பிறைக்கூத்து (3)

அவளுக்கு கோபமாகிவிட்டது. "முப்பது நோன்புக்குப் பொறுமை இல்லாம நாளைக்குப் பெருநாள்னு இழுத்து வந்தாச்சு. அப்படியாவது ஈத் முபாரக்குன்னு நாளைக்குச் சொல்லித் தொலை. இப்ப வந்து ஏன் சொல்லிக்கிட்டு நிக்குற?"

"பெத்தா அந்தப் பெருநாள நீங்க நாளைக்கி கொண்டாடுங்க. எங்களுக்கு இன்னைக்குப் பெருநா. நான் தொழப்போறேன்". பெரிய அதிர்ச்சியாகிப் பேந்தப் பேந்த விழித்தாள் ஹஸீனா. "என்ன எழவு? இந்த ஊர்லயும் மூணாவது கும்பல் வந்துடுச்சா? போன வருஷம் கூட எங்களோடத்தானே பெருநா கொண்டாடுன? இந்த வருசம் உனக்கு என்ன நோக்காடு வந்துச்சுன்னு இனைக்குப் பெருநாள்னு சொல்றே?"

"பெத்தா நீங்க எல்லாரும் தப்புத்தப்பா இஸ்லாத்தில் புரிஞ்சுக்கிட்டு தப்புத்தப்பா நடக்குறீங்க. இன்னைக்கு சவூதியில பெருநா கொண்டாடுறாங்க. அதனால் நாங்களும் கொண்டாடப் போறோம். இன்னையிலேருந்து பள்ளிவாசலே எங்க கைவசம்தான்.."

ஹஸீனா பெத்தாவைச் சுழற்றி வீசியது யாரென்று தெரியவில்லை. தலை சுழன்று கொண்டேயிருக்க, காணு சுழல்பொருள்களிலெல்லாம் சின்னச் சின்னக் கீற்றாய்ப் பல்லாயிரம் பிறைகள்.

"என்ன பெத்தா ஒரு மாதிரியா தள்ளாடுறியே?"

"இல்லே, என்னைய யாரோ புடிச்சித் தள்ளுனது மாதிரி இருந்தது"

"இங்கே யாரும் வரல்லியே. நான் தான் நிக்கேன் முழுமாடு மாதிரி"

"சரிதான். சரிதான். முழுமாடு மாதிரின்னு சொன்னியே. ரொம்பப் பொருத்தமாத்தான் சொன்னே. நீதான் என்னைய முட்டிக் கீழே தள்ளிட்ட!"

"நான் உன் பேரன் முஷாரப். கண்ணு தெரியல்லன்னா நல்ல கண்ணாடியா மாட்டு."

"உனக்கு நல்ல கண்ணா இருந்தா பொறவு எப்படி நீ நேத்து பிறை பார்த்த?"

"அத எங்க அமீரு சொல்லிட்டாரு. நாங்க பொறை பாக்கணும்னு அவசியமில்ல. சவூதியில இன்னைக்கு பெருநா கொண்டாடுறாங்க. அது போதும் எங்களுக்கு."

"நேத்துதான அமாவாசை. எப்படி பொறை தெரியும்?"

"பெத்தா இந்த மாதிரி அமாவாசை, பௌர்ணமின்னு மத்தவங்க பேசுறதெல்லாம் பேசாத நீ. அல்லாவோட கோபத்துக்கு ஆளாயிருவே! சவூதியில ஒண்ணு சொல்லிட்டாங்கன்னா அதுக்கு மறுபேச்சு பேச நாம யாரு?"

"அந்தப் பேச்செல்லாம் பேசிட்டு நம்ம ஊர்ல எதுக்குல குழப்பம் பண்ணுறீங்க..?"

"இதையெல்லாம் பேசிக்கிட்டு நிக்க நேரமில்ல எனக்கு. தொழுதுட்டு வந்து நான் உன்னைய கவனிச்சுக்குறேன்."

சைக்கிளில் வேகமாக ஏறினான். அதில் அவன் ஏறிய விதமும் தெரியவில்லை; பறந்த விதமும் தெரியவில்லை. சற்றுமுன் அவன் இங்கு இருந்தானா, அவனுடன்தான் பேசினோமா என்பதும் பெத்தாவுக்குப் புரியவில்லை. அனேகமாக அவள் கனவுக்கு நனவுக்கும் இடையில் இருந்திருக்க வேண்டும். சற்று நேரத்தில் இன்னொரு சைக்கிள் வந்து நின்றது. அதிலிருந்து நவாஸ் இறங்கினான். தன்னிடம் அடிபட்டுவிட்டு எந்தச் சுரணையோடு இவன் தன்முன் வருகிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அவன் கோபமாய்ப் பேசியபடி உள்ளே வந்தான். "எங்க அவன்?"

"யாரை கேக்குறல்ல?"

"அவன்தான் என் காக்காவா ஒருத்தன் என்கூட வந்து பொறந்தான அவனைத்தான் கேக்குறேன்"

"அவனுக்கும் உனக்கும் என்னல ஆச்சு. ஒண்ணா கட்டிப்பிடிச்சுல்ல கெடந்தீங்க? இப்போ எந்த சைத்தான் வந்தான் உங்களுக்குள்ள?"

"உனக்குத் தெரியுமா? அவன் இன்னைக்கு பெருநா கொண்டாடுறானாம். பெருநா கொண்டாடிடுவானா அவன்? குழப்பம் பண்றதுக்குன்னே வந்துருக்கானுவோ மசுராண்டிங்க. அந்தக் கும்பல்ல இப்போ இவனும் சேந்துக்கிட்டான்."

"நீயும் நாளைக்குப் பெருநா கொண்டாடப் போறதா சொல்லிக் குழப்பம் பண்ணிட்டு இருக்கே! பொறையக் கண்டது யாரு?"

"இங்க பாரு பெத்தா. இதெல்லாம் அனாவசியாமன கேள்வி. எங்க வேலையில ஒண்ணும் நீ தலையிட வேண்டாம். உன்கிட்டே என்ன பேச்சு? முதல்ல அவனைத் தேடிப் புடிக்கிறேன். அவன் இன்னைக்கு எப்படி பெருநா கொண்டாடறான்னு பாக்குறேன். தாயோளி மவன.. ஒரே சீவா சீவிருவேன்"

திடீரென்று அவன் யுத்த சன்னதம் கொண்டான். அவன் விழிகள் அளவுக்கு மீறி விரிந்து அனல் கக்கின. இவன் விட்ட மூச்சின் வெம்மை பெத்தாவைச் சுட்டது. என்ன இது, ஒண்ணும் புரியலியே, என்று பெத்தா கண்மூடித் திறப்பதற்குள் மின்னலானான் நவாஸ். சாற்று நேரத்தில் எங்கேயோ அலைகடலுக்கும் அப்பாலிருந்து ஏதோ இரைச்சல் கேட்டது போன்ற பிரமை உண்டானது ஹஸீனா பெத்தாவுக்கு. இந்தக் கூச்சலுக்கிடையே ஒலிபெருக்கியைச் சரி செய்கின்ற "டொக் டோக்" சப்தங்கள் கேட்டன. "மஹல்லாவாசிகளுக்கு… அஸ்ஸலாமு அலைக்கும். நிற்க. நேற்று சவூதியில் பொறை பார்த்துவிட்டர்கள். அதனால் இன்று பெருநாளைக் கொண்டாடுவது நம் அனைவரின் கடமையுமாகும்" என்று யாரோ ஒருவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, விரசமான வார்த்தையைக் கூறிக்கொண்டு இன்னொருவன் கத்துவது கேட்டது. "மைக்க விடுல. இன்னைக்கு நீங்க பெருநாள கொண்டாடிருங்க. பார்ப்போம். கையும், காலும் பறந்துரும்லே!" என்ற குரலும் கேட்டது. பிறகு ஒரே இரைச்சல். மைக்கின் அலறல் பள்ளிவாசல் குழப்பங்களை ஊருக்கெல்லாம் கொண்டு வந்தது. விடாத.. பிடி.. அடி. மைக்கையே பிடுங்கி அடிப்பதுபோல இருந்தது. ஹஸீனாவுக்குக் காதுகளை நம்பவே முடியவில்லை. கூச்சல் போட்ட வண்ணம் தெருவில் ஜனங்கள் ஓடலானார்கள்; ஆண்கள் பெண்கள் குழந்தைகள்! பையன்களுக்கு வேடிக்கையான வேடிக்கை. சிரித்துக் கும்மாளமிட்டு விசிலடித்தபடி ஓடினார்கள் அவர்கள். இனி ஹஸீனாவுக்கு மட்டும் வீட்டில் என்ன வேலை? "யா அல்லாவே, யா மொம்மதே" என்று ஓடினாள். எல்லாத் தெருக்களிலும் பள்ளிவாசலை நோக்கி ஓடிவரும் ஜனங்கள்.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author