பிழைக்கத் தெரிந்தவர்கள்

வசுந்தரா ஊரிலிருந்து வந்திருக்கிறாள். வீடே அமர்க்களப்படுகிறது. அப்பாவும், அம்மாவும் குழந்தை வித்யாவைக் கொஞ்சுவதிலும், பெண்ணின் புகுந்த வீட்டுக் கதைகளைக் கேட்பதிலுமாய் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தனர், என்னைத் தவிர.

பிளாட்டின் பால்கனிக் கம்பிகள் நிச்சயம் போன ஜன்மத்தில் நிறைய தவம் செய்திருக்க வேண்டும்.

அவைகளுக்கு என் ஸ்பரிசம் எப்போதும் கிடைக்கிறதே!

கீழே எட்டிப் பார்த்தேன். விதவிதமாய் மனிதர்கள் எங்கள் அப்பார்ட்மெண்ட்ஸ் பக்கம் வருவதும் போவதும்.. எனக்கும் பொழுது போகிறது.

“மைதிலி எங்கேம்மா?” வசுவுக்கு இயல்பிலேயே பெரிய குரல். எங்கள் பிளாட்டில் பேசினால் தெருவில் கேட்கும்.

“அங்கேதான் அவளோட வழக்கமான இடத்தில் உட்கார்ந்திருப்பா” என்றார் அப்பா.

தொடர்ந்து.. “என்னமோ போ. நாங்க மூணு பேரும் ஆளுக்கொரு மூலையைப் பார்த்துண்டு பொழுதைப் போக்கறோம். எனக்கே போரடிச்சு போய் கேபிள் கனெக்ஷன் போடச் சொல்லி விட்டேன்..” என்றார்.

மைதிலி பொருத்தமான பெயர்தான். ராமாயண சீதாவுக்கு அசோகவனம் என்றால் எனக்கு பால்கனிவனம்.

கீழே எங்கள் பிளாட் சிறுவர்கள் கூச்சல் கேட்கிறது. கிரிக்கெட் விளையாட்டு ஒவ்வொரு ஷாட்டிற்கும் ஒரு அலறல்.

முதுகில் ஒரு கை படர்வதைத் திரும்பாமலேயே என்னால் உணர முடிகிறது…அது வசுவின் கை என்று.

“என்னடி நீ மட்டும் இங்கே தனியா..” சிறுவர்களின் கிரிக்கெட் விளையாட்டையே வெறித்துக் கொண்டிருந்தேன்.

“மைதிலி” மீண்டும் அழைத்தாள் வசு.

திரும்புகிறேன். என் இன்னொரு ஜெராக்ஸ் பிரதி போல நின்றிருந்தாள் வசு. என் போல சுருட்டை முடி மட்டும் இல்லை. முகவாயும் கண்ணும் அதேதான். இருவருமே அப்பா ஜாடை. இருப்பினும் இப்போது, திருமணத்திற்குப் பின் வசு நிறையவே மாறி இருக்கிறாள். சற்றே பெரிய மனுஷித்தனம் வந்திருக்கிறது.

“மைதிலி.. என்னையே ஏன் பார்க்கறே. புதுசா பார்க்கிற மாதிரி.”

ஆமாம்! புதிதுதான். இவளா என் தங்கை. என்னைப் பெண் பார்க்க வந்தவன் கடைசி நிமிட அதிர்ச்சியாய் இவளைத் தேர்ந்தெடுத்து எங்கள் சம்மதம் கேட்டதும், துளிக்கூடத் தயங்காமல் இவள் சம்மதித்ததும்.. புதிதுதான் எனக்கு.

“அவர் வந்து என்னை அழைச்சிண்டு போறேன்னு சொல்லியிருக்கார். பக்கத்து பிளாட்ல போன் இருக்கில்லே.அந்த எண்ணைதான் சொல்லி வச்சிருக்கேன். ராத்திரி எட்டு மணிக்குப் பண்றேன்னு சொல்லி இருக்கிறார்.”

‘கடலும் கடல் சார்ந்த இடமும்’ என்று படித்தது பழசு. கணவனும் அவன் சார்ந்த இடமும் என்று புதிதாய் சொல்லலாம். திருமணமான உடனே எப்படி மாறிப் போய் விட்டாள்.

“மைதிலி உள்ளே வாயேன். வித்யாவுக்கு பெரியம்மாவைப் பார்க்கணுமாம்.”

பெரியப்பா இல்லாமலேயே பெரியம்மா.

என்னை என் அனுமதியின்றி உள்ளே இழுத்துக் கொண்டு போய் அமர வைத்தாள். குழந்தையை மடியில் போட்டாள்.

மெத்தென்ற ஸ்பரிசத்தில் மனக்கதவு எங்கேயோ திறந்து கொண்டது. தன்னிச்சையாய் சிரித்த குழந்தையைப் பார்த்து மலர்ச்சி வந்தது.

“பார்த்தியா, கெட்டிக்காரிதான். எப்படி பெரியம்மா கிட்ட ஒட்டிக்கிறா பாரு. நல்லாவே பொழைச்சுப்பா…” என்றாள் வசு.

‘உன்னைப் போலத்தானே’ என்று முனகியது மனசு.

அக்காவுக்குத்தான் முதலில் என்று சொல்லி வந்ததென்ன.. எத்தனை வயசு ஆனா என்ன.. நீதான் பர்ஸ்ட் என்றவள், நிமிடமாய் மனசு மாறி கழுத்தை நீட்டியது என்ன.. பிழைக்கத் தெரிந்தவள்.

புடவையை ஈரப்படுத்தியது குழந்தை.

“அச்சச்சோ..”

“அதனால என்ன.. நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க..” என்றாள் அம்மா.

சட்டென்று ஹால் அமைதியானது.. தகாத வார்த்தை.. கெட்ட வார்த்தை மாதிரி.

வித்யாவுக்கு துணி மாற்ற அம்மா எடுத்துக் கொள்ள விருட்டென்று எழுந்து விட்டேன். மீண்டும் பால்கனி. என் உலகம். எந்த இடையூறுமின்றி, சம்பாஷணை தேவைப்படாத சந்தோஷம்.

மீண்டும் தோளில் கை படிந்தது.

“அக்கா என் மேல கோபமா?” நான் பதில் ஏதும் சொல்லாததால் அவளே தொடர்ந்தாள்.

“நான் செஞ்சது சரியா.. தப்பான்னு புரியலேக்கா. ஆனா விருப்பப்பட்டுத்தான் செஞ்சேன். மனசொப்பித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

பேசு. உன் பக்கம் நியாயம் என்று நிரூபி. பின் நிம்மதியாய் திரும்பிப் போ. நானும் என் ஜன்னல் கம்பிகளும் சற்றேனும் தனிமையில் இருக்கிறோம்.

“நாலு வருஷமா என்னமா அலைச்சல். நிம்மதியே இல்லாத வீடு. அப்பா அம்மா முகத்துல சிரிப்பைப் பார்த்து எத்தனை நாளாச்சு..” வசுவுக்கு குரல் பிசிறியது.

“அறுபதாம் கல்யாணமே வேண்டாம்னு கோவில்லே அர்ச்சனை பண்ணிட்டு வந்தாங்க.. அதுவும் நாம கட்டாயப்படுத்தி! பார்த்தேன்.. ஏன் நம்ம குடும்பம் மட்டும் இந்த மாதிரி அவதிப்படணும். இதை மாத்த முடியாதான்னு!”

என் மீதிருந்த கை நகர்ந்தது.

இப்போ நிச்சயமா அவங்க மனசுல ஓரளவுக்கு நிம்மதி, சந்தோஷம் வந்திருக்கும். பேத்தியைப் பார்த்த திருப்தி. என்னையும் சேர்த்துக்கோ. நீ மட்டும்தான் கஷ்டப்படறே. தனிமையிலே. எது தேவலே.. பழைய கஷ்டமா.. இப்போதைய நிலவரமா?

நியாயம்தான். நீ எப்படிப் போனால் எனக்கென்ன? என்ற சுயநலப்போக்கு. நான் அமைதியாக நின்றிருந்தேன்.

“அப்பாவும் நிறைய அலைஞ்சார். ஆனா சிரமப்பட்டு தேடணும். என்னை முழுமையா நேசிக்கிற, நான் எது சொன்னாலும் கேட்கிற புருஷன். விடலியே. ஓயாம நச்சரிச்சேன். உன்கிட்டே சொல்றதுக்கு என்ன.. கூட படுக்க வரும் போது.. முதல்லே உன் கல்யாணம் பத்திதான் பேச்சு. அதுக்கு உதவி செய்யறதா உறுதி வாங்கினப்புறம்தான் என்னையே நான் கொடுத்தேன். தெரியுமா அக்கா?”

திரும்பினேன். இவள் என்ன சொல்கிறாள்?

“அவரோட நண்பராம். நல்ல வேலை. இவர் சொன்னால் கேட்கிற அளவு ரொம்ப நாள் பழக்கம். உனக்கும் என்ன குறைச்சல். அவரும் என்னோடதான் வருவதாயிருந்தது. ஆனா நான்தான் வற்புறுத்தி அங்கே அனுப்பினேன். பேசி முடிவாச்சு. நிச்சயம் சம்மதம்தான்னு சொன்னாரு. இன்னிக்கு போன் செஞ்சு உறுதிப்படுத்தறேன்னாரு.”

எனக்குள் வார்த்தைகள் ஸ்தம்பித்தன.

“இனிமேல் எனக்கும் உறுத்தல் இருக்காது” என்றாள் வசு, பால்கனிக் கம்பிகளைப் பற்றி வெளியே வெறித்து பார்த்தபடி!

அவளைப் பற்றி தவறாக நினைத்தது எண்ணி எனக்கே அவமானமாக இருந்தது. அவள் தோள் மீது சாய்ந்து மனப்பாரம் குறையும் மட்டும் அழுதேன்.

About The Author