பிறைக்கூத்து (2)

திடீரென்று ஊர் பதற்றம் கொண்டது. ஒரு சிறு கலவரத்தில் தள்ளப்பட்டதைப் போல மக்களின் படபடப்பு. பள்ளி வாசலிலிருந்து ஒலிபெருக்கி அலறியது. தென்காசிக்கு அருகிலுள்ள ………… கிராமத்தில் பிறை பார்க்கப்பட்டிருப்பதால், உடனே இன்று பெருநாள் கொண்டாட வேண்டுமென்றும் ஒன்பதரை மணிக்குப் பெருநாள் தொழுகை நடக்குமென்றும் அலறியது ஒலிபெருக்கி. என்ன மாயமோ, அந்த முப்பதாவது நோன்பை எல்லோரும் கைவிட்டு விட்டார்கள். பெருநாள் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. பெருநாள் மகிழ்ச்சியின் ஒரு துளியைக் கூட எவரும் உணர்ந்தாரில்லை. எல்லாம் சப்பென்று ஆகிவிட்டது. ஆனால் அன்று மாலையில் மேலை வானில் சின்னஞ்சிறு கீற்றாத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு எல்லோரையும் பகடி செய்தது பிறை. எலோரும் விழிபிதுங்கிப் பேசலானார்கள். "பொறை ரொம்ப சிறிசாத்தான் இருக்குது. இந்தப் பொறை எப்படி நேத்து தெரிஞ்சிருக்கும்? பேதீல போறவனுவோ, நேத்தே பொறை கண்டாச்சின்னு சொல்லி பெருநாளையும் கொண்டாடித் தொலைச்சிட்டானுங்களே!" பலருக்கும் ஆற்றாமையாக இருந்தது. சிலருக்கோ நோன்புச்சுமை முன்னாடியே தீர்ந்து போனதில் மனசுக்குள் கும்மாளம். அதைக் காட்டிக் கொள்ளக் கூடாதென முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டார்கள்.

போன வருசத்துப் படிப்பினை இருப்பதால், இந்த வருசமும் அப்படியான அசம்பாவிதம் ஏதும் நிகழ வாய்ப்பே இல்லை என்று அவள் உறுதியாக நம்பினாள். ஆனால் வம்பு செய்ய இப்போதே சிலர் தார்பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள் எனப்து தெளிவாகி விட்டது. பஜாரில் பொடியன்மார்களின் செவிகளில் விழும்படியாகப் பேசுகிற பேச்சு, ஓர் அதிகாரம் தன் வலையை விரித்துக் கொண்டு வருவதைக் காட்டியது. கோடி ஜனங்களும் வாகாகப் பார்க்கிற வகையில் பிறையானது மிக மிக உயரமான இடத்தில் அதுவும்கூட வானத்தில்தான் பவனி வருகிறது. அப்படியிருந்தும் வருஷாவருஷம் ஊர் முழுக்கக் கூடி நின்றும் பிறை பார்க்க முடியாது போக, ஏதோ ஒரு கிரமத்தில் ஏதோ ஒரு இரண்டு பேர் (அது என்ன கணக்கு இரண்டு பேர்!) மாத்திரமே வருஷாவருஷம் கண்டுபிடித்து விடுகிறார்களே, இது எப்படி? ஹஸீனா பெத்தாவுக்கு இந்தக் குழப்பத்தின் மூலம் எது என்று புரிகிறமாதிரி புரிகிறது; புரியாமலும் போய்விடுகிறது. இப்போது இந்தப் பிறை பற்றித்தான் மட்டுமே யோசித்துக் குழம்புவதாகப் பட்டது. மற்றவர்கள் எல்லாம் சந்திர சூரியன்களைத் தங்கள் கைவசமாய் வைத்துக்கொண்டு தங்கள் வசதிப்படியே சுழற்றிச்க்கொண்டு வருவதுபோல அவள் பீதியடைந்தாள்! சனிக்கிழமை கொண்டாட வெண்டிய பெருநாளை வெள்ளிக்கிழமையே கொண்டாட வைத்து விட்டால், அன்று தானும் அந்த முப்பதாவது நோன்பைக் கை கழுவிவிட்டுப் பெருநாளை அனுசரித்துதான் ஆக வேண்டுமோ? சரிதான். சென்ற ஆண்டு மட்டும் என்ன நடந்தது? அலையில் அகப்பட்ட சிறு துரும்புக்கு என்ன வலிமை? ஹஸீனா ரொம்பவே கிறங்கினாள்.

வியாழக்கிழமை காலையிலேயே பஜார் பரபரப்பாகிவிட்டது. காலையிலேயே, சுபுஹு தொழுதுவிட்டு வரும்போதே எல்லோருக்கும் ஞானக்கண்கள் திறந்துவிட்டன. ‘இன்னைக்கு சாயங்காலம் பொறை தெரிஞ்சிரும்’

பஜாரில் பிரதிபலித்தது அந்தப் பரபரப்பு. போன வருசம் போல இந்த வருசமும் கடைசி நொடியில் அரக்கப் பரக்க என்று ஆகிவிடக் கூடாது. உஷாராகிவிட்டது ஊர்ஜனம். கடைகளில் சுறுசுறுப்பான வியாபாரம். டெய்லர் கடைகளில் கடைசிநேர முற்றுகையை நிகழ்த்திக் கொண்டேயிருந்தார்கள். அனைவரின் முகங்களிலும் பற்கள் வெளியே தெரியும் பிரகாசம். புதிய டிசைன்களில் வந்து குவிந்த கைலிகளுக்காக இளைஞர்கள் படையெடுப்பு. வீட்டிற்குள் இருந்தாலும் ஊரில் பரபரப்பு அவளின் நாடி நரம்புகளை ஊடுருவுகிறாப்போல இருந்தது. அவளுக்கு உறுதியாகிவிட்டது. இன்னைக்கு சாயங்காலம் பிறைய பார்க்கலேன்னாலும் நாளைக்குப் பெருநாள்னு நிச்சயமாயிடுச்சு. குழப்பம் – அவசரம் – படபடப்புன்னு நம்ம சமுதாயம் விழுந்திடிச்சு. பெருநாள் கொண்டாடுறது மட்டும்தான் நம்ம லட்சியம்னு இந்த ஜனங்க இப்படி ஆயிப் போயிட்டானுங்களே.." பெத்தாவின் கண்கள் தளும்பி வந்தன.

தன் காலத்திலேயே தானறியாத ஒரு சமூகத்திற்குள் கூட்டம் கூட்டமாய் மக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். வாரந்தோறும் பள்ளி வாசல்களில் பெரும் பெரும் பிரசங்கங்கள் நடக்கின்றன. சகல் திசைகளிலிருந்தும் சகலவிதமான அறிஞ்ர்களும் வந்து ஓங்கிய குரலில் சமூகத்தின் வலிமை பற்றியும், ஒற்றுமை எனும் கயிற்றினைப் பற்றிப் பிடித்துக் கொள்வது பற்றியும் நுணுக்கத்திலும் நுணுக்கமாக, தெளிவிலும் தெளிவாகப் பேசுகிறார்கள். வாழ்க்கை நடமுறைகளை எளிமையிலும் எளிமையாக இறைவன் நமக்கு அருளியிருப்பதாகவும் சொல்லிச் சென்றதை ஹஸீனா நூறாயிரத்துக்கு நூறாயிரம் முறையாகக் கேட்டுக் கேட்டு உள்ளத்துக்குள்ளே பெருமிதமாய்த் தளும்பியிருக்கிறாள். முன்புபோல உள்ளூர் மதரசாக்களில் ஓதிப் பயின்றவர்களாய் இல்லாமல் மக்காவிலிருந்தும் – மதீனாவிலிருந்தும் கூடப் பழுதறக் கற்றுத் தேர்ந்து வந்த மாமேதைகளோடு சமூகம் நிறைவு கண்டு இருக்கிறது. இப்படியாகப்பட்ட மார்க்க அறிவும், மார்க்க அறிஞர்களும் பெருகப் பெருக கோஷ்டிகளும் குழப்பங்களும் பெருகிப் பெருகி ஊர் சனக்காடு, பொணக்காடு என்று ஆகிவிட்ட மர்மம் மட்டும் ஹஸீனாவிற்குத் துலங்கவேயில்லை. அவள் கலங்கிப்போன மனசோடு சுவரின்மீது சாய்ந்தாள். உலகம் இருண்டு வருவதாக இருந்தது.

நல்லவேளையாக அவள் அவ்வாறு சோர்ந்து சாய்ந்து வெற்றுச் சதைத் திரளாகக் கீழே விழுவதற்கு முன் அவல் பேரன் முஷாரப் குரல் கொடுத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தான். வாழைக்காய் அடி வாங்கிவிட்டு நவாஸ் என்றைக்கு வீட்டை விட்டு ஓடினானோ அதன்பின் அவன் வரவேயில்லை. தான் அடிபட்ட விஷயத்தை தன் முஷாரப் காக்காவிடம் நவாஸ் சொன்னானோ – சொல்லவில்லையோ, முஷாரப்பும் கண்ணிலேயே படாமல் மறைந்துவிட்டான். இப்போது அவன் குரல் கேட்டதும் அவள் கையூன்றி எழுந்தவளாக அவனைப் பார்த்தாள். புதுமையாக இருந்தது. இன்னும் கண்களை நன்றாகக் கசக்கிவிட்டுப் பார்த்தாள். முஷாரப் இப்போது தெளிவாகத் தெரிந்தான். புதுச்சட்டை, புதுக்கைலி, கமகம வாசனை, கையிலே ஒரு கைத்துண்டு, ‘ஈத்முபாக பெத்தா’ என்று பெத்தாவை நெருங்கினான்.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author