எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது தாமுவின் குணம். எங்கேயாவது, எதற்குள்ளாவது வைத்து விட்டு தேட வைப்பது ருக்குவின் செயல். இதனால் அடிக்கடி உப்புப் பெறாத விஷயங்கள் விசுப ரூபமாக உருவெடுத்து வீட்டை இரண்டாக்கி விடும். தாமுவிற்கு கட்டைக் குரல். ருக்குவிற்கு கீச்சுக் குரல். இரண்டும் ஏழுகட்டை வரை ஏறி இறங்கும். ஒரு தடவை இந்தப் புயல் அடித்தால் இரண்டு நாள் அமைதியாகி பிறகுதான் குடும்பத்தில் சகஜ நிலை திரும்பும்.
ஒருநாள் பணிமனை செல்லும் காலை நேரத்தில் கச்சேரி களை கட்டி விட்டது.
சீப்பை எங்கே வச்சு தொலச்சே. உன்னதை தொலச்சுப் புட்டு என்னதையும் எங்கேயோ கடாசிப்புடுறே. எத்தனைதான் வாங்கினாலும் சமயத்துக்குக் கிடைக்காம பாத்துக்கிறே குணத்தை மாத்திக்கவே மாட்டியா. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, ஆனா..
மனுசனாட்டம் பேசுங்க. தேடிப்பார்த்தா குடியா முழுகிடும். சரியான நேரத்துக்கு டிபன் செஞ்சு, டப்பா கட்டி, மஞ்சுவை ஸ்கூலுக்கு தயார் பண்ண மாடாத்தான் உழைக்கிறேன். இருபத்து நாலு மணி நேரம் இந்த வீட்டுக்காக பாடாய் படுகிறவளை எப்போதான் புரிஞ்சுக்கிற பக்குவம் வரப்போவுதோ. மூளைக்குப் பதில் களிமண்..
சனியனே, எதுக்கும், எதுக்கும் முடிச்சுப் போட்றே. நானும் ஓடியாடி ஒத்தாசை பண்ணாட்டி குடும்பம் நடத்திடுவியா. ஒரு நல்ல பழக்கத்தை கத்துக்கிட்டா தலை வெடிச்சுடுமா. கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி எத்தணை தடவை சொன்னாலும் மரமண்டையிலே ஏறமாட்டேங்குதே.
ருக்கு வாய் திறக்குமுன் மகள் மஞ்சு கைதட்டி சிரித்து அம்மாவுடைய பின் தலையைக் காட்டினாள். அங்கு தாமுவின் சீப்பு சொறுகப்பட்டிருந்தது. அப்போது ஸ்கூல் வேன் வாசலில் வந்து ஒலி எழுப்ப தாமு, மஞ்சுவை தூக்கிக் கொண்டு போனதால் கச்சேரி ஒரு முடிவுக்கு வந்தது.
வழக்கம்போல் இரண்டு நாட்கள் கழித்து ஊடல் ஆரம்பிக்க கொஞ்சிக் குழாவ மகிழ்ச்சி களை கட்டியது. அடுத்த வாரம் வரப்போகும் மகளின் ஆறாவது பிறந்த நாளுக்கு தரவேண்டிய பரிசைப் பற்றி விவாதம் தொடர மஞ்சு அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
இந்தத் தடவை மஞ்சுவுக்கு கிளி பச்சைக் கலரில் பட்டுப்பாவாடையும் அதற்குத்தகுந்த சட்டையும் எடுப்போங்க. அந்த ட்ரஸ்லே காதுலே ஜிமிக்கியும் கழுத்திலே செயினும் போட்டுட்டா பார்க்க மஹாலட்சுமியாக இருப்பா
எந்தக் காலத்தில் இருக்கே ருக்கு. இப்போ மல்டி கலரில் கவுன் போட்டா மார்டன் ட்ரஸ்லே சின்ட்ரெல்லா மாதிரி ஜொலிப்பா.
விவாதம் கச்சேரியை ஆரம்பிக்கு முன் மஞ்சு இடை மறித்து பேசினாள்.
எனக்கு நீங்க எதுவும் வாங்கவேண்டாம். பர்த்டேவுக்கு நான் கேட்குறதை மட்டும் வாங்கிக் கொடுத்தா போதும்.
ஏககாலத்தில் இருவரும், எதுவேணுமின்னாலும் கேளுடா கண்ணா. அதை வாங்காம வேற வேலை எங்களுக்கு என்ன இருக்கு.
அப்போ நூறு சீப்புகள் வாங்கிக் கொடுங்க.
இருவரும் வியந்துபோய் விவரம் கேட்க பதில் சொல்லி அசரவைத்தாள்.
நீங்க சண்டை போடாமல் இருக்கத்தான். அம்மா சீப்பை தொலச்சால் அங்கே வச்சுக்கிட்டே இருப்பேன்.
தாயும் தந்தையும் அசடு வழிய சிரித்ததோடு மகளின் நன்மைக்காக எதிர்காலத்தில் கச்சேரியை தவிர்க்க முடிவெடுத்தார்கள்.
பலர் வீட்டிலும் நடக்கும் கதைதான். ஆனால் இன்தக் கதையில் வன்த முடிவுபோல் நடன்து கொன்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! குழன்தைகளின் நல்ல மனவளர்சிக்கு அதன் பெற்றோர்கள் சுமுகமாக நடன்து கொள்ள வேன்டும் என்பதைப் புரின்து கொள்வதே இல்லை பலர்.