ஹஸீனா பெத்தாவுக்குத் தன் இரண்டு பேரன்களைக் குறித்த ஞாபகம் உடனே தோன்றி உள்ளத்தில் தீ மூட்டியது. பேரன்களுக்காகவே ஓடி வந்து அவர்களைக் காப்பாற்றிச் செல்ல இருந்தவள், இப்படி அடிபட்டு, உதைபட்டு வலி தாங்காமல் முணங்கினாள். அடிபடவும், உதைபடவும் வேண்டிய வயதா இது? நொந்து நூலாகித் தன் பேரன்களை மறந்துவிட்டோமோ என்று தன்னையே ஏசித் தீர்த்தாள். அவர்களைத் தேடலானாள்; காணவில்லை. அப்படியானால் எந்தத் தெருவில் நின்று யார் யாரோடு சேர்ந்து கை கால்களை முறித்துக் கொண்டார்களோ என்ற கவலையில் தெருத்தெருவாக ஓடினாள். என் பேரன்களை கண்டீர்களா என்று எவரிடமும் கேட்க பயமாக இருந்தது. பேரன்களின் பெயர் கூறியபடி தெருத்தெருவாய் இப்படி நாய்போல் ஓடிச் செல்ல, அவளுக்கு திடீரென்று வேகம் சூழ்ந்தது. என்ன செய்வது? காரியம் நடக்க வேண்டுமெனில் வெட்கம் பாராது கண்துஞ்சாது அவள் பறந்துகொண்டே இருக்க வேண்டுமே. அப்படி நாயாகச் சுற்றி வந்ததில் அவளறிந்த உண்மை என்னவெனில் நிறைய பெண்கள் வயது வித்தியாமின்றி இப்படித்தான் தங்கள் உறவுகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே! ஒருவழியாக இரண்டு பேரன்களையும் அவள் கண்டுபிடித்தாள். ஆனால் அவர்கள் தன் பேரன்கள்தானா என்று நம்ப முடியவில்லை. பக்கத்து வீட்டு ஹாஜியாரோட பேச்சில் நம்பிக்கை வைத்து அவள் அந்த முடிவுக்கு வந்ததாக வேண்டிய அவசியத்தில் இருந்தாள். இரண்டு பேரும் ஒருவர் தலைமயிரை ஒருவர் கொத்தாகப் பிடித்து தரையில் உருண்டு கொண்டிருந்தார்கள். ‘ஓ’ என்ற குரலெடுத்து அழுதபடி ஹஸீனா பேரன்களுக்கிடையில் புகுந்தாள். யானைவாய்க் கரும்பானாள். அவள் படும் பாட்டைக் கண்டு வேறு சிலரும் அவள் உதவிக்கு வந்து அண்ணனையும் தம்பியையும் பிரித்தெடுக்கப் பார்த்தார்கள். நடக்கிற காரியமாகத் தெரியவில்லை. ஹஸீனாதான் கீழே விழுந்தாள். அவள் உடம்பில் ஆவியற்றுப் போனதாக உணர்ந்தாள். "என் பேரன்களை இப்படி சண்டை போட வச்சிட்டானுங்களே பாவிப் பசங்க, அவனுங்க உருப்படுவானுங்களா?… ஏல விடுங்கல வீட்டுக்கு வாங்கல.. என் கண்ணு முழி பிதுங்குதுல.." சத்தாம் போட்டாள். அவளுக்கு மருமகனின் ஞாபகமும் வந்தது. என்ன ஆனதோ? ஏதானதோ? இரண்டு மூன்று பேரை ஆஸ்பத்திரிக்கு எடுத்து போய் விட்டதாகத் தகவல் பரவியது. அதிலொருவர் தன் மருமகந்தானோ என்ற சந்தேகம் அவளை ஆட்டுவித்தது. பலதலைக்கொள்ளி எறும்பானாள். தலையிலடித்துக் கொண்டாள். ஹஸீனாவின் நிலைமை கண்டு இரங்கி ஒரு பெண் அவளைத் தன் வீட்டுக்குள் தள்ளிக்கொண்டு போனாள். உடன் அவள் கணவன் ஓடோடிவந்து "அவ நாளைக் கழிச்சுத்தான் பெருநாளுன்னு சொல்லிக்கிட்டு அலையுறா. நாளைக்கு நாம் பெருநா கொண்டாடும்போது நம்மளையும் இப்படித்தான் புடிச்சி ஏசுவா? அவளையா வீட்டுக்குள்ள ஏத்துறது?" என்று கேட்டபடியே பாய்ந்து வந்து அவளைத் தள்ளினான். சுவரின் மீது மோதிச் சரிந்தாள் ஹஸீனா. ஆனாலும் அந்தப் பெண் ஒரு தம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து ஹஸீனாவின் முகத்தில் அடித்தாள். ஹஸீனாவின் உயிரும் உணர்வும் திரும்பின. ஒரு கணமும் தாமதியாமல் எழ முயற்சி செய்தாள். உடம்பு பூராவும் வலித்தது. "என் பேரனுங்கள எங்க? இங்குன சண்டை போட்டுட்டுக் கெடந்தாங்களே..? என்று கேட்டாள். "ஒருத்தன ஒருத்தன் விரட்டிக்கிட்டு மூணாம் தெரு பக்கமா பாய்ஞ்சுட்டானுங்க" என்று யாரோ சொல்லக் கேட்டு மெதுவாய் நகர்ந்தாள். காலை யாரோ பிடித்து இழுப்பது மாதிரி இருந்தது. இழுத்து இழுத்து நடந்தாள்.
அவள் நடப்பதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நூலாசிரியர் சௌகத் அலி அவளின் முன்னே போய் நின்றார். சௌகத் அலி சில நூல்கள் எழுதி வெளியிட்டிருந்தவர். அதிலும் அவர் எழுதிய "இஸ்லாமிய முறையில் தாடி வளர்ப்பது எப்படி?" என்ற நூல் அவருக்குப் பெரும் புகழ் சேர்த்தது; பல பதிப்புகள் கண்டது. அடுத்து "நகம் வெட்டுவது எப்படி?" என்ற நூலைத்தான் எழுதவிருந்தார். அதற்காக பல மார்க்க அறிஞர்களின் நூல்களையும் வாங்கி, கடும் ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். இந்த நூலும் பல பதிப்புகள் காணவேண்டும் என்பது அவரின் நோக்கமாயிருந்தது. ஹஸீனாவின் நிலை கண்டு இரங்கி, அவர் மனம் வேறொரு முடிவுக்கு வந்தது. நகம் வெட்டுவது குறித்த ஆராய்ச்சியைத் தற்காலிகமாக ஒத்தி வைக்க விரும்பினார்.
"எம்மா, நீங்க கவலப்படாதீங்க, உங்க நிலம எனக்கு ரொம்ப கவலைய உண்டாக்கிடுச்சி. அதனால் அடுத்த வருசத்துக்குள்ள பெருநாள் கொண்டாட ‘இஸ்லாமிய முறைப்படி பிறை பார்ப்பது எப்படி?’ ன்னு ஒரு பெரிய ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிடலாம்னு திட்டம் போட்டுட்டேன்"
ஹஸீனா கீழே குனிந்து ஒரு கைப்பிடி மண் அள்ளினாள். "இருக்கிறதயெல்லாம் குழப்பமாக்கிட்டு அப்புறம் ஆராய்ச்சி வேறயா? நீங்களும் உங்க ஆராய்ச்சியும்! எல்லாம் நாசமாப் போவட்டும்!" என்றபடி மண்ணை அள்ளி அள்ளி வீசினாள். சளைக்காமல் வீசினாள். புழுதிப்படலம் உண்டானது. அவள் உருவம் மறைய மறைய குரல் மட்டும் வீறிட்டெழுந்தது. சாப வசைகள் தொடர்ந்து ஒலிக்க அது காற்றோடு காற்றானது. ஊரே புழுதிப்படலத்தில் மூழ்கிக் கொண்டிருந்தது.
(முடிந்தது)
(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“