ஜூன் 4 2008.
அன்புள்ள ராமலிங்கம்,
வணக்கம். உனது கடிதங்கள் கிடைத்தன. உன் மனக் குமுறலை வெளியிட்டிருக்கிறாய். நியாயம்தான். எனக்கு எள்ளளவும் கோபமில்லை. கோபப்படுவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது? உனக்கு என்னைத் திட்ட உரிமையிருக்கிறது. முகம் தெரியாத ஒருவன் திட்டுவதை விட நீ திட்டுவது ஒன்றும் பெரிய மனச் சங்கடத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை. நீ கொடுத்தவன். நான் உனக்கு உரிய காலத்தில் திருப்பிக் கொடுக்காதவன். மனைவியின் நகையைக் கழற்றிக் கொடுக்கக்கூடிய அளவுக்கு நீ நட்புக்கு மதிப்புக் கொடுத்தவன். உனக்கு உன் மனதிற்கு ஏற்ற மனையாள் அமைந்தது நீ செய்த பெரும் பாக்கியம். ஆனால் என் மனைவியைப் பார். கஷ்டமான காலத்தில் என்னைக் கைவிட்டவள் அவள். உதறி விட்டுப் போய்விட்டவள். உன்னைக் கட்டிக்கொண்டேன் என்பதற்காக வாழ்நாள் பூராவும் நானும் கஷ்டம் அனுபவிக்க வேண்டும் என்பது தலைவிதியா என்று கேட்கிறாள். அவர்கள் வீட்டில் யாரும் அவள் பேச்சை இன்று வரை எதிர்த்தோ, மறுத்தோ பேசவில்லை. பணத்திமிர் அவளை
அவ்வாறு பேச வைக்கிறது. அவர்களை அவ்வாறு இருக்க வைக்கிறது. உண்மையிலேயே என் பிஸினஸை மேம்படுத்தப் பெரிதும் உதவுவாள் என்றுதான் நான் அவளிடம் ஒரு குறையிருப்பினும் பரவாயில்லை என்று கல்யாணம் கட்டினேன். உனக்குத் தெரிந்திருக்கும் எங்களுக்குக் குழந்தை பாக்கியத்திற்கு வழியில்லை என்று. அதுபற்றி அவள் துளியும் கவலைப்பட்டதில்லை இன்றுவரை.
உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தை என்று சொல்லி அவளை எவ்வளவோ அன்பாக வைத்திருந்தேன் நான். ஆனால் அவள் சொல்கிறாள் அது அத்தனையும் வெறும் பணத்திற்காக என்று. கடந்த கடிதம் அவள் எழுதியிருப்பதுபோல் உனக்கு வந்திருக்கும். அது நான் எழுதியதுதான். மன்னிக்கவும். உன்னை ஏமாற்ற வேண்டும் என்று அப்படி எழுதவில்லை. நாங்கள் சேர்ந்து இருக்கிறோம் என்று நீ உணர வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் அப்படி எழுதினேன் நான். அவள் என்னை விட்டுப் போய் வருடங்கள் ரெண்டு ஆயிற்று.
எனக்கு எல்லா வழிகளும் அடைபட்டபோது, என்கூட இருந்து உதவ வேண்டிய அவள் அந்தக் கணத்தில் என்னை விட்டுப் பிரிந்து விட்டாள். யாருக்கும் கிடைக்காத பாக்கியம், எனக்குக் கிடைத்திருக்கிறது. இன்று நான் தனியாய்த்தான் இருக்கிறேன். ஆனால் தொடர்ந்து நான் அப்படி இருப்பேனா என்பதைச் சொல்வதற்கில்லை. மன ரீதியாக நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கான வாய்ப்புகள் எல்லா வழிகளிலும் அடைபட்டு விட்டன. எந்தப் பொந்திலிருந்தும் நான் வெளிவர முடியாது என்று ஆகிவிட்டது.
சென்ற வாரம் கோர்ட்டிலிருந்து ஜப்திக்கு வந்தார்கள். தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன? வீட்டை விட்டு வெளியே வந்து ரோட்டில் உட்கார்ந்து விட்டேன் நான். நான் பாப்பர்… என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எதுவுமில்லை. இது பொய்யில்லை. சத்தியமான, என் தாய் மீதான உண்மை. நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை என்று நின்றேன் அவர்களிடம். அவர்களும் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. இதை மாதிரி எத்தனை பார்த்திருப்பார்கள் அவர்கள்! நேரே வீட்டிற்குள் போனார்கள். ஃபேன், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், க்ரைண்டர் என்று எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். படுத்துக்கொள்ள இருந்த ஒரு பாய், தலையனை தவிர அத்தனையையும் தயவு தாட்சண்யமின்றி சுருட்டி எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். வெற்றுத் தரையில் குற்றாலம் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டிருக்கிறேன் நான் இப்போது. இதை ஏன் சொல்கிறேன் என்று உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நான் உன்னை மோசம் செய்யவில்லை, மோசம் செய்ய நினைக்கவில்லை என்பதற்காகவே இதை இத்தனை விலாவாரியாகக் கூறுகிறேன்.
கவலைப்படாதே! எத்தனையோ பேரை ஏமாற்றிய நான் உன்னையும் ஏமாற்றுவேன் என்று எண்ணி விடாதே. என்ன இருந்தாலும் நீ என் நெடுங்காலத்து நண்பனில்லையா? அது இன்னும் என் மனதில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. எனவே இன்று ஒரு காரியம் செய்திருக்கிறேன்.
ஒரு காசோலை இன்று உன் பெயருக்குப் பதிவுத் தபாலில் வருகிறது. முதலில் தொகை பூர்த்தி செய்ய வேண்டாம் என்றுதான் நினைத்தேன். உன் கணக்கு என்னிடம் சரியாக எழுதப்பட்ட விபரம் இருந்தது. நீ பணமாக உதவி செய்த வகையிலும், நகையாக உதவி செய்த வகையிலும் எல்லாமாகச் சேர்ந்து எண்பத்தி ஐந்தாயிரம் என்று கணக்கு வந்தது. வெறுமே அந்தத் தொகையைத் திருப்பி அளிப்பது நியாயமில்லை என்பதால் ஒரு சிறு தொகையை வட்டியாகச் சேர்த்து ஒரு லட்சத்திற்கு அந்தக் காசோலை அனுப்பப்பட்டுள்ளது. பெற்றுக் கொண்டு அதன் விபரம் தெரிவிக்கவும். என்னடா, இவனுக்கெங்கே இத்தனை தொகை ஒருசேரக் கிடைத்தது என்று உனக்கு ஆச்சரியமாய் இருக்கும். நானும் என் மனைவியும் ஒன்று சேர்ந்து விட்டோம் என்பதுதான் இந்தக் கடிதத்தின் கடைசியில் நீ அறிய வேண்டிய முக்கியமான செய்தி.
கடித ஆரம்பத்தில் பிரிந்திருந்த நாங்கள் கடிதம் முடியும்போது ஒன்று சேர்ந்து விட்டோம் என்று தோன்றுகிறதல்லவா? அதற்கு முக்கிய காரணம் நீதான். ஆம், நம்ப முடியவில்லையா? நீ என் மனைவிக்கு எழுதிய கடிதம்தான் ஏதோவொரு வகையில் அவளை மாற்றியிருக்கிறது. அதற்கு முன்பாகவே எனது இந்தக் கடிதம் உனக்கு எழுதிப் பாதியிலேயே நின்றிருந்தது. என் மன நிலைகளை, என் சார்ந்த தொடர்ந்த நிகழ்வுகளை என் நண்பனாகிய நீ அறிந்து கொள்வதில் எனக்கு வெட்கமில்லை. எனவேதான் அந்தக் கடிதத்தையே அப்படியே தொடர்கிறேன். உன்னை லட்சியம் செய்யாமல், உன் நட்பு தேவையில்லை என்பதுபோல், நான் இத்தனை நாட்களைக் கழித்திருக்கிறேன். உனது கடிதங்களை அலட்சியம் செய்திருக்கிறேன். உனது கடன்களைத் திருப்பித் தர வேண்டுமா என்கிற அளவுக்கு யோசித்திருக்கிறேன். நான் சேர்ந்த இடம் அப்படி. அவ்வளவுதான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும். முதலில் உன் கடனைத்தான் நான் அடைக்கிறேன். மிகப் பெரிய போராட்டத்திற்கு மத்தியில் இந்த முயற்சி நிகழ்கிறது. அது என் மனைவியால் செய்யப்படுகிறது. அங்கும் அவளது ஆதிக்கம்தான். எப்படியோ.. நல்லது நடந்தால் சரி! நன்றி நண்பா, நன்றி. நாம் விரைவில் சந்திப்போம் என்று நினைக்கிறேன். அந்த மகிழ்ச்சியுடன்,
அன்புடன்,
கந்தவேள்.
நடப்பது கனவா அல்லது நனவா என்று நம்ப முடியாமல் கிடந்தான் ராமலிங்கம். தான் உழைத்துச் சம்பாதித்த தொகை இப்படித் திடீரென்று தனக்குத் திருப்பிக் கிடைக்கும் என்ற செய்தியே அவனைப் பெருத்த சந்தோஷத்தில் ஆழ்த்துவதாக இருந்தது. எப்படியோ பிரச்னை தீர்ந்தது. இனி அவனைப் போய்ப் பார்க்க வேண்டிய, அலைய வேண்டிய அவசியமில்லை. எக்கேடும் கெட்டுப் போகட்டும். வாழ்க்கையில் நிம்மதிதான் முக்கியம்.
நினைத்ததுபோல் அடுத்த மூன்றாவது நாள் ஒரு பதிவுத் தபால் வரத்தான் செய்தது. ஆனால் அது கந்தவேளிடமிருந்து வந்ததாகத் தெரியவில்லை. பதிலாக அவன் மனைவியிடமிருந்து. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை தந்ததாக நஷ்ட ஈடு கோரிப் பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன அதில்! வக்கீல் நோட்டீஸ் ரூபத்தில். குடலைப் புரட்டியது அது! கூடவே இன்னொரு பெரும் அதிர்ச்சி!!
அன்று மாலைப் பத்திரிகையில் கந்தவேளின் தற்கொலைச் செய்தியோடு, போலீஸ் விசாரணை தொடர்கிறது என்ற வரிகளைப் பார்த்தபோது சர்வாங்கமும் ஒடுங்கிப் போய் குளிர் ஜூரம் எடுத்துப் படுக்கையில் வீழ்ந்தான் ராமலிங்கம்!!
“