பில்லா-2, 2012ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று. அஜித்தின் 51ஆவது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு. இசையமைத்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா. ஏற்கெனவே, எதிர்பார்ப்பு இருந்தாலும் யுவன் தனது இசையால் அதை இன்னும் கூட்டி இருகிறார். இந்த பில்லா-2 ஆல்பம் ‘க்ளாஸ் டச்’ உடன் வந்திருக்கிறது. இதில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் ஒரு தீம் இசைக் கோர்வையும் அடக்கம்.
கேங்ஸ்டர்
ஹாலிவுட் பாணியில் பெண் குரலுடன் தொடங்கும் இது ஜேம்ஸ் பாண்ட் படதீம் ஸ்டைலில் ஈர்க்கிறது. இது முழுவதும் டான் பில்லாவின் பெருமை பேசுவதாக இருக்கிறது. இடையில் வரும் ஆங்கில வார்த்தைகளும் பாடலுக்குக் கூடுதல் கவனம் சேர்க்கின்றன. யுவனின் குரல் பாடலுக்கு மேலும் பலம்.
இதயம்
யுவனிடம் இருந்து கிடைத்திருக்கும் ஒரு நல்ல மெலடி. நா.முத்துகுமாரின் வரிகள் பாடலுக்கு +. இதில் வரும் தபேலாவின் இசை அவ்வளவு அருமை. இந்தப் பாடல் இனி காலர் ட்யூனாக பலரது அலைபேசிகளில் உலா வரலாம். முதல் முறை கேட்கும்போதே மனதை வருடுகிறது. உதாரண வரிகள் : "உள்ளத்திலே அறை உண்டு; வாசல் இல்லை. உள்ளே வரும் நினைவோ திரும்பவில்லை. இது கடவுளின் பிழையா? இல்லை.. கடவுளின் கொடையா?"
ஏதோ மயக்கம்
பார்ட்டி பாடல்போல இருக்கிறது. இதில் வார்த்தைகளைவிட இசையின் ஆக்கிரமிப்பு அதிகம். இடையில் வரும் ஆங்கில வார்த்தைகளை மட்டும் யுவன் பாடியிருக்கிறார்.அது பாடலுக்கு மேலும் ஸ்ருதி சேர்க்கிறது. டெக்னோ இசை, பாடலைத் திரும்பத் திரும்ப கேட்க வைக்கிறது.
மதுரை பொண்ணு
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய ஒரு குத்துப் பாடல். குத்துப் பாடல் என்றாலும் யுவனின் டெக்னோ இசையும் சேர்ந்து பாடலை வேறு ஒரு பரிமாணத்திற்கு எடுத்து செல்கிறது. பாடலைப் பாடியது வேறு யாரும் அல்ல.. நடிகை ஆண்டிரியாதான். அவருடைய குரல் பாடலுக்கு மேலும் போதை ஏற்றுகிறது. இதற்கு ‘இன்ஸ்டண்ட் ஹிட்’ ஆகும் வாய்ப்பு அதிகம்.
உனக்குள்ளே மிருகம்
பாடலைப் பாடி இருப்பது ரஞ்சித். ஹைபிட்ச்சில் பாடி இருக்கிறார். அவ்வப்போது குரல் ஹரிஹரனை நினைவுபடுத்துகிறது. இது சாதாரண மனிதனை வார்த்தைகளால் ‘டான்’ ஆக மாற்றுவதுபோல் இருகிறது. வரிகளையும் நா.முத்துகுமார் அவ்வாறே எழுதி இருக்கிறார். இதில் கிடாரின் தாக்கம் சற்றே அதிகமாக இருந்தாலும் யுவனின் மெட்டு கேட்க வைக்கிறது.
தீம்
‘அக்மார்க் யுவன் டச்’ பழைய மெட்டுதான் என்றாலும் அதற்கு ஹாலிவுட் கோட்டிங் குடுத்து கவனம் ஈர்க்கிறார். இடையில் வரும் ‘பில்லா.. பில்லா..’ எனும் குரல் கூடுதல் வசீகரம் சேர்க்கிறது பாடலுக்கு.
இந்த ஜூன் மாதம் படம் வெளிவருகிறது. விரைவில் யுவனின் இசையைக் காட்சியாகப் பார்க்கலாம். அதுவரை இசையில் நனைவோம்.”