‘குருநாதா’ என்று கதறியபடியே அவர் கால்களில் விழுந்தேன். தொடைப்பகுதியோடு நின்று விட்ட அவர் கால்பகுதியைத் தடவிப் பார்த்தேன். அவர் கால்களைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்தேன். அவர் கரங்கள் என் கேசத்தைத் தடவி என்னைச் சாந்தப்படுத்தின.

"அழாதே குழந்தாய் அழாதே! என்ன ஆகிவிட்டது இப்போழுது? எல்லாம் நல்லதுதான். இவ்வளவு தூரம் வந்திருக்கிறாயே! உனக்கு என்ன வேண்டும்? கேள்!" என்றார்.

எனக்குக் கேட்கத் தோன்றவில்லை.

"உனக்கு எதுவும் கற்றுக் கொடுக்கவில்லை என்று வருந்துகிறாயா? உனக்குதான் நான் ‘எல்லாவற்றையும் தேடிக் கண்டடைய வேண்டும்’ என்கிற பெரும் மந்திரத்தைக் கொடுத்திருக்கிறேனே? அதைக் கொண்டுதானே இவ்வளவு தூரம் வந்தாய். நீ மற்றவர்களைப்போல எனது பீடத்தை மட்டும் விரும்புவாயானால் நீ தாராளமாகச் சென்று இப்பொழுதுகூட அதைப் பெற்றுக் கொள்ளலாம். அதை எல்லோரும் ஏற்கும்படி நான் அருள் செய்கிறேன். ஆனால், நீ உண்மையில் நானாக வேண்டும் என்று விரும்பினால் நீ நீயாகத்தான் முயல வேண்டும். வெறும் கைகளைக் கொண்டு வியாதிகளை நான் குணம் செய்ததை நீ கண்டிருக்கிறாய். வெறும் மண் மரணத்தை வென்றதை நீ கண்டிருக்கிறாய். அவற்றையெல்லாம் நீ அறிய வேண்டினால் இதோ என் நிரந்தரமான பீடம்! இதை உனக்குத் தருகிறேன். ஆம்! இந்தப் பாறைதான் என் நிரந்தரப் பீடம். இங்கு அமர்ந்துதான் அனைத்தையும் கற்றேன். எல்லாம் நான் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் இருந்து பெற்றுக் கொண்டவைதான். இங்கு யாரும் எதையும் யாருக்கும் உபதேசித்துவிட முடியாது. எல்லோருக்கும் ஒரே குரு இந்த இயற்கைதான். அதனிடமிருந்து கற்கக் காலம் ஆகலாம். பொறுமை அவசியம்! இங்கு இருந்து நீ சேர்க்கும் உன் வலிமையைக் கொண்டு இந்த உலகிற்கு ஏதாவது செய்யும் துணிவு வேண்டும். தங்கள் பாவங்களை வியாதிகளாக, பிரச்சினைகளாகச் சுமந்து கொண்டு வரும் மக்களுக்கு, அவர்கள் பாவங்களைப் பெற்றுக் கொண்டு உன் வலிமையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நீ சேர்த்து வைக்கும் வலிமை தீர்ந்துபோகும் நாட்களில் நீயும் நோய்களைச் சுமக்க வேண்டி வரலாம். கால்களை இழந்து மரணத்தைச் சந்திக்கலாம். இதெல்லாம் செய்ய மனத்துள் துணிவு வேண்டும். குருவாவது அத்தனை சுலபமில்லை குழந்தாய்!" என்று சொல்லி என் தலையில் கைகளை வைத்தார். எனக்குள் ஒரு மின்னல் ஒளி பாய்ந்து போனதாக உணர்ந்தேன். அடுத்த கணம் அங்கிருந்து குருநாதர் மறைந்து போனார்.

அதன்பின்பு நீண்ட காலத்திற்கு அந்த அருவியின் சத்தம் மட்டுமே உண்டு கண்மூடிக் கிடந்தேன். ஒருநாள் சூரியன் உச்சிக்கு வந்த சமயத்தில் ஏதோ ஓர் அழுகுரல் என் காதுகளில் விழுந்து என் நீண்ட துயில் கலைந்தது. அழுகுரல் கேட்கும் திசைநோக்கி நடக்கத் துவங்கினேன். அந்தப் பாதை மலையடிவாரத்திற்குத்தான் போகிறது என்பதை நான் அறிந்திருந்தேன்.

About The Author