பிரியாணி – இசை விமர்சனம்

ஒரு தமிழ்ப் படத்தின் பாடல்களுக்காக சி.பி.சி.ஐ.டி வரை சென்றது இதுதான் முதல்முறையாக இருக்கும். அதை விளம்பரத்துக்காகச் செய்திருப்பார்களோ என்று கூடத் தோன்றுகிறது (பாடலைக் கேட்ட பின்). யுவனின் 100ஆவது படம் என்று ஏக பில்டப்புக்குப் பிறகு வெளிவந்திருக்கும் பாடல்களைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்!

பிரியாணி

வித்தியாசமான புல்லாங்குழலின் ஒலியுடன் தொடங்கி, ‘ஏதோ புதுசாப் பண்ணியிருக்கார் போல’ என்று தோன்ற வைத்துத் தன் பக்கம் இழுக்கிறது. முக்கால்வாசி ஆங்கிலம் ஆங்காங்கே தமிழ் எனும் பாணியில் இது தலைப்பை விளம்பரப்படுத்துகிறது. முதலில் வந்த புல்லாங்குழலின் இசை பின்னர் விசிலில் ஒலிக்கிறது. "யாருப்பா அது?" என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. பவதாரிணி, தன்வி, விலாசினி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

நானா நானா

ஆரம்ப ஹம்மிங்கை யுவனும் பிரேம்ஜியும் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லாமலே தெரிகிறது. தேவன் ஏகாம்பரம் பாடியிருக்கிறார். இசையில் முனைப்பு தெரிகிறது. ஆரம்பத்தில், ‘என்னடா இது…’ என்று தோன்ற வைத்தாலும் சில நொடிகளில் யுவன் கவனம் ஈர்க்கத் தொடங்குகிறார். டெக்னோ இசையின் ஆதிக்கம் அதிகம். கேட்கக் கேட்க ரசிக்க வைக்கும் பாடல் இது.

படு டேஞ்சர் லவ்வு என்பது!
அது டெங்கு ஃபீவர் போன்றது!
அட வேண்டாம் அந்தக் கொசுக்கடி!
அது வைக்கும் ஆளை ஐயோ அம்மாடி!

பாம் பாம் பாம் பெண்ணே!

ஆல்பத்தில் இது ஒன்றுதான் சற்றே மெலடி வகை. ராகுல் நம்பியார், ரம்யா பாடியிருக்கிறார்கள். கோபம் கொண்ட காதலியைச் சமாதானப்படுத்த முயற்சிக்கும் பாடல். இசையில் பரிசோதனை முயற்சி நடத்தப்பட்டிருக்கிறது! அதன் வெற்றி தோல்வி சில நாட்களில் தெரியும். சற்றே ஆர்க்கெஸ்ட்ரா பாணி இசை.

நெஞ்சைத் தாக்கிடும் இசையே நில்லடி!
உனக்காய்த் தீட்டிய வரியோ நானடி!
கேட்காத பாடலாய் உன் கை கோக்கவா?
கசப்பை நீக்கியே காற்றில் தித்திப்போம் வா!

எதிர்த்து நில்!

ஜி.வி, விஜய் ஆண்டனி, தமன், இமான் என நான்கு இசை அமைப்பாளர்கள் சேர்ந்து பாடியிருக்கும் பாடல்! விஜய் ஆண்டனியின் குரலை மட்டும் எளிதாகக் கண்டுபிடிக்க முடிகிறது. ஸ்ருதி ஏற்ற அவ்வப்போது பேஸ் கித்தார் ஒலிக்கிறது. என்னதான் வாசித்தாலும் சரோஜாவின் நிமிர்ந்து நில் நமக்கு ஞாபகம் வரத்தான் செய்கிறது. இதுவும் அப்படி ஒரு நம்பிக்கை விதைக்கும் பாடல்தான்.

நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!

Run For Life

சைக்கோ குழுவினரும் கானா பாலாவும் இணைந்து பாடியிருக்கும் பாடல். சாக்ஸபோன் ஒலியுடன் தொடங்கிப் போகப் போகத் தடதடக்கிறது. படத்தின் கதை இதுவாகத்தான் இருக்குமோ என்று கூட யோசிக்க வைக்கிறது. முதல் பாதி வெஸ்டர்ன், பின்பாதி வெஸ்டர்ன் கருவிகளில் நம்மூர்ச் சாயல் இசை. பின் பாதியில், கானா பாலா பாடலைக் காப்பாற்றுகிறார். ஏதோ ஒரு பழைய பாடலை ஞாபகப்படுத்துகிறது. யாருக்காவது ஞாபகம் வந்தால் கருத்துக்களாகக் கீழே அதைப் பதிவு செய்யுங்கள்!

மிசிசிபி

அநேகமாக, தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து, இப்படி அடல்ட்ஸ் ஒன்லி பாடல் பாடிய ஒரே நடிகர் கார்த்தியாகத்தான் இருப்பார். இவருடன் பிரேம்ஜி, பிரியா ஹிமேஷ் இணைந்து பாடியிருக்கிறார்கள். வித்தியாசமான இசையுடன், நன்றாகத்தான் பாடியிருக்கிறார். தனியாகக் கேட்கலாம். பண்பலை வானொலியில் கூடப் போட முடியாது. 100ஆவது ஆல்பத்தில் இப்படி ஒரு பாடல் அவசியமா? கார்த்திக்கு இருந்த குடும்பப்பாங்கு ரசிகர்கள் கூட்டத்தை ‘அலெக்ஸ் பாண்டியன்’ கொஞ்சம் காலி செய்தது. இந்தப் பாடல் மிச்சத்தையும் காலி செய்யாமல் இருப்பது வெங்கட் பிரபு கையில் இருக்கிறது!

இது போக, ‘நானா நானா’ பாடலுக்கு இரு வேறு வடிவங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கேட்கலாம் ரகம்; மற்றொன்றில் இரைச்சல் அதிகம்.

யுவனின் 100ஆவது படம் என்று சிறப்பாகச் சொல்லும்படிப் பாடல்கள் இல்லை. (இது எனது தனிப்பட்ட கருத்து. நீங்கள் ‘மூன்றுபேர் மூன்று காதல்’ படத்தை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நீங்களும் இதே கருத்தைச் சொல்ல வாய்ப்பிருக்கிறது). 100ஆவது படம் என்று சொல்லாமல் இருந்தால் கூடப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்; இவ்வளவு எதிர்பார்ப்புகள் இருந்திருக்காதே!

பிரியாணி – வியாபாரம் ஆகும்.

About The Author

1 Comment

  1. வெற்றியரசன்

    வாழ்க்கையே அஸ்தமாகிறதநிழலைப் பார்த்து நிஜம் சூடுபோட்டுக் கொள்கிறது. தொலைக்காட்சியில், சினிமாவில், சின்னத்திரையில் இப்படி பல. அதில் பிரியாணியும் ஒன்று.

Comments are closed.