முகம் தெரியாத மனிதர்கள்! மொழி தெரியாத ஊர்! இதையே திரும்பத் திரும்ப எண்ணித் தன்னிரக்கத்தில் மூழ்கித் தவித்தவளின் சிந்தனையை ஒருநாள் வாள் போல அறுத்தது அந்த ஓலம்!
முதலில் அந்த ஓசையைக் கேட்கும்பொழுது பயமாக இருந்தது. என்னவெனச் சட்டென்று புரிபடவில்லை. யாரோ ஆஸ்த்துமா நோயாளி, சரியாக மூச்சு விட முடியாமல் தொடர்ந்து முனகுவதைப் போல இருந்தது. உற்றுக் கவனித்துப் பார்த்தேன். பிடிபடவில்லை. பயம்தான் அதிகமானது! மனிதர்களை அசைத்துப் பார்க்கும் அனத்தல். வயதான யாரோ ஒருவர், உடம்புக்கு முடியாமல் அரற்றுவதைப் போலவும் இருந்தது. ஒருசமயம் பார்த்தால், யாரோ ஒருவர் பய வேகத்தில் அல்லது மிகுந்த வேதனையில் மிரட்டுவதைப்போல, "ஏய்… ஏய்! உம்… ஹும்!… விடமாட்டேன்!… ஹும்…! ஹும்ம்…!" என்றெல்லாம் கூடத் தோன்றியது. பேய் விரட்டுபவர்களின் கூச்சலைப் போலவும் இருந்தது.
குழப்பமும் பயமுமாகத் துடிக்கும் நெஞ்சைக் கையில் பிடித்துக் கொண்டு உற்றுக் கேட்டேன். ஒன்றுமே பிடிபடவில்லை. சிறிது நேரம் கேட்கும், பிறகு அடங்கும். பிறகு, மறுபடியும் கேட்கும். அவர் வரும் வரை, பயத்துடன் எப்படியோ பொழுதைக் கழித்தவள், அவர் வந்தவுடன் அவரிடம் அதைப் பற்றிப் பேசுவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, வேலைகளில் என்னை மறந்தவளாக என்னையும் அறியாமல் தூங்கி விட்டேன். அன்று மட்டுமென்றில்லை, அனேகமாகத் தினமுமே இப்படிக் கேட்டது. காலையில் பத்து மணிக்கு மேல்தான் அந்த ஓசை கேட்பதாக நான் நினைத்திருந்தேன்.
"அதெப்படி, எல்லோரும் வெளியே போன பின் மட்டும் இந்த ஓசை கேட்கிறது?" என்றெண்ணி, என் பயத்தை நானாகப் பெருக்கிக் கொண்டேன். ஒருவேளை, காலை நேர வேலைகளின் பரபரப்பில் நாம்தான் சரியாகக் கவனித்துப் பார்க்கவில்லையோ! அதே போல, இரவு நேரங்களிலும் அந்த ஓசை கேட்பதாகத் தெரியவில்லை. முதல் சில நாட்களுக்கு, நாள் முழுவதும் எனக்கு இதுவே சிந்தனையாக இருந்தது. இது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பரபரப்புடன் கூடவே ஒரு பயமும் இருந்தது. புதிய இடம். புரியாத மொழி. யாரிடமும் போய் விசாரிக்கலாம் என்றால் எனக்குப் பாழாய்ப் போன இந்தி வராது. இந்த ஜனங்களுக்கோ சுட்டுப் போட்டாலும் வேறு எந்த மொழிச் சொற்களும் வாயில் வராது. யாரிடம் போய் நான் என்னவென்று கேட்பது!? எல்லோரும் வெளியே கிளம்பிப் போன பிறகு இந்தக் குடியிருப்புகளில் எதுவோ நடக்கிறது! எதுவோ தப்பு இருக்கிறது என்றுதான் என் மனதிற்குப் பட்டது. அதை நான்தான் முதலில் கண்டுபிடித்து இருக்கிறேன் என்று எனக்கு ஒரு மாதிரி ஒரு பரபரப்பும் ஏற்பட்டது. எனக்குத் தெரியும் என்பது வெளியே தெரிந்தாலே ஆபத்தாகி விடுமோ என்றும் எண்ணிக் கொண்டேன்.
இப்படி நிறைய எனக்கு நானே யோசித்து யோசித்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு, தாங்க முடியாமல் என்னவரிடம் மெதுவாகவும் அதே சமயம், ஒரு வரவழைத்துக் கொண்ட சஸ்பென்சோடும் இதைச் சொன்னபோது… அவர் கப கபவென்று சிரித்தார்.
"உனக்குப் பயங்கரமான கற்பனைடி! யாரோ முனகறாளாம்… இவ அதைக் கேட்டாளாம்!" என்று விடாமல் சிரித்தார். எனக்கு அழுகைதான் வந்தது. என்னுடைய சாமர்த்தியத்தைச் சிலாகிக்கத் தெரியாத மனுஷரிடம் வேறென்ன வேண்டியிருக்கிறது. அதற்கு மேல் அவரிடம் ப்ரஸ்தாபிப்பது வீண் என்று எனக்குப் புரிந்தது. அதே சமயத்தில், இன்னும் மனுஷாளைச் சரியாகவே புரிந்து கொண்டபாடில்லை; அதற்குள் இப்படி ஏதாவது புகார் சொன்னால், அவர்தான் பாவம் என்ன செய்வார் என்றும் தோன்றியது. எனக்குச் சுயபச்சாதாபம் அதிகம் என்று இவர் அடிக்கடி சொல்வார். அது சரிதானோ என்று பல தடவை நானே நினைத்திருக்கிறேன். நாள் முழுவதும் இப்படித் தனியாக லொட்டு லொட்டென்று உட்கார்ந்திருந்தால் வேறு என்னதான் செய்வதாம்? அக்கம் பக்கம் எல்லாமே இந்திக்காரிகள். எனக்கோ காரே பூரே என்று பேச வரவில்லை. பிறந்து வளர்ந்த ஊரையும் மனுஷாளையும் விட்டு விட்டு இப்பிடி ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி வந்தது ஒருவேளை தவறோ என்று நினைத்த மாத்திரத்தில்… பொட்டென்று கண்களில் இருந்து சொட்டி விடும். அம்மா, அப்பாவின் நினைவு வந்துவிடும். அப்புறம் என்ன… ஒரே அழுகைதான்!
அதே சமயம், "இப்பிடித்தானே பெரியக்காவும் பட்டிருப்பாள்!" என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. பெரியக்கா என்னை விடவும் அழகானவள்! சித்திரத்தில் எழுதி வைத்தது போல அவளது கண்கள் ஜ்வலிக்கும். அதுவும் மை வைத்துக் கொண்டால் கேட்கவே வேண்டாம்! என்னை விடவும் புத்திசாலி கூட! என்ன இருந்து என்ன செய்ய? என்னை மாதிரி அவளுக்கு அனுசரணையான புருஷன் அமையவில்லையே! பழசையெல்லாம் நினைத்தால் பெருமூச்சுதான் வருகிறது!
பல நாட்களில், இப்படி எதையாவது பழையதை நினைத்துச் சாவகாசமாக அழலாம் என்றால் பார்த்திருந்து பார்த்திருந்து அந்தச் சப்தம் கேட்கும். அழத் தயாராய் இருந்த மனத்தில் பயம் அப்பிக் கொள்ளும். அந்தச் சப்தம் தொடர்ந்து தினமும் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. மேல் ஃபிளாட்டில் யாரோ வயதானவர்கள் இருக்கிறார்கள் போலும். வீட்டிலுள்ளவர்கள் வேலையாக வெளியே போகும்பொழுது உள்ளே வைத்துப் பூட்டி விட்டுப் போய் விடுகிறார்களாய் இருக்கலாம்! பாவம், மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு முனகுகிறாற்போல இருக்கிறது என்று என் கற்பனைகளை வளர்த்துக் கொண்டே போனேன். இது ஒரு வாரம் வரைதான். அந்த ஞாயிற்றுக்கிழமை, அவர் வீட்டிலிருக்கும்பொழுதும் அதிர்ஷ்டவசமாக அந்தச் சப்தம் கேட்டது. உடனே அவரை உலுக்கி எழுப்பினேன். எப்படியாவது இன்று இதைக் கண்டுபிடித்துச் சமத்து பட்டம் வாங்கி விடவேண்டும் என்று துடித்தேன். வாய் பொத்தி அவரை அதைக் கேட்க வைத்தேன். சற்று நேரம் அதை உற்றுக் கேட்டவர் உடனே சிரிக்க ஆரம்பித்து விட்டார். அப்பாவியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"அடி பைத்தியமே! இது புறா சப்தம்டீ!" என்று அவர் சொல்லவும், எனக்குப் பொக்கென்று போனது. ஒரு பக்கம் எரிச்சலாகக் கூட இருந்தது. அவரை விடாமல் மடக்கினேன்.
"புறா சப்தமா?! இதுவா?! எங்க ஊர்ல எல்லாம் இது மாதிரி கேட்டதே இல்லியே!?"
"ஆமா, கேட்டிருக்க மாட்டே. ஏன்னா, இந்த மாதிரி அடுக்கு மாடிக் கட்டடம் இருக்கா உங்க கிராமத்துல?"
எனக்குப் புரியத்தான் இல்லை.
"ஏன் அடுக்கு மாடி இல்லேன்னா புறா கத்தவே கத்தாதா?"
(தொடரும்)
Very interesting story written in a beautiful environment i think!Lett us hope for an interesting end also!